“காலைவார நினைத்து கட்சியையே கவிழ்த்தார்கள்!”

கொங்கு மண்டல தி.மு.க-வை வீழ்த்திய கோஷ்டிப் பூசல்!

தி.மு.க-வுக்கு பல மாவட்டங்கள் கை கொடுத்தபோதும் கொங்கு மண்டலத்தில் உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களில்தான் பெரும் சரிவைச் சந்தித்தது. அதனாலேயே இன்று தி.மு.க., ஆட்சிக் கட்டிலிலும் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொங்கு மாவட்டங்களில் தி.மு.க தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் என்ன? ஓர் அலசல் ரிப்போர்ட்.

சேலம் மாவட்டம்

கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி என மொத்தம் 11 சட்டமன்றத் தொகுதிகளை சேலம் மாவட்டம் உள்ளடக்கியது. அ.தி.மு.க சார்பில் 11 தொகுதிகளில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். தி.மு.க சார்பாக 8 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் மக்கள் தே.மு.தி.க ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. அ.தி.மு.க., 10 இடங்களிலும், தி.மு.க ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.

சேலம் மாவட்டத்தில் தி.மு.க-வின் கடும் வீழ்ச்சிக்கு என்ன காரணம் என தி.மு.க புள்ளிகளிடம் விசாரித்தபோது, ‘‘வீரபாண்டி ஆறுமுகம் இருந்தபோது சேலம் மாவட்டம் தி.மு.க-வின் கோட்டையாக இருந்தது. வீரபாண்டி ஆறுமுகம் உயிரோடு இருக்கும் வரை இலைமறை காயாக இருந்த கோஷ்டிப் பூசல் அவர் இறப்புக்குப் பிறகு அதிகரித்துள்ளது. சேலத்தை, சேலம் மத்தி, சேலம் மேற்கு, சேலம் கிழக்கு என 3 மாவட்டங்களாக தி.மு.க தலைமை பிரித்தது. சேலம் மத்திய மாவட்டத்துக்கு பனமரத்துப்பட்டி ராஜேந்திரனையும், மேற்கு மாவட்டத்துக்கு எஸ்.ஆர்.சிவலிங்கத்தையும் சேலம் கிழக்கு மாவட்டத்துக்கு வீரபாண்டி ராஜாவையும் பொறுப்பாளர்களாக நியமித்தது தி.மு.க தலைமை.

சேலம் மத்திய மாவட்டம் மாநகராட்சிக்குள் வருவதால் வீரபாண்டி ராஜா மத்திய மாவட்டத்தைப் பெறுவதற்கே ஆர்வம் காட்டினார். ஆனால் தி.மு.க., தலைமை அதற்கு சம்மதிக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள 65 மாவட்டங்களில் 64 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டும் சேலம் கிழக்கு மாவட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் நியமிக்கப் படாமல் வீரபாண்டி ராஜா கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராகவே இருந்து வந்தார். இதற்கிடையில் பனமரத்துப்பட்டி ராஜேந்திரனின் ஆட்களும், வீரபாண்டி ராஜாவின் ஆட்களும் நேரடியாக மோதிக்கொள்ளும் சூழ்நிலை இருந்து வந்தது.

தி.மு.க போட்டியிட்ட 8 தொகுதிகளில் சேலம் வடக்கு மட்டும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு கொடுத்துவிட்டு, மீதி உள்ள கெங்கவல்லி, ஏற்காடு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி என 7 தொகுதிகள் வீரபாண்டி ராஜாவுக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்குமே வழங்கப் பட்டன.

இந்தத் தேர்தல் களம் வீரபாண்டி ராஜாவின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்ற நிலையை உணராமல், பனமரத்துப்பட்டி ராஜேந்திரனை எப்படி வீழ்த்துவது என்று ராஜாவும், ராஜாவை எப்படி வீழ்த்துவது என ராஜேந்திரனும் திட்டம் வகுத்துவந்தார்கள். இதில், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஜெயித்துவிட்டார். ராஜா கோட்டைவிட்டார்.

வீரபாண்டி ஆறுமுகம் போட்டியிடும் தொகுதியில் உள்ள கிராமங்களுக்குத் தனிப்பட்ட முறையில் சென்று அந்தக் கிராமத்தில் உள்ள பெரியவர்களை அழைத்து ஊர் கூட்டம்போட்டு கிராமங்களின் தேவைகளைக் கேட்டறிந்து ‘‘எனக்கு வாக்களியுங்கள் உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்து தருகிறேன்’’ என்று கூறி அவர்களைக் கவனித்துச் செல்வது வழக்கம். ஆனால், ராஜா தான் போட்டியிட்ட வீரபாண்டி தொகுதியில் உள்ள எந்தக் கிராமத்துக்கும் சென்று அந்தக் கிராமத்தில் உள்ள பெரியவர்களைச் சந்திக்கவில்லை.

‘‘தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன்புவரை ராஜா மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தி.மு.க-வே வெற்றி பெறும் சூழ்நிலை இருந்து வந்தது. தி.மு.க தலைமையும் பொதுத் தொகுதி வேட்பாளர்களுக்கு ரூ.1.5 கோடியும், தனித் தொகுதி வேட்பாளர்களுக்கு ரூ.2 கோடியும், கூட்டணி வேட்பாளர்களுக்கு ரூ.50 லட்சமும்  தேர்தல் செலவுகளுக்காகக் கொடுத்தது.

அதை வாங்கிக்கொண்ட ராஜா தன் ஆதரவு வேட்பாளர்களிடம், ‘இந்தப் பணத்தை வீணாகச் செலவு செய்ய வேண்டாம். தளபதி அலை அடிக்கிறது. அந்த அலையில் நாமும் வந்துவிடுவோம். ஒவ்வொருவரும் 20 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிடலாம்’ என்று சொன்னதால், தொண்டர்களின் மத்தியில் மிதப்பு அதிகமாகியது.

ஆனால், அ.தி.மு.க ஒரு ஓட்டுக்கு 300 ரூபாய் கொடுத்தது. சுலபமாக சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. சேலம் மாவட்ட தி.மு.க தோல்விக்கு வீரபாண்டி ராஜாவின் அலட்சியம்தான் காரணம்’’ என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்