தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறிவிடுவார்களோ என்ற கவலையில் இருக்கிறார் கருணாநிதி!

விளாசும் வைகைச்செல்வன்பேட்டி

ருப்புக்கோட்டையில் தோற்றாலும் உற்சாகத்துடன் இருக்கிறார் வைகைச்செல்வன்.  அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் ஆக ஜெயலலிதா அறிவித்து இருப்பதுதான் அதற்குக் காரணம். அவரைச் சந்தித்தபோது அரசியல் அனலைக் கக்கினார். அதில் தமிழும் விளையாடியது!

‘‘தி.மு.க-வின் தோல்வியை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’


‘‘தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி ஒரு பொம்மலாட் டத்தின் ஊசலாட்டத்தைப்போலத்தான் இருந்தது. முள்ளிவாய்க்காலில் இனத்தைக் காட்டிக்கொடுத்த எட்டப்பர்கள் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள் என்பதை மக்கள் உணர்ந்துகொண்டார்கள். இனத்தைக் கருவறுத்த வஞ்சகத்தின் வேர், கொஞ்சம் எஞ்சி இருக்கிறது என்பதை உணர்ந்த மக்கள், கருணாநிதிக்கு அரியணை தராமல் தடுத்து விட்டார்கள். கருணாநிதி - காங்கிரஸ் கூட்டம் செய்த இனத் துரோகத்துக்குக் கணக்குத் தீர்க்கும் களமாகத்தான் இந்தத் தேர்தலை மக்கள் பயன்படுத்தினார்கள். குடும்பம், குடும்பமாய் கூட்டணிகளோடு கிளம்பியவர்களுக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்தார்கள்.’’

‘‘அ.தி.மு.க தொடர்ந்து இரண்டாவது முறையும் வெற்றி பெற்றதன் ரகசியம் என்ன?’’

‘‘அம்மாவின் ஆட்சியில் நீர் நடந்தது, ஏர் நிமிர்ந்தது, பார் மகிழ்ந்தது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, முல்லை பெரியாற்றின் உயரம், ஈழத்தமிழர் நலன், என்.எல்.சி பங்கு அரசுடைமை, மீத்தேன் எரிவாயுத் திட்டம், கெயில் குழாய் பதிப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளில் காணாமல்போன நில அபகரிப்பு, கந்துவட்டி, கட்டப் பஞ்சாயத்து, காவல் நிலையத் தலையீடு, திரைத்துறை, பத்திரிகைத் துறை, காட்சி ஊடகம் என அனைத்தையும் ஆக்டோபஸ் போன்று விழுங்கிய குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி, தடையில்லா மின்சாரம், தாலிக்குத் தங்கம், அம்மா உணவகம், மாணவ - மாணவிகளுக்கு லேப்டாப், சீருடை, படிப்புச் சாதனங்கள், சாமானிய மக்களின் சமூகப் பாதுகாப்பு, மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்திய நலத்திட்டங்கள் என வரிசை கட்டி நின்ற சாதனைகள் மூலம் அம்மா மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. இதுதான் அம்மா வெற்றியின் ரகசியம்.’’

‘‘ஆட்சியைத் தொடர்வதற்கு 12 எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைப்பது அ.தி.மு.க-வுக்குப் பெரிய வேலையாக இருக்கும் என்று கருணாநிதி சொல்லி இருக்கிறாரே?’’

‘‘பெற்ற பிள்ளைகளையே கட்டுக்குள்வைக்க முடியாதவர் கருணாநிதி. கட்சியும் இப்போது அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பது அவருக்கே குழப்பம். தி.மு.க-வின் கட்டுப்படாத எம்.எல்.ஏ-க்கள் கட்சி தாவிவிடுவார்களோ என்ற கவலையில் கருணாநிதி இருக்கிறார். இதுதான் கடைசித் தேர்தல் என்று மடிப்பிச்சை கேட்ட கருணாநிதி, இப்போது தோல்வி ஜுரத்தில் பிதற்றுகிறார்.’’

‘‘பலமிக்க எதிர்க் கட்சி என்று ஸ்டாலின் சொல்கிறாரே?’’


‘‘63-க்கும், 93-க்கும் வித்தியாசம் தெரியாதவர் ஏதோ பிதற்றுகிறார். அப்பாவின் வயதே தெரியாத அரசியல் சிறுபிள்ளை அவர். விவாத ஆற்றலும் விவரக் குறிப்புகளும் இல்லாத வீண் பேச்சு அவர் பேச்சு. அவருக்கு சக்தி குறைந்துவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.”

‘‘மக்கள் நலக் கூட்டணியின் தோல்விக்கு என்ன காரணம்?’’

‘‘எப்போதும் தடுமாற்றத்தில் இருக்கும், விஜயகாந்த் கூட்டணியை காமெடி தர்பார் போலத்தான் மக்கள் பார்த்தார்கள். அதுவும் விஜயகாந்த் முதல்வர் என்கிற கோஷத்தை எழுப்பி, ‘1967-ல் அண்ணா... 2016-ல் விஜயகாந்த்’ என்ற ஒப்பீட்டை, மனசாட்சியை மதிக்கும் எந்த மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. டுடோரியல் கல்லூரியில் முதல்வர் ஆவதற்குக்கூட அருகதை இல்லாத விஜயகாந்த், தமிழக முதல்வர் வேட்பாளர் என்று சொன்னதையே மக்கள் ஏற்கவில்லை.

ஒரே ஒரு எம்.எல்.ஏ இருந்த கட்சிக்கு, புரட்சித் தலைவி அம்மா தயவில்தான் 29 எம்.எல்.ஏ-க்கள் கிடைத்தது. எதிர்க் கட்சித் தலைவர் என்ற அந்தஸ்த்தைப் பெற்றுத்தந்தவர் அம்மாதான் என்பதை விஜயகாந்த் மறந்து போய்விட்டார். அதன் விளைவுதான் அதலபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தே.மு.தி.க. கடந்த காலங்களில் ம.தி.மு.க., பா.ம.க போன்ற கட்சிகளுக்கும் தேர்தல் கமிஷன் அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தவர் அம்மாதான்.’’

‘‘ ‘தோற்றாலும் ஃபீனிக்ஸ் பறவைபோல் தே.மு.தி.க எழும்’ என்கிறாரே, விஜயகாந்த்?’’

‘‘கழுத்து வெளுத்தாலும் காகம் கருடனாகிவிட முடியாது. குறுக்கு சிறுத்தாலும் கிழவன், குமரனாக முடியாது. விஜயகாந்த் ஃபீனிக்ஸ் பறவை அல்ல; கறிக்கோழி. கண்டதைத் தின்று கொழுகொழு வென்று வளருமே தவிர, முட்டை போடாது; குஞ்சு பொறிக்காது. ஒரு சில தேர்தல்களில் விஜயகாந்த் செயல்பாடுகளைப் பார்த்த மக்கள் அவரை இந்தத் தேர்தலோடு அட்ரஸ் இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். இனி, அவரால் எழவே முடியாது. சமாதி கட்டிவிட்டார்கள்.’’

‘‘பணம், போலி வாக்குறுதிகள், அரசியல் அதிகாரம் மூலம் அ.தி.மு.க ஜெயித்தது என்று எதிர்க் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகிறார்களே?’’


‘‘தோற்றவர்கள் ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். அம்மா, உப்பைப்போல எளிமை யானவர்; மழைநீரைப்போல தூய்மையானவர். அவர், கடவுள் தந்த கொடை. காலம் தந்த விடை. 5 ஆண்டு அம்மா ஆட்சியின் சாதனைகளை அங்கீகரித்து ஆட்சிக் கட்டிலில் அம்மாவை மீண்டும் அமர வைத்துள்ளார்கள். தங்க வயல்களில் விளைந்திருக்கும் பொன்னைவிட, தாலிக்குத் தங்கம் திட்டத்தால் ஏழை எளியோர்களின் உதட்டில் எழுந்த புன்னகை அதிகம். அடித்தட்டு வர்க்கத்தின் எரிந்த பசித்தீயை அமுதமாய் வந்து அணைத்திட்ட அம்மா உணவகம் தந்த அன்னை. பள்ளிச் செல்லும் சிறார்களுக்குச் சிறகுகள் செய்துகொடுத்தவர். இப்படி எண்ணற்ற புதிய திட்டங்களை அம்மா கொண்டுவந்துள்ளார். இந்தத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் முதல் நாளிலேயே முத்தான திட்டங்களைக் கொண்டுவந்துவிட்டார்.

புரட்சித் தலைவருக்கு பிறகு, அடுத்தடுத்து ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த பெருமை அம்மாவைத்தான் சாரும். இது விவாதத்துக்கு உரியது அல்ல... வியப்புக்குரியது. அம்மா அடைந்த வெற்றி இமாலய வெற்றி. இந்த வெற்றிக்குப் பின்னால் கொட்டிக் கிடப்பது அம்மாவின் வியர்வை மட்டும்தான். ‘ஒரு யுத்தத்தின் முடிவு, சத்தியத்தினால் எழுதப்படுகிறது’ என்பார்கள். இந்தத் தேர்தல் வெற்றி அம்மா என்கிற சத்தியத்தினால் எழுதப்பட்டது. நீராறுகளைக் காக்க வந்த நெருப்பாறு என்பதினால், அம்மாவுக்கு மக்கள் மகுடத்தைச் சூட்டினார்கள்.’’

- எஸ்.முத்துகிருஷ்ணன், படங்கள்: தி.குமரகுருபரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick