மாட்டிக்கொண்டு முழிக்கும் ‘மன்மத’ மக்கள் பிரதிநிதிகள்!

ம்மா கேபினெட்டில் இருந்து அமைச்சர் ரமணா வெளியேற்றப்பட்டிருக்கிறார். மலர் குவியலுக்கு நடுவே மனைவியோடு இருக்கும் படம் வாட்ஸ்அப்பில் பரவ... பந்தாடப்பட்டிருக்கிறார் ரமணா. ஆளும் கட்சியில் மக்கள் பிரதிநிதிகள் சிலரும் மந்திரிகள் சிலரும் மன்மத மோகத்தில் திளைப்பதாகப் புகார்கள் கிளம்பின. அப்படி இந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் பாலியல் புகார்களுக்கு ஆளானவர்களுடைய புராணங்களின் தொகுப்புதான் இந்தக் கட்டுரை.

மனைவி அபகரிப்பு!

‘ஆசிரியையான என் மனைவியை ஒருவர் அபகரித்து, என் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டார்’ என்று, தனியார் பள்ளி ஆசிரியரான இன்பராஜ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2014-ம் ஆண்டு வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அவர் தாக்கல்செய்த மனுவில், ‘‘ஒரு பெண்ணை தலைமையாகக் கொண்ட கட்சியில் இருந்துகொண்டு, பெண்மையின் மகத்துவத்தையே கெடுத்து வருகிறார். ‘குடும்பத் தலைவர் ஒழுக்கமாக இருக்க வேண்டும்’ என மேடைகளில் பேசிக்கொண்டே, ஆசிரியையான என் மனைவியை அபகரித்து என் குடும்ப வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டார். கேட்டால், மிரட்டுகிறார். புகார் கொடுத்தால் போலீஸார் வழக்குப் பதிவுசெய்ய மறுக்கிறார்கள்’’ என்று தெரிவித்து இருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் வேறு யாருமல்ல, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்.

 

ஆசிரியர் இன்பராஜ் தனது மனுவில், அமைச்சருக்கு எதிராக மேலும் பல குற்றச் சாட்டுகளைச் சொல்லியிருந்தார். ‘‘என் சொத்தையும் பறிக்கப் பார்க்கிறார். சாத்தான்குளம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் நான் நின்றிருந்தபோது, அங்கே காரில் வந்தார் சண்முகநாதன். ‘உன் சொத்தைப் பிரிச்சுக் கொடுத்துட்டு ஒழுங்கு மரியாதையா ஊரைவிட்டு ஓடிப்போயிடு. இல்லைன்னா கொன்னுபுடுவேன்’ என்று மிரட்டினார். அவர், ஐந்து ஆறு ஆட்களோடு இருந்ததால் அந்த இடத்தில் என்னால் ஒன்றும் பேச முடியவில்லை. லோக்கல் போலீஸில் புகார்செய்தேன். ஆனால், அவங்க அதை வாங்க மறுத்துவிட்டார்கள் ஏற்கெனவே இவர்கள் என்னை மிரட்டிவருவது சம்பந்தமாக சென்னை டி.ஜி.பி ஆபீஸிலும் புகார் கொடுத்தேன். ஒரு நடவடிக்கையும் இல்லை. வேறு வழிதெரியாமல்தான் கோர்ட்டுக்குப் போனேன்.

நாசரேத், சாத்தான்குளம் பகுதிகளில் சண்முகநாதனால் நிறையப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவரது லட்சணத்தை வெளியில் கொண்டுவருவதற்காக நான் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தேன். அதன் மறுநாள், தூத்துக்குடியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், ‘குடும்பத் தலைவர் ஒழுக்கமாக இருந்தால் எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம்’ என்று ஒழுக்கத்தைப் பற்றி பேசியிருக்கிறார்.

அதைச் சொல்ல இவருக்கு என்ன யோக்கிதை இருக்கிறது? பெண்ணைத் தலைவியாகக்கொண்ட கட்சியில் இருந்துகொண்டு, பெண்மையின் மகத்துவத்தைக் கெடுத்து வருகிறார். எனவே, சி.பி.சி.ஐ.டி-யைக் கொண்டு விசாரித்து ஆற்றல்மிகு கட்சித் தலைவி அவர்கள், குடும்பத்தைக் கெடுக்கும் இந்த அமைச்சர் மற்றும் அடியாட்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று சொல்லிவந்தார் அந்த ஆசிரியர்.

இது சம்பந்தமாக நமது ஜூ.வி-யில், ‘அமைச்சரிடமிருந்து என் மனைவியை மீட்டுத்தாருங்கள்’ என்கிற தலைப்பில் கட்டுரை வெளிவந்தது. ஆசிரியரின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘விசாரித்து அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும்’ என சாத்தான்குளம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவு பிறப்பித்தது. மறுநாள் ஆஜரான ஆய்வாளர், ‘விசாரித்துப் பார்த்ததில் ஆசிரியர் சொல்வது அனைத்தும் பொய்யானது’ என அறிக்கை தாக்கல் செய்தார். அதனால் நீதிமன்றம், ஆசிரியரின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

மறுநாளே, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மூலம் ‘விசாரணைக்கு வரவேண்டும்’ என அழைக்கும் சம்மன் ஆசிரியருக்கு வந்து சேர்ந்தது. அவசர கோலத்தில் அறிக்கை தாக்கல் செய்து வழக்கை தள்ளுபடி செய்துவிட்ட பிறகு சம்மன் வருவதை அறிந்த ஆசிரியர், அந்தச் சம்மனை கையில் எடுத்துக்கொண்டு மீண்டும் நீதிமன்றம் சென்றார். ‘என்னிடம் முழுவதுமாக விசாரிக்காமலேயே ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார் என்பதற்கு இதுவே ஆதாரம்’ என்று நீதிபதியிடம் சொன்னார்.

‘இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ஆசிரியர் புதிய மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்ட உத்தரவை ரத்துசெய்துவிட்டு ‘முழு விசாரணைக்காக கீழ்கோர்ட்டில் முறையிட வேண்டும்’ என ஆசிரியருக்கு உத்தரவு போட்டது. ‘ஆளும் கட்சியினரின் தில்லுமுல்லுப் போராட்டங்களுக்கு இடையே நாம் என்ன செய்துவிட முடியும்’ என நொந்துபோன அந்த ஆசிரியர் அமைதியாகிவிட்டார். ஆனாலும், வரும் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தி.மு.க-வினர் இந்தப் பிரச்னையைப் பயன்படுத்துவார்கள் என்றே தெரிகிறது.

முடிவுக்கு வராத பரஞ்சோதி விவகாரம்!

திருச்சி அரசு மருத்துவமனையின் எய்ட்ஸ் நோய் சிகிச்சைப் பிரிவின் சிறப்பு மருத்துவரான ராணி, முன்னாள் அமைச்சரும் திருச்சி மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பரஞ்சோதி மீது பரபரப்பு குற்றச்சாட்டைக் கிளப்பினார். பரஞ்சோதி தன்னை திருமணம்செய்து ஏமாற்றிவிட்டதாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். அந்தப் பிரச்னை அப்போது விஸ்வரூபம் எடுத்தது. பரஞ்சோதியிடம் இருந்து அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. தனக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்த டாக்டர் ராணி, இப்போது ஏமாற்றத்தில் இருக்கிறார்.

டாக்டர் ராணி முதலில் அளித்த புகார் மனுவில், “பரஞ்சோதியும், நானும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சிறுவயது முதலே என் குடும்பத்துக்குப் பழக்கமானவர். நான் என் கணவரைப் பிரிந்து விவாகரத்து வாங்கி, ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தேன். அப்போது, எனக்கு ஆறுதல் சொல்ல வந்தார் பரஞ்சோதி. என்னுடன் நெருங்கிப் பழகினார். பிறகு, என்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு, அவர் கேட்டபோதெல்லாம் பணம் மற்றும் நகைகளைக் கொடுத்தேன். அரசியலில் செல்வாக்குப் பெற்ற பிறகு என்னைப் புறக்கணிக்க ஆரம்பித்தார்” என்று கூறியிருந்தார்.

திருச்சி குற்றவியல் 2-வது நீதிமன்றம் வழக்குப் பதிவுசெய்து காவல் துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய போலீஸார், கடந்த மூன்று வருடங்களாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இழுத்தடித்தது.

“எம்.எல்.ஏ பரஞ்சோதி திட்டமிட்டு வழக்கைக் காலம் தாழ்த்துகிறார். இதற்கு காவல் துறையும் உடந்தையாகச் செயல்படுகிறது. சட்டப்படி ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டால், 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும். ஆனால், இந்த வழக்கில் மூன்று ஆண்டுகள் இழுத்தடித்து நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்கள்” என ராணியின் தரப்பு குற்றம்சாட்டியது.

முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், இந்த வழக்கின் விசாரணையை ஸ்ரீரங்கம் பகுதி போலீஸ் உதவி கமிஷனர் நேரடியாக விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கை பல்வேறு போலீஸ் அதிகாரிகள், மாஜிஸ்திரேட்கள் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் முக்கிய ஆதாரமான பரஞ்சோதி எழுதிய கடிதங்கள், கையெழுத்து ஒப்பீட்டுக்காக தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. முடிவுகளும் பெறப்பட்டன. பரஞ்சோதி எந்த நேரமும் கைதுசெய்யப்படலாம் என்கிற நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திருச்சி நீதிமன்றத்தில் பரஞ்சோதி ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார். அடுத்த சில வாரங்களில் குற்றவியல் நடுவர் வேல்மயில், இந்த வழக்கை கூடுதல் மகிளா நீதிமன்றத்துக்கு மாற்றுவதாக அறிவித்தார்.

‘போலீஸாரிடம் கொடுத்த ஆவணங்களில் உள்ள பரஞ்சோதியின் கையெழுத்தை விரைந்து சோதனை செய்யாமல், வருடக்கணக்கில் இழுத்த டித்தனர். நீதிபதி விடுமுறை போன்ற காரணங்களால் இந்த வழக்கு இப்போதும் நிலுவையிலேயே உள்ளது’ என ராணி தரப்பு வேதனைப்பட்டது. கடந்த நான்கு வருடங்களாக தனக்கு நீதிகோரி, நீதிமன்றத் தில் தொடர்ந்து தவறாமல் ஆஜராகிவிடுகிறார் ராணி. ஆனால், பல நேரங்களில் பரஞ்சோதி தரப்பு ஆஜராவதில்லை. வேண்டுமென்றே இந்த வழக்கை இழுத்தடிக்கிறார் என ராணி குற்றம்சாட்டுகிறார். எந்தப் பதவி வந்ததும் தன்னைத் தூக்கி எறிந்தாரோ, அந்தப் பதவியைப் பெறவேண்டும் என்பதற்காக பரஞ்சோதியின் தொகுதியிலேயே போட்டியிட விருப்பமனுத் தாக்கல் செய்திருக்கிறார் ராணி.

மெடிக்கல் ஷாப் ப்ளஸ் ஃபேன்ஸி ஸ்டோர்!

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகில் உள்ள பெருமாள்பட்டுதான் ரமணாவின் சொந்த ஊர். அப்பா பக்தவத்சலு ரயில்வே ஊழியர். அம்மா பிரேமா. சொந்த ஊரைவிட்டு திருநின்றவூரில்தான் வசித்து வந்தார்கள். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ரமணா, செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 1984-ல் ப்ளஸ்-2 முடித்துவிட்டு சும்மா இருந்தார். அவருக்கு, ‘மெடிக்கல் ஷாப்’ வைக்க வேண்டும் என்கிற ஆசை உருவானது. அதற்காக ‘டி.பார்ம்’ படித்தார். திருநின்றவூரில் தன் அம்மா பெயரில் ‘பிரேமா மெடிக்கல் ஷாப்’ வைத்தார். 1993-ம் ஆண்டு லலிதாவை ரமணாவுக்கு மணமுடித்து வைத்தார்கள் பெற்றோர்கள். காஸ் ஏஜென்ஸி ஒன்றை மனைவி லலிதா பெயரில் எடுத்து நடத்தினார் ரமணா. இரண்டு பிள்ளைகள் பிறந்து வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான், லதா மூலம் குடும்பத்துக்குள் புயல் வீசியது.
திருநின்றவூரில் மெடிக்கல் ஷாப்பை ரமணா நடத்திக்கொண்டிருந்தபோது, பக்கத்தில் ‘ஃபேன்ஸி ஸ்டோர்’ ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார் லதா. ரமணாவுக்கு லதாவோடு பழக்கம் ஏற்பட்டது. லதா ஏற்கெனவே திருமணம் ஆகி கணவரோடு வாழ்ந்து வந்தவர். ‘பழக்கம்’ கடைசியில் ‘இரண்டாவது மனைவி’ என்கிற அந்தஸ்தாக உயர்ந்தது. விஷயம் தெரிந்ததும் ரமணாவின் பெற்றோர்களும் முதல் மனைவி லலிதாவும் கொதித்துப்போனார்கள். ரமணாவுக்கும் லதாவுக்கும் குழந்தை பிறந்த சங்கதி கேள்விப்பட்டதும் ரமணாவை வீட்டைவிட்டே துரத்தினர் பெற்றோர்கள். அதனால், திருநின்றவூரில் இருந்து சென்னை அண்ணா நகருக்கு லதாவோடு இடம் பெயர்ந்தார் ரமணா. இதற்கிடையே அமைச்சரும் ஆகிவிட்டார் ரமணா.

2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வேட்புமனுவில் முதல் மனைவி பெயரை மறைத்ததாகச் சொல்லி ரமணா மீது வழக்கு ஒன்று பாய்ந்தது. ரமணாவின் முதல் மனைவி லலிதாவுக்கும் ரமணாவுக்கும் 2.6.1993-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆகாஷ் என்ற மகனும், அஞ்சலி என்ற மகளும் இருக்கிறார்கள். இந்த விவரங்களை வேட்புமனுவில் ரமணா சொல்லவில்லை. துணைவியின் பெயர் லதா எனவும் மகள் பெயர் வர்னிஷா  எனவும் வேட்புமனுவில் சொல்லியி ருந்தார் ரமணா என்பதுதான் புகார். ‘சட்டப்படியான மனைவின் பெயரை மறைத்து, இரண்டாவது மனைவியின் பெயரைக் குறிப்பிட்ட ரமணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலாஜி என்பவர் வழக்குப் போட்டார்.

இதனால் வருவாய்த் துறை அமைச்சராக இருந்த ரமணாவின் மந்திரி பதவி காலியானது. அதன்பிறகு, இரண்டாவது மனைவி வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனதால் மீண்டும் மந்திரி ஆனார். ஆட்சி முடியும் தருவாயில் ரமணாவின் பதவி பறிபோயிருக்கிறது.
அரைக்கால் டவுசருடன் மலர் குவியலுக்கு இடையே இரண்டாவது மனைவியோடு இருக்கும் படங்கள் வெளியாகி பரபரப்பை பற்றவைத்ததால் ‘முன்னாள் அமைச்சர்’ ஆக்கப்பட்டிருக்கிறார் ரமணா.

அடுத்து...?

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, எஸ்.சரவணப்பெருமாள், சி.ஆனந்தகுமார்


கீழே உள்ள linkஐ க்ளிக் செய்யவும்:

இந்தக் கட்டுரையின் இரண்டாம் பகுதி
 
இந்தக் கட்டுரையின் மூன்றாம் பகுதி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick