முடங்கிப்போன மதுரை ஆதீனம்...

அ.தி.மு.க. கேட்ட இடம்... அதிர்ந்து கிடக்கும் மடம்!

அ.தி.மு.க-வில் தலைமைக் கழகப் பேச்சாளர்போல் வலம் வந்துகொண்டிருந்த மதுரை ஆதீனம், தேர்தல் திருவிழாவுக்கான பரபரப்பு சூடுபிடித்துள்ள நிலையில்,  அ.தி.மு.க கூட்டங்களில் தலையைக் காட்டாமல் மடத்துக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார். ஆதீனத்துக்கு என்னாச்சு என்பதுதான் மதுரை மர்மம்.

இதுபற்றி விசாரித்தபோது புதுப்புது தகவல்கள் வந்து விழுந்தன. ‘‘ஆதீனம் அமைதியாக இருப்பதற்கு சொத்து விவகாரம்தான் காரணம். முனிச்சாலையில் தினமணி தியேட்டர் இருந்த இடம், மடத்துக்குச் சொந்தமானது. நகரின் இதயப் பகுதியில் இருக்கும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை, மதுரையின் பிரபலத் துணிக்கடை ஒன்றுக்கு, வெறும் 20 லட்சம் ரூபாய்க்கு லீஸுக்கு விட்டிருக்கிறார் ஆதீனம். அந்த டீலிங் வெளியே தெரியாமல் இருக்க பலகோடி ரூபாய் கைமாறியுள்ளதாம். இந்தத் தொகையில் ஒரு பகுதியைத்தான் மதுரையில் அ.தி.மு.க நடத்திய நிகழ்ச்சிகளுக்குக் கொடுத்திருக்கிறார்’’ என்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, மதுரையில் அ.தி.மு.க அலுவலகம் கட்ட அமைச்சர் செல்லூர் ராஜு திட்டமிட்டார். நகருக்குள் இடம் தேடியபோது ஆதீனத்துக்குச் சொந்தமான இடம் துணிக்கடைக்கு லீஸுக்குவிடப்பட்ட செய்தி, அவருக்குத் தெரிய வந்திருக்கிறது. இங்குதான் வில்லங்கம் ஆரம்பமானது. ‘‘நம்ம சாமிதானே?’’ என்று ஆதீனத்திடம், அந்த இடத்தைக் கட்சிக்கு ‘விலையில்லாமல்’ தரும்படி அமைச்சரின் ஆட்கள் கேட்டிருக்கிறார்கள். ‘‘சிவ சிவா’’ என்று பதறியபடி, ‘‘ஆதீன சொத்தை விற்க முடியாது’’ என்றிருக்கிறார். ‘‘சாமி, எங்க கிட்டயேவா, நீங்க எதை எதை யாருக்கு வித்தீங்கன்னு எங்களுக்குத் தெரியாதா? அதையெல்லாம் பட்டியல் போடவா? உங்களுக்கு எவ்வளவு உதவி செஞ்சிருக்கோம்? நீங்க செஞ்ச சேட்டைக்கு, மடத்தை அரசாங்கம் எடுத்திருக்கும். இந்நேரம் நீங்க உள்ளே இருக்கணும். அதிலிருந்து உங்களைக் காப்பாத்தியிருக்கோம். எங்களுக்கே கட்சி ஆபீஸ் கட்ட இடம் தர முடியாதுன்னு சொன்னா எப்புடி? வேணும்னா 99 வருச லீஸுக்கு தாங்க’’ என்று கேட்டிருக்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

மறுபடியும் நடுங்கிய ஆதீனம், ‘‘நீங்க செஞ்ச உதவியை நான் மறக்கலை. இப்ப உள்ள சூழ்நிலையில், ஏற்கெனவே லீஸுக்கு விட்ட இடத்தைத் திடீர்னு கேன்சல் பண்ண முடியாது. அவங்க கோர்ட்டுக்குப் போவாங்க. அது மட்டுமில்லாமல் துணிக்கடைக்குக் கொடுத்ததுக்கே ஊர்ல பலபேர் பலவிதமா பேசுறாங்க. இதுல கட்சிக்குன்னு கொடுத்தா, பெரிய இஷ்யூவா ஆயிடும்’’ என்று மறுத்திருக்கிறார்.  ‘‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அந்த இடத்தை சீக்கிரம் எங்ககிட்டே ஒப்படைக்கிறீங்க’’ என்று கறாராகச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ‘‘இதை முதல்வர் கவனத்துக்குக் கொண்டுசெல்ல ஆதீனம் எவ்வளவோ முயற்சித்தார். அவரால், முதல்வரைச் சந்திக்க முடியவில்லை. ஏற்கெனவே, துணிக்கடைக்குக் கொடுத்துள்ள லீஸை கேன்சல் செய்தாலும் வில்லங்கம், அ.தி.மு.க-வுக்குக் கொடுக்காவிட்டாலும் வில்லங்கம். வர்ற தேர்தலில் ஆட்சி மாறினா, அதனாலும் பெரும் குடைச்சல் வரும். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் மடத்துக்குள்ளேயே இருக்கிறார் ஆதீனம்’’ என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். இதனிடையே, ‘‘பல்வேறு புகார்கள் உள்ள ஆதீனம், மகாமகத்தில் கலந்துகொள்ளக் கூடாது, அவரை அனுமதிக்கக் கூடாது’’ என்று இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் புகார் அளித்திருந்தார். எனினும், ஆதீனம் கும்பகோணத்துக்கு சத்தமில்லாமல் சென்று திரும்பிவிட்டார். இப்போது சோலைக்கண்ணன் அனுப்பிய புகார்களை அறநிலையத் துறை விசாரிக்க ஆரம்பித்துள்ளது.

சோலைக்கண்ணனிடம் பேசினோம். ‘‘இந்து அறநிலையத் துறை, நீதிமன்றங்களுக்குத் தெரிவிக்காமல் மடத்தின் சொத்துக்களை விற்பதும், லீஸுக்கு விடுவதும் என பல வில்லங்க வேலைகளைச் செய்துவருகிறார் ஆதீனம். இவர்மீது அறநிலையத் துறையின் மூலம் 2012-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு முடியும்வரை மடத்தின் சொத்துக்களில் எந்தவித மாற்றங்களும் செய்யக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி அருணகிரி நாதர் செயல்பட்டு வருகிறார். இந்து அறநிலையத் துறை, ஆதீனகர்த்தா பொறுப்பில் இருந்து தூக்கவிருந்த நிலையில்தான், அ.தி.மு.க ஆதரவாளராக மாறினார். புகார்கள் இருக்கும் ஒருவரை, மகாமகத்தில் அனுமதித்தது தவறு. புகார்கள் சம்பந்தமாக அதிகாரிகள் என்னிடம் விசாரித்துவிட்டார்கள். ஆதீனம்தான் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இழுத்தடிக்கிறார்’’ என்றார்.

இதுதொடர்பாக ஆதீனத்தைச் சந்திக்கச் சென்றோம். ‘அவர் இல்லை’ என்று கூறினார்கள். “உடல்நிலை சரியில்லாமல் சோர்ந்த நிலையில், சந்நிதானம் ஓய்வில் இருக்கிறார்” என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

ஓர் ஆன்மிகவாதி, ஆன்மிகப் பணியைத் தவிர, மற்றவற்றில் ஈடுபட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு மதுரை ஆதீனம் ஓர் உதாரணம்.

- செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick