லேடீஸ் ஹாஸ்டல்... பெண்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள்!

Special ஸ்டோரி!அலசல்

தென்காசியைச் சேர்ந்த மதுமிதா, ஆங்கில இலக்கியத்தில் ஓராண்டுக்கு முன்பாக பிஹெச்.டி முடித்தார். படிப்பு முடிந்த கையோடு சென்னையில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஒன்றில் அவருக்கு உதவிப் பேராசிரியர் பணி கிடைத்தது. லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி, வேலைக்குப் போய்வரத் திட்டம். வடபழனி பகுதியில் ஒரு நல்ல ஹாஸ்டலில் தங்கினால், கல்லூரிப் பேருந்தில் போய்வர வசதியாக இருக்கும் என்று நினைத்தார். இன்டர்நெட்டில் தேடிப் பார்த்து ஒரு ஹாஸ்டலைக் கண்டுபிடித்தார். அங்கே போய் பார்த்தபோது, அது விடுதி மாதிரி தெரியவில்லை.அது, ஒரு அபார்ட்மென்ட்.

அதைக் கண்டு லேசாக அதிர்ந்த மதுமிதா, “இது ஹாஸ்டல் மாதிரி தெரியலையே, மேடம்” என்று விடுதி உரிமையாளரிடம் சற்றுத் தயக்கத்துடன் கேட்டார்.

“ஆமாம்மா. இது பெரிய ஹாஸ்டல் மாதிரியெல்லாம் கிடையாது. அதிகமானவங்களைச் சேர்க்காம, லிமிடெட் லேடீஸைத்தான் சேர்த்துக்குவோம். அதனால, எங்க ஹாஸ்டல் ரொம்ப ஹோம்லியா இருக்கும். முழுக்க முழுக்க வீட்டுச் சாப்பாடுதான். சேஃப்டிக்கு சேஃப்டி. இதை உங்க வீடு மாதிரியே நெனைச்சுக்கலாம்” என்று இனிக்க இனிக்க விடுதி  உரிமையாளர் பேசினார்.

திருப்தி ஆன மதுமிதா, “ஓ.கே மேடம். நாளைக்கே வந்துடறேன்” என்று சொன்னவர், அடுத்த நாளே அந்த விடுதியில் சேர்ந்துவிட்டார்.

ஆனால், அன்றைய தினம் அவருக்கு வழங்கப்பட்ட உணவு சுமாராகவே இருந்தது. அதுமட்டுமல்ல, விடுதி உரிமையாளர் சொன்னதுபோல எதுவுமே அங்கு இல்லை. ஆளைவிட்டால் போதும் சாமி என்று ஒரே மாதத்தில் அந்த விடுதியில் இருந்து ஓட்டம் பிடித்தார் மதுமிதா. என்ன நடந்தது என்று மதுமிதாவிடம் கேட்டோம்.

“ஹாஸ்டலுக்கான எந்த விதிமுறைகளும் அங்க இல்லை. சாப்பாடு ரொம்ப மோசம். அதனால், பாதி நாள் வெளியிலதான் சாப்பிட்டேன். ஒரு நாள் ஹாஸ்டல் உணவைச் சாப்பிட்டு எனக்கு ஃபுட் பாய்சன் ஆயிடிச்சு. அந்த மேடத்துக்கிட்ட கேட்டதுக்கு, ‘நாங்க போடுறததான் சாப்பிடணும்’ என்று மிரட்டும் தொனியில பேசினார். ‘சேரும்போது ரொம்ப நல்லாப் பேசுனீங்க. இப்போ வேற மாதிரி பேசுறீங்க. கெட்டுப்போன உணவை நீங்க கொடுத்ததாலதான், எனக்கு ஃபுட் பாய்சன் ஆச்சு’ன்னு சொன்னேன். ‘ஆமா அது கெட்டுப்போன சாப்பாடுதான். நீ யார்கிட்ட வேணாலும் கம்ப்ளெய்ன்ட் பண்ணிக்கோ. என்னைய யாரும் ஒண்ணும் பண்ண முடியாது’ என்று சொன்னார். சரி, அந்தம்மாக்கிட்ட எதுக்கு வம்பு பண்ணிக்கிட்டு என்று அங்கிருந்து காலி பண்ணி வேற ஹாஸ்டலுக்குப் போயிட்டேன்” என்றார்.

படிப்பு, வேலை போன்ற காரணங்களுக்காக வெளியூர் செல்லும் பெரும்பாலான பெண்கள் தேர்வு செய்வது ஹாஸ்டல்களைத்தான். சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை போன்ற தமிழ்நாட்டின் பெருநகரங்களில் மட்டுமல்லாமல், பெரும்பாலான சிறு நகரங்களிலும் பெண்களுக்கான விடுதிகள் செயல்படுகின்றன. பெற்றோரையும், உற்றார் உறவினர்களையும் பிரிந்து ஏராளமான கனவுகளோடும், லட்சியங்களோடும் நகரங்களுக்கு வரும் பெண்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? இதுதொடர்பாக, சில பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஒவ்வொருவரின் அனுபவமும் வெவ்வேறு ரகம்.

* பொறுப்பான பிள்ளைகள்!

தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தனியா, “முதுகலைப் பட்டத்தை முடித்துவிட்டு என் வகுப்புத் தோழிகளில் பலர் சென்னைக்கு வந்து விட்டோம். ஹாஸ்டல் வேண்டாம், வீடு எடுத்துத் தங்குவோம் என்பது எங்கள் முடிவு. ஆனால், நாங்கள் நினைத்தது மாதிரி நடக்கவில்லை. எங்களுக்கு வீடு கொடுக்க யாரும் முன்வரவில்லை. கடைசியில், எங்கள் வகுப்புத் தோழியின் வீட்டில் இடம் கொடுத்தார்கள். வீட்டில் இருந்தபோது எந்த வேலையும் நான் செய்தது இல்லை. எல்லா வேலையையும் அம்மாவே செய்வார். ஆனால், தனியாக வந்த பிறகுதான், என் வேலைகளை நானே செய்யக் கற்றுக்கொண்டேன். என் அப்பாவும், அம்மாவும் விவசாயிகள். அவர்களுக்கு வருமானம் குறைவுதான். தற்போது, என் சம்பாத்தியத்தில் இருந்து அப்பா, அம்மாவுக்கு மாதாமாதம் பணம் அனுப்புகிறேன். என் அப்பாவின் பாரத்தை நான் தூக்கிச் சுமப்பது எனக்குச் சுகமாக இருக்கிறது. எந்த நோக்கத்துக்காக நான் நகரத்துக்கு வந்தேனோ, அதில் மட்டுமே என் சிந்தனைகள் உள்ளன. அதுவே எனக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார்.

* இதுவல்ல... சுதந்திரம்!

பெற்றோரையும், உற்றார் உறவினர் களையும் பிரிந்து தொலைதூரத்தில் ஒரு புதிய இடத்தில் தங்கி வேலை செய்கிற, படிக்கிற பெண்களில் சிலர் அதை ஒரு ‘அட்வான்டேஜ்’ ஆக எடுத்துக்கொள்கிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த வானதிக்கு 23 வயது. கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர். கோவையில் எம்.பி.ஏ படித்தார். கல்லூரி விடுதியில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என்பதால், கோவை நகரில் உள்ள ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் அந்தப் பெண்ணை அவரது பெற்றோர் தங்கவைத்தனர். கல்லூரிக்குப் போய்வந்தபோது, ஒரு பையனுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தியேட்டர், பார்க் என பல இடங்களில் ஜாலியாகச் சுற்றினர். ஒருநாள், அரைகுறை ஆடையுடன் ஒரு செல்ஃபி எடுத்து அனுப்பு என்று போனில் சொல்லியிருக்கிறான் அந்தக் காதலன். இவரும் செக்ஸியாக ஒரு போட்டோ எடுத்து அனுப்பிவிட்டார். ஏதேச்சையாக ஒருநாள், செல்போனில் இருந்த அந்த போட்டோவை, அவளுடைய தோழி பார்த்துவிட்டாள். விஷயம், வெளியே தெரிந்துவிட்டதே என்று இவள் நிம்மதியை இழந்து தவித்தாள். படிப்பில் கவனம் குறைந்தது. அப்போது நடந்த செமஸ்டரில் ஒரு பேப்பரில்கூட பாஸாகவில்லை.  லேடீஸ் ஹாஸ்டலில் தங்கும் பெண்களில் சிலர், தங்களுக்குக் கிடைத்த தனிமையையும், சுதந்திரத்தையும் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது அதிர்ச்சிக்குரிய தகவல்.

இதுதொடர்பான தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார், சென்னையில் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் கவிதா.

“சென்னை திருல்லிக்கேணியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். என் அறையில் தங்கியிருந்த ரம்யா, தனியார் கல்லூரி ஒன்றின் விரிவுரையாளர். அவள் கிராமத்துப் பெண். அவளுடைய அப்பா ஓர் ஆசிரியர். ஹாஸ்டலில் பக்கத்து ரூம் பெண்களிடம் நெருக்கமாகப் பழகினாள். அந்தப் பெண்களுடன் சேர்ந்து லேட் நைட் வரை அரட்டை அடிப்பாள். இரவில் ரகசியமாக வெளியில் உள்ள சிலருடன் போனில் பேசுவாள். என்ன செய்கிறார்கள் என்பது முழுமையாகத் தெரியாவிட்டாலும் அவர்கள் செய்வது நல்லது அல்ல என்று மட்டும் எனக்குப் புரிந்தது. ஒரு நாள், என் தோழி வீட்டுக்குப் போகிறேன்... இரவு வரமாட்டேன்  என்று சொல்லிவிட்டுச் சென்றேன். என் தோழி வீட்டில் தங்க முடியாத சூழல் ஏற்படவே, ஹாஸ்டலுக்குத் திரும்பினேன். அறையைத் திறந்தால் எனக்குப் பெரிய அதிர்ச்சி. அறை முழுக்க ஒரே சிகரெட் புகை. என் ரூம் மேட்டும் பக்கத்து ரூம் பெண்கள் இருவரும் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். எனக்கு வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஓரமாகப் போய்ப் படுத்துவிட்டேன். ‘நீ செய்வது ரொம்ப தப்பு’ என்று ரூம் மேட்டிடம் மறுநாள் காலையில் சொன்னேன். அப்படிச் சென்னதை அவள் விரும்பவில்லை. அவர்கள் மூவரும் சேர்ந்து ஹாஸ்டல் வார்டனிடம் பணம் கொடுத்து என்னைக் காலி செய்ய வைத்துவிட்டார்கள்” என்றார் சோகத்துடன்.

ஒரு சில பெண்கள் தவறான வழியில் செல்வதைப் பார்த்துவிட்டு, ஹாஸ்டலில் தங்கும் பெண்கள் என்றாலே மோசம் என்ற பார்வையும் சமூகத்தில் ஒரு பகுதியினரிடம் உள்ளது. அதுபற்றித் தன் வேதனையை நம்மிடம் பகிர்ந்துகொண்டார், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் செளமியா.

“நான்  கிராமத்தில் இருந்து வந்தவள். பொதுவாகவே எங்கள் ஊரில் பெண்களை வெளியூருக்கு அனுப்பமாட்டார்கள். என் அப்பா கொஞ்சம் முற்போக்கானவர். பெண்களின் முன்னேற்றத்தை விரும்பக்கூடியவர். அதனால், என்னை நகரத்துக்கு அனுப்பி வைத்தார். ஆனால், எங்கள் கிராமத்தினர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். நான் கிராமத்துக்குச் செல்லும் போதெல்லாம் அளவுக்கு மீறி அட்வைஸ் செய்வார்கள். என் மீதான அக்கறையில் அவர்கள் அப்படிச் சொன்னாலும், நகரத்தில் தனியாகத் தங்கியிருக்கும் பெண்கள் மீதான அவர்களின் தவறான கண்ணோட்டமே அதற்குக் காரணம்” என்று வருத்தத்துடன் சொன்னார்.

*  பாதுகாப்பு வேண்டும்!

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பிரதீபா, “நான் சென்னைக்கு வந்த புதிதில் என் வருமானத்துக்கு ஏற்ப ஹாஸ்டல் கிடைக்கவில்லை. கிடைத்த ஹாஸ்டலில் உணவு சரியில்லை. அடிப்படை வசதிகள் மோசமாக இருந்தன. ரொம்பவே சிரமப்பட்டேன். இப்போது நான் தங்கியிருக்கும் ஹாஸ்டல் அதைவிடக் கொஞ்சம் பரவாயில்லை. தமிழக அரசு பல விதிமுறைகளைக் கொண்டு வந்திருந்தாலும், பல ஹாஸ்டல்களில் அவற்றைப் பின்பற்றுவது இல்லை. பல ஹாஸ்டல்கள் லைசன்ஸ் இல்லாமல் செயல்படுகின்றன. அரசு ஏன் இதைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது?” என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதாவிடம் பேசினோம். “சென்னையில் இயங்கும் 20-க்கும்  மேற்பட்ட பெண்கள் விடுதிகளில் நான் ஆய்வு செய்துள்ளேன். ஒரு சிறிய இடத்தில் அளவுக்கு அதிகமான நபர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். என்னென்ன வசதிகள் தரப்படுகின்றன என்பது பற்றி எந்தத் தகவலும் எழுத்துப்பூர்வமாகத் தரப்படுவது இல்லை. வாங்கும் பணத்துக்கு ரசீது கொடுக்கப்படுவது இல்லை. அதிகமாகப் பணம் கொடுக்கும் பெண்களை விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், விடுதி நடத்துபவர்களுக்குப் பணம் மட்டுமே குறி. விடுதியில் உள்ள குறைபாடுகளையோ, விதிமீறல்களையோ அங்கு தங்கியுள்ள பெண்கள் வாய் திறக்க முடியாத நிலையில்தான் உள்ளது.

விடுதிகள் தொடர்பான விதிமுறையில் மேலும் சிலவற்றை அரசு சேர்க்கலாம். விடுதிகளை ஏ, பி, சி என்று  தரம் பிரிக்கலாம். அவ்வாறு செய்தால்தான், விடுதி நிர்வாகங்களிடம் அரசு கேள்வி கேட்க முடியும். விடுதிகளை முறைப்படுத்த, ஒழுங்குமுறை  அமைப்பு ஒன்றை மாநில அரசு உருவாக்க வேண்டும்.  அந்த அமைப்பு மாதம்தோறும் தனியார் விடுதிகளை ஆய்வுசெய்ய வேண்டும். ஏற்கெனவே, அரசு சார்பில்  அதற்கான ஆய்வாளர்கள் இருக்கலாம். ஆனால், அவர்கள் எந்த அளவில் செயல்படுகிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது. விடுதிகளில் பிரச்னைகள் இருந்தால், சமூகநலத் துறை மற்றும் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் செய்ய வேண்டும். புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.’’ என்றார்.

- கே.புவனேஸ்வரி


நல்வழி!

தினமும் கல்லூரி மற்றும் அலுவலகம் முடிந்து தங்கள் இருப்பிடத்துக்கு வரும் பெண்கள், ஏதாவது ஓர் ஆரோக்கியமான செயலில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வரலாம்; சேவை அமைப்புகளுடன் சேர்ந்து சமூகப் பணிகளில் ஈடுபடலாம்; புத்தகங்கள் வாசிக்கலாம்; ஆரோக்கியமான நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் பார்க்கலாம்; நல்ல நண்பர்களுடன் உரையாடலாம்; குடும்பத்தாருடன் அடிக்கடி தொலைபேசி வாயிலாகத் தங்களின் இன்ப, துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். குடும்பத்தினர் தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு உரியவராக எப்போதும் நடந்துகொள்ள வேண்டும். தனக்கு அளித்துள்ள சுதந்திரத்தை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது.

அரசு வகுத்துள்ள விடுதிகளுக்கான விதிமுறைகளும்... நடைமுறைகளும்!

* வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளில்   விடுதிக் காப்பாளர், பொறுப்பாளர்களாகப் பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.

*  விடுதிகளில் தங்கும் நபர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி தேவைக்கேற்ப 24 மணி நேரமும் கண்காணிக்கப் போதுமான பாதுகாவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

*  ஒன்றுக்கு மேற்பட்ட வாயில்கள் இருந்தால் அனைத்து வாயில்களிலும் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

*  50-க்கும் மேற்பட்டோர் இருக்கும் இல்லங்களில் / தங்குமிடங்களின் வாயில்களில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட வேண்டும்.

*  நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள அவர்களுக்கென அமைக்கப்பட்ட அறைகளில் மட்டுமே பாதுகாவலர்கள் இருக்க வேண்டும்.

*  விடுதி அமைவிடங்கள், நான்குபுறமும் சுற்றுச்சுவர்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். உள்ளே மற்றும் வெளியே செல்லும் வாயில்களில் தாழ்ப்பாளுடன் கூடிய கதவுகள் அமைக்கப்பட வேண்டும்.

*  விடுதியில் தங்கியிருப்பவர்கள், விடுதியைவிட்டு வெளியில் செல்லும் நேரம், விடுதிக்குத் திரும்பும் நேரம் ஆகியவற்றைத் தினசரி வருகைப் பதிவேட்டில் விடுதிக் காப்பாளர் பதிவுசெய்ய வேண்டும். மேலும், விடுதியில் தங்கியிருப்பவர்கள், அவர்கள் தூங்கச் செல்வதற்கு முன்பு கணக்கெடுக்கப்பட வேண்டும்.

*  தங்கியிருப்பவர்களைச் சந்திக்க வரும் பார்வையாளர்களில் அவர்களுடைய பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

*  பார்வையாளர் புத்தகத்தில் பெயர், முகவரி, உறவு முறை மற்றும் சந்திப்புக்கான நோக்கம் ஆகியவை பதிவுசெய்யப்பட்டு பார்வையாளரால் கையொப்பம் இடப்பட வேண்டும்.

*  விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களது தொலைபேசி எண் மற்றும் முகவரி ஆகியவை காப்பகத்தின் முன்வாயிலில் எளிதில் காணக்கூடிய வகையில் பார்வையில் வைக்கப்பட வேண்டும்.

நல்ல ஹாஸ்டலை தேர்வு செய்வது எப்படி?

*  உங்கள் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு அருகில் விடுதிகள் அமைந்தால் நல்லது. அவசர உதவி என்றால் அவர்களை நாடலாம்.

*  ரயில் நிலையம் அல்லது பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள விடுதிகளில் தங்கினால், நீண்ட தூரம் செல்வதால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.

*  விடுதிகளில் சேருவதற்கு முன்பாக அந்த விடுதிகளின் உணவைச் சாப்பிட்டுப் பார்ப்பது நல்லது. அளவு சாப்பாடு முறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 
*  தண்ணீர் பிரச்னை இல்லாத விடுதிகளாகப் பார்க்க வேண்டும். தண்ணீர் வசதி குறித்து, ஹாஸ்டலில் தங்கியிருக்கும் நபர்களிடம் நன்கு விசாரித்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, கோடைக்காலத்தில் தண்ணீர் பிரச்னை வருமா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

*  லேப்டாப், அயன்பாக்ஸ், வாஷிங் மெஷின் ஆகியவற்றைப் பயன்படுத்தினால் தனிக் கட்டணம் எனப் பலவிதமான கட்டணங்களை வசூலிக்கும் விடுதிகளும் உள்ளன. அதுபற்றிய விவரங்களை முன்கூட்டியே கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

*  எப்போதும் விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும். குளியலறை போன்ற இடங்களில் ரகசிய கேமரா இருக்கிறதா என்பதை செக் பண்ண வேண்டும்.

*  நீங்கள் தங்கியிருக்கும் விடுதி பாதுகாப்பானதாக இல்லை, செளகரியமாக இல்லை என்ற எண்ணம் வந்துவிட்டால்... மறுயோசனையே இல்லாமல், அந்த விடுதியைக் காலி செய்துவிடுங்கள். வேறு நல்ல விடுதியைப் பாருங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick