கழுகார் பதில்கள்

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

அ.தி.மு.க 160 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று ஜெயலலிதா நினைத்தாராமே?

சமீபத்தில் நடந்த அ.தி.மு.க செயற்குழுவில் பேசிய ஜெயலலிதா, ‘‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றோம். அந்த அடிப்படையில் பார்த்தால் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்’’ என்று பேசியதாகச் சொல்கிறார்கள். தி.மு.க இத்தனை இடங்கள் வெற்றி பெறும் என்று ஜெயலலிதா நினைக்கவில்லை. அதுதான் உண்மை.

ஜெயதமிழண்ணா, உச்சனவலசு.

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க-வைத் தவிர, மற்ற எல்லா உதிரிக்கட்சிகளும் காணாமல் போய்விட்டனவே. இது நல்லதா?

நல்லதல்ல. ஜனநாயகம் என்பதே கருத்துக்களின் மோதலாக அமையவேண்டும். அதற்குப் பலதரப்பட்ட கட்சிகள் இயங்க வேண்டும். உதிரிக்கட்சிகள் காணாமல் போனதற்கு தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மட்டுமே காரணம் அல்ல. இந்தக் கட்சிகளும்தான் முக்கியக் காரணம் என்பதை அந்தக் கட்சித் தலைவர்கள் உணரவேண்டும்.

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.

மதுரை ஆதீனத்தைப் பாராட்டி அவரின் அரசியல் தொண்டுக்காக ‘ஆஸ்தான கவிஞர்’ பட்டம் கொடுத்தால் என்ன?

‘ஆஸ்தான ஜால்ரா’ என்று வேண்டுமானால் கொடுக்கலாம். பாரம்பர்யம் மிக்க ஒரு சைவ மடத்தின் பெயரைத் தன்னால் முடிந்தவகையில் எல்லாம் கெடுத்துவிட்டார் மதுரை ஆதீனம்.

அ.குணசேகரன், புவனகிரி.

‘லோக் ஆயுக்தா’வை தமிழக அரசு கொண்டுவந்து விடுமா?

கொண்டுவரப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். கொண்டுவர வேண்டும். அப்படிக் கொண்டுவரும் லோக் ஆயுக்தா, அதிகாரம் பொருந்திய அமைப்பாக இருக்க வேண்டும்.

மு.நடராஜன், திருப்பூர்-7.

அ.தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா கொண்டாடுவது குறித்து எதுவும் விவாதிக்கவில்லையே?

ஜெயலலிதாவுக்கு அது நினைவில் இருக்கிறதா என்று தெரியவில்லை. நினைவில் உள்ளவர்கள் அவரிடம் சொல்லலாமா... கூடாதா என்ற தயக்கத்தில் இருப்பார்கள். பார்ப்போம்... ஜெயலலிதா என்ன செய்கிறார் என்று.

தாமஸ் மனோகரன், புதுச்சேரி-10.

இன்றைய அரசியலுக்கு நிரந்தர எதிரி யார்... நிரந்தர நண்பன் யார்?

ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள்தான் நிரந்தர எதிரிகள். நிரந்தர நண்பன் யார் என்று இன்னும் கண்ணுக்குத் தெரியவில்லை.

காஞ்சி எஸ்.ஃபைசுதீன், காஞ்சிபுரம்.

வைகோ தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிலைப்படுத்திக்கொண்டு இருந்தால் தமிழக மக்கள் ஓரளவுக்கு நல்ல மாற்றத்தைத் தந்திருப்பார்களா?

விஜயகாந்த்தை அறிவித்ததன் மூலமாக மக்கள் நலக் கூட்டணி எதிர்கொண்ட விமர்சனத்தைத் தவிர்த்து இருக்க முடியும். விஜயகாந்த்தை அறிவிப்பதற்கு முன்னதாக மக்கள் நலக் கூட்டணியை ஆதரித்த நடுநிலை வாக்காளர்களது வாக்குகள் இந்தக் கூட்டணிக்குக் கிடைத்திருக்கும். ‘மாற்றம் என்ற சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் ஓரளவு நல்ல முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்துள்ளார்கள்’ என்ற அனுதாபம் கிடைத்திருக்கும். அ.தி.மு.க.,தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளின் பணபலம், அதிகார பலத்தை இவர்களால் சமாளிக்க முடியாவிட்டாலும், அவர்களுக்குப் போடுவதற்கு இவருக்குப் போடலாம் என்ற சலனத்தையாவது ஏற்படுத்தி இருக்க முடியும். மேலும், ‘மாற்றம்’ என்ற சொல்லை அசிங்கப்படாதவாறு காப்பாற்றி இருக்கவாவது முடியும்.

எல்லாவற்றையும் ஆத்திரத்தில், அவசரத்தில் கெடுத்துவிட்டார்கள்.

ரேவதிப்ரியன், ஈரோடு-1.

பதவி நீட்டிப்பை விரும்பவில்லை என்று சொல்லிவிட்டாரே ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்?

எவ்வளவு அடிச்சாலும், அசிங்கப்படுத்தினாலும் தாங்க அவர் என்ன அரசியல்வாதியா?

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

ஐ.பி.எஸ் அதிகாரிகள் எம்.எல்.ஏ ஆனால்கூட அமைச்சர் ஆக முடியவில்லையே?

முன்னாள் டி.ஜி.பி நடராஜை மனதில்வைத்துக் கேட்கிறீர்கள். சொன்னதைச் செய்பவர்களுக்குத்தான் அமைச்சர் பதவியே தவிர, சொந்தப் புத்திகொண்டவர்களுக்கு அல்ல.

கோ.அரியவானம். லாஸ்பேட்டை.

‘‘அ.தி.மு.க-வின் வெற்றிக்குப் பின்னால் கொட்டிக்கிடப்பது அம்மாவின் வியர்வை மட்டும்தான்’’ என்று சொல்லும் வைகைச்செல்வனால் அருப்புக்கோட்டையில் ஏன் வெற்றி பெற முடியவில்லை?

வைகைச்செல்வனை எதிர்த்துப் போட்டியிட்டவர், தொகுதி முழுக்க அதிகமாக பன்னீர் தெளித்துவிட்டார். அதனால்தான்.

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

அரசியலில் ஜீரணிக்க முடியாத விஷயம் எது?

கூட்டணிக்கு பணம் வாங்குவதும், ஓட்டுக்கு பணம் பெறுவதும்.

கே.ஏ.என்., பெங்களூரு.

‘‘தி.மு.க-வை வளரவிடக் கூடாது என்பதற்காகத்தான் உழைக்கிறேன்’’ என்கிறாரே ஜெயலலிதா?

அ.தி.மு.க-வை வளரவிடக் கூடாது என்று கருணாநிதி உழைக்கிறார். இவர்கள் இருவருக்கும் நோக்கம் தமிழ்நாட்டை வளர்ப்பது அல்ல. அடுத்தவர்களை ஒழிப்பது. இதுதான் உண்மை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்