ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் போல... அதிகரிக்கும் ‘புதுமண’ விவாகரத்து!

Special ஸ்டோரி!அலசல்

முதலிரவு...

“தூக்கம் வருது’’ என்கிறாள் மனைவி.

“சரி தூங்கு’’ என்கிறான் கணவன்.

ஒரு நாள், தன் புது மனைவியை ஆசையாய் வெளியே அழைத்துச் செல்கிறான்.

“உனக்கு ஒரு பரிசுப்பொருள் வாங்கித்தரணும்னு ஆசைப்படுறேன். என்ன வேணும் கேள்’’ என்கிறான் கணவன்.

“எனக்கு விவாகரத்து வேணும்” என்கிறாள் மனைவி.

அதிர்ந்துபோகிறான் கணவன்... ஆடியன்ஸும்தான்.

மணிரத்னம் இயக்கிய ‘மௌனராகம்’ படத்தில் வரும் காட்சி இது.

30 ஆண்டுகளுக்கு முன் இந்தப் படம் வந்தபோது எல்லோரும் அதை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். கல்யாணமான சில நாட்களிலேயே விவாகரத்து கேட்பது, இப்போது ஒரு ட்ரெண்ட்.

அம்மா செல்லம்!

சித்தார்த், லாவண்யா என்ற புத்தம்புது ஜோடியிடம் உற்சாகம் சிறகடித்துப் பறந்தது. திருமணமாகிய மூன்றாவது நாள்... சினிமா பார்க்க குதூகலமாய் கிளம்பினார்கள். படம் முடிந்து வரும் வழியில் ஒரு ரெஸ்டாரன்டுக்குள் நுழைந்தனர்.  மெனுகார்ட்டைக் கூட பார்க்காமல், தன் அம்மாவுக்கு
 போன் செய்தான் புதுமாப்பிள்ளை.

“அம்மா... நான் என்ன சாப்பிடட்டும்? உங்களுக்கு என்ன வாங்கிட்டு வரணும்?” என்று கேட்டான். ‘தான் என்ன சாப்பிடுவது என்பதைக்கூட அம்மாவுக்கு போன் போட்டுக் கேட்கிறானே’ என்று அதிர்ந்துபோனாள் புதுமணப் பெண். ‘அம்மா செல்லத்துடன்’ மாட்டிக்கொண்டோமே என்ற எண்ணம் அவளுக்கு மனஉளைச்சலாக மாறியது. ஒரு கட்டத்தில், இவன் நமக்கு ஒத்துவர மாட்டான்... விவாகரத்து வாங்குவதைத் தவிர வேறுவழியில்லை என்று அவள் முடிவெடுத்தாள்.

குட்டைப் பாவாடையா?

சரவணன், அபிதா ஆகிய இருவருமே சென்னையில் வெளிநாட்டு வங்கி ஒன்றில் வேலை செய்தனர். காதலித்து கல்யாணம் செய்துகொண்டனர். குட்டைப் பாவாடை அணிவது அபிதாவுக்குப் பிடிக்கும். ஆனால், சரவணனுக்கு அது பிடிக்கவில்லை. “கல்யாணத்துக்குப் பிறகும் நீ ஸ்கர்ட் போடணுமா?’’ என்று கேட்க ஆரம்பித்தான். பிறகு ஒரு நாள், “பாய் ஃப்ரெண்ட்கூட எல்லாம் ஏன் அடிக்கடி பேசிட்டு இருக்கிற’’ என்று இன்னொரு பிரச்னையைக் கிளப்பினான். ஒருநாள், அபிதாவின் செல்போனுக்கு சரவணன் ட்ரை பண்ணினான். நீண்ட நேரம், ‘கால் வெயிட்டிங்’கில் போனது. அதனால், பிரச்னை வெடித்து நிலைமை விவாகரத்து வரை போய்விட்டது. 

மனைவியைத் தொடாதவன்!

சேலத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகள் சுசித்ரா. அமெரிக்காவில் வேலை செய்யும் பிரசாத் உடன் திருமணம். ஒரே வாரத்தில் பிரசாத்தும், சுசித்ராவும் அமெரிக்காவுக்குப் பறந்தனர். ஒரு நாள் தன் அம்மாவிடம் போனில் பேசிக்கொண்டிருந்தபோது, “இவரோடு என்னால் வாழ முடியாது” என்று கதறினாள் சுசித்ரா. “என்னாச்சும்மா...” என்று பதறினாள் தாய். “அம்மா....கல்யாணமாகி ஒரு நாள்கூட என்னை அவர் தொடவே இல்லை” என்று அழுதாள் சுசித்ரா. மருமகன் ஓர் ஆண்மையில்லாத நபர் என்பதை அறிந்து சுசித்ராவின் பெற்றோர் அதிர்ந்துபோயினர். இரண்டே மாதங்களில் விவாகரத்துக்காக நீதிமன்றத்தை நாடினர்.

பிஹேவியர் மோசம்!

ராகவன், அனுஷா ஜோடியின் மணவாழ்க்கை 18 மாதங்களில் முடிவுக்கு வந்தது. “எங்களது அரேஞ்ட் மேரேஜ்தான். இரண்டு பேருமே வேலை செய்தோம். சோர்வா வீட்டுக்குத் திரும்பி வந்தா, நான் சமைக்கணும். அவர், டி.வி பார்ப்பார். ஒரே பதவி, ஒரே சம்பளம். ஆனா, ‘நான் மட்டும்தான் வீட்டு வேலை செய்யணும். பேசிக்கா இருக்க வேண்டிய காமன் சென்ஸே அவருக்கு இல்லை. நான் ஆம்பளை, லக்கேஜ் பேக் கூட தூக்க மாட்டேன்’னு சொல்றது, ‘உங்க அம்மா இப்டி... உங்க அப்பா அப்டி’ன்னு தகாத வார்த்தைகள்ல பேசுறது, கையை ஓங்கிட்டு வர்றது என ‘பிஹேவியர் ரொம்ப மோசம். டாமினேஷன் ரொம்ப ஓவர். லைஃப் டைம் முழுக்க கஷ்டப்பட எனக்குப் பிடிக்கலை. நான் ஏன் அடிவாங்கணும்னு தோணுச்சு. பிரிஞ்சிட்டோம்” என வேதனையுடன் சொல்கிறார் அனுஷா.

திணறும் நீதிமன்றங்கள்!

கடந்த 10-15 ஆண்டுகளில், விவாகரத்து கோருவோரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து வருகிறது. அவற்றைத் தீர்த்துவைக்க முடியாமல் நீதிமன்றங்கள் திணறுகின்றன. “சென்னையில் நான்கு குடும்பநல நீதிமன்றங்கள் உள்ளன. குவிந்துகிடக்கும் குடும்ப வழக்குகளைத் தீர்ப்பதற்கு இந்த எண்ணிக்கைப் போதுமானதாக இல்லை. ஆகவேதான், சனிக்கிழமையிலும்கூட குடும்பநல நீதிமன்றங்கள் இயங்குகின்றன. சென்னையில் தேங்கியுள்ள குடும்ப வழக்குகளைத் தீர்ப்பதற்கு இன்னும் கூடுதலாக நான்கு குடும்பநல நீதிமன்றங்கள் தேவையாக இருக்கிறது” என்கிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சிவக்குமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்