எம்.ஜி.ஆரின் போலீஸ் ஸ்டேஷன்!

நினைவலை

போலீஸ் ஏட்டய்யா,  எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத் தலைவர், பத்திரிகையாளர், கதை, திரைக்கதை வசனகர்த்தா, சினிமா படத் தயாரிப்பாளர், நடிகர்,  தமிழக அரசின் தலைமைக் கொறடா, முதல்வரின் சிறப்புத் தூதர், மேலவை உறுப்பினர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சேர்மன், தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுத் துறை இயக்குநர், சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை நிறுவியதன் மூலம், தமிழகத்தின் முதல் தனியார் பல்கலைக்கழக நிறுவனர். இவை, ஜேப்பியாரின் அடுத்தடுத்த அடையாளங்கள்.

ஒரு சாதாரண தனிமனிதன், தன்னுடைய இலக்கைச் சரியாகத் தீர்மானித்துவிட்டால், எவ்வளவு தூரத்துக்கும் பயணிக்கலாம் என்பதற்கு ஜேப்பியார் சரியான ஒரு சான்று.

கல்வியாளர்கள் நிறைந்த குமரி மண்ணில் பிறந்த ஜெசாதிமாய் பங்கராஜ், படிப்பில் காட்டிய ஆர்வத்தைவிட எம்.ஜி.ஆர் படங்களைப் பார்ப்பதில் காட்டிய ஆர்வம் அதிகம். அதனால், அவர் கல்வி, 10-ம் வகுப்புக்குள் சுருங்கிவிட்டது.

16 வயதுக்குள்ளாகவே எட்டிப் பிடித்த 6.1 உயரமும், உள்ளூர் மீனவக் குப்பத்தில் நடக்கும் பஞ்சாயத்துகளில் ‘வாலன்டியராக’ பங்கேற்று மிரட்டலாய்த் தீர்ப்பளிக்கும் பங்குராஜின் ‘வேறு மாதிரியான’ வளர்ச்சியும் படகோட்டி தந்தை ஜோசப்பை, பெரிதும் நோகடித்தது.

‘‘இதே மாதிரி பஞ்சாயத்தை போலீஸ் வேலைக்குப் போய் சட்டப்படி சொல்லு’’ என்று தந்தை ஜோசப் விடாமல் சொல்ல, போலீஸ் வேலையில் சேர்ந்தார் பங்கராஜ். கான்ஸ்டபிளாகப் பணியில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே தலைமைக் காவலராகப் பணி உயர்வு பெற்றதோடு அதே வேகத்தில் அடுத்தடுத்து இரண்டுமுறை சஸ்பெண்டும் செய்யப்பட்டார் பங்கராஜ்.

‘‘சென்னைக்குப் போய் தலைவரைப்  (எம்.ஜி.ஆர்) பார்த்து என்னுடைய சஸ்பென்ஷனை கேன்சல் செய்துவிட்டு வருகிறேன்’’ என்று வீட்டில் சொல்லிவிட்டு வந்த பங்கராஜுக்கு சென்னைதான் தாய்வீடானது. (அதன்பின் அவர் முட்டத்துக்குப் போனது, தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு இயக்குநரான பின்புதான்).

சென்னை ராயபுரம் - காசிமேடு மீன்பிடித் துறைமுக, விசைப் படகு சங்க அலுவலகத்தில் ‘கணக்குப் பிள்ளை’ வேலை காலியாய் இருக்க அந்த வேலையில் சேர்ந்தார்.

எம்.ஜி.ஆர் படம் பார்க்கவும், கட்சி போஸ்டர் ஒட்டவும் நேரம் சரியாக இருக்கவே, பங்கராஜ் கடைசிவரை, தன் மீதான சஸ்பென்ட் உத்தரவை ரத்துசெய்ய முயற்சிக்கவில்லை.

‘‘இனிஷியலை மட்டும் சொன்னால் தலைவரை (எம்.ஜி.ஆர்.) எப்படி எல்லோருக்கும் தெரியுதோ, அதே மாதிரி இந்த ஜெசாதிமாய் பங்கராஜ் என்ற பெயரைச் சுருக்கி ஜே.பி.ஆர்-னு சொன்னால் எல்லோருக்கும் தெரியணும்’’ என்று நட்பு வட்டங்களில் பங்கராஜ் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.

ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அ.தி.மு.க செயலாளர் என்று 1980-ல் எம்.ஜி.ஆரால் அறிவிக்கப்பட்டதும், ‘ஜெசாதிமாய் பங்கராஜ் என்கிற ஜே.பி.ஆர் தலைமையில் ஆர்.எம்.வீ பேசுகிறார்’ என்று பிரமாண்ட போஸ்டர்களை அடித்து சென்னையை அதகளப்படுத் தினார். அதற்கடுத்த கூட்டங்களில், நேரடியாகவே, ஜே.பி.ஆர் பேசுகிறார் என்று போஸ்டர் அடித்தார்.

எம்.ஜி.ஆரிடம் தொண்டர்கள் யாராவது பிரச்னை என்று போனால், ‘ஸ்டேஷனில் போய்ச் சொல்’ என்பார். எம்.ஜி.ஆர்., ‘ஸ்டேஷன்’ எனச் சொன்னது, ‘ஜே.பி.ஆரை’த்தான்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணி சார்பில் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தலில் ‘ஜா’ அணி வீழ்ச்சி அடைந்து ஜெ-வின் ‘சேவல்’ அணி எழுச்சியும் பெற, அரசியலுக்கு டாட்டா காட்டிவிட்டார்.

கல்லூரியில் 2012-ல் ஏற்பட்ட கட்டுமானப் பணி விபத்தில் பலர் உயிரிழக்க, அவர்மீது கிரிமினல் வழக்கைத் தொடர்ந்தது, ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு. முதல்முறையாக வேலூர் சிறையைச் சந்தித்தார் ஜே.பி.ஆர்.

‘நல்லதை நாடு கேட்கும்’ என்ற படத்தைச் சொந்தமாகத் தயாரித்து எம்.ஜி.ஆரின் தம்பி ஜீவா என்ற கேரக்டரில் ஹீரோவாக நடித்தார் ஜேப்பியார். அவர் தயாரித்த இன்னொரு படம், ‘வசந்த அழைப்புகள்’.

அண்மைக்காலம் வரை சென்னை மெரினா ‘வாக்கர்ஸ் அசோசியேஷனுக்கு ஜே.பி.ஆர் தலைவராக இருந்தார். அதில், பல தி.மு.க மந்திரிகளும் அ.தி.மு.க மந்திரிகளும் இருந்தனர்.

தலைவர் இல்லாத மெரினாவின் வாக்கர் அசோசியேஷனில் 25 ஆண்டுகளில் முதல்முறையாக இப்போது வெறுமை நிலவுகிறது...

- ந.பா.சேதுராமன்
படம்: சொ.பாலசுப்ரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்