மிஸ்டர் கழுகு: ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு திடீர் தடா!

நம்பர் கேம் 20

‘நம்பர் கேம் 20... ஆளும் கட்சி அலர்ட்... எம்.எல்.ஏ-க்களுக்கு திடீர் தடா’ - இப்படித் துண்டுதுண்டாக வாட்ஸ்அப்பில் வந்து விழுந்தன வார்த்தைகள். அனுப்பியவர் கழுகார். காத்திருந்த சிறிது நேரத்தில் சட்டசபையில் இருந்து வந்தார்.

‘‘சட்டசபை வளாகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அது வழக்கமான நடைமுறையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அது உண்மை இல்லை’’ என்றபடியே செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தார். ‘‘சட்டசபைக்கு உள்ளே செய்தியாளர்கள் மாடத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் இருக்கைகள் எல்லாம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன. தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது முரசொலி, கலைஞர் - சன் டி.வி-க்களின் இருக்கைகள் முன்னுக்கு வருவதும், அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி-க்கு முன்னுரிமை தருவதும் வழக்கமாக நடக்கும் நடவடிக்கைதான். ஆனால், அ.தி.மு.க ஆட்சியே மீண்டும் தொடரும் நிலையில் செய்தியாளர்கள் இருக்கைகள் மாற்றப்பட்டிருப்பது ஆச்சர்யம்தான். தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க-வை விமர்சித்த பத்திரிகைகளின் இருக்கைகளை மாற்றியிருக்கிறார்கள். சபாநாயகர் இருக்கை அருகே இருந்த செய்தியாளர் மாடத்தில் இருந்த பத்திரிகைகள் சில, மேல் மாடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. அதோடு மேல் மாடத்தில் இருக்கிற பத்திரிகையாளர்கள் கீழ் மாடத்தில் இருக்கிற கேன்டீனுக்குப் போக முடியாத அளவுக்குக் கட்டுப்பாடுகள் வேறு. இது ஒரு பக்கம் என்றால் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் புதிதாக அலுவலக அறை வழங்கப்பட்டிருக்கிறது. இதில்தான் அரசியல் புதைந்து கிடக்கிறது.’’

‘‘ஆளும் கட்சிக்கு இதுவரை தனி அறை கிடையாதே?”

‘‘ஆமாம். சட்டமன்ற எதிர்க் கட்சிகளுக்குத்தான் கோட்டையில் கட்சி வாரியாக அலுவலகங்கள் உண்டு. ஆளும் கட்சிக்கு இருந்ததில்லை. அதை மாற்றி ஆளும் கட்சிக்கும் அறை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்னணி வேறு. கடந்தவாரம் ஒரு கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘தோல்வி அடைந்த தி.மு.க-வும் சோர்ந்துவிடவில்லை; வெற்றி பெற்ற அ.தி.மு.க-வும் மகிழ்ச்சியாக இல்லை’ என்றார். அதற்கு முன்பு கருணாநிதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சொன்ன விஷயமும் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான
எம்.எல்.ஏ-க்களைக் காத்துக்கொள்வதே அ.தி.மு.க-வுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்’ எனச் சொல்லியிருந்தார்.

தி.மு.க முகாமில் இருந்து தொடர்ந்து, இப்படி வரும் எச்சரிக்கைகளை அ.தி.மு.க சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. கொஞ்சம் கலக்கத்துக்கு உள்ளாக்கி இருப்பதாகவே தெரிகிறது. கட்சிகளை உடைப்பதும்... உடைந்த கட்சிகளை ஒட்டவைப்பதும்... அதன்மூலம் எதிரிகளைப் பலவீனப்படுத்துவதும் கருணாநிதியின் கடந்தகால வரலாறு. அது ஜெயலலிதாவுக்கு நன்றாகத் தெரியும். இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் தலைமைச் செயலகத்தில் தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு ‘பாதுகாப்பாக’ அறை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது ஆளும் கட்சி.’’

‘‘ஓ! ‘பாதுகாப்பாக’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லும்.”

‘‘தி.மு.க-வினர் இருக்கும் பக்கம் திரும்பிக்கூட அ.தி.மு.க-வினர் பார்க்கமாட்டார்கள். இது அம்மா கட்டளையாம். இப்படி அதிகாரப்பூர்வமான உத்தரவு இல்லாதபோதே, மாற்றுக் கட்சிக்காரர்கள் எதிரில் வந்தால் அ.தி.மு.க-வினர் ஓடி ஒளிவார்கள். ஆனால், இப்போது ‘ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள், தி.மு.க எம்.எல்.ஏ-க்களுடன் பேசவே கூடாது’ என வாய்மொழி உத்தரவே போடப்பட்டிருக்கிறதாம். அதன் வெளிப்பாடுதான் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-களுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு இருப்பது. தலைமைச் செயலக வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வு அறை உண்டு. பெண் எம்.எல்.ஏ-க்களுக்குத் தனியாகவும் ஆண் எம்.எல்.ஏ-க்களுக்குத் தனியாகவும் இரண்டு ஓய்வு அறைகள் இருக்கின்றன. சட்டமன்றம் கூடும் நேரத்தில் உறுப்பினர்கள் இந்த ஓய்வு அறையைப் பயன்படுத்துவார்கள். அப்போது அ.தி.மு.க., தி.மு.க என எல்லா கட்சி எம்.எல்.ஏ-க்களும் சந்தித்துக் கொள்வார்கள். சட்டமன்றத்துக்குள் இருக்கும் கேன்டீனில் ஒன்றாகச் சாப்பிடுவார்கள்.’’

‘‘ம்.’’

‘‘சபை நடக்கும்போது எதிரும் புதிருமாகப் பார்த்தால் சிரித்துக்கொள்வார்கள். பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பே இல்லை. அதாவது, ஓய்வு அறைக்கே போக வாய்ப்பு இல்லாத அளவுக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு என்று தனி அலுவலகம் என்கிற பெயரில் இப்போது தனியாக அறை ஒன்றை ஏற்பாடு செய்துவிட்டார்கள். அதாவது, ஆளும் கட்சிக்கு எனத் தனியாக ஓய்வறை உருவாக்கிக் கொடுக்கப்பட்டு உள்ளது.’’

‘‘ஓஹோ!’’

‘‘இனிமேல் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் எதிர்க் கட்சி எம்.எல்.ஏ-க்களை ஓய்வறையில்கூட சந்திக்க முடியாது. சட்டமன்ற நுழைவு வாயில் அருகில்தான் ஓய்வு அறைகள் இருக்கின்றன. இரண்டு நுழைவு வாயில்களுக்கு மத்தியில் ஆளும் கட்சிக்குப் புதிய அறை உருவாக்கப்பட்டிருக்கிறது. சபையைவிட்டு வெளியில் வந்தால், நேர் எதிரில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் அலுவலகம். வேறு எங்கும் திரும்பாமல் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அதில் போய் ஒண்டிக்கொள்கின்றனர். கேன்டீன் பக்கம்கூட அவ்வளவாக எட்டிப்பார்ப்பதில்லை. அறையில் இருந்தே அவர்களுக்குத் தேவையான உணவுகள் கேன்டீனுக்கு ஆர்டர் கொடுக்கப்படுகிறது.’’

‘‘அறையா... சிறையா?’’

 ‘‘உண்மைதான். கேன்டீனில் இருந்து உணவுகள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ அலுவலகத்துக்குப் போய் விடுகிறது. அதனால், அவர்கள் கேன்டீன் போவதற்கான தேவை இல்லை. எம்.எல்.ஏ ஹாஸ்டலிலும் இதுபோன்று கறார் நடைமுறை களைக் கடைப்பிடிக்கப் போகிறார்களாம். இதுதவிர, அ.தி.மு.க எம்.எல்.ஏ- க்களின் செல்போன் உரையாடல்கள் தொடங்கி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வரையில் மொத்தமாகக் கண்காணிக்கும் பணிகளும் அவர்களுக்குத் தெரியாமலேயே நடந்து வருகிறது.’’

‘‘ரொம்ப உஷாராகதான் இருக்கிறார்கள்.’’

‘‘இருக்காதா? காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சி களோடு சேர்த்து தி.மு.க கூட்டணி எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 98. இதோடு வெறும் 20 எம்.எல்.ஏ-க்களை இழுத்தால் மெஜாரிட்டிக்கு 118 கிடைத்துவிடும். இந்த ‘நம்பர் கேம் 20’ல்தான் ஆளும் கட்சி அரண்டு போயிருக்கிறது. கடந்த ஆட்சியில் எதிர்க் கட்சியாக இருந்த தே.மு.தி.க-வின் எதிர்க் கட்சி அந்தஸ்தையே பறித்த வரலாறு உண்டே! தொகுதிப் பிரச்னைக்காக (!) முகாம் மாறினார்கள் தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள். இதில் அ.தி.மு.க-வின் கைங்கர்யம் உண்டு என விமர் சனங்கள் எழுந்தன. அப்படிப்பட்ட கட்சி இப்போது ரொம்ப உஷாராகதான் இருக்கும்’’ எனச் சொல்லிவிட்டு, அமைச்சரவை மாற்றம் குறித்த சப்ஜெக்ட்டுக்கு வந்தார் கழுகார்.

‘‘அம்மா கேபினெட் அடிக்கடி மாற்றப்படுவது வழக்கம். அந்த வரிசையில் அடுத்த மாற்றம் விரைவில் அரங்கேறப் போகிறது என்கிறார்கள். கடந்த செவ்வாய்கிழமை திடீரென்று டெக்னிக்கல் அமைச்சர் ஒருவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. என்ன ஏதென்று தெரியாமல் குழம்பியவாறே சென்றுள்ளார். அமைச்சர் உள்ளே சென்றதும், முதல்வர் ஜெயலலிதா அவர் மீது வந்துள்ள புகார் குறித்து விசாரித்துள்ளார். ‘சமீபத்தில் புதிதாக ஒரு டி.வி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் நிகழ்ச்சிகள் அரசு கேபிளில் ஒளிபரப்ப வேண்டும் என்றால் முதல்கட்டத் தவணையாக ஒரு குறிப்பிட்ட தொகையைக் கேட்டதாக முதல்வர் கவனத்துக்குப் புகார் போனது. எங்கே தரவேண்டும் என்று இடமும் சொல்லப்பட்டதாம்.

‘என்ன நினைச்சுட்டு இருக்கீங்க?’ என்று முதல்வர் ஏகத்துக்கும் கண்டித்து இருக்கிறார். வேர்க்க விறுவிறுக்க நின்றிருந்த அமைச்சர், மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, அறையைவிட்டு வெளியே வந்துள்ளார் படபடப்போடு. இவர் தலை விரைவில் உருளலாம் என்கிறார்கள்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்