மனச்சிறையில் சில மர்மங்கள் - 4

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

முதிர்கன்னிகளின் உணர்வுகள்!

எல்லாப் பெண்களையும் போலவே சுஜியும் நிறையக் கனவுகள் கண்டிருந்தாள். அவளுக்கென்று அன்பு செலுத்த அழகான, திறமையான, காதலில் கசிந்துருகும் ஓர் அற்புதமான ஆண் கிடைப்பான். அவனோடு எப்படி எல்லாம் ரொமான்ஸ் செய்யலாம் என்று…! அட இவளே சும்மா இருந்தாலும்கூட அவள் காதில் தானாய் வந்து விழுந்த சினிமா பாடல்கள், கண்ணில் அவ்வப்போது பட்ட காட்சிகள் எல்லாம் அவள் ரொமான்ஸ் கனவுகளுக்கு எரிபொருளை ஊற்றிக்கொண்டே இருக்க, ‘முதல் முத்தம்’, ‘முதல் அணைப்பு’, ‘முதல் புணர்ச்சி’ என்று சதாசர்வகாலமும் இதே கற்பனையில் அவள் கிடந்த காலமும் இருந்தது.

ஆனால், இந்த எந்த ஆசைகளுமே நிறைவேறவில்லை என்பதுதான் அவள் வாழ்வின் மிகக் கசப்பான உண்மை.  சின்ன வயதிலேயே அப்பா இறந்துவிட்டார். அம்மாவும் உடல்நலம் சரியில்லாதவர். அண்ணன்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்தார்கள். அவ்வப்போது, ‘‘நம்ம சுஜிக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்’’ என்று ஆரம்பிப்பார்கள். அத்தோடு சரி.  

அதற்குள் இவளுக்கும் 39 வயதாகிவிட்டது. அவளுக்கு வயதாகிவிட்டதை இப்போதுதான் கண்டுபிடித்தவர்களைப்போல, ‘‘அடுத்த வருஷம் 40 வயசாகப் போகுது. அதுக்குமேல மாப்பிள்ளை கிடைக்குறது கஷ்டம்’’ என்று மீண்டும் பேச்சு எடுத்தார்கள்.

ஆனால், மீண்டும் வாழ்வியல் பிரச்னைகள், ஜாதகப் பிரச்னைகள், கிடைத்த சில மாப்பிள்ளைகள் பொருத்தமில்லாமல் போனார்கள் அல்லது பிடிக்கவில்லை என்று போனார்கள்… இப்படியாக, 46 வயதாகியும் சுஜிக்கு இன்னும் திருமணமே நடக்கவில்லை.

அம்மா, கிராமத்தில் மூத்த அண்ணனின் தயவில் வசிக்க, சுஜி சென்னையில் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி, வங்கி வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாள். வேலையில் இவளை வெல்ல முடியாதுதான். இருந்தாலும், ‘‘ஏன் மேடம் இன்னமும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க?’’ என்றோ, ‘‘அப்புறம், உங்க பசங்க என்ன பண்றாங்க?’’ என்றோ யாராவது கேட்டுவிட்டால் போதும். அவள் கட்டுப்பாட்டை மீறி முகம் வாடிவிடும்; குரல் தழுதழுக்கும்; சில சமயம் கண்ணீர்கூட எட்டிப்பார்க்கும்.

ஆனால், போகப்போக இந்தக் கேள்விகள் பழகிப் போயின. பிரியாவின் நட்புக் கிடைத்தது. பிரியா இவளுடைய புது ரூம்மேட். 50 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. பார்க்க இன்னமும் 30 வயது பெண் மாதிரியே இருப்பாள். தனக்கு திருமணம் ஆகவில்லை என்பதை பிரியா மிகவும் கேஷுவலாக எடுத்துக்கொள்வாள்.

‘‘எப்படி பிரியா இப்படி லைஃபை என்ஜாய் பண்ண முடியுது?’’ என்று சுஜி பொறாமையாய்க் கேட்டாள்.

‘‘இந்த ஜென்மத்துல எனக்கு வாய்த்தது இதுதான்னு நான் அதை அக்செப்ட் பண்ணிக் கிட்டேன் சுஜி. இதுல இருக்குற செளகர்யத்தை உணர்றேன். புருஷன், பிள்ளைக்காக வாழ்ந்துட்டு, மிச்சம் மீதிக் காலத்தைத் தனக்காக வாழுறதைவிட, முழுக்க முழுக்க எனக்காக மட்டும் வாழுறது ஒரு வகையில பெரிய சுதந்திரம்தானே’’ என்று பிரியாவும் சுஜிக்கு எவ்வளவோ ஐடியாக்களைச் சொல்லித் தந்தாள். 

பிரியாவின் நட்புக் கிடைத்தபிறகு சுஜியும் வாழ்வை ரசிக்கப் பழக்கிக்கொண்டாள். இருவரும் சேர்ந்து 108 திவ்ய தேசங்களுக்குப் போகத் திட்டமிட்டு, எல்லா வார இறுதிகளிலும் ஒவ்வொரு கோயிலாகப் போக ஆரம்பித்தார்கள்.

அப்போதுதான் பிரச்னையே ஆரம்பித்தது. அலங்கார பூஷிதமாய் காட்சி அளித்த, அந்த சாமி சிலைகளைப் பார்த்த சுஜிக்கு, மனசு சரியில்லை. ‘‘வா போகலாம்’’ என்று தோழியை அழைத்துக் கொண்டு பாதியிலேயே வெளியேறிவிட்டாள்.

அடுத்து லிஸ்ட்டில் இருந்த கோயில்களை எல்லாம் பார்க்கப் போனபோதும், சரியாகச் சிலையின் எதிரில் போய் நின்றுவிட்டு, சட்டென முகம் வியர்க்க, தவிப்புடன் வெளியேறியவள், ‘‘பிரியா... என்னால முடியலை. இனிமே நான் கோயிலுக்கே வரலை’’ என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.
‘‘என்ன சுஜிம்மா? ஏன்டா செல்லம்?’’ என்று பிரியா எவ்வளவோ தேற்றிய பிறகுதான் சொன்னாள். ‘‘சாமி சிலைய பார்த்த எனக்குத் தப்புத்தப்பா எண்ணம் வருது. சாமிய போய்... கடவுளே!’’

‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. சும்மா ரேண்டமா ஏதோ தோணியிருக்கும். சரி விடு, திவ்ய தேசம் ப்ளானை இத்தோட விட்டுடுவோம்’’ என்று ஆறுதல்படுத்தி சுஜியை ஹாஸ்டலுக்கு அழைத்து வந்தாள் பிரியா.

ஆனால், அன்றிலிருந்து சுஜிக்கு மனசே சரியில்லை. தூக்கம் குறைந்தது, பசியே இல்லை. சதா மனம் சஞ்சலமாகவே இருந்தது. வேலையிலும் கவனமே இல்லை. லீவு போட்டுவிட்டு அறையிலேயே அடைந்துகிடக்க ஆரம்பித்தாள். பீச், சினிமா, கச்சேரி என எதற்கும் சுஜியை அழைத்தும் அவள் வராததால், அவளை சைக்கியாட்ரிஸ்டிடம் அழைத்துப் போனாள் பிரியா.

சைக்கியாட்ரிஸ்ட் கொடுத்த மருந்துகளில் நாளடைவில் சுஜி சரியாகிவந்தாள். தூக்கம், பசி, வேலை, செயல்பாடு எல்லாமே சரியாகிவிட்டது. இருந்தாலும், ‘‘எந்த ஆம்பளையையும் நிமிர்ந்து பார்க்கப் பயமா இருக்கு டாக்டர். எங்க ஏதாவது தப்பான எண்ணம் வந்துடுமோ. அதைவிட, எனக்கு அப்படி ஓர் எண்ணம் வர்றது எதிராளிக்குத் தெரிஞ்சா, அது எவ்வளவு அசிங்கம். என்னைப்பத்தி அதுக்கப்புறம் அவங்க என்ன நினைப்பாங்க...’’ என்று ரொம்பவே கவலைப்பட்டாள். ‘‘எனக்கு இது மாதிரியான எண்ணமே இனிமே வரக் கூடாது டாக்டர். ப்ளீஸ், அதுக்கு ஏதாவது மருந்து குடுங்களேன்.’’

‘‘அது நடக்காது சுஜி. செக்‌ஸீவல் ஃபீலிங்ன்றது அடிப்படையான விஷயம். அதை நிறுத்த எல்லாம் மாத்திரை தர முடியாது. ஒண்ணு செய்யலாம். உங்களோட இந்த ரியாக்‌ஷனை மாத்தலாம்.’’

‘‘எப்படி டாக்டர்?’’

எல்லா உயிரினங்களுக்கும் இனவிருத்தி என்பது அடிப்படையான ஓர் இலக்கு. இந்த இலக்கை அடைவதற்காக, இனச்சேர்க்கை இச்சை (mating instinct) என்பதை இயற்கை மிக வலிமையாக மனதில் பதித்துவைத்திருக்கிறது.  பருவ காலத்தில் இந்த இச்சைக்கு இணங்கி, உயிர்கள் துணை தேடும், புணரும். முட்டையோ, குட்டியோ இடும் அல்லது ஈனும். ஆனால், இந்த இச்சையை நிறைவேற்றிக்கொள்ள முடியாவிட்டால், ‘‘பார், இதை நீ இன்னும் செய்யவில்லை. இது முக்கியமானது’’ என்று ஆழ்மனம் கனவுகள் மூலமாக, எதேச்சையான யோசனைகள் மூலமாக, திடீரென்று யாரையாவது பார்த்தால் ஏற்படும் கிளர்ச்சி மூலமாய் நினைவுப்படுத்திக் கொண்டேதான் இருக்கும். அப்போதாவது இந்தப் பெண் இனப்பெருக்கம் குறித்து ஏதாவது நடவடிக்கை எடுக்கமாட்டாளா என்று மனம் இப்படி எல்லாம் கவன ஈர்ப்பு நடவடிக்கைகளைச் செய்கிறது.
மனம் இப்படிச் செயல்படுவது அதன் இயல்பு. எல்லா உயிர்களுக்கும் இருக்கும் பொதுவான ஒரு போக்கு.  இதில், சுஜி என்கிற ஒரே ஒரு பெண் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்? ஏன் விதிவிலக்காக வேண்டும் என்று அந்தப் பெண்ணுக்குத் தோன்றுகிறது? இந்த செக்ஸ் எண்ணங்கள் அவளுக்குக் கலவரத்தைக் கொடுப்பதினால்தானே? அதைக் கண்டு, அவள் மிரள்வதினால்தானே? ஒருவேளை சுஜி தனக்கு ஏற்படும் செக்ஸ் சம்பந்தமான எண்ணங்களைக் கண்டு கேஷுவலாக இருக்கப் பழகினால்... அதன்பிறகு, அது அவளை அச்சுறுத்தாதே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்