கல்வித்துறை குளறுபடிகள்!

5 ஆண்டு ஆட்சி - ஜூ.வி. ஸ்கேன்

.தி.மு.க ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் கல்வியில் நடந்த குளறுபடிகளை ஒரு புத்தகமாகவே போடலாம்.

சமச்சீர் கல்விக்கு முட்டுக்கட்டை!

ஜெயலலிதா ஆட்சியில் முதலில், களப்பலியானது சமச்சீர் கல்வி. சமச்சீர் கல்வி திருத்தச் சட்டம் கொண்டுவந்து, அதனை ஆய்வுசெய்யக் குழு அமைத்தனர். இதற்கு எதிராக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். தமிழக அரசின் முயற்சிக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கே, “1 மற்றும் 6-ம் வகுப்புக்குச் சமச்சீர் கல்வி அமல்படுத்தலாம்” என்று இடைக்காலத் தீர்ப்பு கூறப்பட்டது. பிற வகுப்புகளுக்கு நிபுணர் குழுவை அமைத்து பாடப்புத்தகங்களை ஆய்வு செய்யும்படி நீதிபதிகள் கூறினர். நீதிமன்ற உத்தரவுப்படி அரசு அமைத்த குழு, “சமச்சீர்  கல்விப் பாடப்புத்தகங்கள் தரமற்றவை” என்று கூறியது. 2011-ம் ஆண்டு ஜூலை 18-ல் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் “சமச்சீர் கல்வியை செயல்படுத்த வேண்டும்” என்று கூறியதுடன், “தமிழக அரசின் சட்டத் திருத்தம் செல்லாது”  எனவும் அறிவித்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. எனினும், “சமச்சீர் கல்வியை நடப்புக் கல்வியாண்டிலேயே செயல்படுத்த வேண்டும். ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் மாணவர்களுக்குப் பாடநூல்களைத் தரவேண்டும்” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வேறு வழியில்லாமல்தான் ஜெயலலிதா அரசு சமச்சீர் கல்வியை அமல்படுத்தியது. அரசின் ஈகோ காரணமாக, எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில், மாணவர்கள் 3 மாதங்கள் பாடப்புத்தகங்கள் இன்றி பள்ளிக்குச் சென்ற  புதிய வரலாறு தமிழகத்தில் எழுதப்பட்டது.  

ஆன்லைனில் விற்பனை!

2011-ம் ஆண்டு அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறியபடி, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.  3,642 கோடி ரூபாய் செலவில், 21.56 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளைக் கொடுத்திருக்கின்றனர். சில நிறுவனங்கள் வழங்கிய மடிக்கணினிகள் தரமற்றவை என்று புகார் எழுந்தது. பல மடிக்கணினிகளில் கீ போர்டு வேலை செய்யவில்லை. இதனால், மாணவர்கள் தனியாக  கீ  போர்டு வாங்குகின்றனர். விலையில்லா மடிக்கணினிகளுக்கு, இணையத்தில் பெரும் சந்தை இருக்கிறது.

மாணவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல்!

“பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்க மாணவர் சிறப்புப் பாதுகாப்புப் படை அமைக்கப்படும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் பற்றிய பயம் பெற்றோர்களுக்கு இல்லாத நிலை உருவாக்கப்படும்” என்று தேர்தல் அறிக்கையில் கூறினார்கள். சென்னை தாம்பரம் அருகே கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி, பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிய ஸ்ருதி என்ற 7-வயது மாணவி, பேருந்தின் இருக்கைக்குக் கீழே இருந்த ஓட்டை வழியாக விழுந்தார். அவர் மீது பேருந்தின் சக்கரம் ஏறியதில்  பரிதாபமாக இறந்து போனார். இதற்குப் பின்பு, ‘பள்ளி வாகனங்கள் பரிசோதிக்கப்படும்’ என்று அரசு உத்தரவிட்டது. ஆண்டுதோறும் பள்ளிகள் தொடங்கும் முன்பு ஒரு சடங்குபோல பள்ளி வாகனங்கள் சோதிக்கப்படுகின்றன.

பள்ளி வாகனங்கள் சாலை விபத்துக்குள்ளாவதும், கவிழ்வதும் தொடர்கதையாக நடக்கிறது. பள்ளிகளில் கொலைகள், பாலியல் கொடுமைகள், ஆசிரியர்கள் மீது தாக்குதல் ஆகியவை நடந்திருக்கின்றன. மாணவர்களிடம் மது அருந்தும் பழக்கம் அதிகரித்திருக்கிறது.

மதிப்பீட்டு முறை!

மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களுடன், அவர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கும் முறை 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அமல்படுத்தப்படுகிறது. இதற்கு  பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.  இது தவிர, 8-ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பருவத்துக்கான தேர்வு முடிந்த உடன் பாடப்புத்தகங்களை மாணவர்கள் தூக்கி எறிந்துவிடுகின்றனர். இதனால், மாணவர்களின் நினைவாற்றல் குறைகிறது என்கின்றனர் கல்வியாளர்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்