சரவணன் சந்திரன்

முகங்கள்

ரவணன் சந்திரன் - விளையாட்டு வீரர், ஊடகவியலாளர், எழுத்தாளர், இயக்குநர்,  மீன்கடை உரிமையாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர். கடந்த ஓர் ஆண்டில் இவர் எழுதிய ‘ஐந்து முதலைகளின் கதை’, ‘ரோலக்ஸ் வாட்ச்’, ‘வெண்ணிற ஆடை’ மூன்று புத்தகங்களும் இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சியின் ‘டாப்-செல்லர்கள்’. தனது மீன் கடையைப் புதுப்பிக்கும் பணியில் இருந்த சரவணன் சந்திரனை சந்தித்தோம்.

“முதல் ஆண்டிலேயே மூன்று சிறப்பான நூல்கள். இது முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்ட ஒன்றா?”


“என் மூன்று புத்தகங்களும் மூன்று வெவ்வேறு தளத்தில் இயங்கும் உலகத்தைப் பற்றியவை. முன்கூட்டிய திட்டமிடல் என்றெல்லாம் எதுவும் இல்லை. பள்ளியில் தொழில்முறை ஹாக்கி வீரனாக இருந்த நான், எப்போதும் ஒரு சாகச மனநிலையிலேயே இருந்ததுதான் இதற்குக் காரணம். என் கதைக்கான பாத்திரங்கள் என்பது நான் வாழ்வில் கண்டு, அனுபவித்து உணர்ந்த அனுபவங்களே. அதைத் தாண்டிய நான் கேட்ட, கேட்டிராத விஷயங்களைக்கூடத் தொட விரும்பவில்லை. இந்தப் புத்தகக் காட்சியில் நல்ல பெயரைப் பெற்றிருக்கிறோம் என்கிற சிறிய கிளுகிளுப்பைத் தாண்டி இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இந்த நேரத்தில், எனக்கு எழுதச் சொல்லி ஊக்கம் கொடுத்த மனுஷ்ய புத்திரனுக்கும், ஓர் இளம் எழுத்தாளனை அறிமுகப்படுத்தத் தயங்காத சாரு நிவேதிதாவுக்கும் நன்றிகள் பல.”

“இத்தனை துறைகளில் அனுபவம் பெற்ற நீங்கள், ஏன் முழு நேர எழுத்தாளராகவில்லை?”

“நான், முழுநேர எழுத்தாளனாக இருக்க விரும்பவில்லை. எழுத்து என்பது என் அளவில், என் ஆறுதலுக்காகவும், எனக்குள்ளான தேடலுக்குமான ஒரு கருவியே. எனக்கான பொருளாதாரத் தேவையை நான் வைத்திருக்கும் கடை மூலமாகவோ, பார்க்கும் வேலை மூலமாகவோதான் கவனித்துக்கொள்ள வேண்டும். அதில் நான் தெளிவாக இருக்கிறேன். இன்னமும் ஒரு புத்தகத்தை எழுதக்கூடிய எழுத்தாளனோ, பதிப்பகத்தாரோ, அதைப் படிக்கக்கூடிய வாசகனோ தொழில்முறையில் சந்தோஷமற்றே இருக்கிறார்கள். மலையாள சினிமா உலகில் ஏற்பட்ட மாற்றம்போல, வாசகனைத் திருப்திபடுத்தக்கூடிய படைப்புகள் உருவாக வேண்டும்.”

“தமிழின் வாசிப்பு உலகம், மாறி இருப்பதாக உணர்கிறீர்களா?”

“கண்டிப்பாக இல்லை. கடந்த 25 வருடங்களுக்கு முன்னதாக எப்படி இருந்ததோ, அதுபோலத்தான் இருக்கிறது. புதிய எழுத்தாளர்களும், புதிய புதிய வாசகர்களும் உள்வருவதுதான் அதன் பலம். சபரிமலைக்கு கன்னிசாமிகளின் வருகையைப் போல, வருடாவருடம் புதிய வாசகர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இந்த வெளியில் பெரிய மாற்றம் என்று எடுத்துக் கொண்டால் அவை சமூக ஊடகங்கள். அவை தமிழ் எழுத்துலகத்துக்கு மிகப் பெரிய கதவுகளைத் திறந்துவிட்டிருக்கின்றன.  புதுப்புது எழுத்தாளர்களின் முதல் களமாகவும், வாசகர்களைச் சென்று அடைவதற்கான களமாகவும் இரு சாராருக்கும் இடையே அவை மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. நமக்கான வெளிசார்ந்து மற்றவர்களிடம் தயங்கிக் கேட்டுப் பெற்ற அங்கீகாரத்தை சமூக ஊடகங்கள் தானாக வழங்குகின்றன.”

“தொடர்ந்து தமிழுக்கு புதிய எழுத்தாளர்களின் வரவு என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“வெவ்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டே எழுதக்கூடிய எழுத்தாளர்கள் தமிழ் எழுத்து உலகுக்கு நிச்சயம் தேவை. அதுவும் இளைஞர்களாக இருப்பது கூடுதல் வரம். அந்தக் காலங்களில்கூட தொழில்முறை சாராத எழுத்தாளர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எழுத்தின் கருப்பொருள் தமிழ் நிலம் சார்ந்தே இருந்தது. இப்போது, தமிழ் இளைஞர்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில், பல துறைகளில் பரவி இருக்கிறார்கள். அவர்களது எழுத்துக்கள் அனைத்து விதமான வாசிப்பாளர்களையும் நிச்சயம் ஈர்க்கும். நிச்சயம் இன்னும் பல வாசகர்கள் உருவாவார்கள். அது தமிழ் வாசிப்பு வெளிக்கு நிச்சயம் ஒரு பரந்த வெளிக்கான திறவாக இருக்கும்.”

“உங்களுடைய அடுத்த நாவலான ‘அஜ்வா’ பற்றி?”

“ ‘அஜ்வா’ என்ற அரேபிய சொல்லின் அர்த்தம், நபிகள் சாப்பிட்ட பேரீச்சை பழம் என்று பொருள். விதை எல்லோருக்கும் பொது என்கிற புரிதலோடு பயணம் செய்யும் நாவல். சமூகத்தில் மெத்தப்படித்து வெளிநாடுகளில் வேலைக்குச் செல்லும் இளைஞர்களையும், அதே சமூகத்தின் கறுப்புப் பக்கங்களில் தங்களுடைய வாழ்க்கையை மாய்த்துக்கொள்ளும் இளைஞர்களையும் பற்றிய கதை.”

- மா.அ.மோகன் பிரபாகரன்
படம்: தி.குமரகுருபரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்