மிஸ்டர் கழுகு: JUNE ஜுரம் - நிரந்தர நிம்மதியா... அடுத்த தலைவலியா?

ழுகார் உள்ளே நுழைந்ததும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை தொடர்பான நமது நிருபரின் கட்டுரையை வாங்கிப் படித்துவிட்டு திருப்பித் தந்தபடி சொல்ல ஆரம்பித்தார்.

‘‘டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் ஜெயலலிதா வழக்கை இந்தியாவே உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு இது வாழ்க்கைப் பிரச்னை. இதிலாவது, ஜெயலலிதாவுக்கு பின்னடைவு இருக்குமா என்று கருணாநிதி காத்துக்கொண்டு இருக்கிறார். அவர் 41 சீட்டுகளை காங்கிரஸ் கட்சிக்குத் தூக்கித்தரக் காரணமே இந்த வழக்குதான். சொத்துக் குவிப்பு வழக்கை ஒழுங்காக நடத்த வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் அரசுக்குச் சொல்வதற்காகத்தான் கருணாநிதி இத்தனை சீட்டுகளைக் கொடுத்தார். இந்தத் தீர்ப்பில்தான் ஜெயலலிதாவின் எதிர்காலம் அடங்கி இருப்பதாக பி.ஜே.பி-யும் நினைக்கிறது. இந்தியாவின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் பல ஊழல் வழக்குகள் விசாரணையில் உள்ளன. இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பைப் பொறுத்தே அவற்றின் விசாரணையும் நடக்கும். எனவே, அனைத்துத் தரப்பும் உன்னிப்பாகக் கவனிக்கும் வழக்காகச் சொத்துக் குவிப்பு வழக்கு மாறி இருக்கிறது.”

‘‘வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் உதிர்க்கும் வார்த்தைகளைக் கவனித்தீரா?”

‘‘அதைத்தான் சொல்ல வருகிறேன். ‘வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்ப்பது தவறல்ல’ என்று நீதிபதிகள் சொன்னதற்குப் பலரும் பல அர்த்தங்களைச் சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். நீதிபதிகள் சொன்னதன் அர்த்தம் வேறு... ஊடகங்கள் புரிந்துகொண்ட அர்த்தம் வேறு. அதனால், பரபரப்பாகிவிட்டது.”

‘‘என்ன அர்த்தத்தில் அதைச் சொன்னார்களாம்?”

‘‘நீதிபதிகள் சொன்னதன் சாரம், ‘ஒருவர் கடன் வாங்கித் தொழில் செய்து, அதில் லாபம் ஈட்டிச் சொத்துச் சேர்த்தால் அது தவறல்ல’ என்றனர். அப்படிச் சொன்னதை கர்நாடக அரசின் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யாவும் ஏற்றுக்கொண்டார். ‘அது உண்மையும்கூட. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் உள்ள சிக்கல் அதுவல்ல. இந்த வழக்கில், ஜெயலலிதா கடன் வாங்கியது சசிகலாவிடம் இருந்து, சசிகலா கடன் வாங்கியது ஜெயலலிதாவிடம் இருந்து. இவர்கள் இருவரிடம் இருந்தும் இளவரசியும் சுதாகரனும் கடன் பெற்றுள்ளனர். ஆனால், சசிகலாவுக்குக் கோடிக்கணக்கில் கடன் கொடுப்பதற்கு, ஜெயலலிதாவுக்கு எங்கிருந்து பணம் வந்தது? ஜெயலலிதாவுக்கு லட்சக்கணக்கில் கடன் கொடுப்பதற்கு சசிகலாவுக்கு ஏது பணம் என்பதுதான் சிக்கலே. அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதை ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரால் தெளிவாக நிரூபிக்க முடியவில்லை. இவரைக் கேட்டால் அவரை கை காட்டுகிறார்... அவரைக் கேட்டால் இவரை கை நீட்டுகிறார். எப்படிப் பணம் வந்தது என்பதை ஒருவர் நிரூபிக்கவில்லை என்றால், அந்தப் பணம் தவறான வழியில் வந்தது என்பது சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அந்தச் சாதரண விஷயம்தான் இந்த வழக்கின் அடிப்படை முடிச்சு’ என்ற பொருளில் ஆச்சார்யா விளக்கம் அளித்தார்!”

‘‘தீர்ப்பு நெருங்கி வருகிறதா?”

‘‘அரசுத் தரப்பு - குற்றவாளிகள் தரப்பின் இறுதிவாதம் நிறைவடைந்துவிட்டது. இனிமேல் இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள் தொடர்பான வாதம் 7-ம் தேதி தொடங்க உள்ளது. அது எப்படிப் பார்த்தாலும் மூன்று நாட்களுக்கு மேல் போகாது என்கின்றனர். அதன்பிறகு தீர்ப்புத் தேதி வெளியாகிவிடும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்