“ப.சிதம்பரம் ஒரு தேச விரோதி... நாட்டைவிட்டு அவரை வெளியேற்ற வேண்டும்!”

ஹெச். ராஜா ஆவேசம்

ஜே.என்.யூ மாணவர் போராட்டத்தில் முன்னிலை வகித்தவர்களில் ஒருவரான, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.ராஜாவின் மகள் அபராஜிதாவை சுட்டுத்தள்ளுவேன் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்திய, பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, தற்போது ப.சிதம்பரத்தை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்கிறார்.

அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் ஹெச்.ராஜாவுக்கு ரயில் பயணிகள் நல வாரியத் தலைவர் பதவியை மத்திய அரசு கொடுத்துள்ளது. பதவியேற்றபின், தன் ஆதரவாளர்களைச் சந்திப்பதற்காக மதுரைக்கு வந்த ராஜாவிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

“ ‘ஜே.என்.யூ-வில் போராட்டம் நடத்திய மாணவர் சங்கத் தலைவரை சுட்டுத்தள்ளுவேன்’ என்று நீங்கள் பேசியது சரியா?’’

“என் கருத்தை முழுவதுமாக உள்வாங்காமல், அதை மட்டும் பெரிதுபடுத்திவிட்டார்கள். இப்போதும் சொல்கிறேன். அங்கு போராட்டம் நடத்திய மாணவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள். அப்சல் குருவுக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? அப்சல் குரு வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு நீதித்துறையால் தீர்ப்பு வழங்கப்பட்டு, மரண தண்டனைக்கு எதிராகக் கருணை மனு அனுப்பி அது ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்ட வழக்கு.

அப்படிப்பட்ட ஒருவரைக் கொண்டாடுவது என்பது தேசத்துக்கு எதிரானது இல்லையா? கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், ஜிஹாதிகள் எல்லாம் சேர்ந்து தேசத்துக்கு எதிராகக் கோஷம் போடுவதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்? இதன் பின்னணியில் அந்நிய சக்திகள் இருக்கின்றன. தீவிரவாதிகளின் புகலிடமாக ஜே.என்.யூ உள்ளது. அதைத்தான் நான் கண்டித்தேன்.’’

“ப.சிதம்பரமும் அப்சல் குரு வழக்கு பற்றி கருத்துத் தெரிவித்துள்ளாரே?’’

“நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் பேசியிருக்கும் ப.சிதம்பரம் ஒரு தேச விரோதி. அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால், அவரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும். இதேபோல் சோரபுதீன் என்கவுன்டர் வழக்கிலும் பொய்யான அஃபிடவிட்டை தாக்கல் செய்தது சிதம்பரம்தான் என்று முன்னாள் உளவுத்துறைச் செயலாளர் என்.கே.பிள்ளை கூறியிருக்கிறார்.’’

“முஸ்லிம்களுக்கு எதிரான ஆவணப் பட வெளியீட்டு விழாவில் சுப்பிரமணியன் சுவாமியோடு நீங்களும் கலந்துகொண்டீர்கள். நீங்களும் சுவாமியும் இணைந்து பி.ஜே.பி-யின் தமிழக தலைமையை மதிக்காமல் தனியாக செயல்படுகிறீர்கள் என்று கட்சிக்குள் விமர்சனம் உள்ளதே?’’

“அந்த விழாவில் கலந்துகொண்டதில் தவறு ஒன்றும் இல்லை. சாமி ‘ஆல் இண்டியா எக்ஸிக்யூட்டிவ் மெம்பர்’. அவர் யாரிடமும் கேட்க வேண்டியதில்லை. நான் தனியாகவெல்லாம் இயங்கவில்லை.’’

“மாநிலத் தலைவர் பதவி கிடைக்காத வெறுப்பில், உங்கள் இருப்பைக் காட்டிக்கொள்வ தற்காகவே வைகோ, தந்தை பெரியார், சிறுபான்மையினர், கம்யூனிஸ்ட்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீங்கள் பேசுகிறீர்கள் என்று சொல்லப்படுகிறதே?’’

“நான் பொய்யாக எதுவும் பேசுவதில்லை. உண்மையைச் சொன்னால் தப்பா? வரலாற்றில் உள்ளதைத்தான் பேசி வருகிறேன்.’’

“ஜெயலலிதாவை நீங்கள் விமர்சிப்பது இல்லையே?’’

“யார் சொன்னது? ஆம்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு எதிராக அரசு நடந்துகொண்டது. இந்த விவகாரத்தில் ஜெயலலிதா அரசுக்கு எதிராக யாரும் வழக்குப் போடவில்லை, நான்தான் போட்டேன்.’’

“ ‘முஸ்லிம் கட்சிகளைச் சேர்க்கா விட்டால் அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேருவோம்’ என்று ஒரு கூட்டத்தில் பேசினீர்களாமே?’’

“இது, தவறான தகவல்.’’

“பி.ஜே.பி-யில் சிறுபான்மையினர் பிரிவு இருப்பது பற்றி உங்கள் கருத்து?’’

“நாங்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள். பயங்கரவாதி களுக்கும், தேச விரோதிகளுக்கும்​நாங்கள்தான் எதிரி.”

“சமீபத்தில் காரைக்குடியில் பி.ஜே.பி நிர்வாகி ஒருவர் கோயில் பணத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். மதுரையில் கடைகளை மிரட்டி பணம் பறித்த வழக்கில் மாவட்ட நிர்வாகியும், இன்னொரு சீட்டிங் வழக்கில் அமைப்புசாரா தொழிலாளர்அணி நிர்வாகியும் கைதுசெய்யப்பட்டார்கள். இவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன்? பி.ஜே.பி-யில் ஒழுக்கம், கட்டுப்பாடு எல்லாம் என்னாயிற்று?’’

“நிர்வாகிகள் மீது இப்படி எல்லாம் புகார்கள் வரக் கூடாதுதான். இதைப் பற்றி விசாரிப்போம். இதெல்லாம் விரைவில் சீர் செய்யப்படும்.’’

- செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், வீ.சதீஷ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick