“சின்னையாவை சிறைக்கு அனுப்பாமல் ஓயமாட்டேன்...”

பணம் கொடுத்து ஏமாந்தவரின் 5 வருட சபதம்

கால்நடைத் துறை அமைச்சர் சின்னையாவின் அமைச்சர் பதவி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பதவிகளை திடீரெனப் பறித்துள்ளார் முதலமைச்சர் ஜெயலலிதா. பல காரணங்கள் அதற்குப் பின்னணியில் உள்ளன. அதில் மிக முக்கியக் காரணம் ஆலந்தூர் சரவணன். கடந்த நாலரை வருடங்களாக அமைச்சர் சின்னையாவுக்கு எதிராக, கட்சியில், நீதிமன்றத்தில், காவல் துறையில் என்று பல பக்கங்களில் முட்டி மோதி போராட்டம் நடத்தி வந்தார் ஆலந்தூர் சரவணன்.

ஆலந்தூர் சரவணன் vs அமைச்சர் சின்னையா

2011 சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ சீட் வாங்கிய சின்னையா, தாம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழித்துத்தான் வாக்குகள் எண்ணப்பட்டன. அதற்கிடையில் ஒருநாள், அ.தி.மு.க தலைமைக் கழக அலுவலகத்துக்கு ஒரு பெட்டியுடன் போனார் சின்னையா. பெட்டியில் 11 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. அதைத் தலைமைக் கழக நிர்வாகிகளிடம் கொடுத்தார். புரியாமல் அவர்கள் பார்த்தபோது, “என்னுடைய தேர்தல் செலவுக்கு கட்சி கொடுத்த பணம். அதில் செலவழித்ததுபோக மீதிப்பணம்தான் இது” என்று சொல்லி நேர்மையாக ஒப்படைத்தார். ஆச்சர்யத்தில் நெகிழ்ந்துபோன தலைமைக் கழக நிர்வாகிகள், சின்னையாவின் நேர்மை குறித்துத் தலைமைக்கு நல்லவிதமாகத் தகவல் கொடுத்தனர். வாக்குகள் எண்ணப்பட்டு, எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்ற சின்னையாவுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அதற்கடுத்து, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பதவியும் கிடைத்தது.

அதன்பிறகுதான் சின்னையாவின் ஆட்டம் ஆரம்பமானது. அந்தச் சமயத்தில் ஆலந்தூர் சரவணன் என்பவர், தன்னுடைய நண்பர் ஒருவருக்கு வட்டச் செயலாளர் பதவி கேட்டு, மாவட்டச் செயலாளர் சின்னையாவை அணுகினார். அப்போது, “25 லட்சம் ரூபாய் கொடுத்தால் வட்டச் செயலாளர் பதவியை வாங்கித் தருகிறேன்” என்று சரவணனிடம் சின்னையா வாக்குக் கொடுத்துள்ளார். அதை நம்பி சின்னையாவிடம் 22 லட்சம் ரூபாய் பணமும் 15 சவரன் நகையும் கொடுத்துள்ளார் சரவணன். ஆனால், வாக்குறுதி அளித்தபடி வட்டச்செயலாளர் பதவி வாங்கித் தரவில்லை சின்னையா. வட்டச் செயலாளர் பதவி வேறொருவருக்குப் போனது. அதனால், கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார் சரவணன். ஆனால், அதைத் திருப்பித் தரமால் இழுத்தடித்த சின்னையா, ஒரு கட்டத்தில் சரவணனை மிரட்டவும் செய்தார். இதையடுத்து, தலைமைக் கழகத்தில் சரவணன் புகார் கொடுத்தார்.

அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில், நால்வர் குழு அமைக்கப்பட்டு இதன் மீது விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு, “இதை நாங்கள் அம்மாவின் கவனத்துக்குக் கொண்டு போகிறோம். நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க விரும்பினால், அதற்கு முயற்சி செய்யுங்கள்” என்று நால்வர் குழு சொல்லிவிட்டது. அதன்பிறகு 45 நாட்கள் பொறுத்துப் பார்த்த சரவணன், சின்னையாவின் மேல் கட்சி மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், போலீஸில் புகார் செய்தார். அவர்கள், ஆதாரங்கள் கேட்டனர். சரவணனிடம் பணம் கொடுத்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை. அதனால், புகாரின் மீது எந்த நடவடிக்கையையும் போலீஸ் எடுக்க வில்லை. இதற்கிடையில், சின்னையாவிடம் இருந்து சரவணனுக்குக் கொலை மிரட்டல்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வரத் தொடங்கின. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதில் அமைச்சருக்கு நேரடியாகத் தொடர்பில்லை என்று சொல்லி சரவணனின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். அதன்பிறகு, உச்ச நீதிமன்றம் சென்றார் சரவணன். அங்கும் சரவணனுக்கு சாதகமாகத் தீர்ப்பு வரவில்லை. அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்தார். அதுவும் தள்ளுபடியானது. ‘சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட... சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்’ என்று கருதி மீண்டும் அமைச்சர் சின்னையாவிடமேபோய் பணத்தைக் கேட்டார் சரவணன். பேச்சுவார்த்தைகள் நடந்தன. ‘பணத்தைத் தந்துவிடுகிறேன்’ என்று அமைச்சர் உத்தரவாதம் அளித்தார். அமைச்சர் சின்னையாவுக்கும் ஆலந்தூர் சரவணனுக்கும் சமாதானம் ஏற்பட்டது. ஆனால், இந்த முறையும் பணம் தராமல் அமைச்சர் இழுத்தடித்தார். அதே நேரத்தில் இந்தப் பண விவகாரம் தொடர்பாக அமைச்சருடன் நடைபெற்ற அனைத்து உரையாடல்களையும் தனது செல்போனில் சரவணன் பதிவுசெய்தார். அதில் சின்னையாவும், சின்னையா தரப்பில் பேசியவர்களும் வசமாக மாட்டிக்கொண்டனர்.

அதன்பிறகு, இந்த விஷயத்தை அமைச்சரிடம், அவரது உதவியாளர்களிடம் தெளிவாகச் சொல்லி, “ஆடியோக்களை டி.ஜி.பி அசோக்குமாரைச் சந்தித்து நேரில் கொடுப்பேன்” என்று கூறியிருக்கிறார் சரவணன். அதைக்கேட்டுப் பதறிப்போன சின்னையா, சரவணனிடம், “பணத்தைக் கொடுத்துவிடுகிறேன். புகார் செய்ய வேண்டாம்” என பம்மிப் பேசியிருக்கிறார். அதையும் சரவணன் தொலைபேசியில் பதிவுசெய்து வைத்துள்ளார்.

சரவணனின் அதிரடிகளால் அரண்டுபோன சின்னையா, ரூ.25 லட்சத்தில், ரூ.5 லட்சத்தை சரவணனுக்குத் திருப்பிக் கொடுத்திருக்கிறார். அந்தப் பணக்கட்டுகளில் சின்னையாவின் கைரேகையும், அவர் சார்பில் அந்தப் பணத்தை சரவணனிடம் கொண்டுவந்து கொடுத்த சுந்தர் என்பவரின் கைரேகையும் இருந்தது. அதையும் சரவணன் ஆதாரமாகச் சேகரித்தார். கைரேகை ஆதாரம், அமைச்சருடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களையும் சி.டி-யாகப் போட்டு கட்சித் தலைமைக்கு அனுப்பினார் சரவணன். இதில் சின்னையா வசமாக மாட்டிக்கொண்டார். அவர் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் ஆணித்தரமாக இருந்தன.


அதனால், இந்த முறை சின்னையாவின் தலை தப்பவில்லை. அமைச்சர் பதவியும், மாவட்டச் செயலாளர் பதவியையும் பறித்துவிட்டார் ஜெயலலிதா. இது தொடர்பாக, நம்மைச் சந்தித்த சரவணன், “கட்சி எடுத்த இந்த நடவடிக்கை, அவர் கட்சிக்காரர்களிடம் செய்த தவறுக்கான தார்மிக தண்டனை. ஆனால், அவர் சட்டப்படி இன்னும் தண்டிக்கப்படவில்லை. அதனால், இப்போது என்னிடம் உள்ள ஆதாரங்களைக் கொண்டுபோய் போலீஸ் டி.ஜி.பி அசோக்குமார் சாரிடம் கொடுக்கப் போகிறேன். அதன்பிறகு சின்னையா கண்டிப்பாக சட்டப்படியும் தண்டிக்கப்படுவார். அதுவரை நான் ஓயமாட்டேன்’’ என்றார்.

- ஜோ.ஸ்டாலின்
படங்கள்: ப.சரவணகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick