சுவாதி கொல்லப்பட்டுவிட்டார்... மறுபடியும் கொலை செய்ய வேண்டாம்!

ஆதங்கம்

நான்கு நாட்களாக சென்னை மாநகரமே மிகப் பெரிய பதற்ற நிலையில் இருக்கிறது. காரணம், எல்லோருக்கும் தெரியும். காலை நேரம், பொதுமக்கள் கூடும் ரயில் நிலையத்தில் ஐ.டி பெண் ஊழியர் ஒருவர், இளைஞன் ஒருவனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். வெட்டியவன் தப்பி ஓடிவிட்டான். போலீஸார் அவனைத் தேடி வருகின்றனர். பிடிக்கலாம் அல்லது எத்தனையோ பிடிபடாக் குற்றவாளிகள் வரிசையில் அவனும் போய்ச் சேரலாம்.

‘இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம்’ என்று சொல்லப்படும் சென்னையில் ஒரு ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்து இருக்கிறது என்பது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மையில் மிக அதிக அளவில் குற்றங்கள் நடைபெறுவதில் இந்திய அளவில் தமிழகம்தான் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 2014-ம் ஆண்டு தேசியக் குற்றவியல் ஆவண நடுவத்தின் (National Crime Records Bureau) அறிக்கையின்படி, தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தோராயமாக 20 சதவிகிதம் நடைபெறுகிறது. இதில் பெரும் அளவில் பாதிப்புக்கு உள்ளாவது 19 வயது முதல் 30 வயதுவரை உள்ள பெண்கள்தான்.

சுவாதியின் கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், சென்னையில் வெளியே செல்லும் அனைத்துப் பெண்களிடமுமே ஓர் அச்ச உணர்வைப் பார்க்க முடிகிறது. சுவாதியின் படுகொலை, ஏதோ ஒரு பதற்ற நிலைக்கு எல்லோரையும் அழைத்துச் சென்று இருக்கிறது. ஆனால், சுவாதியின் படுகொலையைவிட  சுவாதி தொடர்பாகப் பரப்பிவிடப்படும் செய்திகள் பெண்களுக்கு அதிக பயத்தைக் கொடுக்கிறது.

ஒரு கொலையை கிசுகிசுவாக மாற்றிப் புலனாய்வுச் செய்திகளைப் பரப்புவதை நம்மால் இரண்டு மூன்று நாட்களாகப் பார்க்க முடிகிறது. சுவாதியின் முகப்புத்தகத்தை ஆராய்ந்தால் அதில் ஆண் நண்பர்கள் அதிகம் இருக்கிறார்களாம். இது ஒரு கண்டுபிடிப்பு. எல்லாப் பெண்களின் முகப்புத்தகத்திலும் ஆண் நண்பர்கள் அதிகமாகத்தான் இருப்பார்கள். இது மிகவும் எளிதாகப் புரியும் லாஜிக். அதையும் தாண்டி இன்னொரு செய்தி இருந்தது. அவர் பகிர்ந்த படங்கள் மற்றும் அவரது நிலைத்தகவல்கள் (status) பற்றிய செய்தி. அவர் ‘அலைபாயுதே’ மற்றும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து இருந்தாராம். காதல் பற்றிய நிறையச் செய்திகளும் இருந்தனவாம்.

சுவாதியின் கொலைக்கான காரணம் தெரிவதற்கு முன்னரே எவ்வளவு கற்பனைகள்... எவ்வளவு செய்திகள்? அப்பப்பா! ஒரு பெண்ணாக எங்களுக்கு இருக்கும் பயமெல்லாம் எங்களை யாரேனும் கொன்று விடுவார்களோ என்பதல்ல. அதையும் தாண்டி கொன்றுவிட்டால் அதை எப்படிப்பட்ட  செய்தியாக பரவும் என்பதுதான். எந்தச் செய்தி ஆகினும் அதில் ஒரு கிசுகிசுவைத் தேடும் பாலியல் வறட்சி கொண்ட சமூகமாக நாம் இருக்கிறோம் என்பதுதான் இதிலிருந்து தெரிகிறது. இந்தக் கொலைச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டு வேறு எதையோ சில சமூக விரோதிகள் ‘சாதிக்க’ நினைப்பதாகத்தான் தோன்றுகிறது.  மேலும், இந்தக் கொலையை ஆணவப் படுகொலைகளுடன் எப்படி ஒப்பிட முடியும் என்று தெரியவில்லை. சாதிய ஆணவப் படுகொலை செய்யப்பட்ட 81 பேரையும் தமிழக மக்கள் மெளனமாகவே கடந்துசென்றார்கள். 81 பேர் பற்றிய விரிவான செய்திகள் எங்கும் வெளியிடப் படவில்லை. அதை ஒரு குழு ஆய்வு செய்து வெளியிட்டபோதுதான் அது வெளியே வந்தது என்பதையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டும். ஆனால், அதையும் தமிழகம் வெகு எளிதாகவே கடந்துசென்றது.

கடந்த மூன்று வருடங்களில் நடந்த 81 ஆணவப் படுகொலைகளில் அதிக அளவில் கொல்லப்பட்டவர்கள் பெண்கள். எனவே, பிரச்னை இந்தச் சமூகத்தில்தான் உள்ளது. இந்தச் சமூகம் பெண்களை ஒரு உடைமையாகக் கருதும் சமூகம். உலக மயமாக்கல் பெண்களுக்கான சுதந்திரத்தைக் கொடுத்து இருக்கிறது என்று சிலர் கூவுகிறார்கள். ஆனால், உலக மயமாக்கல் உடைமை மனப்பான்மையை மிகத் தீவிரமடையச் செய்து இருக்கிறது. இந்தச் சமூகம் முழுக்க முழுக்க ஆண்களால் கட்டமைக்கப்பட்ட ஆணாதிக்க சமூகம். பொதுவுடைமைச் சமூகத்தில், தாய்வழிச் சமூகத்தில் இருந்து தந்தைவழிச் சமூகமாக, சொத்துடைமைச் சமூகமாக மாறியது முதல் இன்றுவரை பெண்களின் உடல் மீதான ஆண்களின் உடைமை மனப்பான்மை ஊறி இருக்கிறது. அதைக் கல்வி, சிறிதளவும் மாற்றவில்லை. கல்வித் தரத்தின் லட்சணம் அப்படி. பாலியல் கல்வி பற்றி இன்றும் விவாதித்துக் கொண்டேதான் இருக்கிறோம். 15 வயதில் அவனுக்குக் கொடுக்க வேண்டிய கல்வியைக் கொடுக்காமல், மதிப்பெண் எடுக்கும் மெஷினாக அவனை இந்தச் சமூகம் மாற்றிவைத்து இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்