ராணுவ முகாமில் இன்னும் 1 லட்சம் பேர்!

ஈழம் இன்று - நமது நிருபரின் நேரடி ரிப்போர்ட்அலசல்

லங்கை இறுதிப் போரை நிச்சயம் எவராலும் மறக்க முடியாது. ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன, எழுத்தில் வடிக்க முடியாத துயரம் நிகழ்ந்து. இப்போது எப்படி இருக்கிறார்கள் தமிழ் மக்கள்? அவர்கள் கோரிக்கையாக என்னவெல்லாம் இருக்கிறது? அவர்களது வாழ்வாதாரம் மேம்பட்டு இருக்கிறதா? அவர்கள் தமிழக மக்களிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கி றார்கள்?... இந்தக் கேள்விகளுக்கான விடை தேடி இலங்கைக்குப் பயணமானோம்.

யாழில் பரவிய தமிழகக் கலாசாரம்!

தீவு தேசத்துக்குச் சென்றபோது, மழை வெள்ளத்தைத் தாண்டி, கொழும்பு நகரமே உற்சாகமாக விசாக் திருவிழாவைக் கொண்டாடிக்கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தின் வீதிகளில் ராணுவத்தினர் நின்றுகொண்டிருந்தனர். இந்த எண்ணிக்கை ஒப்பீட்டளவில், கொழும்புவைவிட அதிகம். இதைத் தாண்டி நம்மைத் துரத்திய விஷயம், யாழ்ப்பாணம் வீதியெங்கும் காணப்பட்ட தமிழ்த் திரைப்பட போஸ்டர்கள், கட்-அவுட்கள். யாழில் இருந்த நம் நண்பரிடம், “என்ன தமிழகக் கலாசாரம், யாழிலும் பரவிவிட்டதா?” என்று கேட்டதற்கு யாழில் நமக்காகக் காத்திருந்த இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களான கிரிஷாந்த், சசீந்திரன், கர்ணன், யதார்த்தன் மற்றும் கிரிசாந்த் ஆகியோர்  நமது கேள்விக்கு புன்னகையைப் பதிலாகத் தந்தனர். அவர்களிடம், வழக்கமான விசாரிப்புகளுக்குப் பின் நம் உரையாடலைத் தொடங்கினோம்.

‘‘பண்பாட்டு யுத்தம் தொடர்கிறது!”

‘‘ஆயுதம் யுத்தம் முடிந்து இருக்கிறது, பண்பாட்டு யுத்தம் தொடரத்தான் செய்கிறது. தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணப் பகுதிகளில் உள்ள அரசமரங்களுக்கு அடியில் புத்தர் சிலைகளை வைக்கிறார்கள். இது கலாசாரத் திணிப்புதானே? வடக்கு மாகாணத்தில் எந்தத் தமிழன் பெளத்தத்தைத் தழுவினான்? பின் ஏன் அங்கு புத்தர் சிலை? இலங்கை அரசு தனிப்பட்ட தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்கப் பார்க்கிறது. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அதிகப் பணம் கொடுத்து சிங்கள மக்களைக் குடியமர்த்துகிறார்கள். இந்தச் சிங்கள மக்கள் வட்டிக்குப் பணம் தருகிறார்கள். தமிழர்கள், சிங்களர்களை அண்டிப் பிழைக்கும் நிலையை அரசு திட்டமிட்டுச் செயல்படுத்துகிறது. தமிழகத்தில் ஒரு நகராட்சித் தலைவருக்கு இருக்கும் அதிகாரம்கூட எங்கள் ஊர் முதல்வருக்கு இல்லை. அதிகாரம் இல்லாத ஒரு பதவியை வைத்துக்கொண்டு எதை வென்றெடுக்க முடியும்?

போர் முடிந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்பும் ஏறத்தாழ லட்சம் தமிழர்கள் இன்னும் ராணுவ முகாமில்தான் இருக்கிறார்கள். பல லட்சம் ஏக்கர் தமிழர் நிலங்கள், இன்னும் ராணுவத்தின் கையில்தான் இருக்கின்றன. இவை விடுவிக்கப்பட வேண்டும். இங்கு பெரும்பான்மை மக்கள் சிங்கள மக்கள், அவர்களின் விருப்பம் மட்டும்தான் இந்த அரசின் விருப்பமாக இருக்கிறது. நீதிமன்றமும் சுதந்திரமாகச் செயல்படுவதில்லை. அரசின் விருப்பம்தான், நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருக்கிறது” என்று நாம் சந்தித்த இளைஞர்கள் சொல்கிறார்கள்.

‘‘இங்குள்ள நிலைமையைப் புரிந்து பேச வேண்டும்!”

இளைஞர்கள் மேலும் தொடர்ந்தனர். ‘‘வட கிழக்கு மாகாணத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனின் வீடும், யுத்த வடுக்களைச் சுமந்துகொண்டு இருக்கிறது. உண்மையில் மக்கள் இப்போது போராடும் நிலையில் இல்லை. ஜனநாயகப் போராட்டங்களுக்குக்கூட மக்கள் கூடுவதில்லை என்பதுதான் நிதர்சனம். உண்மையில் சிங்கள மக்களின் வாழ்க்கைத் தரமும் மிக மோசமானதாகத் தான் இருக்கிறது. நாங்கள் குறிப்பிட்டது பொருளாதார ரீதியாக மேல்தட்டில் இருக்கும் சிங்களர்களின் குரலைத்தான் அரசு பிரதிபலிக்கிறது. தமிழக மக்களுக்கு எப்போதும் அவர்களுடைய பிரச்னைதான் முதன்மையானதாக இருக்கிறது. ஆனால், எங்களுக்காகப் பேசும் சில தமிழகத் தலைவர்கள் இங்குள்ள களநிலைகளைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்கள். அவர்கள் பேசிவிட்டு அங்கு பாதுகாப்பாக இருக்க முடியும். ஆனால், எங்கள் நிலைமை? அவர்களின் பேச்சு சிங்கள மக்களுக்குக் கோபத்தைத் தூண்டாதா? எங்கள் பிரச்னையைப் பேச வேண்டாம் எனக் கூறவில்லை. ஆனால், களநிலவரத்தையும், எங்கள் தேவையையும் அறிந்து பேசுங்கள்” என்றனர்.

‘‘போராட்டம் நியாயத்தை உணர்த்திவிட்டது!”

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த நடேசபிள்ளை வித்யாதரனை சந்தித்தோம். “தமிழர்கள் ஓர் இடத்தில் செறிவாக இருந்தால்தான், அவர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்பார்கள். அதனால், இலங்கை தீவில் எந்தப் பகுதியிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடாது என்பதில், சிங்கள அரசு ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவாக இருக்கிறது. நீர் கொழும்பில் அப்போது என்ன செய்ததோ, அதைத்தான் இப்போது தமிழர்கள் செறிவாக வாழும் அனைத்துப் பகுதிகளிலும் செய்கிறது. நாங்கள் புத்தர் சிலையை நிறுவுவதை இன வேறுபாட்டால் எதிர்க்கவில்லை. சிங்கள அரசுதான் புத்தரை தங்கள் அரசியல் சூழ்ச்சிக்கான பகடைக் காயாகப் பயன்படுத்துகிறது. இதற்குத் தீர்வென இந்தியாவைதான் நம்புகிறோம். ஈழ மக்கள் ஆயுதப் போராட்டத்துக்குத் தயாராவதற்கு முன்பே, அவர்கள் கையில் ஆயுதத்தைத் திணித்தது யார்? இந்தியாதானே? அப்படியானால், மற்றவர்களைவிட இந்தியாவுக்குத்தானே அதிகப் பொறுப்பு இருக்கிறது. சர்வதேச சமுதாயம் ‘ஆயுதங்களை விட்டுவிட்டு வாருங்கள், நாம் தீர்வைப் பேசலாம்’ என்றது. இப்போது புலிகளும் இல்லை, ஆயுதங்களும் இல்லை. ஆனால், உண்மையான தீர்வைப் பேசத்தான் யாரும் வரவில்லை. புலிகளின் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தபோது தமிழர்களின் உரிமைக் குரல் அனைவரின் காதுகளிலும் ஒலித்துக்கொண்டிருந்தது. ஆனால், இப்போது எவர் காதுகளிலும் எங்கள் குரல் விழவில்லை. அப்படியானால், புலிகளின் போராட்டம் மிகச் சரியானதுதானே?” என்று அவர் கேட்கிறார்.

‘‘ஆட்சி மாறி இருக்கிறது... காட்சிகள் மாறவில்லை!’’

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம், ‘‘எப்படி இருக்கிறது புதிய ஆட்சியின் ஓராண்டுச் செயல்பாடு’’ என்று நாம் கேட்டதற்கு, “ஆட்சிதான் மாறி இருக்கிறது. ஆனால் காட்சிகள் மாறவில்லை. பெளத்த மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில்தான் இந்த அரசும் இருக்கிறது. இவர்களும் சமஷ்டி ஆட்சி முறையை நிராகரிக்கிறார்கள், ராணுவத்தை சர்வதேச சமூக விசாரணையிலிருந்து காக்கிறார்கள். உண்மையில் அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருவருக்கும், எந்த மாற்றமும் கிடையாது. அதே நேரம் எந்த முன்னேற்றமும் இல்லையென்று சொல்ல மாட்டேன். ராஜபக்‌ஷே ஆட்சி மிக மோசமான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. அப்பட்டமான இனவாதத்தைக் கக்கியது. ராணுவம் முழு இனவெறியுடன் நடந்துகொள்ள அனுமதித்தது. இந்த ஆட்சியில் அந்த இனவெறி மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், அரசின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியாவும், மேற்கு உலகமும் சொன்ன நியாயம், ‘‘புலிகள் சமஷ்டி தீர்வை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். அவர்கள்து கோரிக்கை தனி ஈழமாக மட்டும் இருக்கிறது’’ என்பது. அதாவது, ஐக்கிய இலங்கைக்குள், இரண்டு தேசங்கள் கொண்ட நாடாக இருக்க புலிகள் சம்மதிக்கவில்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் இந்தியா முன்வைத்த வாதம். ஆனால், இன்று நாங்கள் ஐக்கிய இலங்கைக்குள் ஒரு சமஷ்டி (கூட்டாட்சி முறை) தீர்வைதான் கேட்கிறோம். புலிகள் சமஷ்டி தீர்வை ஒப்புக்கொள்ளவில்லை என்றுதான் அவர்களை நீங்கள் அழித்தீர்கள். ஆனால், இன்று நாங்கள் சமஷ்டி தீர்வைதான் கேட்கிறோம். அதை அழுத்தங்கள் கொடுத்துப் பெற்றுத் தர வேண்டியது இந்தியாவின் கடமை” என்றார்.

‘‘சிங்களர்களின் மனதை வென்றெடுக்க வேண்டும்!’’

இலங்கையின் தேசியக் கலந்துரையாடல் களுக்கான அமைச்சர் மனோ கணேசனை சந்தித்து உரையாடினோம். ‘‘போருக்குப் பிந்தைய சூழல் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. புதிய மந்திரி சபை பொறுப்பேற்ற இந்த ஏழு மாத காலங்களில், அரசைக் கண்காணிப்பதற்காக நாங்கள் சுயாதீன ஆணைக் குழுக்களை உண்டாக்கி உள்ளோம். அது மட்டுமல்லாமல் ஜனாதிபதியின் கட்டற்ற அதிகாரங்களைக் குறைத்து, பாராளுமன்றத்துக்கு பதில் கூறும் பிரஜையாக மாற்றி இருக்கிறோம். இவை தவிர, இந்தத் தேசத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மூலக்காரணமாக இருக்கக்கூடிய, தேசிய இனப் பிரச்னைக்குத் தீர்வு காணும் செயல்பாட்டினைத் தொடங்கி இருக்கிறோம். புதிய அரசியலமைப்பை வடிவமைக்க, அனைத்து உறுப்பினர்களையும் கொண்ட அரசியல் அமைப்புப் பேரவையை உருவாக்கி இருக்கிறோம். அந்தப் பேரவையை வழிநடத்த, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில், அனைத்து இன மக்களின் பிரதிநிதிகளின் தலைமையில், ஒரு குழுவை அமைத்துள்ளோம்” என்றார்.

அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘தமிழர்களின் பூர்வீக நிலங்கள் இன்னும் திரும்பத் தரப்படவில்லை, அரசியல் கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் இந்த அரசை எப்படி ‘நம்பிக்கையளிக்கும் அரசு’ என்கிறீர்கள்?”

‘‘நாங்கள் பதவியேற்கும்போது மொத்தம் 220 அரசியல் கைதிகள் இருந்தார்கள். அதில் 40 பேர் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். மற்றவர்களையும் விடுதலை செய்வதவற்கான சட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. கணிசமான அளவில் காணிகள் திரும்பத்தரப்பட்டுவிட்டன. 10 ஆண்டுகளாக ராஜபக்‌ஷே ஆட்சியில் நடக்காதவை எல்லாம் இந்த எட்டு மாதங்களில் நடந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அது பிழை. ஆனால், ஒவ்வொன்றாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.”

“தமிழ் மக்களின் முக்கியக் கோரிக்கையான வட கிழக்கு இணைப்பை, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. இதைத் தவிர்த்து தமிழ் மக்களின் கோரிக்கைகள் என்ன?”

‘‘இலங்கையில் வாழும் மொத்தத் தமிழ் மக்களின் ஜனத்தொகை 32 லட்சம். இதில் வட கிழக்கில் வாழும் தமிழர்கள், இந்திய வம்சாவளியினர் மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்கள் அனைவரும் அடங்குவர். இதில், 16 லட்சம் பேர்தான் வட கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்கள். மிச்சம் உள்ள 16 லட்சம் பேர் இந்திய வம்சாவளியினர் மற்றும் இஸ்லாமியர்கள். தமிழர் பிரச்னை என்றால் வட கிழக்கில் வாழும் தமிழர்கள் பிரச்னை என்று மட்டும்தான் புரிந்துகொள்ளப்படுகிறது. அது பிழையான புரிதல். அதேவேளை, யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது வட கிழக்குத் தமிழர்கள். அவர்களுக்கு நியாயம் பெற்றுத் தரவேண்டும், நீதி வாங்கித் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

 ‘வட கிழக்கு இணைக்கப்பட வேண்டும், சமஷ்டி ஆட்சி கொண்டுவரப்பட வேண்டும்’ என்பது என் நிலைப்பாடு. புதிய அரசியல் அமைப்பு வடிவமைப்பில் அதற்கான அழுத்தங்களை நாங்கள் கொடுப்போம். ஆனால், அந்தக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டிய கடப்பாடு, அந்த மக்களின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் இருக்கிறது.

தமிழர் பிரச்னை என்பது வட கிழக்குக்கு வெளியேயும் இருக்கிறது. வட கிழக்கு இணைக்கப்பட்டு, வட கிழக்குத் தமிழர்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டால், இலங்கையில் வாழும் மொத்த தமிழர்களின் பிரச்னையும் தீர்ந்துவிடும் என்று நினைக்க வேண்டாம். 50 விழுக்காடுதான் பிரச்னைகள் முடிவுக்கு வரும். ஏனெனில், மீதமுள்ள 50 சதவிகிதம் தமிழ் மக்கள் தெற்கில் வாழ்கிறார்கள். இதில் ஈழத் தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர்கள் அனைவரும் அடங்குவர். அதனால், அதிகாரம் அனைத்துத் தரப்புக்கும் பரவலாக்கப்பட வேண்டும்.”

“ஆயுத யுத்தம் முடிந்துவிட்டது, ஆனால் பண்பாட்டு யுத்தம் நடப்பதாகக் கூறப்படுகிறதே. அதுவும் குறிப்பாகத் தமிழர்களை, வடக்கு மாகாணத்தில் சிறுபான்மையினராக்க சிங்களர்கள் அதிக அளவில் குடியமர்த்தப்படுகிறார்கள் என்கிறார்களே?”


“இல்லை. சிங்களர்கள் சிறு தொகையினர், யுத்தம் தொடங்குவதற்கு முன்பிலிருந்தே வட கிழக்கில் வாழ்ந்துகொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் யுத்தம் தொடங்கிய பின் தெற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். அதுபோல் தெற்கிலே கடந்த காலங்களில் தமிழர்கள் வாழ்ந்தார்கள். அவர்களும் யுத்தம் தொடங்கிய பின், வட பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். தமிழர்கள், தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளுக்குச் செல்வதும், சிங்களர்கள், சிங்களர்கள் செறிவாக வாழும் பகுதிகளுக்குச் செல்வதும் இயல்பானது. சிங்களர்கள் குடியேறினாலும், தமிழ் மக்களை வடக்கில் சிறுபான்மையினராக ஆக்கிவிட முடியாது. சிங்களர்களும் இயல்பாக தம் மக்களுடன்தான் வாழ விரும்புவார்கள். அவர்கள் வடக்குச் செல்லவும் தயாராக இல்லை. வட கிழக்குத் தமிழர்களின் அச்சம் தேவையற்றது.”

“பண்பாட்டு யுத்தம். அதாவது புத்த விஹாரங்களை நிறுவப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?”

“ஆம். ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. பெளத்த மதமே இல்லாத இடத்தில், புத்த விஹாரை நிறுவி என்ன பிரயோஜனம்? பெளத்த விஹாரை நிறுவினாலும், அதைப் பராமரிப்பதற்கு அங்கு யாரும் இல்லை.”

“மலையகத் தமிழர்களின் வாழ்நிலை இப்போது எப்படி இருக்கிறது..?”

“மொத்தம் மூன்று லட்சம் மலையகத் தமிழர்கள், மிகவும் கஷ்டமான சூழ்நிலையில்தான் இருக்கிறார்கள். அதற்காக நாங்கள் அரசாங்கத்துக்கு வெளியேயும், உள்ளேயும் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறோம்.”

“தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்னைக்கு எப்படித் தீர்வு காண முடியும் என்று நினைக்கிறீர்கள்?”

“சிங்கள மக்களின் மனதை வென்றெடுக்காமல், அவர்களின் நம்பிக்கையைப் பெறாமல், தேசிய இனப் பிரச்னைக்குத் தீர்வு காணமுடியாது. நியாயமான நம் கோரிக்கைகளை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.”

“இலங்கையின் தேசிய இனப் பிரச்னையை, இனி இந்தியா எப்படிக் கையாள வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?”

“இந்தியா இல்லாமல் தேசிய இனப் பிரச்னைக்குத் தீர்வு இல்லை என்பதுதான் நிதர்சனம். இந்தியா மீது இங்குள்ள சில மக்கள் வெறுப்பு உணர்வை வளர்த்தாலும், இந்தியா இல்லாமல் தீர்வு இல்லை என்பதுதான் நிஜம்.”

“தமிழகத் தேர்தல் முடிவுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“தமிழக விவகாரங்களில் தலையிட நான் விரும்பவில்லை. ஆனால், கூடிய விரைவில் இரு குழுவாக வந்து தமிழக முதல்வரைச் சந்திப்போம். அதற்கான முயற்சிகளை இலங்கை வெளியுறவு அமைச்சகம் மூலம் எடுத்து வருகிறோம்.”

போர் இல்லையே தவிர, பார்க்கும் மக்கள் முகங்களில் எல்லாம் அச்சமும் சோகமும் கப்பிக் கிடக்கிறது.

- மு.நியாஸ் அகமது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick