“ஆட்காட்டி விரலில் மை வைப்பது தவறுகளைச் சுட்டிக்காட்டத்தான்!"

’நம் விரல்... நம் குரல்!’ கருத்தரங்கம்

‘இந்திய தேர்தல் ஆணையம், ஜூனியர் விகடன், தி சென்னை ஸ்கூல் ஆஃப் பேங்கிங்’ சார்பாக, ‘நம் விரல்... நம் குரல்’ என்ற ‘தமிழக சட்டமன்றத் தேர்தல் - 2016 விழிப்பு உணர்வுக் கருத்தரங்கம்’ ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. டி.ஆர்.ஓ-வான சதீஷ், ஆர்.டி.ஓ-வான நர்மதா தேவி, கல்லூரிச் செயலாளர் சந்திரசேகர், முதல்வர் கமலவேணி ஆகியோர் பேசினர். ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியில் நடந்த விழிப்பு உணர்வு கருத்தரங்கில் ஆலோசகர் விஸ்வநாதன், துணை முதல்வர் கோமதி ஆகியோர் பேசினர். மாணவ, மாணவிகளுக்கான தேர்தல் விழிப்பு உணர்வு பேச்சுப்போட்டி நடைபெற்றது.

திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

‘‘அரசியலில், அதிகாரத்தில் யாராக இருந்தாலும் மக்களின் வாக்குகளைப் பெறாமல் பதவிக்கு வந்துவிட முடியாது. அரசியல் நிர்ணய சபையின் வழியாக, 21 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை என்ற முடிவை அரசியல் சாசனத்தில் இடம்பெறச் செய்வதற்கு முழுமையாகப் பங்காற்றியவர் அரசியல் சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை பாபா சாகேப் அம்பேத்கர். தங்களை ஆள்வோரைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமையை மக்களுக்கு அளித்தால் சமத்துவமும், சகோதரத்துவமும் தழைக்கும் என அம்பேத்கர் நம்பினார்.  வாக்குரிமை பெற்ற மக்களின் அனுமதியும், அங்கீகாரமும் இன்றி யாரும் எந்தப் பதவியிலும் இருக்க முடியாது என்ற நிலையை உருவாக்கினார்.  நாட்டின் குடிமக்கள் தங்களின் ஆட்சியாளர்​களைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் கூடிய வல்லமை பெற்ற ஓர் ஆயுதமாக வாக்குச்சீட்டு பயன்படும் என்று அம்பேத்கர் உறுதியாக நம்பினார். ஆனால், அவர் விரும்பியதற்கு மாறாக, தேர்தல் களத்தில் காட்சிகள் தோன்ற ஆரம்பித்தன. அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட பிறகு, நாட்டில் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலை ‘உலகின் மாபெரும் சூதாட்டம் தொடங்கிவிட்டது’ என்று 1952-ம் ஆண்டு லண்டனில் இருந்து வெளியாகும் ‘டைம்’ பத்திரிகை வர்ணித்தது. அந்தக் கூற்று இன்றைக்கு உண்மையாகிவிட்டது.

அரசியல் பொது வாழ்கையில் நேர்மையற்ற வர்களும், நாணயமற்றவர்களும், சமூக விரோதிகளும் தேர்தலை, தேர்தல் களத்தைச் சூதாட்டமாக்கி வருகிறார்கள். வாக்குரிமையை விலைபேசி விற்பனைப் பொருளாக்கினார்கள். ஏதுமற்ற எளிய மக்களுக்கு இலவசமாக ஏதேனும் தந்து அவர்களை வஞ்சித்து, அவர்களது வாக்குகளைக் கொள்ளை அடிக்கத் துடிக்கிறார்கள்.

ஒரு வேட்பாளர், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக உங்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக வைத்துக்கொள்வோம். பணம் தருகிறவர் பதவிக்கு வந்த பிறகு, உங்களுக்குக் கொடுத்ததைவிடவும் அதிகமாக சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் கொடுக்கிறார். நீங்கள் அவரிடம் பணம் பெற்றுவிட்டதால், அவரது எந்தக் குற்றத்தையும் தட்டிக்கேட்கும் உரிமையை, பணம் தருகிறபோதே அவர் பறித்துக்கொண்டு விடுகிறார்.

காசு வாங்கிக்கொண்டு வாக்​களித்தவர்கள் கேட்கும் உரிமை​யையும், சுதந்திரத்தையும் இழந்துவிடுகிறார்கள். இலவச​மாகத் தரப்படும் பணமோ, பொருளோ அதை வாங்குகிறவனை இலவசமாகவும், மலிவாகவும் மாற்றிவிடுகிறது. இலவசமாக ஒரு பொருளை வாங்கிய அந்த நொடியில், நீங்களும் இலவசப் பொருளாகவே மாறிவிடுகிறீர்கள். வாக்களிக்கும் உரிமை பெற்ற யாராக இருந்தாலும், தங்களது குடிமகன் என்கிற உரிமையை எதற்காகவும் ஒருபோதும் விலைபேசக் கூடாது.

அரசியல் சட்டத்துக்கும், அடிப்படை அறங்களுக்கும், தேர்தல் நடத்தை விதிகளுக்கும் எதிராக ஒரு வேட்பாளர் ஆயிரம் ரூபாய் தந்துவிட்டு, ஐந்து ஆண்டுகள் பதவியில் இருப்பதற்கு அதிகாரம் பெற்றுவிடுகிறார். ஐந்து ஆண்டுகள் என்பது 365-ஐ 5 ஆல் பெருக்கினால் மொத்தம் 1,825 நாட்கள். எனில், 1,825 நாட்களை அவர் தரும் 1,000 ரூபாயோடு வகுத்தால், நாள் ஒன்றுக்கு 1 ரூபாய் 82 பைசாவுக்கு உங்கள் வாக்குரிமையை விலைக்கு வாங்கிக்கொண்டு போய்விடுகிறார்.

இந்த இழிநிலை, குடிமக்களுக்கும் தேசத்தின் எதிர்காலத்துக்கும் பெரும் சீர்குலைவை உண்டாக்கும். விடுதலைக்குப் பிறகு இந்திய சமூகத்தில் லஞ்சமும், ஊழலும் கறுப்புப் பணமும், கள்ளச் சந்தையும் பெருகியதற்கான காரணம், குடிமக்கள் வாக்குரிமையைப் சரியாகப் பயன்படுத்தத் தவறியது அல்லது தவறாகப் பயன்படுத்தியதுதான். வாக்காளர்களுக்கு விழிப்பு உணர்வு உண்டு என்பதை மறுக்க இயலாது. ஆனால், நாடு முழுவதுமே விழிப்பு உணர்வு ஏற்பட்டு வாக்குரிமையை மக்கள் முறையாக பயன்படுத்தும்போது விரும்பத்தக்க மாற்றங்கள் உண்டாகும். வாக்களித்த பிறகு ஆட்காட்டி விரலில் அடையாள மை வைப்பதுகூட தவறுகளை சுட்டிக்காட்டத்தான். வாக்குரிமை என்பது நமது விரல் மட்டுமல்ல... நமது குரலும்கூட’’ என்று முடித்தார்.

டி.ஆர்.ஓ சதீஷ், ‘‘ஓட்டுரிமை என்பது அனைத்து ஆயுதங்களையும்விட சக்தி வாய்ந்தது. யானை, அதன் பலம் தெரியாமல் அங்குசத்துக்கு அடிபணிந்து வேலை செய்வதுபோல வாக்காளர்கள் நிலை இருக்கக் கூடாது. நீங்கள் விரும்பும் மாற்றத்தை உங்களிடம் இருந்தே தொடங்குங்கள். யார் மீதும் குறை சொல்லாமல் ஓட்டு போடும் உங்கள் கடமையை முதலில் செய்ய வேண்டும். ‘எனது ஓட்டு... எனது உரிமை’ என்று ஒவ்வொரு வாக்காளரும் கவுரவத்தோடும் பெருமிதத்தோடும் வாக்களிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

ஆர்.டி.ஓ-வான நர்மதா தேவி, ‘‘வாக்காளர் அட்டையை அடையாளச் சான்றிதழ் என்று மட்டும் நினைக்கக் கூடாது. அது, வாக்களிக்கக் கிடைத்த ஆயுதம்; இந்திய குடிமகனுக்கான அடையாளம். தேர்தல் நாளன்று நீங்கள் மட்டும் ஓட்டு போட்டால் போதாது. ஒவ்வொருவரும் குடும்பத்தோடு சென்று ஓட்டுபோடுங்கள். தேர்தல் அன்று கொடுக்கப்படும் விடுமுறையை ஓட்டு போடும் உன்னத காரியத்துக்காகப் பயன்படுத் துவோம்’’ என்றார்.

‘நம் விரல்... நம் குரல்’ முழக்கம் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.

- எஸ்.முத்துகிருஷ்ணன், வீ.மாணிக்கவாசகம்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick