ஒவ்வொரு நாளையும் கழிப்பது பெரும் கொடுமையாக இருக்கிறது!

நளினி வேதனை

ந்திய சிறைச்சாலை களில் தண்டனை அனுபவித்து வரும் பெண் கைதிகளில், அதிக காலம் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளவர் நளினி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ள நளினி, 25 ஆண்டுகளுக்குப் பின் 12 மணி நேரம் மட்டும் சிறைச்சாலையில் இருந்து பரோலில் வர அனுமதிக்கப்பட்டார். அதுவும், அவருடைய தந்தை சங்கர நாராயணனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக மட்டும்.

சங்கரநாராயணன், ஓய்வுபெற்ற போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர். நெல்லை மாவட்டம் வீ.கே.புரத்தில் வசித்து வந்தார். 91 வயதான அவர், கடந்த 23-ம் தேதி மாலை மரணம் அடைந்தார். அவருடைய உடல் சென்னை கோட்டூர்புரம் எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள நளினியின் அண்ணன் ரவியின் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. ரவி, தி.மு.க பிரமுகர் என்பதால், நிறைய தி.மு.க-வினர் நளினியின் வீட்டைச் சுற்றி குழுமியிருந்தனர். தமிழ் உணர்வாளர்கள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ம.தி.மு.க-வைச் சேர்ந்த ஏராளமானோர் சங்கர நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, தடா ரஹீம் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். வீட்டைச் சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப் பட்டு இருந்தனர்.

துப்பாக்கி ஏந்திய போலீஸார் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருந்தனர். அத்தனை கெடுபிடிகளையும் தாண்டி, நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியின் உதவியுடன், நளினியை தனியாகச் சந்தித்துப் பேசினோம்.

“பரோல் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததா?”

“பரோல் கிடைக்கும் என்று கடைசி நிமிடம் வரை நம்பவில்லை. என் தந்தையின் உடல்நிலை மோசமானதை அடுத்து, கடந்த ஒரு மாதமாக பரோல் கேட்டுப் போராடினேன். கிடைக்கவில்லை. அவர் இறந்தபிறகுதான், பரோல் கிடைத்துள்ளது.”

“நீதிமன்றங்களில் உங்கள் விடுதலை குறித்த வழக்கு இன்னும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு நீங்கள் வைக்கும் கோரிக்கை என்ன?”

“விடுதலையைத் தவிர, வேறு எதை நான் கேட்பேன்? நான், என் கணவர், எங்களோடு சிறையில் இருக்கும் 5 சகோதரர்கள் என்று நாங்கள் யாரும் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள். அதுதான் உண்மை. எங்கள் கைகள் யாருடைய ரத்தத்திலும் நனைக்கப்படவில்லை. ராஜீவ் கொலைக்கும் இன்று சிறையில் இருக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. எனவே, 25 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் எங்களை விடுதலை செய்ய வேண்டும். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்கு 25 வயதாகப் போகிறது. திருமணப் பருவத்தில் இருக்கிறாள். எந்தத் தவறும் செய்யாத என் மகள், பெற்றோரைப் பிரிந்து இத்தனை ஆண்டுகளாக ஏன் இருக்க வேண்டும்? இத்தனை ஆண்டுகளில் சிறைக்குள் நிறையத் துன்பங்களை அனுபவித்து விட்டோம். ஒவ்வொரு நாளையும் கழிப்பதே மிகக் கொடுமையாக இருக்கிறது. அதனால், எங்களை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு அதைச் செய்யும் என்று நம்புகிறோம். முதலமைச்சர் அவர்களைத்தான் நாங்கள் நம்பி இருக்கிறோம். அந்த நம்பிக்கைதான் எங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது.”

“சிறைக்குள் இருந்து வெளியில் வந்ததும், உலகம் எவ்வளவு மாறி உள்ளது என்பதை உங்களால் உணர முடிந்ததா?”

“என் தந்தையின் நினைவுகளோடு இருந்ததால், நான் அதைப் பெரிதாகக் கவனிக்கவில்லை. ஆனால், நிறைய மாறிவிட்டது. எல்லோரும் ஒழுங்காக வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டுவதைப் பார்த்தேன். அது மகிழ்ச்சியாக இருந்தது.”

“பிரியங்கா காந்தி உங்களைச் சந்தித்தபோது என்ன பேசினார்?”

“அதை இப்போது சொல்ல முடியாது. ஆனால், அவர் என்னிடம் மிகவும் மிரட்டல் தொனியில் பேசினார். அங்கிருந்து பிரியங்கா கிளம்பும்போது, எனக்கு எந்த வசதியும் செய்து தரக் கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்றார்.” 

- ஜோ.ஸ்டாலின், கே.புவனேஸ்வரி
படங்கள்: பா.காளிமுத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick