என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - எம்.எல்.ஏ. மு.கருணாநிதி - திருவாரூர்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: அ.நன்மாறன்

“ ‘தேர்தலிலே நீ போட்டியிடு’ என்று 1957-ல் அறிஞர் அண்ணா ஆணையிட்டபோது, ‘நாகப்பட்டினம் தொகுதியில் நிற்கிறேன்’ என்று சொன்னேன், ‘வேண்டாம் நீ உன்னுடைய சொந்த ஊரான திருவாரூரில்தான் நிற்கவேண்டும். அது தனித் தொகுதி என்பதால், குளித்தலையிலே நில்’ என்றார் அண்ணா. குளித்தலையில் வெற்றி பெற்றது முதல், தொடர்ந்து 11 முறை சட்டமன்ற உறுப்பினராக சட்டசபைக்கு சென்றிருக்கிறேன். இப்போது நீங்கள் என்னை அனுப்பி வைத்தால், 12-வது முறையாக சட்டமன்றத்துக்கு அனுப்பி வைத்ததாகப் பொருள்.

நான் எத்தனை முறை முதலமைச்சர் ஆனாலும், திருவாரூர் தொகுதியிலே வெற்றி பெற்று, எம்.எல்.ஏ  ஆகி, முதலமைச்சர் ஆனால், திருவாரூர் தொகுதிக்குப் பெருமை அல்ல. என்னுடைய ஊர், என்னை கைவிடவில்லை என்று நான், மற்றவர்களிடம் கம்பீரமாக நின்று பேச, அது துணை நிற்கும் என்பதால், உங்களுக்கு உழைப்பதற்கு என்றென்றும் தயாராக இருக்கிறேன்” என்று சொல்லி திருவாரூர் தெற்கு வீதியில் 2011 தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் கருணாநிதி. 12-வது முறையாக வெற்றி பெறச் செய்த சொந்தத் தொகுதி மக்களுக்காக உழைத்தாரா என்ற கேள்வியோடு தொகுதியைச் சுற்றி வந்தோம்.

மிகவும் குறுகலான பேருந்து நிலையம், பேருந்துகள் வந்து நிற்பதற்குக்கூட இடமில்லை, போக்குவரத்து நெரிசல் என காலம்காலமாக திருவாரூருக்கு இருந்த சிக்கலைப் போக்குவதற்காக, புதிய பேருந்து​நிலையம் கட்ட தி.மு.க ஆட்சியில் திட்டம் கொண்டுவரப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர், அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த நான்கரை ஆண்டுகளாகக் கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருகின்றன. ‘புதிய பேருந்துநிலையம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடையாக இருந்தால், நானே திருவாரூரில் வந்து போராடுவேன்’ என்று சொன்னார் கருணாநிதி. ஆனால், இன்னும் பணிகள் முடிந்தபாடில்லை, பேருந்து நிலையமும் திறந்தபாடில்லை.

பழைய பேருந்து நிலையம் அருகே இலவச பொதுக்கழிப்பிடம் இருந்தும் பராமரிப்பு இல்லாமல் உள்ளே சென்று கழிப்பதற்கு முகம் சுளிக்கும் பொதுமக்கள், திறந்தவெளியில் கழிப்பதால் சுகாதாரம் சீர்கெட்டுக் கிடக்கிறது. இலவச கழிப்பறை சரிசெய்யப்பட்டு, எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று தெரியவில்லை.  

கொரடாச்சேரி ஒன்றியம் வெட்டாற்றின் குறுக்கே அபிவிருத்தீஸ்வரம், கமுகக்குடி பாலம் கட்டினால் பத்தூர் மேல்கரை, கப்பலூடையான், திருவரங்க நல்லூர், அக்காஓடை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் பயனடைவார்கள். 10 கி.மீ தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய கொரடாச்சேரி, குடவாசல் பகுதிகளை 2 கி.மீ தூரத்தில், 20 நிமிடங்களில் சென்றுவிடலாம். அதற்காக கடந்த 15 ஆண்டுகளாக அந்தப் பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். தேர்தல் நேரத்தில் பிரசாரத்தில் இருந்த கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தனர்.

எம்.எல்.ஏ அலுவலகத்தில் மனுவும் அளித்தனர். பாலம் கட்டுவதற்காக எம்.பி கனிமொழி, முதல்கட்டம், இரண்டாம் கட்டம் என நிதியாக ரூ.2 கோடியே 40 லட்சத்தை ஒதுக்கினார். ஆனால், இன்னும் பாலம் வேலை நடைபெற வில்லை. மாநில அரசு நிதியை எடுத்துச் செலவிடாமல் இழுத்து வந்த நிலையில், அந்தப் பகுதி மக்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர். எம்.பி கனிமொழியும் மக்களோடு மக்களாகப் போராட்டத்தில் கலந்துகொண்டார். ஆனால், இன்னும் பாலத்துக்கான வேலை நடைபெற வில்லை. அடிப்படைத் தேவைகளைக்கூட போராடிப் பெறவேண்டிய சூழ்நிலையில்தான் முன்னாள் முதல்வர் தொகுதி இருக்கிறது என்று  புலம்புகிறார்கள் கொரடாச்சேரி பகுதி மக்கள். 

திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை கருணாநிதி கொண்டுவந்தார். அரசு மேல்நிலைப்பள்ளி இல்லையே என்ற வருத்தம் நீண்டநாட்களாகவே திருவாரூர் மக்களிடையே இருந்தது. அதைப் போக்கும் விதமாக அரசு மேல்நிலைப்பள்ளி கொண்டு வருவேன் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதியும் தந்தார். இன்றும் திருவாரூ ரிலிருந்து 5 கி.மீ சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்றுதான் மேல்நிலை படிப்பைத் தொடர்கி றார்கள் ஏழை, எளிய மாணவர்கள். ஆனால், அவர் படித்த பள்ளியான வ.சோ. மேல்நிலைப் பள்ளிக்குப் புதிய கட்டடங்​களை தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டிக்கொடுத்து இருக்கிறார். சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்தவரின் சொந்த மாவட்டமான திருவாரூர், கல்வியில் தமிழ் நாட்டின் கடைசி மாவட்டமாக இருக்கிறது என்பதை வருத்தத்துடன் சொல்கிறார்கள் கல்வியாளர்கள்.
 
வலிவலம், எங்கன் ஆகிய பகுதி விவசாயிகள், ‘‘விவசாய தொழிற்சாலை இல்லை என்பது  விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை. கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தி லிருந்து நாங்கள் அதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம். வேளாண் சார்ந்த தொழிற் கல்லூரி அமைக்கப்படும் என்று சொன்னார். அதற்கான எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரிய வில்லை. வேளாண் கல்லூரியும், தொழிற்சாலையும் இந்தப் பகுதி விவசாயிகளுக்கு கானல்நீராகவே தெரிகிறது. காவிரி நதிநீர் இடைக் காலத் தீர்ப்பைப் பெற்றுத் தந்தமைக்கு காவிரிகொண்டான் என டெல்டா விவசாயிகளால் முடிசூட்டப்பட்டார் கருணாநிதி. குறுவை சாகுபடி செய்யாமல், ஒருபோக விவசாயம் மட்டுமே செய்து வரும் டெல்டா மாவட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து காவிரி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகத்தைக் கண்டித்து, திருவாரூரில் மிகப் பெரிய போராட்​டத்தை நடத்தியிருக் கலாம், சட்டமன்றத்துக்குச் சென்று குரல் கொடுத்திருக்கலாம்’’ என்று விவ​சாயிகள் தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.

திருவாரூரில் மாவட்டத் தலைமை மருத்துவ மனை அமைக்கப்படும் என்று வாக்குறுதியும் அளித்தார். ஆனால், அது அமைக்கப்படவில்லை. பதிவாளர் அலுவலகம் கொண்டு வருவதாகச் சொன்னார். அதுவும் வரவில்லை.

புதுத்தெரு, ராஜாதெரு, மடப்புரம், திருமஞ்சன வீதி, தெற்கு வீதியில் குடியிருப்போரிடம் விசாரித்தோம். ‘‘பாதாள சாக்கடைத் திட்டம் தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டது. அதற்காக, சாலைகள் பெயர்த்து எடுக்கப்பட்டு மீண்டும் போடப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. இரண்டு மாதங்களிலேயே சாலைகள் பல் இளிக்க ஆரம்பித்துவிட்டன. இதனால், பாதாளச் சாக்கடைத் திட்டம் முழுமை அடையாமல் மழைக்காலங்களில் அடைப்பு ஏற்பட்டு, உடைப்பு ஏற்படுவதால் சாக்கடைநீர் சாலைகளில் வழிந்தோடிய காட்சிகளும் திருவாரூரில் அரங்கேறின. இதுகுறித்து தி.மு.க-வினர் எந்த ரியாக்‌ஷனையும் ஆளும் கட்சிக்கு எதிராகக் காட்டவில்லை’’ என்கிறார்கள் திருவாரூர் நகரவாசிகள்.

சேதுசமுத்திரத் திட்டத்தை ஆதரித்து நாகப் பட்டினத்தில் தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார், கருணாநிதி. சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், திருவாரூர் மாவட்டச் செயலாளர் மீது அ.தி.மு.க அரசு வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து கூட்டம் நடத்தி, அரசுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினார். ஆனால், திருவாரூர், நாகப்பட்டினத்தில் கொழுந்துவிட்டு எரியும் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக  கண்டனப் போராட்டம் நடத்த அவர் வரவில்லை என்பது விவசாயிகளின் சோகக் குரலாக எதிரொலிக்கிறது.

திருவாரூர் நகரின் மிக முக்கியமான பிரச்னை 15 ஏக்கர் பரப்பளவில் நகரின் மைப்பகுதியில் இருக்கிற குப்பைக்கிடங்கு. அதில், மழைக்காலங்களில் துர்நாற்றம் தாங்க முடியாது. குப்பைகளைக் கொளுத்துவதால் உருவாகும் புகை மண்டலமும் சூழந்துகொள்வதால் காசநோய், புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், குப்பைக்கிடங்கை அகற்றக்கோரி நீண்டநாட்களாகப் போராடி வருகிறார்கள் நெய்விளக்கு தோப்புப் பகுதிமக்கள். இதுதொடர்பாக, எம்.எல்.ஏ என்கிற வகையில் கருணாநிதி ஆர்வம் காட்டவில்லை என்று தொகுதி மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.  

திருவாரூர் அ.தி.மு.க ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளர் சி.முருகானந்தம் கூறுகையில், ‘‘ஆறு முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஆட்சிக்காலத்தில் திருவாரூருக்கு செய்யாத திட்டங்களை எல்லாம் அ.தி.மு.க ஆட்சியில்தான் செய்து காட்டியிருக்கிறோம். ஆனால், தி.மு.க-வினர் திருவாரூரை அ.தி.மு.க புறக்கணிக்கிறது என்று சொல்கிறார்கள். அது உண்மை அல்ல. ‘என்னுடைய சொந்த ஊருக்காக உழைப்பேன்’ என்று சொன்னவர் கருணாநிதி. வெற்றி பெற்றதிலிருந்து இதுவரை சிலமுறைதான் சொந்தத் தொகுதிக்கு வந்திருக்கிறார். மக்கள் பிரச்னைகளுக்காக வரவில்லை. அவருடைய அம்மா சமாதிக்கும், உறவினர்களைப் பார்ப்பதற்கும் மட்டுமே வந்து சென்றிருக்கிறார். அ.தி.மு.க புறக்கணிக்கிறது என்று சொல்வது நியாயமாகுமா?’’ என்று பொங்கினார்.

ஆனால் தொகுதி பிரச்னை தொடர்பாக அதிகாரிகள் சரிவர செய்யவில்லை என ஸ்டாலின் கலெக்டரை சந்தித்து மனுவும் கொடுத்தார். இப்படி தி.மு.க. தொடர்ந்து போராட்டம் நடத்திதான் தொகுதியை கவனிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.  

- ஏ.ராம், கே.குணசீலன், த.க.தமிழ்பாரதன், த.எழிலரசன், ம.அரவிந்த்
படங்கள்: க.சதீஷ்குமார்


ப்ளஸ்... மைனஸ்!

கருணாநிதி, திருவாரூர் வரும்போதெல்லாம் எம்.எல்.ஏ அலுவலகத்​துக்கு வந்து மனுக்களை வாங்கியிருக்கிறார். ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் திருவாரூர் வரும்போது, எம்.எல்.ஏ அலுவலகத்துக்குச் சென்று மனுக்​களை வாங்கி இருக்கிறார்கள். மனு குறித்து விசாரித்து தொகுதிப் பணிகளை மேற்கொள்ள சொல்லியிருக்கிறார்கள். கருணாநிதி தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகச் செலவு செய்துள்ளார். திருவாரூர் நகரம், ஒன்றியம், கொரடாச்சேரி ஒன்றியம், மன்னார்குடி கிழக்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மயான கொட்டகை, படித்துறை கட்டுதல், புதிய தொகுப்பு வீடுகள், அங்கன்வாடி கட்டடங்கள் லோக்கல் தி.மு.க-வினர் நின்று கட்டிக்கொடுத்தது ஆகியவை கருணாநிதிக்கு ப்ளஸ் என்று சொல்லப்படுகிறது. எம்.எல்.ஏ அலுலகத்தில் வாங்கப்படும் மனுக்கள் மீது உடனடித் தீர்வு செய்துகொடுப்பது அவருக்குக் கூடுதல் ப்ளஸ்.
 
கருணாநிதி தொகுதி என்பதால் அமைச்சர்கள், அதிகாரிகள் தொகுதிக்கு வேண்டிய திட்டங்களைக் கேட்டால் அல்லது செய்து கொடுத்தால் எங்கே நமக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் புதிதாக எந்தத் திட்டத்தையும் கொண்டுவரத் தயங்குகிறார்கள். அமைச்சர் காமராஜும் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார். அடிக்கடி, தொகுதி பக்கம் கருணாநிதி தலைகாட்டாதது மைனஸ்.

எம்.எல்.ஏ அலுவலகம் ரெஸ்பான்ஸ் எப்படி?

திருவாரூர் கமலாலயம் குளம் எதிரே இருக்கும் எம்.எல்.ஏ அலுவலகத்தில் புகார்கள் பெறப்படுகிறது. பெரும்பான்மையான புகார்கள் சாலை மற்றும் தண்ணீர் தொட்டி போன்றவற்றைக் கேட்டு வருவதால், லோக்கல் தி.மு.க புள்ளிகள் அற்றை உடனே சரிசெய்து கொடுத்துவிடுகிறார்கள். புகார் கொடுத்தால் என்ன பிரச்னை என்பதை குறிப்பேட்டில் குறிப்பிடச் சொல்கிறார்கள். செல்போன் எண்ணை பதிவுசெய்யச் சொல்கிறார்கள். ஒரு வாரம் கழித்து போன் செய்கிறோம் என்று சொல்லி அனுப்புகிறார்கள். காலையிலேயே அலுவலகத்தைத் திறந்துவிடுகிறார்கள். ஆள் இல்லாமல் 2, 3 மணி நேரம் கழித்து ஊழியர் வருவதால், பொதுமக்கள் காத்திருந்து மனுவைக் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். ஒரு சில நாட்கள் பூட்டிக் கிடக்கின்றன. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் தினந்தோறும் விசிட் அடித்து மனுக்களைப் பற்றி விசாரிக்கிறார். 

ரியாக்‌ஷன் என்ன?

தி.மு.க முன்னாள் நகரச் செயலாளர் சிவசங்கரிடம் கேட்டோம். “தலைவரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சாலைகள் போடப்பட்டுள்ளன. தண்ணீர் தொட்டி, பஸ் ஸ்டாப், சமுதாயக்கூடங்கள், பள்ளிக்கூடங்கள் கட்டித்தரப்பட்டுள்ளன. கமலாலயம் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்து நீண்ட நாட்கள் எடுத்துக்கட்டாமல் அப்படியே கிடந்தது.  ஸ்டாலின் வந்தபோது கலெக்டரிடம் சென்று மனுக் கொடுத்த பிறகே இந்த அ.தி.மு.க அரசு கட்டி முடித்தது. எங்கள் தலைவரின் சொந்த ஊர் என்பதாலேயே, அ.தி.மு.க அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick