கழுகார் பதில்கள்!

மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.

 தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடையின் தாக்கம் எப்படி இருக்கும்?


 சும்மாவே அதிகமாக இருக்கும். இந்த கோடையில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நடக்க இருப்பதால், தமிழகப் புவிவெப்பமயமாதல் இன்னும் கூடுதலாகவே இருக்கும்.

சுந்தரிப்ரியன், வேதாரண்யம்.

  தி.மு.க-வுடன் தே.மு.தி.க கூட்டணி உறுதியானால், பி.ஜே.பி-யை அ.தி.மு.க தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுமா?


 இன்றைய சூழ்நிலையில் நீங்கள் சொல்வது சரிதான். விஜயகாந்த் கோபாலபுரம் போனால் டெல்லிக்கான கதவுகளைத் திறக்க ஜெயலலிதா தயார் ஆகிவிடுவார். பி.ஜே.பி-யின் வாக்குவங்கி குறித்து உளவுத்துறை கருத்துக்கணிப்பு எடுக்க ஆரம்பித்து உள்ளது. சிறுபான்மையினர் வாக்கு குறித்த கவலை ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. பொதுவாகவே சிறுபான்மையினர் வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு மொத்தமாக விழுவது இல்லை என்றும் தகவல் சிலரால் தரப்படுகிறது.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.


 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் நிறுத்துவதற்கு வேட்பாளர்கள் இல்லாத கட்சிகூட முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து இருக்கிறதே?


 விட்டுக்கட்டியில் இருந்துகொண்டு விடுகதை போடுகிறீர்கள். நீங்கள் யாரைச் சொல்ல வருகிறீர்கள் என்று தெரியவில்லை.

ஆனால், முதலமைச்சர் வேட்பாளர் என்பதற்கு ஓர் ஆள் இருந்தால் போதாதா? 234 பேர் எதற்கு?!

கி.தா.துரைசாமி, மேட்டுப்பாளையம்.

 பத்திரிகைகளில் வெளியிடப்படும் தி.மு.க. விளம்பரங்கள் பற்றி?


 சினிமா வசனங்களைப் பேசி வளர்ந்தவர்கள், சினிமா வசனங்களை இன்னமும் விடவில்லை. ஆரம்ப காலத்தில் அவர்கள் பேசியது எல்லாம் சொந்த வசனங்கள். இப்போது சொல்லப்படுபவை இரவல் வசனங்கள். தொடக்க காலத்தில்தான் அனைவரும் இரவல் வசனங்களைப் பேசி, அதன்பிறகு சொந்த வசனங்களை எழுதக் கற்றுக் கொள்வார்கள். இங்கே உல்டாவாக இருக்கிறது.

ராஜசிம்மன், கிருஷ்ணகிரி

 இந்தியர்களின் தேசபக்தியையும் பாகிஸ்தானின் தேசபக்தியையும் ஒப்பிடுங்கள்?


 இந்தியர்களின் தேசபக்தி, கிரிக்கெட் போட்டி நடக்கும்போது மட்டும் இருக்கும். பாகிஸ்தானின் தேசபக்தி எப்போதும் இருக்கும்.

வண்ணை கணேசன், பொன்னி யம்மன்மேடு.


  ‘விரக்தியின் காரணமாகத் தவறான உத்தரவு பிறப்பித்துவிட்டேன்’ என்று சொல்லி இருக்கிறாரே சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன்?

 சமீபகாலமாக நீதித்துறை தலைகவிழும் நிகழ்வுகள் சென்னையிலும், மதுரையிலும் அதிகமாக நடக்கின்றன. நீதித்துறை மீது அக்கறைகொண்ட ஆளுமைகள் இதில் கவனம் செலுத்தி அதனைத் தடுக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்