நெல் வயலில் ரோஜாவும் ஒரு களைதான்!

தமிழருவி மணியன்

‘‘அன்பிற்கினிய ஆசிரியருக்கு... வணக்கம்.

ஜூனியர் விகடன் 8-6-2016 இதழில் ‘கழுகார் பதில்கள்’ பகுதியில் நான் அரசியல் களத்திலிருந்து விலகியது குறித்து ஒரு வாசகர் எழுப்பிய கேள்விக்கு கழுகார் வழங்கியிருக்கும் பதிலில், ‘தேர்தல் அரசியலில் நுழைந்தது அவரது தவறு’ என்று குறிப்பிட்டிருப்பதை முழுமையாக நான் அங்கீகரிக்கிறேன். என் இளமைக் காலம் தொட்டு இன்று வரை எந்தத் தேர்தலிலும் நான் நின்றதில்லை. ஆனால், காந்திய மக்கள் இயக்கம் ஒரு சர்வோதய சங்கம் போன்று செயற்படுவதால் எந்த நேரிய சமூகப் பயன்பாடும் நிகழ்ந்து விடப்போவதில்லை என்று இயக்கத்தில் உள்ளவர்கள் வெளிப்படுத்திய உணர்வுக்கு மதிப்பளித்து நான் செய்துவிட்ட தவறுக்கு இன்று வருந்துகிறேன்.

வைகோவை முதல்வர் நாற்காலியில் அமர்வதற்குத் தகுதியானவர் என்று நான் முன்மொழிந்ததை இன்றளவும் தவறு என்று எண்ணவில்லை. நம்மிடையே வலம் வரும் பல்வேறு தலைவர்களில் இனம் சார்ந்து ஓயாமல் குரல் கொடுப்பவர், 24 ஆண்டுகள் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மிகச் சிறப்பாகப்  பணியாற்றியவர், தமிழர் நலனைப் பாதிக்கும் பிரச்னைகளில் முன்னின்று போராடுபவர், நாடு தழுவிய அளவில் பல்வேறு தேசியத் தலைவர்களுடன் நெருக்கமான உறவுகொண்டவர் என்பன போன்ற பண்பு நலன்களை நெஞ்சில் நிறுத்தியே வைகோவை நான் முன்மொழிந்தேன். வைகோவிடமும் குறைகள் உண்டு. ஆனால், ஒப்பீட்டளவில் மற்றவர்களைவிட அவரிடம் குறைகள் குறைவு என்பது என் மதிப்பீடு.

ஆனால், ‘ஜி.கே.வாசன்தான் அடுத்த முதல்வர்’ என்று ஒருநாளும் நான் சொன்னதில்லை.   ‘வாசன் முதல்வர் பதவிக்குத்  தகுதியானவரா?’ என்ற கேள்விக்கு, ‘நேர்மையும் திறமையும் நிறைந்த, சமூக நலன் சார்ந்து சிந்தித்துச் செயற்படுகிற அனைவருமே முதல்வர் பதவிக்குத் தகுதியானவர்கள்தான்’ என்று மட்டுமே நான் பதிலளித்தேன்.  வாசன் என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமான நல்ல பண்பாளர். எங்கள் இருவருக்கும் இடையில் ஆத்மார்த்தமான ஆழ்ந்த நட்பு உண்டு. அவர் தனித்துவத்துடன் தமிழக அரசியல் அரங்கில் தன்னை வளர்த்திக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எனக்குண்டு. ஆனால், அவர் அடுத்த முதல்வராக வேண்டும் என்று நான் சொன்னதே இல்லை.

என் இனத்தை ஈழநிலத்தில் அழிப்பதற்குத் துணை நின்ற, 10 ஆண்டுகள் மத்திய அரசில் ஊழலுக்கு உற்சவம் நடத்திய காங்கிரஸை ஆட்சிப் பீடத்தில் இருந்து அகற்றவும், தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு வலிமை மிக்க கூட்டணியை மலரச் செய்யவும் நான் அமைத்த வியூகம் குறித்து சிலருக்கு விமர்சனங்கள் இருக்கலாம். இந்திரா காந்தியின் எதேச்சதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நான் அன்றாடம் வழிபடும் காமராஜர்,  1971-ல் ஜனசங்கத்துடன் கூட்டணி அமைத்தது தவறு என்றால் தமிழருவி மணியன் பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைத்ததும் தவறுதான். ஆனால்,  என் சுயநலத்துக்காக இந்தக் கூட்டணியை நான் உருவாக்கவில்லை. ஒரு நாடாளுமன்ற வேட்பாளராகக்கூட நிற்பதற்காகவும் அந்த வியூகத்தை நான் அமைக்கவில்லை. கூட்டணி வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்காக பி.ஜே.பி-யிடம் பணம் பெற்றிருக்கலாம். ஆனால், நான் ஒற்றை ரூபாயையும் ஒருவரிடத்தும் கைநீட்டிப் பெற்றவன் இல்லை. மக்கள் நலனை முன்னிறுத்திச் செயற்பட்டதற்காக ‘புரோக்கர்’ என்ற பட்டமும், மனத்தளவில் மாசு படிந்த மனிதர்கள் இன்று வரை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் செய்துவரும் வசை மொழியும் மட்டுமே நான் பெற்ற பரிசுகள். பொது வாழ்வைப் பற்றி அணுவளவும் அறியாதவர்களால் நான் காயப்பட்டு, இதயம் முழுவதும் ரணமாகி நிற்கிறேன்.

பெருந்தலைவர் காமராஜரின் காலடியில் நான் அரசியல் தொடங்கிய காலம் தொட்டு கடந்த 48 ஆண்டுகளாகக் கொள்கை சார்ந்த அரசியலுக்காகவே குரல் கொடுத்து வந்திருக்கிறேன். அதேபோன்று நான் இனியும் குரல் கொடுக்க வேண்டுமென்ற உங்கள் அன்பு கனிந்த விருப்பத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. அரசியல் களத்தில் என் நெறிசார்ந்த வாழ்வு பொருத்தமற்றுப் போய்விட்டது. நெல் வயலில் ரோஜாவும் வேண்டப்படாத ஒரு களைதான். எந்த கோதுமை, எங்கு போய்ச் சேர வேண்டும் என்று யாரறிவார்? பறக்கும் பட்டாம்பூச்சி எந்தப் பூவில் எப்போது அமரும் என்று யாருக்குத் தெரியும்?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்