மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க. சாய்ஸ்... ரோசய்யா வாய்ஸ்!

சீறிய தேர்தல் கமிஷன்... - கவர்னருக்கு கல்தா!

‘அ.தி.மு.க சாய்ஸ்.. ரோசய்யா வாய்ஸ்... சீறிய தேர்தல் கமிஷன்... கவர்னருக்கு கல்தா!’ - கழுகார் அனுப்பி வைத்த டைட்டில் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தது. ரேப்பரை ரெடி செய்துவிட்டுக் காத்திருந்த நேரத்தில் வெயிலின் வேர்வை முத்துக்களோடு உள்ளே வந்தார் கழுகார்.
‘‘கடைசியில் கவர்னரையும் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர்போல ஆக்கிவிட்டது அ.தி.மு.க. அதன் விளைவு இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது’’ என முன்னோட்டம் கொடுத்துவிட்டுச் செய்திகளைக் கொட்டத் தொடங்கினார் கழுகார்.

‘‘சட்டசபைத் தேர்தலுக்கு மே 16-ம் தேதி தமிழகம் தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்பு அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளின் தேர்தல் 23-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. வாக்காளர்களுக்குப் பணமும், பரிசுப் பொருட்களும் கொடுத்ததாக எழுந்த புகாரில் இந்த நடவடிக்கையை எடுத்தது தேர்தல் கமிஷன். இதனால் 232 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளின் தேர்தலைத் தள்ளிவைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டு தொகுதிகளின் பி.ஜே.பி வேட்பாளர்கள் உட்பட ஐந்து வேட்பாளர்கள் கோர்ட்டுக்குப் போனார்கள். வழக்கு விசாரணையின் போது ‘அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தல் ஜூன் 13-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது’ எனச் சொன்னது தேர்தல் கமிஷன். வாக்கு எண்ணிக்கை முடிந்த இரண்டு நாட்களில் நடக்க வேண்டிய தேர்தல் இன்னும் தள்ளிப்போனது. ஆனாலும் பிரச்னை மட்டும் ஓயவில்லை. ‘திட்டமிட்டப்படி மே 23-ந் தேதியே தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்’ எனச் சொல்லி தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுப் போட்டார். இதை விசாரித்த நீதிமன்றம், ‘வாக்குப்பதிவை முன்கூட்டியே நடத்துவது தொடர்பாக வேட்பாளர்களின் கருத்தைக் கேட்டு அறிந்து 27-ம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும்’ எனத் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு போட்டது. இதற்கிடையே அரவக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜியும், தஞ்சை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ரெங்கசாமியும்  கவர்னர் ரோசய்யாவை சந்தித்து இதுதொடர்பாக மனு ஒன்றைக் கொடுத்தனர். அதோடு தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் மனு அளித்தனர். அதில், கவர்னரிடம் அளித்த தங்கள் மனு மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில், தேர்தல் தேதியைத் தள்ளிவைப்பதற்காக இரு தொகுதிகளின் வேட்பாளர்களிடமும் கருத்துக் கேட்பதை நிறுத்திவைக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். இந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக சம்பந்தமே இல்லாத கவர்னர் ரோசய்யா இதில் தலையிட்டார். அது அரசியல் சர்ச்சை ஆகிவிட்டது.’’

‘‘ம்’’

‘‘26-ம் தேதி இரவு கவர்னர் மாளிகையில் இருந்து ஒரு செய்திக்குறிப்பு ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இரண்டு தொகுதிகளிலும் ஜூன் 1-ம் தேதிக்கு முன் தேர்தலை நடத்தத் தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லப்பட்டிருந்தது. இப்படி கவர்னர் ரோசய்யாவிடம் இருந்து அறிக்கை வருவதற்கு முன்பே தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை அழைத்து விசாரித்திருக்கிறார் ரோசய்யா. இரண்டு தொகுதிகளிலும் தேர்தலை உடனே நடத்துவதில் அ.தி.மு.க-வைவிட கவர்னர் ஆர்வம் காட்டியது தேர்தல் கமிஷனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே இந்தப் பிரச்னை குறித்து ராஜேஷ் லக்கானியை டெல்லிக்கு அழைத்து விசாரித்தது தலைமைத் தேர்தல் கமிஷன். துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்காதான் ராஜேஷ் லக்கனியோடு ஆலோசனை நடத்தினார். கவர்னரின் அதிரடிக்குப் பதிலடி கொடுத்தது தேர்தல் கமிஷன். தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாகத் தேர்தல் கமிஷன் அறிவித்தது. தலைமைத் தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி, தேர்தல் கமிஷனர்கள் ஏ.கே.ஜோதி மற்றும் ஓ.பி.ராவத் ஆகியோர் கையெழுத்திட்டு 29 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டனர். ‘அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் வேட்பாளர்கள் சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். வாக்காளர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க அரசியல் கட்சிகளும் அவற்றின் தொண்டர்களும் வாக்காளர்களுக்குப் பணமும் பரிசுப் பொருட்களையும் அளிக்க முயன்று உள்ளனர். இதனால்தான் தேர்தலைத் தள்ளிப் போடலாம் எனத் தேர்தல் கமிஷன் தீர்மானித்தது. அப்படிச் செய்தால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை நிறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அங்கு உள்ள நிலவரம் வருத்தம் அளிக்கும் வகையில்தான் இருக்கிறது. அதனால் ஜூன் 13-ம் தேதி அன்றும் பாரபட்சமற்ற முறையிலும், நேர்மையாகவும் தேர்தலை நடத்துவது சிரமமாக இருக்கும். அதனால், தேர்தல் ரத்துசெய்யப்படுகிறது’ எனச் சொல்லியிருக்கிறார்கள். இப்படி நடப்பது தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை.’’

‘‘ஓஹோ?’’

‘‘ ‘ஜூன் 1-ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும்’ எனத் தேர்தல் கமிஷனுக்குக் கடிதம் எழுதிய கவர்னர் ரோசய்யாவையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள். இப்படி கவர்னர் நடந்துகொண்டதைத் தவிர்த்து இருக்கலாம் எனத் தேர்தல் கமிஷன் சொன்னது. ‘இரண்டு தொகுதிகளிலும் தேர்தலைத் தள்ளிப்போடுவது என்ற முடிவு சட்டம் - ஒழுங்கு அடிப்படையில் எடுக்கப்பட்டது அல்ல. வாக்காளர்களை ஈர்க்க அரசியல் கட்சிகள் மேற்கொண்ட சட்ட விரோத நடவடிக்கைகள் மற்றும் பணப் பட்டுவாடா ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் தேர்தலைத் தள்ளிவைக்கும் முடிவைத் தேர்தல் கமிஷன் எடுத்தது.’’

‘‘கவர்னர் சொன்னது சரியா?’’

‘‘தேர்தல் தேதிகளை மாற்றி அமைப்பதற்கு முன்பு கவர்னருடன் தேர்தல் கமிஷன், கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும் என்று கவர்னர் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951–ன் அடிப்படையில் அமைக்கப்பட்ட தேர்தல் கமிஷனின் அதிகாரத்தை மீறும் வகையில் அமைந்ததாகும். சுப்ரீம் கோர்ட் தெரிவித்த உத்தரவுக்கு முரணானது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையிலோ அல்லது வேறு எந்தச் சட்டத்தின் அடிப்படையிலோ, தேர்தல் தேதிகளை மாற்றி அமைப்பது தொடர்பாகத் தேர்தல் கமிஷன் கவர்னருடன் ஆலோசிக்கத் தேவை இல்லை. தேர்தல் கமிஷனுக்குக் கடிதம் எழுதியதை கவர்னர் தவிர்த்து இருக்கலாம்’ எனச் சொல்லி அந்த அறிக்கையில் ரோசய்யாவுக்கு குட்டும்வைத்தது தேர்தல் கமிஷன்.’’

‘‘கவர்னரின் அதீத ஆர்வத்துக்குக் காரணம் என்ன?”

‘‘2014-ல் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் ஆதரவு கவர்னர்கள் எல்லாம் மாற்றப்பட்டனர். ஆனால், பக்கா காங்கிரஸ்காரரான ரோசய்யா மட்டும் மாற்றப்படவில்லை. காரணம், ஜெயலலிதா. அதனால் ரோசய்யா ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட ஆரம்பித்தார். சட்டசபையில் கவர்னர் உரையில்கூட வழக்கத்துக்கு மாறாக ஜெயலலிதாவை புகழ்ந்து தள்ளினார்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடந்த ஊழல்களை எல்லாம் டாக்டர் ராமதாஸ், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் பட்டியல் போட்டு ரோசய்யாவிடம் வழங்கினார்கள். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அ.தி.மு.க வேட்பாளர்கள் மனுக் கொடுத்ததும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என ஆளும் கட்சிக்கு ஆதரவாக அப்பட்டமாகச் செயல்பட்டது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. துணைவேந்தர் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சொல்ல... அவர் மீது அவதூறு வழக்குப் போட்டார் ரோசய்யா. இத்தனைக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ரோசய்யாவும் காங்கிரஸ்காரர்கள். அந்த அளவுக்கு அ.தி.மு.க பாசம் காட்டி வந்தார் ரோசய்யா.’’

‘‘சொல்லும்!’’

‘‘லாஜிக்காக ஒரு விஷயத்தைச் சொல்லிதான் தேர்தல் கமிஷனுக்கு அவர் கடிதம் அனுப்பினார். தேர்தல் தேதியை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்குதான் உண்டு. தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாகத் தேர்தல் கமிஷன் அறிவித்த பிறகு வேட்புமனுத் தொடங்கு வதற்கு முந்தைய தினம் நாடாளுமன்றத் தேர்தல் என்றால் ஜனாதிபதியும் சட்டமன்றத் தேர்தல் என்றால், சம்பந்தப் பட்ட மாநில கவர்னரும் அறிவிக்கை வெளியிடுவார்கள். அந்த அடிப்படையை வைத்துதான் ரோசய்யா கடிதம் அனுப்பியிருக்கிறார். தேர்தல் அறிவிக்கை வெளியிடும் பொறுப்பு மட்டுமே கவர்னருக்கு உண்டு. மற்றபடி அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அதீத விசுவாசத்தைக் காட்ட இதைப் பயன்படுத்திக்கொண்டார்.’’

‘‘ம்.’’

‘‘அவர் நியாயப்படி நடந்துகொள்வதாக வைத்துக் கொண்டாலும் தி.மு.க உள்ளிட்ட மற்ற வேட்பாளர்களையும் அழைத்து விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என எதிர்க் கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். சென்னா ரெட்டிக்கு பிறகு தமிழகத்துக்கு வரும் கவர்னர்களை எல்லாம் தனக்கு வேண்டப்பட்டவர்களாக மாற்றி வருகிறது அ.தி.மு.க. அதில், ரோசய்யாவும் சிக்கிக் கொண்டார். தேர்தல் நடைமுறையில் இதுவரை எந்த கவர்னரும் இவ்வளவு வெளிப்படையாகக் குறுக்கிட்டதில்லை. பணப் பட்டுவாடா நடந்தபோது அதுபற்றி வாய் திறக்காத கவர்னர் இரண்டு தொகுதிகளில் தேர்தல் நடத்தவில்லை என்பதற்காக மட்டும் கவலைப்படுவது விநோதம்தான். இந்தப் பிரச்னையால் ரோசய்யாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்திருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் வரையில்தான் இந்த கவர்னருக்கு பதவிக்காலம் இருக்கிறது. தேர்தல் கமிஷனில் தலையிட்டதால் சர்ச்சையில் சிக்கியிருக்கும் ரோசய்யாவுக்கு பதவி நீட்டிப்பை மத்திய அரசு வழங்கினால் அதுவும் சர்ச்சையாகும். அதனால், ரோசய்யாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டுவதுபோலத் தெரியவில்லை.’’

‘‘அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?’’

‘‘அன்புநாதன் வீட்டிலிருந்து ரூ.4.77 கோடியும், தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிசாமி வீட்டிலிருந்து ரூ.1.98 கோடியும் வருமானவரித் துறையால் கைப்பற்றப்பட்டது. தேர்தல் கமிஷன் அமைத்த பறக்கும் படையினரால் அரவக்குறிச்சி தொகுதியில் ரூ.7.12 கோடி ரொக்கமும், தஞ்சை தொகுதியில் ரூ.75 லட்சம் ரொக்கமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், ஏன் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குரலும் வலுத்துள்ளது.’’

‘‘ஓஹோ!’’

‘‘டெல்லி தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் சில மூவ்கள் நடந்துவருகின்றன. பண விநியோகம் நடத்திய அ.தி.மு.க., தி.மு.க வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருக்கிறது தேர்தல் கமிஷன். அவர்கள் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து இரண்டு கட்சி வேட்பாளர்கள் மீதும் தகுதி நீக்க நடவடிக்கை கூடப் பாயலாம். அதாவது ஆறு ஆண்டுகளுக்கு அவர்கள் தேர்தலில் நிற்கத் தடை விதிக்கப்படலாம் என்பதுதான் டெல்லி சங்கதி. மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் பேசியதற்காக மராட்டியத்தைச் சேர்ந்த பால் தாக்கரேயின் வாக்குரிமையை ஆறு ஆண்டுகளுக்குப் பறித்தது தேர்தல் கமிஷன்.

அதுபோல தேர்தல் கமிஷன் தனது அதிகாரத்தைக் காட்டி தி.மு.க., அ.தி.மு.க வேட்பாளர்களின் வாக்குரிமைகள் பறிக்கப்படலாம். இதனால், அவர்கள் ஆறு ஆண்டு காலம் தேர்தலில் நிற்க முடியாமல் போகும் சூழல் உருவாகும். அது தமிழக அரசியலில் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கும்’’ என ஜூட் விட்டார் கழுகார்.

படங்கள்: மீ.நிவேதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்