கழுகார் பதில்கள்

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

‘‘தமிழ்நாட்டைக் கடன்கார நாடாக ஆக்கியதுதான் ஜெயலலிதாவின் சாதனையா?’’ என்று கேட்கிறாரே கருணாநிதி?


தமிழ்நாட்டின் கடன்தொகை அதிகமானதற்கு ஜெயலலிதா மட்டும் காரணம் அல்ல... கருணாநிதியும் சேர்ந்துதான் காரணம். இவர்கள் இருவரும் விளைவுகளைப் பற்றிக் கவலையேபடாமல் இலவசங்களை அள்ளிவீசி கடன்தொகையை அதிகப்படுத்தித் தமிழ்நாட்டைக் கடன்கார நாடாக ஆக்கிவிட்டார்கள். எனவே, இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் இவர்கள் இருவரும்தான்.

இனியவதி சரவணன், கொட்டாரக்குடி.


இறந்தபிறகும் பெண்களை இழிவுப்படுத்தி அசிங்கமான வதந்திகளைப் பரப்பும் மனித இனங்களை என்ன செய்வது?


அத்தகைய மனிதர்களைப் புறந்தள்ளுங்கள். இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவோர் எல்லாக் காலத்திலும் இருக்கத்தான் செய்தார்கள். பெண்கள் படிக்க வந்தபோது, வேலைக்குச் சென்றபோது, உயர் பொறுப்புகளை அடைந்தபோது, சமூகத்துக்காகப் போராட வந்தபோது, அரசியலில் நுழைந்தபோது... அதனை விரும்பாத ஆண்கள், அந்தப் பெண்களைக் கொச்சைப்படுத்தவே செய்தார்கள். அதைக் கண்டுகொள்ளாமல் தங்களது உழைப்பால், அறிவால், தன்னம்பிக்கையால், திறமையால் முன்னுக்கு வந்த பெண்கள்தான் சமூகத்தின் முன்மாதிரியாக உயர்ந்தார்கள். பெண் வாழும்போது மட்டுமல்ல, செத்தபிறகும் இந்தச் சமூகம் அவளைக் கொச்சைப்படுத்தும். இதைப் புறந்தள்ளித்தான் வளர்ந்தாக வேண்டும்.

சுந்தரிப்ரியன், வேதாரண்யம்.

‘‘பிரதமரின் அறிவுரையைத் தொடர்ந்து இனி மீடியாக்களில் வெளிப்படையாகப் பேசுவது இல்லை’’ என்று சுப்பிரமணியன் சுவாமி கூறி இருக்கிறாரே?


சுவாமியால் அப்படி இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. இத்தோடு சேர்த்து ஒரு ஜோக் அடித்துள்ளார் சுவாமி, ‘இவரது பேச்சைப் போட்டு மீடியாக்கள் ஏராளமாகச் சம்பாதித்துவிடுகிறதாம்’. நல்லவேளை ஷேர் கேட்காமல் விட்டுவிட்டார்.

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

சென்னையில் ரோந்துப் பணிக்காக போலீஸாருக்கு 250 சைக்கிள்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கி உள்ளாரே?


அந்த சைக்கிள்கள் திருடுபோய்விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கமிஷனரின் தலையாயப் பணிகளில் ஒன்று. சென்னையில் செயின் திருடர்கள், பைக் திருடர்கள் அதிகமாகி வருகிறார்கள்.

க.பொன்முடி, விழுப்புரம்.

தே.மு.தி.க-வை தனித்துவம் வாய்ந்த கட்சியாக உருவாக்க புதிய நிர்வாகிகளை விஜயகாந்த் நியமிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?


தே.மு.தி.க என்பது ஒன்மேன் ஷோ உள்ள கட்சி. இதில் எத்தகைய திறமையான நிர்வாகிகளைப் போட்டாலும் அவர்களால் செயல்பட முடியாது. அங்கு எல்லாமே விஜயகாந்த் - பிரேமலதா சொல்வதுதான் நடக்கும். ஆனால், இது விஜயகாந்த் உஷார் ஆகவேண்டிய நேரம்.

சம்பத்குமாரி, பொன்மலை.

‘‘அ.தி.மு.க கடைசி நிமிடத்தில் காலை வாரிவிட்டதால், வேறு வழியின்றி மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தோம்’’ என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் சொல்லி இருக்கிறாரே?


தி.மு.க-வுடன் பேரம் படியாததால்தான் விஜயகாந்த்தும் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தார். இப்போது ஜி.கே.வாசன் இப்படிச் சொல்லி இருக்கிறார். இந்தக் காரணம் உண்மையானால், அது எப்படி மக்கள் நலக் கூட்டணி ஆகும்? தி.மு.க-வில் சேர்க்கப்படாதோர், அ.தி.மு.க-வில் சேர்க்கப்படாதோர் கூட்டணி என்றுதானே சொல்ல முடியும்?

அ.குணசேகரன், புவனகிரி.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகுவதற்கு என்ன காரணம்?


பாலியல் வக்கிரங்கள் அதிகமாவதுதான் காரணம்.

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

தி.மு.க-வில் ஆறு மாவட்டச் செயலாளர்கள் பதவி பறிக்கப்பட்டு இருக்கிறதே?


இவர்கள் எல்லாம் சிறு மீன்கள்தான். ஆனால் பதவி பறிக்கப்பட வேண்டிய திமிங்கிலங்கள் உள்ளன. ஸ்டாலினால் கைவைக்க முடியுமா எனத் தெரியவில்லை. கட்சிக்காரர்களைத் திட்டமிட்டுத் தோற்கடித்தவர்கள், வளரவிடாமல் தடுத்தவர்கள், தி.மு.க-வுக்கு சாதகமான தொகுதிகளைத் திட்டமிட்டு கூட்டணிக் கட்சிகளுக்குத் தள்ளிவிட்டவர்கள் என்று சிலர் இருக்கிறார்கள். அவர்களை ஸ்டாலின் அடையாளம் கண்டாரா எனத் தெரியவில்லை.

பெ.வேலுமணி, நாராயணப்பாளையம்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் மெளனம் சாதிப்பது ஏன்?


தேர்தல் ஆணையத்தின் மெளனத்தை மக்கள்தான் கலைக்கவேண்டும். தங்கள் தொகுதிக்கான மக்கள் பிரதிநிதி வேண்டி உடனடியாக அந்தத் தொகுதி மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.

பொன்விழி, அன்னூர்.

தற்போதைய நிலையில் விஜயகாந்த்தான் மக்கள் நலக் கூட்டணியில் இல்லையே. பிறகு, ஏன் அவரைவிட்டுப் பிரிந்த சந்திரகுமார் போன்றவர்கள் அவரிடம் வரவில்லை?


சந்திரகுமார் போன்றவர்களது நோக்கம், மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் சேரக் கூடாது என்பது மட்டுமல்ல, அவர் தி.மு.க கூட்டணியில் சேரவேண்டும் என்பதும்தான். அது நடக்காததால்தான் இவர்கள் வெளியே தி.மு.க-வுடன் சேர்ந்து போட்டியிட்டார்கள். அந்தத் தனிக்கட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே தனிக்கடையை மூடிவிட்டு தி.மு.க-வில் ஐக்கியம் ஆகப் போகிறார்கள்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை.


விஜயகாந்த் ‘கிங்’ஆக இருக்க விரும்பியது தவறா?


‘கிங்’காக ஆக விரும்பியது தவறு அல்ல. அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தாமல் ‘கிங்’ ஆக சொல்லிக்கொண்டதுதான் தவறு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்