"திராவிடக் கட்சிகளின் சூழ்ச்சியால் கொலைப் பழிக்கு ஆளானேன்!"

யுவராஜ் குற்றச்சாட்டு

லித் சமூகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிர்வாகி யுவராஜ், வேலூர் மத்திய சிறையில் இருந்து கடந்த 31-ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுக்க யுவராஜை அவரது ஆதரவாளர்கள் சேலம் சங்ககிரிக்கு அழைத்துச் சென்றனர்.

ஓமலூரைத் தாண்டிதான் சங்ககிரிக்கு செல்ல வேண்டும். ஓமலூர்தான், கோகுல்ராஜின் சொந்த ஊர். ஆகவே, அங்கு ஏதாவது பிரச்னை ஏற்படலாம் என்பதால் தர்மபுரி, தொப்பூர் அருகே யுவராஜுடன் வந்த வாகனங்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஓமலூர் பைபாஸ் சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் யுவராஜ் காரை மறிப்பதற்காகக் கூடி இருந்தார்கள். யுவராஜின் கார் நிற்காமல் சென்று விட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது. வீட்டுக்கு வந்த யுவராஜுக்கு அவரது உறவினர்களும், நண்பர்களும் சால்வைகள் அணிவித்து அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அந்தச் சமயத்தில் யுவராஜுடன் பேசினோம்.

“சிறையில் வாழ்க்கை எப்படி இருந்தது?”


“எனக்குச் சிறந்த பாதுகாப்பையும், நல்ல உணவையும் சிறை நிர்வாகம் வழங்கியது. எந்தப் பிரச்னையும் இல்லை.”

“உண்மையில் கோகுல்ராஜ் மரணம் எப்படி நடந்தது?”


“அது தற்கொலை. சம்பந்தப்பட்ட இடம், போலீஸ் ஆவணங்களைப் பார்த்தாலே இது தெளிவாகத் தெரியும். எங்கள் அமைப்பை அழித்தொழிப்பதற்கு அரசியல் கட்சிகள் திட்டம் வகுத்து வந்தது பற்றி, கோகுல்ராஜ் மரணத்துக்கு 2 மாதங்களுக்கு முன்பே, ஃபேஸ்புக்கில் நான் எழுதி இருந்தேன். உளவுத் துறைக்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும் என்னைப் பற்றித் தெரியும். நான் எதற்கும் வளைந்து கொடுத்துப் போகமாட்டேன். என்னுடைய எழுச்சியான பேச்சால் கொங்கு மண்டலத்தில் நாங்கள் பலமான ஓர் அமைப்பாக வளர்ந்து வந்தோம். தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் பகுதியாக கொங்கு மண்டலம் உள்ளது. தற்போதுகூட, கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க-வுக்கு அதிக வாக்கு கிடைத்ததால்தான் அ.தி.மு.க., இன்று ஆட்சி அமைத்துள்ளது. அதனால் கொங்கு மண்டலத்தில் தி.மு.க., அ.தி.மு.க தவிர வேறு அமைப்புகள் வளர்ந்து வருவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இரு திராவிடக் கட்சிகளின் சூழ்ச்சியால்தான், கொலைப் பழிக்கு நான் ஆளானேன்.”

“கோகுல்ராஜ் தற்கொலைதான் செய்து கொண்டார் என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?”


“நிறைய ஆதாரங்களை வைத்துள்ளேன். அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். கோகுல்ராஜ் 5 பெண்களோடு தொடர்பில் இருந்திருக்கிறார். அந்த மன உளைச்சலில்தான் தற்கொலை செய்து இறந்திருக்கிறார்.”

“திருச்செங்கோடு மலைக்கோயிலில் ஸ்வாதி, கோகுல்ராஜிடம் நீங்கள் பேசுவதுபோலவும், பிறகு கோகுல்ராஜை நீங்கள் கூட்டிக்கொண்டு போவது போலவும் ஒரு வீடியோ வெளிவந்துள்ளதே?

“நிச்சயமாக அப்படி ஒரு வீடியோ கிடையாது. நான் கோயிலுக்குப் போனது உண்மை. வந்தது உண்மை. ஸ்வாதி யாரென்றே எனக்குத் தெரியாது. சிறையில் என்னை அடையாளம் காட்டுவதற்காக வந்தபோதுதான் அந்தப் பெண்ணை முதன்முதலாகப் பார்த்தேன். நான் ஏற்கெனவே அந்தப் பெண்ணை பார்த்திருந்தால் என்னை அடையாளம் காட்டியிருப்பார். ஆனால், என்னை அடையாளம் காட்டவில்லை. முன்கூட்டியே என் போட்டோவை காட்டி இவரைதான் அடையாளம் காட்ட வேண்டும் என்று சொல்லித்தான் அவரை போலீஸார் கூட்டி வந்திருப்பார்கள். ஆனால், என்ன காரணத்தாலோ, என்னை அவர் அடையாளம் காட்டவில்லை.”

‘‘நானும், கோகுல்ராஜும் திருச்செங்கோடு மலைக்கோயிலுக்குச் சென்றோம். அங்கு நான்கு பேர் வந்து எங்களை மிரட்டி உங்களை யுவராஜ் அண்ணன் கூப்பிடறான்னு சொல்லி கூட்டிட்டுப் போனாங்க. காரில் அமர்ந்திருந்த யுவராஜ் என்பவர் என்னைத் திட்டி அனுப்பி விட்டார். கோகுல்ராஜை, காரில் ஏற்றிக்கொண்டு போய் விட்டார்’’ என்று ஸ்வாதி தன்னிடம் சொன்னதாக ஸ்வாதியின் சக மாணவர் கார்த்திக்ராஜா என்பவர் சொல்லி இருக்கிறாரே?”

“கார்த்திக் இந்த வழக்கில் நேரடிச் சாட்சி கிடையாது. இவர் மூலமாகதான் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கப் போகிறேன். ஸ்வாதி கார்த்திக்கிடம் பேசியதற்கு என்ன சாட்சி இருக்கிறது? கார்த்திக் பொய்கூட சொல்லலாம்தானே!” 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick