சுவாமியின் டார்கெட் என்ன?

விரட்டப்பட்ட ரகுராம் ராஜன்...

ரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னராக நீடிக்க விரும்பவில்லை என்று ரகுராம் ராஜன் அறிவித்துவிட்ட நிலையில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியே அரசியல் சர்ச்சையில் சிக்கியது. சுவாமியின் தலையில் மோடி கொட்டியது தான் ஒரே ஆறுதல்!

அனைத்துத் தரப்பினரின் விருப்பத்துக்குரிய ரகுராம் ராஜன், மிக மோசமான நிலையில் இருந்த இந்தியப் பொருளாதாரத்தைத் தன் புதிய சீர்திருத்தக் கொள்கைகளாலும், நடவடிக்கைகளாலும் சரி செய்தவர். இதைப் பெரும்பாலான பொருளாதார வல்லுநர்களே ஒப்புக்கொள்கிறார்கள். இந்த ரகுராம் ராஜனைத்தான், தேசத் துரோகி என்றும், அமெரிக்கா வுக்காகச் செயல்படுகிறார் என்றும் குற்றம் சாட்டினார், பி.ஜே.பி-யின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி. அவருக்குப் பதவி நீடிப்புத் தரக் கூடாது என்று பிரதமருக்குக் கடிதமும் எழுதினார் சுவாமி.

முன்னேறிய பொருளாதாரம்!

ஒரு நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதை அந்த நாட்டின் ஜி.டி.பி மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையில் அளவிடலாம். அதேபோல், வங்கித் துறை சிறப்பாக இருக்கும் ஒரு நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் சிறப்பானதாக இருக்கும் என்பதும் உண்மை. ஆனால் ரகுராம் ராஜன் பதவி ஏற்றபோது, இந்த இரண்டுமே சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை. 2013-ல் ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராகப் பொறுப்பு ஏற்றபோது பணவீக்க விகிதம் 7.3 சதவிகிதமாக இருந்தது. அதற்கு முந்தைய 20 ஆண்டுகளைக் காட்டிலும் இது அதிகம்.

ஜி.டி.பி-யும் அதற்கு முந்தைய 10 ஆண்டுகளைக் காட்டிலும் குறைவாக 6.9 சதவிகிதமாகவே இருந்தது. ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் கவர்னராகப் பொறுப்பேற்றப் பிறகு, பல முன்னேற்றங்களை இந்தியப் பொருளாதாரம் கண்டது. இவரால் வகுக்கப்பட்ட கொள்கைகள் காரணமாக, பணவீக்கம் 1.9 சதவிகிதமாகக் குறைந்தது. ஜி.டி.பி 7.1 சதவிகிதமாக உயர்த்தது. வங்கித் துறைக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடியின் காரணமாக ரூ.5.8 லட்சம் கோடி வாராக்கடன் சுமை வங்கிகளுக்கு இருக்கும் என்ற செய்தி வெளிவந்தது.

டாலர் கையிருப்பு அதிகரிப்பு!

ரகுராம் ராஜன் கவர்னராக இருந்த காலத்தில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகவே இருந்திருக்கிறது என்பதற்கு இன்னும் பல சான்றுகள் உள்ளன.

* இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு நிலைத் தன்மைக்குக் கொண்டு வரப் பட்டது. அந்நியச் செலாவணி இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முதன்முறையாக 40 வருட ஒப்பந்தப் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. இவரது காலகட்டத்தில் டாலர் கையிருப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் 30 சதவிகிதம் அதிகரித்தது. தற்போது 380 பில்லியன் அமெரிக்க டாலர் இருப்பு உள்ளது.

*  பணவீக்கம் கட்டுப்படுத்தப் பட்டதால் சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் பார்க்க முடிந்தது. சில்லறைப் பணவீக்கம் 2013 செப்டம்பரில் 9.8 சதவிகிதமாக இருந்தது. 2015 ஜூலை மாதத்தில் 3.78 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. மொத்த விற்பனைப் பணவீக்க விகிதம் வரலாறு காணாத அளவில் -4.05 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.

  * பொதுத்துறை வங்கிகளின் சீரமைப்புக்காகவே தனியாக ஓர் இயக்குநர் குழு அமைக்கப்பட்டது. இதன்மூலம் வங்கித் துறையின் பிரச்னைகளைக் களைவதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப் பட்டன. சொத்து மறுபகுப்பாய்வு நடவடிக்கைகள் மூலம் வாராக்கடன்களை வசூலிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி கடன் வாங்கிய நிறுவனங்களின் பங்குகளைக் கைப்பற்றுவதன் மூலம் கடனை வசூலிக்கும் யோசனை வழங்கப்பட்டுள்ளது.

* வங்கித் துறையின் வளர்ச்சியை மேம்படுத்த ஸ்மார்ட்போன் பேங்கிங் என்பதற்கான யுனிவர்சல் பேமென்ட் இன்டர்வேஸ் அறிமுகப்படுத்தப் பட்டது. பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் மற்றும் ட்ரேட் ரிசீவபல்ஸ் எக்சேஞ்ச் போன்ற திட்டங்களும் கொண்டுவரப்பட்டன. இதனால் வெளிநாடு களுடனான வர்த்தகம் மேம்பட்டது.

* பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளும் இவருடைய காலகட்டத்தில் அதிகரித்தன. 2018-ல் பங்குச்சந்தையில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகளுக்கான வரம்பை 5 சதவிகிதமாக உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவெடுத்தது.

வட்டி விகிதத்தைக் குறைக்காமல் சிறு, குறு தொழில் முனைவோர்களுக்குத் துரோகம் செய்கிறார் என்பது ரகுராம் ராஜன் மீது சுப்பிரமணியன் சுவாமி முன்வைத்த முக்கியக் குற்றச்சாட்டு. ஆனால் உண்மையில், பிற கவர்னர்களின் காலகட்டத்தில் இருந்ததைக் காட்டிலும் குறைவான வட்டிவிகிதத்தையே ரகுராம் ராஜன் செயல்படுத்தி வந்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்