“பெரியாரும் அண்ணாவும் இருந்திருந்தால் அம்மாவைப் பாராட்டி இருப்பார்கள்!”

நாஞ்சில் சம்பத் சீஸன் - 2

மீண்டும் மேடை ஏறியிருக்கிறார் நாஞ்சில் சம்பத். இடைப்பட்ட காலத்தில் அம்மா விசுவாசம் அதிகரித்திருப்பது தெரிந்தது. ஏற்றுக்கொண்டார் அம்மா என்பதை அடிக்கடி வெளிப்படுத்தினார்.

‘‘ஒழுங்கு நடவடிக்கைக்குப் பிறகு மீண்டும் அ.தி.மு.க மேடையில் பேச வாய்ப்புத் தரப்பட்டுள்ளதே?’’

‘‘அம்மாவுக்கு இன்றைக்கு 68-வது பிறந்தநாள் விழா. தமிழக அரசியல் வரலாற்றில் பல அத்தியாயங்களுக்கு உரிமையுள்ள ஆவடியில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு அம்மா அவர்கள் எனக்கு வாய்ப்புத் தந்தார்கள். 60 நாட்களுக்குப் பிறகு அம்மா பிறந்தநாள் விழா மேடையில் உரையாற்றியதன் மூலம் என்னுடைய பயணம் மீண்டும் தொடங்குகிறது. எனக்குத் தெரிந்து ஓர் அரசியல் தலைவரின் பிறந்தநாளைப் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி ரத்தானம் செய்து, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கக் கணையாழி அணிவித்து, ஏழைப் பெண்களுக்குத் திருமணத்தை நடத்திவைத்து, பசித்த மக்களுக்கு அன்னமிட்டு, கொள்கை விளக்கப் பொதுக் கூட்டங்களையும் அதன் ஊடாக நடத்துகின்ற ஒரே தலைவர் இந்திய அரசியலில் அம்மாவாக மட்டும்தான் இருக்கிறார். ஆகவே, அம்மாவின் பிறந்தநாள், மனித நேயத்தின் பிறந்தநாளாக இந்த மாநிலத்து மக்கள், நன்றி உணர்ச்சியோடு கொண்டாடுகிறார்கள்.’’

‘‘உங்களின் பளிச் முகத்தில் சோகம் அப்பி இருக்கிறதே?’’

‘‘என்னை ஈன்று முகம் தந்த என் அம்மாவுக்கு உடல் நலம் சீர்கேட்டு விட்டது. கடந்த 15 நாட்களாக அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார். மூளையின் வலது பக்க நரம்பில் இருந்து ரத்த ஓட்டம் நின்றுபோய் அம்மாவினுடைய வலது பாகம் இயங்க முடியாமலும் அவர்கள் பேச முடியாமலும் படுத்த படுக்கையாக இருக்கிறார்கள். அவர்கள் பக்கத்தில் இருந்து இத்தனை நாளும் நான் பணிவிடை செய்துகொண்டிருந்தேன். நான் இன்றைக்குப் பேசப்படுகின்ற இடத்துக்கு வந்திருக்கிறேன் என்றால், அந்தத் தாயினுடைய கண்காணிப்புதான் காரணம். என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் முத்தம் தந்தவர் என்னைப் பெற்ற அம்மா. தமிழகத்தின் முதல்வர் அம்மா கைதுசெய்யப்பட்டு காரக்கிரகத்தில் அடைக்கப்பட்டிருந்த போது அம்மா விடுதலை பெற்று வருகிற நாள் வரை முதல்வர் அம்மாவுக்காக, ராமர் பட்டாபிஷேகப் படத்தைவைத்து தினசரி சுந்தரகாண்டம் பாடியவர் அம்மா. அவர்கள் எங்களையெல்லாம் விட்டுவிட்டுப் போய்விடுவாரோ என்ற கவலை என்னைத் துரத்துகிற வேளையில் அம்மாவின் பிறந்தநாள் விழாவில் பேச நான் வந்திருக்கிறேன்.
ஆகவே, ஒப்பனை செய்யக்கூடிய மனநிலையில் நான் இல்லை’’.

‘‘வைகோ முன்னிலையில் பிப்ரவரி 28-ம் தேதி நீங்கள் ம.தி.மு.க-வில் சேரப் போவதாக ஒரு தகவல் உலா வருகிறதே?’’

‘‘ஏற்கெனவே, கடந்த 6-ம் தேதி நான் தி.மு.க-வில் சேரப்போவதாக ஒரு செய்தியைக் கிளப்பிவிட்டார்கள். அதைப் பத்திரிகை மூலம், ‘வாந்தியை வதந்தி எடுக்கின்ற ஏடுகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை’ என்று சொல்லி இருந்தேன். இப்போது 28-ம் தேதி ம.தி.மு.க-வில் ஐக்கியம் ஆகப்போவதாக ஒரு செய்தியை யாரோ இன்றைக்குக் கிளப்பிவிடுகிறார்கள். அந்தச் செய்தியில் கொஞ்சமும் உண்மை இல்லை. 18 ஆண்டு காலம் வைகோ-வுக்கு பக்கபலமாக இருந்து நாடு சுற்றி அடக்குமுறைச் சட்டங்களை ருசி பார்த்து மரணத்தின் வாசலுக்குத் துரத்தப்பட்டவன் நான். அவரிடம் நான் எந்தச் சலுகையையும் எதிர்பார்த்தது இல்லை. ஆனால், எனது மகளின் திருமணத் தேதி நிச்சயிக்கப்பட்ட பிறகு, என் மகன் உயர்கல்விக்கு நான் அவரிடத்தில் ஒரு வேண்டுகோள் வைத்ததற்குப் பிறகு ஓர் அகதியைப்போல என்னை அவர் தூக்கி எறிந்தார். அந்த தலைமையின் கீழ் பணியாற்றுவதற்கு எனக்கு மனம் இடம்தரவில்லை.

இன்றைக்கு எந்தக் குறையும் இல்லாமல் அம்மா என்னை வைத்திருக்கிறார்கள். ஆகவே, உடலில் உயிர் இருக்கிற காலம் வரையிலும் அம்மாவின் கொடி நிழலில் பயணம் செய்யவே நான் விரும்புகிறேன். நினைவிழந்து வாய் பேச முடியாதவனாக நான் இருந்தபோது என்னைப் பெற்றத்​தாயால் கதறி அழத்தான் முடிந்தது. ஆனால், முதல்வர்தான் என்னைக் காப்பாற்றி எனக்கு மீண்டும் உயிர் தந்து, இந்த மண்ணில் உலவவிட்டார். ஆகவே, எனக்கு உயிர் தந்த தாய்க்கு உயிர் உள்ளவரை தொண்டாற்று​வதற்கு நான் முடிவெடுத்துவிட்டேன். ஆகவே இப்படி வால் முளைக்கின்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.’’

‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...’ என்று தி.மு.க செய்யும் விளம்பரங்கள்?

‘‘ஒருநாள் மட்டும் இப்படிப்பட்ட விளம்பரத்துக்கு அவர்கள் சுமார் ரூ.18 கோடி செலவு செய்வதாகச் சொல்கிறார்கள். அம்மாவைச் சந்திக்க முடியவில்லை என்கிறார்கள். அம்மாவைச் சந்திக்க வேண்டும் என்று யார் விரும்புகிறார்களோ அவர்களை அம்மா சந்திக்கிறார்கள். ஒரு முதலமைச்சர் என்கிற பெரிய சுமையை தலையில் சுமந்துகொண்டு அந்தப் பொறுப்பை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்று கருதுவதில்தான் அவருடைய பயணமும் வெற்றியும் இருக்கிறது என்பதை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள். ஒரு பேரிடர், நான்கு மாவட்டங்களைத் தாக்கியபோது 15 நாட்களில் இயல்பு நிலைக்குக்கொண்டு வருவதற்கு அவருடைய அமானுஷ்யமான நிர்வாகத் திறமைத்தான் காரணம். 100 சதவிகித கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட 30 லட்சம் மக்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் நிதியைப் பொறுப்பாகச் சேர்த்தவர் அம்மா.
ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், சான்றிதழ்கள் என்று மழையில் இழந்த ஆவணங்கள் எல்லாவற்றையும் ஒரே திங்களில் திருப்பிக் கொடுப்பதற்கு அதிகாரிகளை வேலை வாங்கியவர் அம்மா. இந்திய துணைக்கண்டத்தின் அரசியல் வரலாற்றில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்ட காலம் என்று ஒன்று இருந்தது. ஆனால், இன்றைக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் இப்போதும் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், மாண்புமிகு முதலமைச்சர் அம்மா உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகிதம் என்ற இடஒதுக்கீட்டு ஆணையைப் பிறப்பித்துள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கே அவர் வழிகாட்டுகிறார்.

 தந்தை பெரியார் இருந்திருந்தால், ‘நான் நினைத்த காரியத்தை நிறைவேற்றிவிட்டாய்’ என்று உச்சமுகர்ந்து இருப்பார். அண்ணா இருந்திருந்தால், ‘திராவிட இயக்கத்தின் கருதுகோளை நிறைவேற்றிய வரலாறு உனக்குத்தான் சொந்தம்’ என்று பாராட்டி இருப்பார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இருந்திருந்தால், ‘நான் எட்ட முடியாத சிகரத்தை இதன்மூலம் நீங்கள் எட்டி இருக்கிறாய் என்று அம்மாவைப் பாராட்டி இருப்பார். ஆகவே, இந்திய துணைக்கண்டத்தில் அதிசயங்களையும் ஆச்சர்யங்களையும் அளப்பரிய சாதனைகளையும் நிகழ்த்துகிற அம்மாவைச் சந்திக்க முடியவில்லை என்று சந்தடி சாக்கில் கோடிகளைக் கொட்டி செலவழிக்கின்ற இந்தக் கொள்ளைக் கூட்டத்தை, வருகிற தேர்தலில் நாட்டு மக்கள் அடையாளம் கண்டு நிச்சயம் நிராகரிப்பார்கள்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் காலத்துக்கு பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறி வந்திருக்கிறது என்ற நிலைமையை மாற்றி மீண்டும் அம்மாவின் தலைமையில் கழக ஆட்சி அமையப்போகிறது என்ற புதிய வரலாற்றைப் படைக்க அம்மாவின் பிறந்தநாளில் கழகத்தின் தொண்டர்கள் நாங்கள் சபதம் ஏற்கிறோம்.’’

‘‘தி.மு.க., தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க  பிரசாரங்களை முறியடிக்க தேர்தலில் எதைச் சொல்லி ஓட்டு கேட்பீர்கள்?’’

அம்மா, அன்னை தமிழ்நாட்டு மக்களுக்கு ஆற்றிய சாதனைகளை வைத்துத்தான் நாங்கள் வாக்குக் கேட்கப் போகிறோம். இந்தியாவில் அமைதியின் மடியில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று மக்கள் நினைக்கிற நாடு, தமிழ்நாடுதான். தப்பித்தவறி கருணாநிதியின் தலைமையில் ஓர் ஆட்சி அமைந்துவிடுமானால், ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆவான்’ என்பதை தமிழ்நாட்டு மக்கள் நினைத்துப் பார்க்காமல் இருக்கமாட்டார்கள். ஆகவே, ‘சாமானியர்களின் சகாப்தம்’ என்று அண்ணா சொன்னார். ஆனால், இன்றைக்கு இந்திய அரசியலில் சாமானியர்களையும் சரித்திரம் படைக்கின்ற இடத்தில் உட்கார வைத்து அழகு பார்க்கின்ற அம்மாவின் பெருந்தன்மையை, அம்மாவின் ஆற்றலை அவர் இதுநாள் வரை தமிழக மக்களுக்குச் செய்து வந்திருக்கின்ற தொண்டுகளை நாங்கள் பட்டியல் இட்டாலே எங்கள் வெற்றி எளிதில் கைகூடிவிடும். தே.மு.தி.க-வை நாங்கள் ஒரு சக்தியாகவே கருதவில்லை. காஞ்சிபுரத்தில் அவர் உளறிய உளறலைக் கேட்டு அந்தக் கட்சி தொண்டனே உடைந்துபோய் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். தன் சொந்தக் கட்சியை இன்றைக்கு ஓர் ஏலப்பொருளாக்கிய விஜயகாந்த் முயற்சி எப்போதும் பலிக்காது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியோடு நின்றும் தன்னுடைய கணக்கைப் புதுப்பிக்க முடியாத தி.மு.க-வின் கணக்கை இந்தத் தேர்தலில் மக்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆகவே, இந்தியாவில் இதுவரைக்கும் எந்த முதலமைச்சரும் பெறாத வெற்றியை வருகிற தேர்தலில் அம்மா அவர்கள் பெறுவார்கள். இது காலத்தின் கட்டாயம். இது நீதிதேவதையின் தீர்ப்பு.’’

- எஸ்.முத்துகிருஷ்ணன்
படம்: கே.ராஜசேகரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick