“ஜூலை 11-ல் தண்டவாளங்கள் ஓய்வெடுக்கும்!”

ரயில்வே வேலை நிறுத்தம்... தயாராகும் தொழிலாளர்கள்!போராட்டம்

யில்வே துறையை தனியார் மயமாக்குவதைக் கைவிட வேண்டும் என்பது உட்பட 36 கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 11-ம் தேதி வேலை நிறுத்தம் செய்வது என ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. நம் நாட்டின் பெரிய அரசுத் துறையும், அதிகத் தொழிலாளர்களைக் கொண்டதும், பணக்காரர் முதல் சாமானியர் வரை பயன்படுத்தி வருவதுமான ரயில்வே துறையைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவில் மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. இது நாட்டுக்கும், பொது மக்களுக்கும், லட்சக்கணக்கான ரயில்வே தொழிலாளர்களுக்கும் ஆபத்தை உண்டாக்கும் என்று தொடர்ச்சியாக எதிர்த்து வந்த ரயில்வே தொழிற்சங்கங்கள், தங்கள் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தும் மத்திய அரசுக்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்க உள்ளன.

இந்தியா முழுக்க உள்ள மற்ற ரயில்வே தொழிற்சங்கங்களையும், பிற மத்திய அரசு ஊழியர் சங்கங்களையும் இணைத்துக் கூட்டுப்போராட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 10-ம் தேதி நாடு முழுவதும் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர்களிடம் வேலை நிறுத்தத்துக்கான நோட்டீஸ்களை வழங்கிவிட்டனர். போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு பி.ஜே.பி அல்லாத அனைத்து அரசியல் கட்சிகளையும், மாநில முதல்வர்களையும், மத்திய, மாநில தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களையும் போராட்டக் குழுவினர் சந்தித்து வருகிறார்கள். மதுரை வந்திருந்த தென்மாநில கூட்டுப் போராட்டக் குழுவின் கன்வீனரும், எஸ்.ஆர்.எம்.யூ-வின் பொதுச்செயலாளருமான என்.கண்ணையாவிடம் பேசினோம்.

‘‘பி.ஜே.பி அரசு பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியார் மயமாக்கப் பார்க்கிறது. சாலையில், தனியார் பேருந்துகள் ஓடுகின்றன. ஆகாயத்தில்,  தனியார் விமானங்கள் பறக்கின்றன. அதுபோல், ரயில் பாதையைத் தனியார் பயன்படுத்தினால் என்ன என்று மோடி கேட்கிறார். மற்ற துறைகளைப் போன்று ரயில்வே துறை அல்ல... இது பொதுமக்கள் நலன் சார்ந்தது. தனியார் துறையினரிடம் ரயில்வே துறை சென்றால், நான்கு மடங்கு பயணிகள் கட்டணமும், சரக்கு ரயில் கட்டணமும் உயரும். இதன் தொடர்ச்சியாக விலைவாசி உயரும்.

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் தூய்மைப்படுத்தும் பணி தனியாரிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தூய்மைப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தனியார் நிறுவனத்தினர் மிகவும் குறைவான கூலிதான் கொடுக்கிறார்கள். ரயில்கள் சுத்தமாக இல்லை என்று பயணிகள் புகார் செய்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இதுபோன்று ரயில்வேயின் ஒவ்வொரு பிரிவையும் தனியாரிடம் ஒப்படைக்க உள்ளார்கள். ரயில்வே துறை நல்ல லாபத்தில் சென்றுகொண்டிருக்கும்போது தனியாரிடம் விட முயற்சிப்பது சரியானது அல்ல. கடந்தாண்டு கேபினெட் செயலாளரிடம் தேசியக் கூட்டுப் போராட்டக் குழு சார்பாக, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். ரயில்வேயில் நான்கு லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட 36 கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.

கோரிக்கைகள் தொடர்பாக ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும், சாதகமான முடிவு ஏற்படவில்லை. அதற்குப் பின்தான் வேலை நிறுத்தத்தை அறிவித்தோம்’’ என்றவரிடம், ‘‘உங்கள் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்களே’’ என்று கேட்டோம்.

‘‘இந்தப் போராட்டமே பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காகத்தான். இந்தியா முழுவதும் 12 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 100 டன் சரக்குகள் தினமும் அனுப்பப் படுகின்றன. ஒரு நாளைக்கு இரண்டு கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இப்படி மக்களுக்குச் சேவை செய்துவரும் ரயில்வே இலாகாவை தனியாருக்குவிட்டால் யாருக்குப் பாதிப்பு என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். மக்களுக்காகத்தான் நாங்கள் போராட்டம் நடத்தவுள்ளோம். அதனால் மக்கள் பொறுத்துக்கொள்வார்கள். இந்தப் போராட்டத்துக்கு உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பீஹார், டெல்லி போன்ற அரசுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. அடுத்து கேரளா, கர்நாடகம், தமிழக முதல்வர்களைச் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். மோடி அரசு எங்கள் போராட்டத்தை அடக்கி ஒடுக்கிவிடலாம் என நினைக்கிறது. 1974-ல் நடத்திய மாபெரும் போராட்டத்தால்தான், ரயில்வே தொழிலாளர்களுக்குப் பல சலுகைகளும், உரிமைகளும் கிடைத்தன. அதுபோல் இந்தப் போராட்டமும் இருக்கும். ஜூலை 11-ல் தண்டவாளம் ஓய்வெடுக்கும்” என்றார் உறுதியாக.

மத்திய அரசு தன் கொள்கையை மாற்றுமா?

- செ.சல்மான்
படம்: பா.காளிமுத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick