புதுச்சேரியில் களை கட்டும் தேர்தல் வியாபாரம்... கோடிகளை இறைக்கும் அரசியல் கட்சிகள்!

குக்கர்... ஸ்டவ்... பட்டுப்புடவை!

ன்றைய தேதியில் தேர்தல் களம் சூடு பிடித்திருப்பது புதுச்சேரியில்தான். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கோடிகளில் பணத்தை இறைத்து வாக்காளர்களை வளைக்க ஆரம்பித்து இருக்கின்றன. 100 ரூபாய், 200  ரூபாய் என்று வழங்கிக்கொண்டிருந்தவர்கள் இப்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என பகிரங்கமாகச் செலவு செய்கிறார்கள். பரிசாக வழங்கும் பொருட்களில் தைரியமாக தங்களின் படங்களைப் போட்டே வழங்குகிறார்கள். ‘தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தபிறகுதானே வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கக் கூடாது? இப்போதே கொடுக்கிறோம் என்ன செய்ய முடியும்’ என்று சவால்விட்டு லாரி லாரியாகப் பொருட்களை இறக்குகின்றனர் அனைத்துக் கட்சியினரும். இதைத் தேர்தல் ஆணையமும் வருமானவரித் துறையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஒருபுறம், யாருடன் கூட்டணி என்று தெரியாமல் கட்சிகள், பேரம் நடத்திக்கொண்டிருக்கின்றன. மறுபுறம், நமக்குத்தான் சீட் என்ற நம்பிக்கையில் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் வாக்காளர்களுக்கு நலத் திட்டம் என்ற பெயரில் பரிசுப் பொருட்களை அளித்து வருகிறார்கள்.

இதனால், புதுச்சேரியில் எந்தத் தெருவுக்குச் சென்றாலும் கலர் கலர் அட்டைப் பெட்டிகளுடன் மக்கள் படு பிஸியாக இருக்கிறார்கள். அடுப்பிலிருந்து அஞ்சரைப்பெட்டி வரை இவர்கள் கொடுக்கும் பொருட்களைவைத்து ஒரு மணப்பெண்ணுக்கு திருமண சீர்வரிசையே செய்துவிடலாம்.

நான்கரை வருடம் அமைதியாக இருந்த முதல்வர் ரங்கசாமி, தேர்தல் வரும் நேரம் என்பதால் கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறேன் என்று ஆறு மாதங்களுக்கு முன், அரசு செலவில் இலவச மிக்ஸி, கிரைண்டரை வழங்க ஆரம்பிக்க... அதிலிருந்து ஆரம்பித்தது தேர்தல் வியாபாரம். அனைத்துக் கட்சிகளும் ரங்கசாமியின் இந்தத் தந்திரத்தை கையில் எடுத்தன. ‘‘இலவசங்களைக் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கப் பார்க்கிறார் ரங்கசாமி” என்று விளாசி வந்த காங்கிரஸ் கட்சி, இப்படியே போனால் போனியாக மாட்டோம் என்று தானும் களத்தில் இறங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் மொத்தமாக குக்கரை ஆர்டர்செய்து முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தொடங்கி, ஏ.கே.டி.ஆறுமுகம் வரை அனைவரும் குக்கர் வழங்க ஆரம்பித்துவிட்டனர். இரண்டு முறை முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் வைத்திலிங்கமே, இந்த இலவசக் கலவரத்தில் மிரண்டுபோய் தனது காமராஜர் நகர் தொகுதியில் அனைவருக்கும் குக்கர் கொடுப்பதுதான் இதில் ஹைலைட்.

காலாப்பட்டு தொகுதியில் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸின் எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் தனது தொகுதி மக்களுக்கு குக்கர் மற்றும் சேலைகளை அளித்து வருகிறார். அதே தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸின் சார்பில் இந்தமுறை தனக்குத்தான் சீட் என்று சொல்லி, அனைத்து வீடுகளுக்கும் பட்டுப்புடவைகளை அளித்து வருகிறார் தட்டாஞ்சாவடி செந்தில்.

முத்தியால்பேட்டை தி.மு.க எம்.எல்.ஏ-வான நந்தா சரவணன், இந்த முறை என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் லாசுப்பேட்டை தொகுதியில் போட்டியிட, சர்க்கரை தொடங்கி ஹாட் பாக்ஸ் வரை கொடுத்துக்கொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் சிவக்கொழுந்து, ‘குடும்பத்துக்கு 12 பொருட்கள் வழங்கப்படும்’ என்று சொல்லி இதுவரை இரண்டு தவணைகளில் குக்கர், ஃபேன், வாணலி, தவா செட் போன்றவற்றைக் கொடுத்திருக்கிறார். உருளையன்பேட்டை தொகுதியின் ஆளும் கட்சி எம்.எல்.ஏ நேரு, தனது தொகுதியில் அனைவருக்கும் இண்டக்‌ஷன் அடுப்பு கொடுத்துக்கொண்டிருக்கிறார். தி.மு.க அமைப்பாளரான சிவா அனைவருக்கும் குக்கர் உள்ளிட்டப் பாத்திரங்கள் கொடுத்து வருகிறார்.

அனைத்து வீடுகளுக்கும் ஐ.டி கார்டு போட்டு ஹைடெக்காக பொருள் கொடுப்பவர் நெல்லித்தோப்புத் தொகுதியின் தி.மு.க பிரமுகர் ஜான்குமார். ஜீன்ஸ் பேன்ட் முதல் சுடிதார் வரை இவர் கொடுக்காத பொருட்களே இல்லை. எந்த நேரமும் மக்கள் கூட்டத்துடன் இவரின் வீடு ஒரு பிரபல வீட்டு உபயோகப் பொருள் கடையாகவே மாறிவிட்டது.

ஜனநாயகத்தில் குரல்வளையை நெறிக்கும் இந்தக் கலாசாரத்துக்கு முடிவே இல்லையா?

- ஜெ.முருகன்
படங்கள்: எஸ்.தேவராஜன், அ.குரூஸ்தனம்


திடீர் ரெய்டு!

திருச்சியிலிருந்து வந்த வருமானவரித் துறையினர் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர் வீட்டில் திடீர் ரெய்டு நடத்தியது. அப்போது அங்கிருந்த குக்கர்களை கைப்பற்றி விசாரணை செய்ததில், ‘இது, கட்சியினர் கொடுத்த நன்கொடையில் வாங்கியது’ என்றாராம் வைத்திலிங்கம். அதற்கான ஆதாரங்களைக் கேட்டிருக்கிறதாம் வருமானவரித் துறை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick