“தி.மு.க.-வில் மட்டுமல்ல... அ.தி.மு.க-விலும் குடும்ப ஆட்சியே நடக்கிறது!”

திருமா பாய்ச்சல்!

‘‘தமிழகத்தில் அமையப்போகும் அரசாங்கம், கூட்டணி அரசாங்கமாக இருக்க வேண்டும்” என்ற கோரிக்கையை, 2016 சட்டமன்றத் தேர்தலையொட்டி ஓங்கி ஒலித்தவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். அவருடைய அந்தக் கோரிக்கையில் இருந்து தெறித்த பொறிதான், மக்கள் நலக் கூட்டணியாக இன்று சுடர்விட்டுள்ளது. தொல்.திருமாவளவனை சென்னை அசோக் நகரில் உள்ள அவரது ‘வெளிச்சம்’ அலுவலகத்தில் சந்தித்தோம்.

‘‘தி.மு.க - அ.தி.மு.க என்ற இரண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து, மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி உள்ளீர்கள். இந்த அணி வெற்றி பெறும் என்று நினைக்கிறீர்களா?”


‘‘1967-ல் தமிழகத்தில் யானை பலத்துடன் காங்கிரஸ் இருந்தது. அதை எதிர்ப்பதற்குக் கட்சியும் இல்லை, அணியும் இல்லை என்ற நிலை இருந்தது. அப்போது, அண்ணா ஒரு கூட்டணியை உருவாக்கினார். அந்தக் கூட்டணிக்குத் தலைமை தாங்கிய தி.மு.க-வோ, அந்த அணியில் இடம்பெற்ற ராஜாஜியின் சுதந்திராக் கட்சியோ, காயிதே மில்லத்தின் முஸ்லிம் லீக்கோ மிகப் பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட கட்சிகள் அல்ல. இப்போது எங்களைப் பார்த்து வைக்கப்படும் விமர்சனங்கள், அப்போது அந்த அணியின் மீதும் வைக்கப்பட்டது. ஆனால், மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள். அண்ணா தலைமையிலான அந்தக் கூட்டணி வெற்றி பெற்றது. தி.மு.க ஆட்சி அமைத்தது. அதே போன்றதொரு மாற்றம் 2016 தேர்தலிலும் நடக்கும். அதற்கான சூழல் தற்போது தமிழகத்தில் உருவாகி உள்ளது. அந்த நம்பிக்கையில் நாங்கள் களம் இறங்கி உள்ளோம்.”

‘‘நான்கு கட்சிகளைத் தவிர, மற்ற கட்சிகளை உங்களால் இதில் இணைக்க முடியவில்லையே?”

‘‘விஜயகாந்த் தனியாகப் போகிறோம் என்றோ, அல்லது வேறு கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கப்போவதாகவோ இன்னும் அறிவிக்கவில்லை. வரும் இரண்டு மாத இடைவெளியில், இன்னும் எத்தனையோ கூட்டணி மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. அதனால், எங்களின் பலம், பலவீனம் பற்றி இப்போது கணிக்க முடியாது. ஆனால், என்னால் ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும். 2016 தேர்தல் போட்டி என்பது, தி.மு.க., அதி.மு.க, மக்கள் நலக் கூட்டணிக்கு இடையில்தான் நேரடியாக நிகழும். இந்த அணிகளின் மும்முனைப்போட்டிதான் தேர்தலில் இருக்கும். இந்த மூன்று அணிக்குள்தான் மற்றக் கட்சிகள் வந்து சேரும். சேர வேண்டும்.”

‘‘நீங்கள் இவ்வளவு உறுதியாகச் சொன்னாலும், திருமாவளவன் தி.மு.க கூட்டணிக்குப் போய்விடுவார்...  வைகோ அ.தி.மு.க-வின் பக்கம் போய்விடுவார் என்ற பேச்சு பரவலாக உள்ளதே?”

‘‘மக்கள் நலக் கூட்டணிக்குள் குழப்பதை ஏற்படுத்த வேண்டும், ஒருவருக்கு மற்றவர் மீது சந்தேகத்தை உருவாக்க வேண்டும், அதன்மூலம் மக்கள் நலக் கூட்டணியில் பிளவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்படும் அரசியல் சூழ்ச்சி இது. பிப்ரவரி 7, 8, 9 ஆகிய நாட்களில் நான்கு கட்சித் தலைவர்களும் ஒன்று சேர்ந்து, முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறோம்.”

‘‘மழை, வெள்ளம் ஏற்படுத்திய சேதங்கள் மட்டும்தான் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையை உருவாக்கி உள்ளது. அதைச் சரி செய்து விட்டால், அ.தி.மு.க-வுக்கு எதிரான அதிருப்தி என்று எதுவுமில்லை. அந்தக் கட்சி எளிதாக வெற்றிபெற்றுவிடும் என்கிறார்களே?”

‘‘ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை போகப் போகத்தான் தெரியும். வெள்ளச்சேதம் மட்டுமல்ல, ஊழல் நிர்வாகம் மற்றும் குடிக் கலாச்சாரத்தை பொதுக் கலாச்சாரமாக மாற்றியது அ.தி.மு.க அரசுதான். தி.மு.க ஆட்சியில் ஊழல் நடந்தது. அ.தி.மு.க ஆட்சியில் அது வெட்கப்படவேண்டிய செயல் அல்ல என்ற நிலைக்கு உயர்ந்து, வெளிப்படையாக நடக்கிறது. எனவே வெள்ளம் மட்டுமல்ல, ஊழல், மது, குடும்ப ஆட்சி என்று பல விஷயங்கள் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையை உருவாக்கி உள்ளது. தி.மு.க ஆட்சி, குடும்ப ஆட்சி என்றால், அ.தி.மு.க ஆட்சியும் ஒரு குடும்ப ஆட்சிதான். இதுவும் இன்று மக்களால் உணரப்பட்டுள்ளது.

மதுவிலக்கு இல்லை என்று நத்தம் விசுவநாதன் சொல்வது, அவரது குரல் அல்ல... ஜெயலலிதாவின் குரல். மதுவிலக்கு கிடையாது என்பதற்கு ஆதாரமாக நத்தம் விசுவநாதன் சொன்னது அனைத்தும் கலைஞர் ஒரு காலத்தில் சொன்னது. ஆக, அ.தி.மு.க ஆட்சி அண்ணா வழியில் நடக்கவில்லை. கலைஞர் வழியில்தான் நடக்கிறது.”

‘‘ஆளும் கட்சி வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்தில், எதிர்க் கட்சிகளின் வாக்குகளைச் சிதறடிப்பதற்காக உருவாக்கப்பட கூட்டணிதான் மக்கள் நலக் கூட்டணி என்கிறார்களே?”

‘‘நீங்கள் சொல்லும் கருத்தில் துளி அளவுகூட உண்மை இல்லை. சொல்லப்போனால், அடுத்து அமையப்போகும் அரசாங்கம் கூட்டணி அரசாங்கமாக அமைய வேண்டும் என்பதற்காக, எல்லாத் தலைவர்களையும் முதலில் போய்ச் சந்தித்தது நான்தான். அப்படிச் சந்தித்தபோது, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், ‘பல விஷயங்களில் ஒன்றுபட்டுள்ள நாம் ஏன் தனித்தனியாகச் செயல்பட வேண்டும்? ஒன்றிணைந்து செயல்படலாமே’ என்று சொன்னார். அதன்பிறகு தான் 5 கட்சிகளை வைத்து மக்கள் நலக் கூட்டியக்கத்தை உருவாக்கினோம். அந்தக் கூட்டியக்கத்தின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ‘இந்தக் கூட்டியக்கம் தேர்தல் கூட்டணியாக எதிர்காலத்தில் செயல்படும்’ என்றார். அதன்பிறகுதான், வைகோ இதுபற்றி தூத்துக்குடியில் பேசினார். இதுதான் உண்மை. இதற்கும் ஆளும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களை நாங்கள் எங்கள் மேடைகளில் கடுமையாகத் தாக்குகிறோம் என்பது மக்களுக்குத் தெரியும்!”

‘‘தி.மு.க அல்லது அ.தி.மு.க என இரண்டு கட்சிகளும் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் போட்டியிடலாம் என்று மக்கள் நலக் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தால், நீங்கள் யாருக்கு முன்னுரிமை அளிப்பீர்கள்?”


‘‘2016 தேர்தல் களத்தை மும்முனைப் போட்டிக் களமாக அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு மாற்றாகத் திகழும் அணி, மக்கள் நலக் கூட்டணியாகத்தான் இருக்க வேண்டும்; அதை மக்கள் ஏற்க வேண்டும்; அவர்கள் எங்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்.”

‘‘தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு மாற்றாக இருக்க நினைக்கும் நீங்கள், விஜயகாந்த்தை உங்கள் அணிக்கு எந்த அடிப்படையில் அழைக்கிறீர்கள்? அவர் உங்களோடும் பேசுகிறார்.  பி.ஜே.பி-யுடனும் பேசுகிறார். தி.மு.க-வுடன் பேரம் நடத்துவதாகவும் செய்தி வருகிறதே?”

‘‘விஜயகாந்த் மற்றக் கட்சித் தலைவர்களைத் தேடிப்போய் சந்திக்கவில்லை. மற்றக் கட்சித் தலைவர்கள்தான் அவரைத் தேடிவந்து சந்திக்கின்றனர். அப்படி வரும்போது, அவர்களை விஜயகாந்த் தவிர்க்க முடியாது. என்னைச் சந்திக்க யாரும் வர வேண்டாம் என்று சொல்ல முடியாது. அதனால், அவர் எல்லோருடனும் பேசுகிறார்... எல்லாப் பக்கங்களிலும் காய்களை நகர்த்திப் பார்க்கிறார் என்றெல்லாம் விஜயகாந்த் மீது குற்றம் சொல்ல முடியாது. அவருக்கு ஒரு வாக்கு வங்கி பலம் உள்ளது. அந்தப் பலம் மக்கள் நலக் கூட்டணியின் நல்ல நோக்கங்களுக்கும் கொள்கைகளுக்கும் பயன்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர் வந்தால், இந்தக் கூட்டணி வலிமைபெற்ற சக்தியாக இருக்கும் என்பதால், அவரைச் சந்தித்தோம். ஊழல், மது, சாதிப் பிரச்னைகளையும் அவற்றுக்கு வித்திட்ட தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்று நாங்கள் சொல்கிறோம். இவற்றில் விஜயகாந்த்தும் ஒத்துப்போகிறார். அந்த அடிப்படையில் நாங்கள் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். நாங்கள் அவரைச் சந்தித்தபோது, மக்கள் நலக் கூட்டணியின் கொள்கைகள் எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொன்னார். அழைப்பு விடுப்பது எங்கள் கடமை. நாங்கள் அதைச் செய்துவிட்டோம். இனி முடிவு அவர் கையில்.”

‘‘தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் பிரசாரம் எதை முன்னிறுத்தி அமையும்?”

‘‘ஊழல், மது. இந்த இரண்டுக்கும் யார் பொறுப்போ, அவர்கள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது. சாதி, மதம் ஆகியவற்றுக்கு யார் பொறுப்போ, அவர்கள் வலிமை பெற்றுவிடக் கூடாது. ஒவ்வொரு வாக்காளனும் இதைக் கவனத்தில் கொண்டு முற்போக்கான, புரட்சிகரமான, தொலைநோக்குப் பார்வை கொண்ட கட்சிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் மக்கள் நலக் கூட்டணியாக முன்வைத்துள்ளோம்.”

நம்பிக்கையோடு முடிக்கிறார் திருமா.

- ஜோ.ஸ்டாலின், படம்: கே.ராஜசேகரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick