‘‘புத்தகங்கள் மூலமே சமூகத்தில் மாற்றங்கள் நிகழும்!’’

சென்னையில் தொடங்கியது புத்தகக் காட்சி!

‘நாகரிகம் முன்னேறுவது புத்தகங்​களால்தான்’ என்றார் சர்ச்சில். புத்தக வாசிப்பாளர்களை உற்சாகப்படுத்தி இன்றைய தலைமுறையினரிடம் மட்டுமல்லாது, குழந்தைகளிடமும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது ஆண்டுதோறும் நடக்கும் சென்னைப் புத்தகக் காட்சி.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாஸி) சென்னை தீவுத்திடலில் தனது 39-வது புத்தகக் காட்சியைக் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. 700 அரங்குகள், 10 லட்சம் தலைப்புகள், ஒரு கோடி புத்தகங்கள் என இந்த முறை புத்தகக் காட்சி களைகட்டி இருக்கிறது.

சென்னை மழை, வெள்ளத்தால் கடந்த ஜனவரி மாதம் நடக்க இருந்த புத்தகக் காட்சி தள்ளிப்போனது. இதைப் போக்குவதற்காக விழாக் குழுவினர் தீவுத்திடலில் மிகப் பிரமாண்டமாகப் புத்தகக் காட்சியை அமைத்துள்ளனர். மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை காட்சி செயல்படும். விடுமுறை நாட்களில் காலையில் இருந்தே திறந்திருக்கும். 13 நாட்களும் சிறப்பு விருந்தினர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர்.

புத்தகக் காட்சி அறிமுக விழாவை நல்லி குப்புசாமி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், தமிழறிஞர், எழுத்தாளர், பதிப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்தப் புத்தகக் காட்சியின் சிறப்பம்சங்கள் குறித்து பபாஸி சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசனிடம் பேசினோம். ‘‘வழக்கமாகப் புத்தகக் காட்சியை நாங்கள் மத்திய சென்னை, தென் சென்னை பகுதிகளில்தான் நடத்துவோம். இதனால் வட சென்னை வாசகர்களைக் கவரமுடியாமல் இருந்தது. இந்தமுறை அவர்களையும் புத்தக விழாவின் அங்கமாக்க வேண்டும் என்கிற காரணத்தாலேயே வட சென்னை பகுதியில் நடத்துகிறோம். போக்குவரத்து, பார்க்கிங் வசதி, ஏ.டி.எம்., ஆம்புலன்ஸ் என அனைத்துக்கும் ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். இந்தப் புத்தகக் காட்சியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறைசார்ந்த தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்தத் துறை சார்ந்த புத்தகங்கள், எழுத்தாளர்கள், நிகழ்ச்சிகள் முன்னிலைப்படுத்தப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்களைத் தாண்டி மலையாளம், கன்னடம் மொழிப் புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. புத்தக வாசிப்பு என்பது டிஜிட்டலை நோக்கி நகர்ந்திருக்கிறது. அதை ஊக்கப்படுத்தும் விதத்தில் இரண்டு டிஜிட்டல் புத்தக அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன. ‘கெஸ்ட் ஆஃப் ஹானர்’ என்கிற முறையில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு நாட்டை கெளரவப்படுத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். அதன்படி இந்தமுறை சிங்கப்பூர் அரசின் உதவியுடன் சிங்கப்பூர் எழுத்தாளர்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதத்தில் அதற்கான அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இலக்கிய வாசிப்பு, கலந்துரையாடல், குழந்தைகள் எடுத்த குறும்படங்கள் திரையிடல் என்று குழந்தைகளின் படைப்பு உலகத்துக்குப் பெரும் மரியாதை செய்யப்படுகிறது. அப்துல் கலாம் அரங்கு, சிறுவர்களுக்கான வானியல் பயணக்காட்சிகள் எனச் சிறப்பாக உருவாக்கப்பட்டு உள்ளது’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்