மனச்சிறையில் சில மர்மங்கள் - 5

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

பொங்கி வரும் தீஞ்சுவையே!

பெரிய பணக்காரன் ஆக வேண்டும், எல்லோரும் தன்னை அண்ணாந்து பார்த்து, ‘ஆஹா எவ்வளவு பெரிய ஆள்’ என்று பாராட்டி, பொறாமைப்பட வேண்டும் என்பதுதான் சிறுவனாக இருந்தபோதிலிருந்து லோகுவுக்கு ஒரு பெரிய கனவாக இருந்தது. ஆனால், அவனுக்குப் படிப்பு ஏறவேயில்லை. 

படிப்பு வரவில்லை என்றால் என்ன, படிக்காதவர்கள் ஜெயிக்கவில்லையா? படிக்காமல் வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதர்களை நினைத்துத் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டான் லோகு. எப்படியாவது ஒரு பெண்ணைக் காதலிக்க வேண்டும் என்று ஆசையில் இருந்தான். இப்படியான வேட்கையில் அவன் சந்தித்த பெண்தான் ஃபிலாரென்ஸ் மேரி. அவள் ஒரு பணக்காரரின் செல்லமகள். படிப்பு, வீடு, சர்ச் தவிர வேறு வெளி உலகமே தெரியாத அவளுக்கு லோகுவின் கேலிப் பேச்சும், சாகச மனப்பான்மையும், சிரித்த முகமும், சில்மிஷங்களும் ரொம்பவே பிடித்துப் போய்விட, செம்புலம் சேர்ந்த நீர்த்துளிபோல இருவரும் கலந்தனர்.

‘‘அஞ்சு மாசமா பீரியட்டே வரலை டாக்டர்’’ என்று டாக்டரிடம்  சொன்னார் மேரியின் அம்மா தெல்மா. அப்போதுதான் மேரிக்குத் தெரியும், இப்படி எல்லாம் அன்பு செய்தால் வயிற்றில் குழந்தை உருவாகும் என்று.

‘‘முளைச்சி மூணு இலைகூட விடலை, இப்படி வந்து நிக்கிறியே, யாருடீ அவன்?’’ என அம்மா உடைந்துபோய் அழுதாள். லோகுவை அழைத்துப் பேசினார் அப்பா.  தீவிர கத்தோலிக்க நம்பிக்கை கொண்ட அவருக்கு கருக்கலைப்புச் செய்ய மனமில்லை. வேறு வழியில்லாமல், 16 வயது ஃபிலாரென்ஸ் மேரிக்கும், 20 வயதான லோகுவுக்கும் வேளாங்கண்ணியில் திருமணம் நடந்தது.  அடுத்த சில மாதங்களிலேயே ஊட்டியில் அவர்களுக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அப்போதுதான் குடும்பப் பாரம் என்றால் என்ன என்பதே லோகுவுக்குப் புரிய ஆரம்பித்தது. காதல் செய்ய அவனுக்கு காசே தேவைபட்டி ருக்கவில்லை.  ஆனால், குடும்பம் நடத்த, குழந்தைக்குத் தடுப்பூசி போட, பால் பவுடர் வாங்க, எனச் செலவுகள் தீராதத் தலைவலியாய் அமைய, இவ்வளவு சீக்கிரம் ஏன்தான் கல்யாணம் பண்ணித் தொலைச்சேனோ என்று ஒவ்வொரு நாளும் நொந்துபோனான்.

அம்மாவிடம் செலவுக்குப் பணம் கேட்டால், ‘‘உங்க அப்பன் புத்திதானே உனக்கும் வரும். இந்த வயசுல நீ கல்யாணம் பண்ணிக்கலைன்னு யார் அழுதா? என்கிட்ட வந்து காசு கேக்குற வேலையே வெச்சிக்காதே’’ என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

மேரியின் அப்பாவைக் கேட்டால் காசு கொடுப்பார், ஆனால், ‘‘இதுக்கெல்லாம் துப்பில்லை, குழந்தை மட்டும் பெத்துக்கத் தெரியுதா?’’ என்று நறுக்கென்று ஏதாவது பேசுவார். அதை நினைத்து நினைத்து லோகு வாரக்கணக்கில் வாடிப் போவான். இந்தக் கொடுமையிலிருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை.

இந்த அனுபவம் மேரிக்கு முதிர்ச்சியைக் கொடுத்தது. ‘‘படிச்சி ஒரு நல்ல வேலைக்குப் போகலாமே மாமா” என்றாள். அவளுடைய அன்புக்கு இணங்கி அதையும் முயன்றான் லோகு. ஆனால், படிப்பு வந்தால்தானே? எங்கேயாவது வேலைக்குப் போகலாம் என்றால், ஆரம்பநிலை ஊழியனாகவே சேர்த்துக்கொண்டார்கள். மிகச் சொற்ப சம்பளம் மட்டுமே தந்தார்கள். நண்பர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்தான். தோல்வி. சினிமாவில் நடிக்க முயன்றான். படுதோல்வி. பூ வியாபாரம் செய்தான் மரண தோல்வி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்