சிறைக்குள் முகிலன் நடத்தும் பட்டினிப் போராட்டம்!

யாருக்கும் வளையாத நாணல் நண்பன்

ஓ.பி.எஸ் செய்த ஊழல்களைப் பட்டியலிட்டு தேர்தல் பிரசார நேரத்தில் அவருக்கு எதிராகப் போடியில் துண்டுப் பிரசுரம் வழங்கிய முகிலன், காவல் துறையால் கைதுசெய்யப்பட்டு தற்போது மதுரை சிறையில் அடைபட்டிருக்கிறார்.

மதுரை சிறையில் அவரைச் சந்தித்துவந்த ‘நாணல் நண்பர்கள்’ இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள், “தமிழகத்தில் முறைகேடாக மணல் அள்ளப்படுவதில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தொடர்பு உண்டு. அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்று போடியில் துண்டு பிரசுரம் வினியோகித்தார் தோழர் முகிலன். பிரசுரம் வழங்குவது சட்ட விரோதம் அல்ல... இதை ஜீரணித்துக்கொள்ள முடியாத ஓ.பி.எஸ் தரப்பு, போடி நகர காவல் துறையை ஏவி அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இந்த அராஜகத்தைச் செய்த காவல் துறை மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், ஓ.பி.எஸ்-ஸை கைதுசெய்யக் கோரியும் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த 9-ம் தேதி பட்டினிப் போராட்டம் நடத்தினார் முகிலன். அப்போது அவரை கைதுசெய்து மதுரை சிறையில் அடைத்தனர். ஆனால், கோரிக்கைகளை வலியுறுத்தி சிறையிலும் பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்தார். அவர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. ஜி.ஹெச்-ல் சிகிச்சை அளித்தனர். இப்போது மறுபடியும் சில கோரிக்கைகளை முன்வைத்து பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்” என்றனர்.
இந்த வழக்குத் தொடர்பாக கடந்த 24-ம் தேதி உத்தமபாளையம் கோர்ட்டுக்கு முகிலனை அழைத்து வந்தனர். அப்போது ஓ.பி.எஸ்-ஸை கைதுசெய்ய வேண்டுமென்று கோர்ட்டுக்கு வெளியே கோஷமிட்டார் முகிலன். தொடர்ந்து பட்டினிப் போராட்டம் நடத்தி வருவதால், அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகி வருவதாகச் சொல்கிறார்கள்.

‘தேனி நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்கு நிரந்தரமாகத் தடைவிதிக்க வேண்டும்; கிரானைட் முறைகேட்டில் இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்யவேண்டும்; மீத்தேன், கூடங்குளம் அணுஉலை உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக போராடிய ஒரு லட்சம் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர் நடத்திவரும் போராட்டம் தொடர்கிறது.

- செ.சல்மான்
படம்: வீ.சக்தி அருணகிரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்