பள்ளிகளில் புகையிலை... கல்லூரிகளில் கஞ்சா!

போதையின் பாதையில் மாணவர்கள்Special ஸ்டோரி!

ந்திய அளவில் புகழ்பெற்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அது. சென்னைப் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அந்தப் பல்கலைக்கழகத்தில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் படிக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் பல்கலைக்கழகப் பகுதியில் சிறிய கால்வாய்க்குள் கார் ஒன்று விழுந்து கிடந்தது. அந்தக் காருக்குள் இரு மாணவர்கள் சடலமாகக் கிடந்தனர். போதையில் கண்மூடித்தனமாக காரை ஓட்டியதால், தறிகெட்டுப்போய் கால்வாய்க்குள் கார் பாய்ந்துள்ளது. உச்சக்கட்ட போதையில் இருந்ததால், தண்ணீருக்குள் இருந்து அவர்களால் வெளியேற முடியவில்லை. இதில் அதிர்ச்சிக்குரிய தகவல் என்னவென்றால், அந்த மாணவர்கள் பயன்படுத்தியது டாஸ்மாக் மதுபானம் அல்ல... கஞ்சா. ஹெராயின், கஞ்சா, கொகெயின், அபின் போன்ற பலவிதமான வஸ்துகளின் போதையில், அந்தப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவ - மாணவிகள் தள்ளாடுவது சர்வசாதாரணம்.

அந்த ஒரு பல்கலைக்கழகம் மட்டுமல்ல, சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களின் வளாகங்கள் போதைக் கலாசாரத்தில் ஊறிக்கிடக்கின்றன.

“எங்கள் யுனிவர்சிட்டி கேம்பஸுக்கு அருகில் உள்ள சின்னச்சின்ன கடைகளில் கஞ்சா உட்பட பல வகையான போதைப் பொருட்கள் கிடைக்கும். பிராந்தி, விஸ்கியைவிட கஞ்சா விலை குறைவுதான். என் நண்பர்களோடு சேர்ந்து வார இறுதி நாட்களில் மட்டுமே கஞ்சா புகைப்பேன். ஆனால், பல மாணவர்கள் தினமும் கஞ்சா புகைப்பார்கள். கொகெயின், ஹெராயின் போன்றவற்றைப் பயன்படுத்துவோரும் உண்டு. மாணவிகளில் பலரும் போதையில்தான் இருப்பார்கள். நாங்கள் கொடுக்கும் பணத்தில்தான் யுனிவர்சிட்டியே இயங்குகிறது. எனவே, நாங்கள் என்ன செய்தாலும் யுனிவர்சிட்டி நிர்வாகம் கண்டுகொள்ளாது” என்கிறார், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக்கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவர்.

 சென்னையில் மட்டுமல்ல...

தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்களிலும் இதுதான் நிலை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவரிடம் இருந்து 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை சாய்பாபா காலனி, சரவணம்பட்டி போன்ற இடங்களில் கல்லூரி மாணவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஏராளமான கல்வி நிறுவனங்களும், ஐ.டி கம்பெனிகளும் அமைந்துள்ள பொள்ளாச்சி சாலையில் கஞ்சா வியாபாரம் அமோகமாக நடக்கிறது என்று கவலையோடு சொல்கிறார்கள், அந்தப் பகுதி மக்கள்.

பள்ளிக்கூடங்களின் அருகே புகையிலைப் பொருட்களின் விற்பனை அதிக அளவில் நடப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து புகையிலைக்கு எதிரான குழந்தைகள் இயக்கத்தின் மாநில நிர்வாகி சிரில் அலெக்சாண்டர், “தமிழகம் முழுவதும் அரசு, தனியார், மாநகராட்சிப் பள்ளிகளுக்கு அருகில் ஆறு மாதங்களாகக் கண்காணிப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 98 சதவிகித பள்ளிகளுக்கு அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை நடப்பது தெரியவந்தது. மாணவர்களை மையப்படுத்தியே இந்த விற்பனை நடக்கிறது. புகையிலைப் பொருட்களை, குழந்தைகளின் பார்வையில் படுமாறுவைத்தல், திண்பண்டங்களுக்கு அருகில் வைத்தல் என்பது போன்ற தந்திரங்களை 60 சதவிகித கடைகள் கடைப்பிடிக்கின்றன. இதனால், புகையிலைப் பொருட்களின் பழக்கத்துக்கு ஆளாகும் பள்ளிக் குழந்தைகள் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். புகையிலைப் பொருட்கள் விற்பனையின் பின்னணியில் பல்வேறு அரசியல், புகையிலை நிறுவனங்கள் இருக்கின்றன” என்றார். பள்ளிகளுக்கு அருகே புகையிலைப் பொருட்கள் விற்பதற்கு தமிழக அரசு தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

போதைகள் பலவிதம்!


சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்களை அடிமையாக்கும் பலவிதமான போதை வஸ்துகள் குறித்து நம்மிடம் விளக்கினார், சார்லி அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் சார்லஸ் பிரேம்குமார். “பேனாவால் எழுதியதை அழிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ‘ஒயிட்னர்’ என்ற திரவத்தை, ஒரு போதைப் பொருளாகச் சிறுவர்களும், மாணவ - மாணவியரும் பயன்படுத்துகிறார்கள். கர்சீஃப் அல்லது பாலிதீன் கவரில் ஒயிட்னரை தேய்த்து அதை உறிஞ்சினால் அதன் தாக்கம் மூளைவரை சென்று ஒருவித போதையைத் தருகிறது. இதை ஒருமுறை அனுபவித்தாலே அதற்கு அடிமையாகிவிடுவார்கள். விக்ஸ், நெயில் பாலீஷ், ஷு பாலீஷ், இருமல் மருந்து,  தூக்க மாத்திரை, வலி மாத்திரை போன்றவற்றையும் போதைப் பொருட்களாகப் பலர் பயன்படுத்துகிறார்கள். பான்மாசலாவையும், இருமல் மருந்தையும் ஒரே நேரத்தில் உட்கொள்ளும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. இந்தப் போதையால் இளைஞர்களின் மூளை, உடல், உள்ளம் ஆகியவை மிகமோசமாகப் பாதிக்கப்படும். மனஅழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரையையும் மாணவர்கள் போதைக்குப் பயன்படுத்துகிறார்கள். இந்தப் போதைப் பொருட்களை அனைத்தும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடியவை.

இந்தப் பழக்கத்துக்கு ஆளாகும் மாணவர்கள் முதலில், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கண்பார்வையில் இருந்து விலகுவார்கள். அப்போதே அவர்களைக் கண்டறிந்தால் இந்தப் பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவித்துவிடலாம். அவர்களுக்குப் புதிய சூழலை உருவாக்கித் தருவதுடன், கவுன்சலிங் கொடுக்க வேண்டும்” என்றார்.

வட சென்னையில் போதைப்பொருட்கள் அதிகமாகப் புழங்கும் பல இடங்கள் உள்ளன. வியாசர்பாடியில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்களிடம் கஞ்சா விற்றுவந்ததாகப் பிடிபட்ட பெண் ஒருவருக்கு, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றம் வழங்கியது. ‘‘எங்கள் பகுதியில் வீதிக்கு வீதி கஞ்சா வியாபாரம் நடக்கிறது. சமூக அந்தஸ்து, ஆண் - பெண் என வித்தியாசம் எதுவும் இல்லாமல் எல்லாத் தரப்பிலும் போதைக்கு அடிமையானவர்களைப் பார்க்கலாம். போதைக்காகத் திருடவும் செய்கிறார்கள். தெருவில் நிற்கும் வாகனங்களில் இருந்து பெட்ரோலைக்கூட திருடுகிறார்கள். ஒயிட்னர், நெயில் பாலீஷ் போன்ற போதைப்பழக்கம் பள்ளி மாணவர்கள் பலருக்கும் இருக்கிறது. அது, பெற்றோருக்குத் தெரிவதில்லை” என்கிறார், வட சென்னையைச் சேர்ந்த ‘தேவை’ என்ற இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ.

  வெளி மாநில நெட்வொர்க்!

மும்பை உட்பட வெளி மாநிலப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு ரயில்கள் மூலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் வழியாக சென்னை நகரின் பல இடங்களுக்கு அவை போகின்றன. அதேபோல, தேனி பகுதியில் இருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு கஞ்சா சப்ளை ஆகிறது. பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளின் மாணவ - மாணவிகள்தான் விற்பனை இலக்கு. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பல கல்வி நிறுவனங்களில் மாணவர்களே விற்பனை செய்கிறார்கள்.

சென்னையில் உள்ள குடிபோதை மற்றும் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த மனநல நிபுணர் வேதமூர்த்தி, “மதுபானங்களுக்கு அடிமையானவர்​களை, அந்தப் பழக்கத்தில் இருந்து மீட்டுவிடலாம். ஆனால் ஒயிட்னர், பெட்ரோலியப் பொருட்களால் ஆன போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களை அவ்வளவு எளிதில் அந்தப் பழக்கத்தில் இருந்து விடுவிக்க முடியாது. மாணவ, மாணவிகளைப் பொறுத்தவரைக்கும் 14 வயது முதல் 16 வயதுவரை உள்ள பருவம் முக்கியமானது. இந்தப் பருவத்தில்தான் அவர்கள் தவறான பாதைக்குச் செல்ல வாய்ப்புகள் அதிகம். எனவே, பெற்றோர்களின் கண்காணிப்பு மிகமிக அவசியம். போதைப் பொருட்களுக்கு அடிமையான இந்தப் பருவத்தில் உள்ளவர்களைக் கவுன்சலிங் மூலமே நல்வழிப்படுத்த முடியும்” என்றார்.

  ‘‘ஆண்மைக் குறைபாடு ஏற்படும்!’’

கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் வெங்கடேஷ் மதன்குமார், “பெற்றோர் போதைப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கும் அந்தப் பழக்கம் வர வாய்ப்புள்ளது. அதைப் பெற்றோர் உணர வேண்டும். 12 வயதில் இருந்து 25 வயது வரையிலான வயதினர்கள் போதைப் பொருள் பழக்கத்துக்கு எளிதில் ஆளாகிறார்கள். குழந்தைகளிடம் பெற்றோர்கள் நட்பாகப் பழக வேண்டும். அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும். அன்பு, அறிவுரை மூலம் அவர்களைத் திருத்த வேண்டும். 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் குடும்பப் பிரச்னை, மனஅழுத்தம் காரணமாகவே போதைக்கு அடிமையாகிறார்கள். தொடர்ந்து போதைக்கு அடிமையானால், ஆண்மைக் குறைபாடும் ஏற்படும்” என்றார்.

புகையிலைப் பொருட்களுக்கு எதிரான சட்டம் இருந்தாலும், அது கறாராக அமல்படுத்தப்படுவது இல்லை.

கல்வி நிறுவனங்களில் போதைப்பொருட்கள் புழங்குவதற்கு அந்தந்த கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களே முக்கியக் காரணம். கல்வி வளாகங்களில் மாணவர்களைக் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை. புகார்கள் வந்தால், விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்துவார்கள். மாணவர்களிடம் போதைப் பொருட்கள் இருந்தால், அந்த மாணவர்கள் மீது கறாரான நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை. அபராதம் மட்டுமே விதிக்கிறார்கள். இன்னொருபுறம், மாணவர்கள் போதைப்பொருட்களை உபயோகிப்பதை பல கல்வி நிறுவனங்கள் கண்டுகொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மாமூல் வாங்கிக்கொண்டு போதைப்பொருள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் விடுகிறார்கள் என்று போலீஸார் மீதும் குற்றச்சாட்டு உள்ளது.

- ஆ.பழனியப்பன், எஸ்.மகேஷ்


ஒயிட்னர்

ரசாயனத் தொழிற்சாலைகளில் வேதியியல் பொருட்களைக் கரைப்பதற்குப் பயன்படுத்த சக்தி வாய்ந்த வாசனைப் பொருட்களில் ஒன்று பெயின்ட் தின்னர். எழுதியதையோ, டைப் செய்ததையோ மறைக்கப் பயன்படுத்தும் ஒயிட்னர்கூட ஒருவகை ரசாயன வாசனைப் பொருள்தான். இந்த மாதிரி பொருட்களுக்கு, நம் உடம்பில் இருக்கும் கொழுப்புச் சத்தைக் கரைக்கிற சக்தி அதிகம். உடனடியாக மூளையில் கலந்து, போதையை உண்டாக்கும். மற்ற போதைப் பொருட்களைவிட இது ஆபத்தானது. மூளை, இதயம், ஈரல், எலும்புகளில் உள்ள திரவம் எனப் பல இடங்களிலும் பாதிப்புகளைக் ஏற்படுத்தி உயிருக்கே உலைவைத்துவிடும்.

நடவடிக்கை தொடருமா?

அரசு, தனியார் அலுவலகங்கள், உணவகங்கள் உட்பட பொது இடங்கள் அனைத்திலும் புகைப்பிடிப்பது சட்டப்படி குற்றம் என்று 2008-ல் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அமலுக்கு வந்த சில நாட்களிலேயே, என்ன காரணத்தாலோ அந்தச் சட்டம் செயல்படுத்தப்படவில்லை.

இ-சிகரெட்

இ-சிகரெட் பிடிப்பதைப் பலர் ஃபேன்சியாக நினைக்கிறார்கள். இது, சாதாரண சிகரெட்போலவே குழாய் மாதிரி இருக்கும். இதற்காக, திரவம் அடங்கிய கேட்ரிட்ஜ் தனியாக விற்கப்படுகிறது. அதை உள்ளே செருகி, ஒரு பட்டனை அழுத்தினால் போதும். காயில் சூடாகி, திரவத்தை ஆவியாக்கும். சிகரெட்போலவே வாய்க்குள் இதை இழுத்துப் புகை விடலாம். சிகரெட்டைவிட அதிகமான புகை வரும். எல்லாம் சாதாரண நீராவிதான். சிகரெட் பிடித்தது போன்ற உணர்வு கிடைக்கும். சிகரெட் நுனியில் பற்ற வைத்ததும் நெருப்பு சிவந்து எரிவதுபோல, இதில் நீல நிறத்தில் ஒரு எல்.இ.டி விளக்கு எரிந்து ‘ரியல் ஃபீல்’ தரும். சிகரெட்டில் இருப்பதுபோன்ற நாற்றம் இருக்காது... சாம்பல் விழாது. எரிச்சலூட்டும் வாசமுள்ள புகை இல்லை. இதனால், விட்டில் பூச்சியாக இளைய தலைமுறையினர் இதற்கு அடிமையாகிறார்கள்.

அதிர்ச்சிகள்!

* அரவக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருந்தவர் சீனிவாசன். சின்னயம்பட்டியில் இவரது பண்ணை வீடு உள்ளது. போலீஸார் சோதனை நடத்தியபோது, 234 கிலோ கஞ்சா அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டுபிடித்தனர். அந்த ஆசிரியர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

* கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே அருமனை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். அப்போது, மூன்று மாணவர்கள் கண்கள் சொருகியவாறு ஒருவித மயக்கத்தில் இருந்தனர். அவர்கள் கஞ்சா போதையில் இருந்ததை அறிந்து, ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். அந்த மாணவர்களின் பேன்ட் பாக்கெட்களில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. 

* களியக்காவிளை அருகே கேரளா எல்லைப் பகுதியில் போதையில் ஆறு மாணவர்களை போலீஸார் காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்தனர். அந்த மாணவர்கள் கஞ்சா உட்கொண்டு இருந்தது சோதனையில் தெரியவந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick