மிஸ்டர் கழுகு: “நான் இருக்கின்ற வரை...”

தேர்தலில் ஜெயிக்க சென்டிமென்ட் அஸ்திரம்!

‘‘சென்டிமென்ட் அஸ்திரம்தான் இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவின் பிரசாரமாக இருக்கப் போகிறது” என்றபடியே வந்து அமர்ந்தார் கழுகார்.

‘‘தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான  முதல் கூட்டம் ஆளுநர் ரோசய்யா உரையுடன் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. அந்த உரை மீது மூன்று நாட்கள் நடந்த விவாதத்துக்குப் பிறகு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். 23-ம் தேதி காலை 11.14 மணிக்குத் தொடங்கிய பதிலுரையை 12.28 மணிக்கு முடித்தார். மொத்தம் 1 மணி நேரம் 14 நிமிடங்கள் பேசினார். உட்கார்ந்துதான் பேசினார்.”

‘‘மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமையும் என்று சட்ட​மன்றத்தில் ஜெயலலிதா கர்ஜித்து இருக்கிறாரே?”

‘‘ஆமாம். கடந்த சில நாட்களாக இல்லாத குரல் தெளிவு அவரிடம் காணப்பட்டது. பொதுவாக உடலை அலட்டிக்​கொள்ளாமல் பேசக்கூடிய ஜெயலலிதா, கையை பலமாக ஆட்டி, அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் முகத்தைத் திருப்பி ஆக்ரோஷம் காட்டினார். ‘2011-ம் ஆண்டு தமிழக மக்கள் ஒரு மாற்றம் வேண்டும் என உறுதியோடு இருந்தார்கள். அனைவர் வாழ்விலும் வசந்தம் ஏற்பட வேண்டும் என்றுதான் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மாற்றம் ஏற்படுத்திய மக்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். எனவேதான், தொடரட்டும் இந்த அரசு என்று மக்கள் தற்போது நினைக்கிறார்கள்’ என்று அவர் சொன்னபோது அமைச்சர்கள் சிரித்தபடியே மேஜையைத் தட்டினார்கள்!”

‘‘எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொன்னார்?’’

‘‘பல்வேறு புள்ளிவிவரங்களை அடுக்கிய முதல்வர், ‘சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளி​யேயும் எங்கள் மீது கண்டனக் கணைகள் தொடர்ந்து தொடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. குற்றங்கள் சுமத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. எங்கள் மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கு விளக்கம் அளித்தாலும், ஒரு சிலர் உண்மைக்கு மாறாக  தாங்கள் கூறியவற்றையே திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் மக்கள் அதனை நம்பிவிடுவார்கள் என்று மனப்பால் குடிக்கின்றனர். எது உண்மை; எது உண்மை அல்லாதது என்பதைப் பகுத்து உணரும்
அறி​வார்ந்தவர்கள்​தான் தமிழக மக்கள்’ என்று சொல்லிக்​கொண்டார்.அடுத்து எடுத்ததுதான் சென்டிமென்ட் அஸ்திரம்!”

‘‘சொல்லும்!”

‘‘ஜெயலலிதாவின் ஒன்றேகால் மணி நேரப் பேச்சில் முக்கிய அம்சங்களை, சில நிமிடங்களை மட்டும் பிரித்து உடனடியாக  வீடியோ காட்சியாக மாற்றி வாட்ஸ்அப்பில் விட்டு​விட்டார்கள். ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ டி.வி-யிலும் அதில் சில பகுதிகளைக் காட்டுகிறார்கள். அந்த வீடியோ பேச்சு​தான் இந்தச் சட்டமன்றத் தேர்தலில் ஜெய​லலிதாவின் அஸ்திரமாக இருக்கும் என்று அ.தி.மு.க-வினர் சொல்கிறார்கள்.

‘மக்களால் இந்த அரசு; மக்களுக்காகவே இந்த அரசு. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் நாங்கள் செய்திருக்கின்ற சாதனையைச் சொல்ல வேண்டுமானால், ஒரு துறைக்கு ஒரு நாள் தேவை. ஒரு நாள் முழுவதும் தேவை. அப்படியானால், இந்த ஐந்து ஆண்டு காலத்தில் நாங்கள் செய்துள்ள சாதனைகள் முழுவதையும் சொல்லி முடிக்க வேண்டுமென்றால், 36 நாட்கள் நான் பதிலுரை வழங்க வேண்டும். 36 நாட்களும் சொல்லக்​கூடிய அளவுக்கு அத்தனை சாதனைகளைப் புரிந்துள்ளோம்.

எங்களுடைய திட்டங்கள் எல்லாமே மக்களுக்​காகத்​தான். எங்களைப் பொறுத்தவரை எந்தச் சுயநலமும் இல்லை. பொதுநலம்தான். மக்கள் நலம்தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட ஓர் இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்ற வரை, நான் இருக்கின்ற வரை இந்த இயக்கம் மென்மேலும், மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெறச் செயல்படும். எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்’ என்று ஜெயலலிதா பேசியதுதான் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்