‘‘கண்ணுக்குத் தெரியாத எதிரிகளோடும் போராடினோம்!’’

ஜி.ராமகிருஷ்ணன் அவிழ்க்கும் ரகசியம்!பேட்டி

‘‘இன்றைய அரசியலில் மாற்றுத் தேவை என்பதை மக்கள் உள்வாங்கி இருக்கிறார்கள். நாங்கள் வாங்கி இருக்கும் இந்த ஓட்டுகளே மக்களின் நம்பிக்கையையும் மாற்றத்தின் அவசியத்தையும் உணர்த்துகிறது. இது முதல் முயற்சிதான். இனியும் நாங்கள் உத்வேகத்துடன் போராடுவோம். எதிர்காலம், மாற்று அரசியலுக்குத்தான் என்பதை உரக்கச் சொல்வோம்” என்று தேர்தலுக்குப் பிந்தைய சந்திப்பிலும் உற்சாகம் கூட்டுகிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘ ‘மாற்றம் தேவை’ என்கிற கோஷம் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்து இருப்பதாகத் தெரியவில்லையே?’’

‘‘மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல... அதுவும் 50 ஆண்டுகளாக தமிழ்நாடு போன்ற பரந்த நில, மக்கள் பரப்பில் நீடித்துக்கொண்டிருக்கும் இரு துருவ அரசியல் அரங்கத்தில் மாற்றத்தை முன்னெடுப்பது என்பது எளிதான இலக்கும் அல்ல. ஆள் மாற்று இங்கு தேவை இல்லை. அரசியலே மாற வேண்டும். இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று ஏன் என்கிற அவசியத்தை மக்களிடம் கொண்டுசெல்ல எங்களுக்குத் தேவையான கால அவகாசம் இல்லை. அடுத்த முக்கியமான விஷயம், பணம். இந்தத் தேர்தலில், பணம் கொடுத்து வெற்றி பெறவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனாலும், வெற்றி வாய்ப்பு இருக்கும் வேட்பாளருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்கிற உளவியல் மக்கள் மனதில் இன்னும் இருக்கிறது.’’

‘‘தொடர்ச்சியாக சட்டமன்றத்தில் இடம்பெற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளும், இன்னபிற கட்சிகளுக்கும் இந்த முறை சட்டமன்றத்தில் இடம்பெறவில்லையே?’’

‘‘வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், இது எங்களுக்குப் பின்னடைவு இல்லை. தேர்தலில் வெற்றிபெற்று பணி செய்வது மட்டும்தான் அரசியலா? சட்டமன்றத்தை மட்டுமே நம்பிச் செயல்படக்கூடியவர்கள் நாங்கள் இல்லை. சட்ட மன்றத்துக்குள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னைகளுக்கான எங்கள் போராட்டம் தொடரும். சட்டமன்ற ஜனநாயகமே சீரழிக்கப்பட்டுள்ள இந்தக் காலத்தில், மக்கள் இயக்கங்களை முன்னெடுப்பதன் மூலம் மக்கள் நலனைப் பாதுகாக்க முடியும்.’’

‘‘மக்கள் நலக் கூட்டணியின் தோல்விக்கான காரணியாக இருந்தது எது? பலமான முதல்வர் வேட்பாளர் இல்லாததுதான் காரணம் என்கிற விமர்சனம் பற்றி?’’

‘‘மக்கள் நலக் கூட்டணி, ஊடகங்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. பின்பு, தே.மு.தி.க., த.மா.கா ஆகிய கட்சிகள் இணைந்து இரு திராவிடக் கட்சிகளுக்கு எதிராக பலமான கூட்டணியாக உருவானபோது பலருக்கும் பயத்தை ஏற்படுத்தியது. இந்த மாற்று பலம் அடைந்துவிடக் கூடாது, மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே விஜயகாந்த்தையும், வைகோவையும் வேண்டுமென்றே எல்லாத் தளங்களிலும் விமர்சித்தார்கள். விஜயகாந்த், தி.மு.க கூட்டணிக்குப் போயிருந்தால் அவரைப்பற்றி இத்தனை விமர்சனங்கள் வந்திருக்குமா? கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளைவிட, கண்ணுக்குத் தெரியாத எதிரிகளோடு போராடினோம்.’’

‘‘மக்கள் நலக் கூட்டணி தொடருமா? விஜயகாந்த், ஜி.கே.வாசன் ஆகியோர் யோசனையில் இருப்பதாகச் செய்திகள் வருகின்றனவே?’’

‘‘மக்கள் நலக் கூட்டணி, அடுத்தகட்ட தேர்தல் பயணங்கள் குறித்து கூடி விவாதிக்க இருக்கிறது. விஜயகாந்த், ஜி.கே.வாசன் எங்களுடன் சேர்ந்து செயல்படுவது பற்றி அவர்கள்தான் முடிவெடுப்பார்கள்.’’

See also: “எங்களை இணைத்திருந்தால் 200 தொகுதிகளில் தி.மு.க. ஜெயித்திருக்கும்!”

‘‘மீண்டும் ஒரு திராவிடக் கட்சியே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கிறதே... இதை எப்படி உணர்கிறீர்கள்?’’

‘‘தமிழகத்தில், தங்களைத் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே கவனமாக இருக்கின்றன. இது, அவர்களுக்குள் ஓர் ரகசிய உடன்படிக்கைபோல இருக்கிறது. தே.மு.தி.க-வை அ.தி.மு.க. உடைத்தது. அதுபோல ம.தி.மு.க-வை தி.மு.க உடைத்தது. தமிழகத்தில் நடந்த எல்லா ஊழல்களையும் இந்த இரு கட்சிகளுமே செய்துள்ளன. இனி, எந்தப் பிரச்னை வந்தாலும் அதற்கு இந்த இரு கட்சிகள் மட்டுமே காரணம். ஆட்சியிலும் இவர்கள் மட்டுமே இருப்பதால் அவர்களுக்கு உள்ளாகவே சமரசம் செய்துகொண்டு விடுவார்கள். ஆனால், மக்கள் நலக் கூட்டணி அதை நடக்கவிடாது.’’

‘‘தமிழக அரசியலில் தலைவர்கள் சுமுகமான போக்கைக் கடைப்பிடிப்பது ஏதாவது மாற்றத்தை உணர்த்துகிறதா... முதல்வரின் செயல்பாடுகள்கூட அந்த விதத்தில் இருக்கிறதே?’’

‘‘இரண்டு கட்சிகளும் எல்லா விஷயங்களிலும் ஒன்றைப்போலவே செயல்படுகின்றன. ‘மதுக்கடைகள் மூடப்படும்’ என்று அவர்களது தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டு இருந்தது. அதைச் செய்கிறார்கள். இதைப் பெரிதான மாற்றம் என்றெல்லாம் பார்க்க முடியாது. ஆனால், இதைப்போலவே தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட அனைத்தையும் செயல்படுத்த வேண்டும்.’’

- மா.அ.மோகன் பிரபாகரன்
படம்: பா.காளிமுத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick