கழுகார் பதில்கள்

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

விஜயகாந்த்தின்  இந்தப் பரிதாப நிலைக்குக் காரணம் வைகோதானே?

வைகோவா... பிரேமலதாவா?

சுப்பு காசி தம்பி, கருப்பம்புலம்.

வாட்ஸ் அப்-க்கு தடையாமே?

அப்படி ஒரு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டார்கள்.

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

பி.ஜே.பி கூட்டணியில் ஜெயலலிதாவைச் சேர்த்து துணைப்பிரதமர் பதவி தரப்போகிறார்களாமே?

அப்படி ஒரு தேவை பி.ஜே.பி-க்கோ, மோடிக்கோ இல்லை. மோடிக்கு ஜெயலலிதாவைப் பற்றித் தெரியாதா என்ன?

லட்சுமி செங்குட்டுவன், வேலூர்( நாமக்கல்).

‘காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் வாக்குகளாலும் அந்தக் கட்சித் தொண்டர்களின் உழைப்பாலும்தான் தி.மு.க. வெற்றிபெற்று இருக்கிறது’ என்று ப.சிதம்பரம் சொல்கிறாரே?

அப்படியானால், அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று சோனியாவிடமும் ராகுலிடமும் ப.சிதம்பரம் கோரிக்கைவைக்கலாம். அதற்கு முன்னதாக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடலாம். தனது மகன் கார்த்தியை கடந்த தேர்தலில் அவரால் வெற்றிபெற வைக்க முடியவில்லை.இவரே மகாராஷ்டிரா வழியாக மாநிலங்கள் அவைக்குப் போகிறார். இந்த நிலைமையில் பேச்சு... பெரும் பேச்சாக இருக்கிறது.

சுந்தரிப்ரியன், வேதாரண்யம்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா செய்யக் காரணம் என்ன?

அவரால் தொண்டர்களுக்குத்தான் தலைவராக இருக்க முடிந்ததே தவிர, தலைவர்களுக்குத் தலைவராக இருக்க முடியவில்லை. அதுதான் காரணம். காங்கிரஸில் தொண்டர்களைவிட தலைவர்கள்தான் அதிகம் என்பது நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் அல்ல.

வீ.ஹரிகிருஷ்ணன், திருச்சி-17.

எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்து இருந்தால் அரசியலில் எவையெல்லாம் நடந்திருக்கும்? எவை நடைபெறாமல் இருந்திருக்கும்?

எம்.ஜி.ஆர் இப்போது இருந்து இருந்தால் அவருக்கு 99 வயது. அடுத்த ஆண்டு நூற்றாண்டு விழா. கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் அரசியல் செய்துகொண்டு இருக்கலாம். ஜெயலலிதா இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டார். ஒருவேளை, ஜெயலலிதா தனிக்கட்சிகூட நடத்திக்கொண்டிருக்கலாம்.

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

சுவாதி கொலை உணர்த்தி இருக்கும் உண்மை என்ன?

அந்தக் கொலைக்கான காரணம் இன்னமும் முழுமையாக வெளிச்சத்துக்கு வரவில்லை. ஆனால், சில விஷயங்களை உணர்த்துகிறது அந்தக் கொலை...பெண் பிள்ளைகள் அச்சத்துடன் நடமாடும் காலமாகத்தான் இது இருக்கிறது. இரவில் மட்டுமல்ல, பட்டப்பகலிலும்.ஆள் அரவம் அற்ற அடர்ந்த வனப்பகுதி மட்டுமல்ல, தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்துசெல்லும் ரயில் நிலையங்கள்கூட பாதுகாப்பான இடம் என்று சொல்ல முடியாது.‘யாருமே பார்க்கலை, காப்பாத்த ஒருத்தர்கூட வரலை’ என்று இதுவரை பல்வேறு இழப்புகளுக்குக் காரணம் சொல்லி இருப்போம். ஆனால், ஆட்கள் இருந்தாலும் இழப்புகள் நடக்கத்தான் செய்யும்.

இரக்கமற்ற கொலைகளைச் செய்பவர்கள் கூலிப்படை ஆட்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் அரக்கக்குணம் படைத்தவர்களாக மாறி வருகிறார்கள்.

மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.

அ.தி.மு.க-வில் நால்வர் அணி முன்பு இருந்தது. இப்போது இருக்கிறதா?

ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி எனக் கடந்த ஆட்சிக்காலத்தில் நால்வர் அணி இருந்தது. அதில் பழனியப்பன் சேர்க்கப்பட்டு ஐவர் அணி ஆனது. தேர்தல் நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன் ஆகிய இருவர் மீது அதிகப்படியான புகார் வந்ததால் அவர்கள் இருவரும் விலக்கப்பட்டார்கள். நால்வர் அணியே கலைக்கப்பட்டது என்று சொல்லப்பட்டது. தனக்கு எதிராக வளர்வார்கள் என்று இவர்கள் யாரை எல்லாம் நினைத்தார்களோ அவர்களை எல்லாம் இவர்கள் தட்டிவைத்தார்கள். பலம் இல்லாத மனிதர்களை இவர்கள் வளர்த்துவிட்டார்கள். இவை எல்லாம் கடைசி நேரத்தில்தான் ஜெயலலிதாவுக்குத் தெரியவந்தது.

இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம் ஆகியோர் தோற்றார்கள். பழனியப்பன் வென்றாலும் அமைச்சர் பதவி தரப்படவில்லை. அமைச்சரவையில் இடம்பெற்றாலும் பன்னீருக்கும் எடப்பாடிக்கும் பழைய செல்வாக்கு இல்லை. எனவே, நால்வர் அணி மட்டுமல்ல, எந்த அணியும் இப்போதைக்கு அ.தி.மு.க-வில் இல்லை. வழக்கம்போல சசிகலா குடும்ப அணி ரகசியமாகச் செயல்பட்டு வருகிறது.

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

‘அ.தி.மு.க-வுக்குச் சென்றிருந்தால் எனக்குத்தான் எம்.பி பதவி கிடைத்திருக்கும்’ என்கிறாரே ஞானதேசிகன்?

இன்னுமா இவரை ஜி.கே.வாசன் வைத்துக்கொண்டு இருக்கிறார்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்