உங்களைப் போலவே வாழ ஆசைப்படுகிறோம்...

நுங்கம்பாக்கம் சுவாதி படுகொலை பற்றிச் சமூக வலைதளங்களில் இன்றளவும் பொங்கிப்பொங்கி பொங்கச்சோறு வைக்கிறோம். இந்தக் கட்டுரை வெளிவரும் நேரத்தில் ஒருவேளை ‘கபாலி’ ட்ரெய்லர் வந்திருந்தால், ஃபேஸ்புக், ட்விட்டர்களில் டிரெண்ட் மாறியிருக்கும்.

தலைநகர் சென்னையில் நடந்த காரணத்தினால்தான் இந்தக் கொலை விஷயம் இணையத்தில் ஒரு வாரத்துக்கும் மேல் தாக்குப் பிடிக்குது. இதே சம்பவம் ஏதோ ஒரு கிராமத்தில் நடந்திருந்தால் செய்தித்தாளில் ஓர் ஓரத்தில் மட்டும் வந்திருக்கும். செய்தி சேனலில் அதிகபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு முறை ஒளிபரப்பாகி இருக்கும். ஆக, இங்கு சம்பவத்தின் வீரியம் என்பது இடத்தைப் பொறுத்துத்தான் என்பது தெளிவாகிறது.

‘‘ஒருவேளை நான் அந்த இடத்தில் நின்றிருந்தால்...” எனப் பேசுவது எல்லாம் ஒரு ஃபேன்டசி கதை சொல்வதுபோல்தான். ‘இருந்த இடத்தில் இருந்துகொண்டு ஒருத்தணும் காப்பாத்தலை...’ எனக் கூப்பாடு போடுவது அயோக்கியத்தனம். நான் அங்கு இருந்தாலும் என் புத்தி, மனம் எல்லாம் செயலற்றுத்தான் போயிருக்கும். இதற்கு எத்தனை விழிப்பு உணர்வு கொடுத்திருந்தாலும் அந்த நேரத்தில், அதிர்ச்சியில் எதுவும் வேலை செய்யாது. அதுதான் உண்மை.

ஆனால், என் புத்தி கொஞ்சம் சுதாரித்து அவனைத் தப்பிச்செல்லவிடக் கூடாது எனச் சொல்லியிருக்கும். கொலையாளி ஒரு கையில் ஆயுதம் உள்ள எளியவன். நான் வெற்றுத் துணிச்சல் உள்ள நிராயுதபாணி. என்ன செய்ய? சினிமாவில் வருவதுபோல் ஓடிப்போய் அவனைப் பிடிக்கவா? சத்தியமாக என்னால் முடியும் எனப் பொய்கூடச் சொல்ல முடியாது. ஆனால், என்னுடன் நாலு பேர் சேர்ந்திருந்தால் நிச்சயம் முடியும். ஆனால் அவனை நான் பிடிக்கப்போய், என்னுடன் யாரும் வரவில்லை என்றால்... என் நிலை? அங்கிருந்த ஒருவர் சத்தம் போட்டு இருந்தால் நாலு பேர் சேர்வார்கள் என வைத்துக்கொள்வோம். அப்போதும் அதை யார் முதலில் செய்வது என்பதுதான் சிக்கல்.

அங்கே இருந்த மக்களைப் பற்றி மட்டும் குறை சொல்ல முடியாது. காரணம், வெறும் ஆயிரக்கணக்கில் ஆயுதங்களுடன் இருந்த ஆங்கிலேயர்களைப் பார்த்து, கோடிக்கணக்கில் இருந்த  நாம் பயந்து அடிமையாக எத்தனைக் காலம் இருந்தோம்? அந்த அடிமைத்தனம்தான் நம் ரத்தத்தில் ஊறி மரபணு மூலம் நம்மிடத்தில் இருக்கிறது. பரவலாகக் கேட்கப்படும் இன்னொரு கேள்வி, ‘உங்க அக்கா தங்கைக்கு நடந்தா... இப்படித்தான் பார்த்துக்கிட்டு இருப்பீங்களா?’ மேலே சொன்ன அடிமைத்தனம் முத்திப் போச்சுனா, அக்கா தங்கச்சியக்கூட காப்பாத்த முடியாத அடிமைக்கூட்டமா மாறிப்போவோம் என்பது நிச்சயம்’’ என யூடியூப் வீடியோ ஒன்றில் பதிவுசெய்திருந்தார்கள். அதில், எவ்வளவு உண்மை அடங்கியிருக்கிறது என யோசித்துப் பாருங்கள். சாவிலும் சாதி, மதம் பற்றியும், அந்தப் பெண்ணின் ஒழுக்கம் பற்றியும் பேசுவதைவிடக் கேவலம் வேறு என்ன இருக்கப்போகிறது?

அடுத்து... ஒரு பெண்ணின் புகைப்படத்தை எடுத்து மார்ஃபிங் செய்தவன், குற்றவாளியைக் கண்டுபிடிக்க லஞ்சம் கேட்ட போலீஸ் அதிகாரி மீது இந்தச் சமூகம் தவறு சொல்லவில்லை. மாறாக, ‘உன் புகைப்படத்தை ஏன் ஃபேஸ்புக்கில் பதிவுசெய்தாய்?’ என்று கேள்வி கேட்டு அவளைத் தற்கொலைதான் செய்யவைத்தது. மார்ஃபிங் செய்யப் பல வழிகள் உண்டு, முட்டாள் சமூகமே. சுவாதியை ஒருவன் கொலை செய்தான்... வினுப்ரியாவை ஒரு சமூகம் சேர்ந்து கொன்று இருக்கிறது. என்ன வித்தியாசம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்