திருவள்ளுவர் சிலை சர்ச்சையில் தருண் விஜய்!

சர்ச்சை

‘‘உத்தரகான்ட் மாநிலம், ஹரித்துவாரில் உள்ள கங்கை கரையில் நிறுவுவதற்கு பி.ஜே.பி., எம்.பி தருண் விஜய்யிடம் பேசியபடி திருவள்ளுவர் சிலையை வடிவமைத்தோம். ஆனால், அந்தச் சிலையைப் பெற்றுக்கொள்ளாமல் வேறு ஒரு சிலையை அவர் வடிமைத்திருக்கிறார். இதனால் தேவையில்லாத மனஉளைச்சலும், பொருட்செலவும் ஏற்பட்டிருக்கிறது’’ என்று ஒருவர் நமது அலுவலகத்துக்குத் தொடர்புகொண்டார். என்ன நடந்தது என்று விசாரித்தோம்.

பி.ஜே.பி எம்.பி தருண் விஜய் கடந்த 2015-ம் ஆண்டு கன்னியாகுமரி முதல் சென்னைவரை பயணம் மேற்கொண்டார். அவரை வரவேற்றுப் பாராட்டும் விழா திருச்சியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய திருவள்ளுவர் திருநாட்கழகம் அமைப்பைச் சேர்ந்த முனைவர் சாமி தியாகராஜன் என்பவர், ‘‘குமரி முனையில் இருக்கும் திருவள்ளுவர் சிலையைப்போல ரிஷிகேஷில் ஒரு திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும். அதற்கு தருண் விஜய் உதவ வேண்டும்’’ என்றார்.

அதே மேடையில் பேசிய தருண் விஜய், ‘‘ரிஷிகேஷில் வைப்பதைவிட கங்கைக்கரையில் ஹரித்துவாரில் வள்ளுவர் சிலையை அமைக்கலாம்’’ என்றார்.

அதன்பிறகு என்ன நடந்தது என்பதை சாமி தியாகராஜனிடம் கேட்டோம். ‘‘திருச்சி விழாவில் பேசியபடி மகாபலிபுரத்தில் எங்களுடைய செலவில் உட்கார்ந்த நிலையில் இருக்கும் திருவள்ளுவர் சிலையை வடித்தோம். அது ‘மாடல்’ சிலைவடிவம். சிலை செய்து முடித்த உடன், அதனை ஒப்படைக்கும் விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. நீதிபதி வெ.ராமசுப்பிரமணியம் அந்த சிலையை தருண் விஜய்யிடம் முறைப்படி வழங்கினார். அதன் பின்பு, எப்போது அனுப்புவது என்பது குறித்து பேசுவதற்காக தருண் விஜய்யை தொடர்புகொண்டபோது அவர் என்னிடம் பேசுவதைத் தவிர்த்தார். சிலை திட்டமிட்டபடி ஹரித்துவாருக்குச் செல்லவில்லை. தற்போது சிலை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உளுந்தை கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருக்கிறது. இப்போது கேட்டாலும்கூட நாங்கள் அந்தச் சிலையை அனுப்பத் தயாராக இருக்கிறோம். இந்த நிலையில், நாமக்கல்லில் வேறு ஒரு சிலையைச் செய்து அதனை ஹரித்துவாருக்கு எடுத்துச் செல்ல இருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. நாங்கள் செய்த சிலையை ஏன் அவர் ஏற்கவில்லை என்று தெரியவில்லை. எங்களிடம்தான் சிலையை வாங்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. எங்கள் மூலம் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால், அதனை முன்கூட்டியே சொல்லியி ருந்தால் நாங்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யாமல் இருந்திருப்போம். சிலையைப் பெற்றுக்கொள்ளும் விழாவிலும் பங்கேற்ற பின்னர் ஏன் அவர் எங்களைப் புறக்கணிக்கிறார் என்றே தெரியவில்லை. மன உளைச்சலால் தவிக்கிறோம்’’ என்றார் வேதனையோடு.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டியில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலையின் கண் திறப்பு மற்றும் ஹரித்துவாருக்கு அனுப்பும் நிகழ்ச்சி கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. மேலும் சிலை திறப்பு விழா ஹரித்துவாரில் உள்ள கங்கைக் கரையில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கும் முன்பாக தருண் விஜய், கன்னியாகுமரியில் இருந்து திருவள்ளுவர் கங்கை பயணத்தை 18-ம் தேதி தொடங்கி உள்ளார். இதற்காகத் தமிழகம் வந்துள்ள தருண் விஜய்யிடம் பேசினோம். ‘‘மகாபலிபுரத்தில் செய்யப்பட்ட சிலையை சாமி தியாகராஜன், ‘ஒரு கல்லூரிக்குக் கொடுக்க வேண்டும்’ என்று கூறினார். அதன்பிறகுதான் நாங்கள் நாமக்கல்லில் புதிதாகத் திருவள்ளுவர் சிலையைச் செய்தோம். மேலும் இப்போது அவருடன்  பேசுவதற்காகத்தான் சென்னை வந்துள்ளேன். அந்தச் சிலையை நாங்கள் பெற்றுக்கொள்ள உள்ளோம்’’ என்றார்.

ஆனால், நம்மிடம் கூறியபடி சாமி தியாகராஜனை அவர் தொடர்புகொள்ள வில்லை. சாமி தியாகராஜன் தரப்பில் தமிழக பி.ஜே.பி நிர்வாகிகள் பலரும் தருண் விஜய்யிடம் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர்களிடமும் அவர், சிலையை ஏற்றுக்கொள்வது குறித்து எந்த ஒரு சாதகமான பதிலையும் கூறவில்லையாம். இதனால் பி.ஜே.பி-க்குத்தான் கெட்டபெயர் என்று அவர்களும் மனம் புழுங்குகிறார்கள்.

திருவள்ளுவர் சிலை விஷயத்தில் எழுந்த சர்ச்சையை தருண் விஜய் விரைவில் தீர்க்க வேண்டும்!

- கே.பாலசுப்பிரமணி
படம்: எம்.உசேன் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick