அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட் கிடைக்கும்?

ஒரு மினி சர்வே

க்கள் நலக் கூட்டணி சுறுசுறுப்பாகச் சுற்றிக்கொண்டிருக்​கிறது. தி.மு.க-வுடன் காங்கிரஸ் ஒட்டிக்கொண்டது. விஜயகாந்த் கதை, மெகா சீரியலாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனிக்காட்டில் மாற்றத்தை(?) நிகழ்த்திக்கொண்டிருக்கிறார், அன்புமணி. கார்டனில் அம்மா தீவிர ஆலோசனையில் இருக்கிறார்.

வாய்ப்புக் கிடைக்குமா... கிடைக்காதா என்று தவித்து வருகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். 

அ.தி.மு.க-வில் யாருக்கு சீட் கிடைக்கலாம் என்பது பற்றிய ரிப்போர்ட் இது.

தேனி மாவட்டம்

பெரியகுளம் (தனி):
அ.தி.மு.க மகளிர் அணி மாவட்டத் துணைச் செயலாளர் வசந்தா, டாக்டர் கதிர்ராம், வழக்கறிஞர் தவமணி, இல.முருகன் ஆகியோர் களத்தில் உள்ளனர். கோட்டூரைச் சேர்ந்த வசந்தாவுக்குக் கட்சியில் நல்ல பெயர். மேலும் இவர், தமிழகத்தில் நடந்த முதல் இரட்டை வாக்குரிமை (1957) சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ வேலப்பனின் மருமகள். ஆனாலும், வக்கீல் தவமணிக்கு ஓ.பி.எஸ் குடும்பத்துடன் நெருக்கம் என்பதால், இவருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

ஆண்டிப்பட்டி: சிட்டிங் எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் முருக்கோடை ராமர், முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.டி.கணேசன் என மூன்று பேர் களத்தில் உள்ளனர். ஓ.பி.எஸ்ஸுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் பனிப்போர். தங்க தமிழ்ச்செல்வனைக் காலிசெய்ய முறுக்கோடை ராமரை களத்தில் இறக்கி இருக்கிறார் ஓ.பி.எஸ். ஒருவேளை ராமருக்கு சீட் கொடுப்பதில் சிக்கல் எழுந்தால், ஆர்.டி.கணேசனை தயாராக வைத்திருக்கிறார் ஓ.பி.எஸ்.

கம்பம்: மாவட்டச் செயலாளர் சிவக்குமார், வழக்கறிஞர் கருப்பசாமி பாண்டியன், கம்பம் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் ராஜாமணி என மூன்று பேர் களத்தில் உள்ளனர். மாவட்டச் செயலாளர் சிவக்குமார், ஓ.பி.எஸ்-ஸின் பலத்தில் இருக்கிறார். இவருக்கு சீட் கொடுத்தால், தி.மு.க வேட்பாளராக இருக்கும் கம்பம் சிட்டிங் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணனை மீண்டும் வெற்றி பெற வைப்பதாக ஒக்கலிகர் கவுண்டர்கள் சமூகத்தினர் வாக்குறுதி கொடுத்துள்ளதாகப் பீதி கிளப்புகிறார்கள். 20-க்கும் மேற்பட்ட பார்களை ராஜாமணி குடும்பத்தினர் நடத்தி வருவதால், அ.தி.மு.க-வினரே கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். கருப்பசாமி பாண்டியன் அரசு வழக்கறிஞராக இருப்பதாலும், எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை என்பதாலும் இவருக்கும் சிவக்குமாருக்கும் போட்டி நிலவுகிறது.

போடி நாயக்கனூர்:  ஓ.பி.எஸ்., தொகுதி முழுவதும் பல்வேறு நலத்திட்ட வேலைகளைத் தாமே முன்னின்று செய்து வருகிறார். ‘ஓ.பி.எஸ்-ஸுக்கு சீட் இல்லை’ என்று கார்டன் வட்டாரத்தில் பேச்சு அடிபடுவதால், தன் மகன் ரவீந்திரநாத் குமாரை களத்தில் இறக்கிவிட்டுள்ளார் ஓ.பி.எஸ். தொகுதிச் செயலாளர் போதுமணியும், போடி நகரச் செயலாளர் பாலமுருகனும் லிஸ்டில் இருக்கிறார்கள்.

திருச்சி மாவட்டம்

ஸ்ரீரங்கம்: தற்போதைய எம்.எல்.ஏ வளர்மதி, கொறடா மனோகர், முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணன், அரசு வழக்கறிஞர் சரவணன், டைமண்ட் திருப்பதி, மகளிர் அணிச் செயலாளர் டாக்டர் தமிழரசி, கோட்டத் தலைவர் லதா, அந்தநல்லூர் அழகேசன், மணிகண்டன், முத்துக்கருப்பன் உள்ளிட்டோர் முட்டி மோதுகிறார்கள். மனோகரனும் இந்தத் தொகுதியை நோக்கி காய் நகர்த்தி வருகிறார்.

திருச்சி மேற்கு: அ.தி.மு.க தரப்பில் திருச்சி மேற்குத் தொகுதிக்கு முன்னாள் அமைச்சரும் சிட்டிங் சட்டமன்ற உறுப்பினருமான பரஞ்சோதி, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ வளர்மதி, மேயர் ஜெயா, முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் மனைவி கஸ்தூரி, மரியம் பிச்சை மகன் ஆசிக் மீரா, பரஞ்சோதிக்கு எதிராகக் களமிறங்கி பதவிப் பறிப்புக்குக் காரணமான டாக்டர் ராணி, திருச்சி மாவட்ட முன்னாள் ஆட்சியர் சவுண்டையா, துணைமேயர் சீனிவாசன், வழக்கறிஞர் ராஜ்குமார், மகளிர் அணி தமிழரசி, முத்துக்கருப்பன் உள்ளிட்டோர் என 40-க்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனு கொடுத்து உள்ளனர்.

உளவுப்பிரிவு எஸ்.ஐ ஆக இருந்து, பின்னர் கட்சி பணிக்காக தனது வேலையை ராஜினாமா செய்த ஸ்ரீதரும் சீட் கேட்பவர்களில் ஒருவர். சவுண்டையா தனக்குத்தான் சீட் என சவுண்டாக சொல்லி வருகிறார். அ.தி.மு.க கூட்டணிக்குள் த.மா.கா வந்தால் சாருபாலா தொண்டைமான் இந்தத் தொகுதியை வாங்கிடத் துடிக்கிறார். முன்னாள் அமைச்சர் நல்லுசாமியின் மகன் டாக்டர் செந்தில் குமாரும் களத்தில் உள்ளார்.

திருச்சி கிழக்கு:
மாவட்டச் செயலாளர் மனோகரன், வெல்லமண்டி நடராஜன், துணைமேயர் சீனிவாசன், கவுன்சிலர் ஏர்போர்ட் விஜி, மலைக்கோட்டை ஐயப்பன், வெல்லமண்டி சண்முகம்,  முத்துக்கருப்பன் எனப் பலரும் கடும் போட்டியில் இருக்கிறார்கள்.

முசிறி: ‘இந்தத் தொகுதியை எனக்குக் கொடுங்கள்... இல்லை என்றால், என் அண்ணன் சேதுபதிக்குக் கொடுங்கள்’ என்கிறார் முன்னாள் அமைச்சர் சிவபதி. தொட்டியம் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ ரத்தினவேல், முன்னாள் மாவட்டச் செயலாளர் சுப்பு, ஏவூர்பட்டி தங்கவேல், முன்னாள் எம்.எல்.ஏ பிரின்ஸ் ஆகியோரும் தீவிரமாக உள்ளனர்.

துறையூர் (தனி): தற்போதைய எம்.எல்.ஏ-வான இந்திராகாந்தி மீது பெரிய குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாததால், அவருக்கே மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். முன்னாள் அமைச்சர் சரோஜாவும் முயற்சியில் உள்ளார். மனோகரன், அறிவழகன், விஜய், டாக்டர்  மணிமேகலை, கஸ்தூரி எனப் பலரும் களத்தில் உள்ளனர்.

திருவெறும்பூர்: இந்தத் தொகுதிக்கு 50-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்கள் கொடுத்து உள்ளனர். திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் ராவணன், தொழிற்சங்கச் செயலாளர் ஜெயபால், புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் திருசங்கு, பாசறை செயலாளர் அருண் செந்தில்ராம், முன்னாள் எஸ்.ஐ-யான ஸ்ரீதர் ஆகியோர் சீட் வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

மணப்பாறை: தற்போதைய எம்.எல்.ஏ சந்திரசேகர் தனக்கு சீட் கிடைக்கும் என்று சொல்லி வருகிறார். முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி, முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், மாவட்டப் பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் களத்தில் உள்ளார்கள். பொன்னுசாமி தனக்குத்தான் சீட் எனப் பல மாதங்களாகச் சொல்லி வருகிறார்.

மண்ணச்சநல்லூர்:
அமைச்சர் பூனாட்சி தனக்கு சீட் கிடைக்கும் எனக் காத்துக்கிடக்கிறார். அடுத்து இந்த இடத்தைப் பிடிக்க முன்னாள் எம்.எல்.ஏ பிரின்ஸ் தங்கவேல், பூனாட்சியுடன் வலம்வரும் முன்னாள் எம்.எல்.ஏ ரத்தினவேல், மற்றும் ஜெயக்குமார், மண்ணச்சநல்லூர் ஒன்றிய சேர்மன் பரமேஸ்வரி, முன்னாள் மாவட்டச் செயலாளர் சுப்பு என்கிற சுப்புரத்தினம், சீட்டுக்காக பூனாட்சியிடமிருந்து மாற்று அணிக்குச் சென்றுவிட்ட பேரவை மாவட்டச் செயலாளர் ஈஞ்சூர் ராமு உள்ளிட்டோர் போட்டி போடுகிறார்கள்.

லால்குடி: இங்கு சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் தி.மு.க-வைச் சேர்ந்த செளந்திர பாண்டியன், இந்தத் தொகுதியை அ.தி.மு.க கைப்பற்ற நினைப்பதால், முன்னாள் எம்.எல்.ஏ பாலன், பேரவை ராமு, ஒன்றியம் சூப்பர் நடேசன், ஒப்பந்ததாரரும் பொதுக்குழு உறுப்பினருமான டி.என்.சிவக்குமார், புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளர் ராஜாராம், வழக்கறிஞர்கள் அசோகன், சரவணன் உள்ளிட்டோர் எம்.எல்.ஏ சீட் கனவில் இருக்கிறார்கள்.

குமரி மாவட்டம்

கன்னியாகுமரி: முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், பச்சைமால், கூட்டுறவு ஒன்றியச் செயலாளர் பகவதி பெருமாள் என்கிற சந்தோஷ், நாஞ்சில் பி.சி.அன்பழகன், மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவி சாரதாமணி, சந்தையடி பாலகிருஷ்ணன் போன்றவர்கள் லிஸ்டில் உள்ளார்கள். ‘தளவாய் சுந்தரத்துக்கு சீட் இல்லை’ என்று கார்டனில் இருந்து சிக்னல் வந்துள்ளதாகத் தகவல். பச்சைமால் மீது அதிருப்தி. எனவே சந்தோஷ், சந்தையடி பாலகிருஷ்ணன், சாரதாமணி ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது.

நாகர்கோவில்: சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் நாஞ்சில் முருகேசன், பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ ராஜன், காரவிளை செல்வன், அசோகன், சுகுமாறன், சந்திரன், சாரதாமணி, டாரதி சாம்சன், ஜான்சிலின் விஜிலா போன்றவர்கள் ரேஸில் உள்ளனர். இதில் சாரதாமணி அல்லது ஜான்சிலின் விஜிலாவுக்கு வாய்ப்புப் பிரகாசமாக உள்ளது.

பத்மநாபபுரம்: இந்தத் தொகுதியில் அ.தி.மு.க-வின் பலம் குறைவு. முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெங்கின்ஸ், திருவட்டார் ஒன்றியச் செயலாளர் ஜெய சுதர்சன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு நிர்வாகி ரூபன் ஆகியோரில் ஒருவருக்கு சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

குளச்சல்: கட்சியின் தொகுதிச் செயலாளர் ஆறுமுக ராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகி சேவியர் மனோகரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன், சிவ செல்வராஜன், அசோக்குமார், பச்சைமால் போன்றவர்கள் உள்ளனர். பச்சைமால் அல்லது சேவியர் மனோகரனுக்கு வாய்ப்பு அதிகம்.

கிள்ளியூர்: அ.தி.மு.க-வுக்கு பெரிய செல்வாக்கு இல்லாத தொகுதி இது. கிள்ளியூர் ஒன்றியச் செயலாளர் ஜார்ஜ், மாவட்ட மீனவர் அணி செயலாளர் யூஜின் ஆகியோரில் ஒருவருக்கு சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

விளவங்கோடு: அனுமதியின்றி வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் கட்அவுட்டை அகற்றிய இன்ஸ்பெக்டரை போனில் மிரட்டிய உதயகுமார் அல்லது அவருடைய மனைவி ஆஷா டயானாவுக்கு சீட் கிடைக்கலாம்.

தஞ்சாவூர் மாவட்டம்


தஞ்சாவூர்: சிட்டிங் எம்.எல்.ஏ ரெங்கசாமி மீண்டும் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். மேயர் சாவித்ரி கோபால், முன்னாள் மாவட்டச் செயலாளர் துரை.திருஞானம், மாவட்ட சேர்மன் அமுதா ரவிச்சந்திரன் ஆகியோர் சீட்டுக்காகத் தவம் இருக்கிறார்கள். மறைந்த கு.தங்கமுத்துவின் மகன் டாக்டர் தங்க கண்ணனும் களத்தில் உள்ளார்.  

ஒரத்தநாடு: அமைச்சர் வைத்திலிங்கத்தின் சொந்தத் தொகுதி. நான்காவது முறையாகப் போட்டியிட தீவிர முயற்சியில் இருக்கிறார்.  ஒவ்வொரு தேர்தலிலும் ஒரத்தநாடு தொகுதியைக் கேட்பவர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் மா.சேகர். இவர் இந்த முறை ஒரத்தநாட்டை விடுவதாக இல்லையாம். அடிக்கடி சென்னைக்குப் பயணம்செய்து வருகிறார். அமைச்சரின் உதவியாளர்களில் ஒருவரான ஆர்.காந்தியும் தொகுதியைக் குறிவைத்துள்ளார்.

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவரான ஜவகர்பாபு, டாக்டர் வெங்கடேஷின் மைத்துனர். இவர் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். தொகுதிச் செயலாளர் பி.என்.ராமச்சந்திரன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரும் முயற்சியில் இருக்கிறார்கள்.

பேராவூரணி: முன்னாள் எம்.எல்.ஏ வீரகபிலன் கடுமையான முயற்சியில் மன்னார்குடி வகையறாக்களின் கதவைத் தட்டுகிறாராம். தொகுதி கழகச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலர் அருள்நம்பி ஆகியோர் தொகுதியைப் பெறுவதற்காக நிறையவே போராடி வருகிறார்கள். டாக்டர் வெங்கடேஷின் மாமனார் பண்ணைவயல் சு.பாஸ்கர், டாக்டர் பாரதிமோகன் பேராவூரணியைப் பெற்றே தீரவேண்டும் என்கிற துடிப்பில் இருக்கிறார் என்கிறார்கள். 

திருவையாறு: சிட்டிங் எம்.எல்.ஏ ரெத்தினசாமி மீது அதிருப்தி நிலவுவதால், கடந்த முறை கழற்றிவிடப்பட்ட எம்.ஜி.எம் சுப்பிரமணியன் இந்த முறை சீட் வாங்கிவிடத் துடிக்கிறார். முன்னாள் எம்.எல்.ஏ-வும், முன்னாள் கொறடாவுமான துரை கோவிந்த ராஜனுக்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறதாம். இவர்களோடு வழக்கறிஞர் வேலுகார்த்திக் தனக்குத்தான் சீட் என மார்த்தட்டி சொல்கிறாராம்.

கும்பகோணம்: கும்பகோணம் நகர்மன்றத் தலைவரான ரெத்னா சேகரின் கணவர், ஆர்.எஸ்.சேகர் சீட்டைப் பெறுவதற்குக் கடுமையான முயற்சியில் இருக்கிறார். நான்கு தேர்தல்களில் தோற்றுப்போனவரும் தற்போதைய நகரச் செயலாளருமான ராம.ராமநாதனும், கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் அறிவழகனும் தீவிரமாக இருக்கிறார்கள்.

பாபநாசம்: சிட்டிங் எம்.எல்.ஏ துரைக்கண்ணு தொகுதியைத் தக்கவைப்பதில் முனைப்பாக இருக்கிறார். பாபநாசம் பேரூராட்சித் தலைவர் கருணாநிதி, அம்மாப்பேட்டை துணைத் தலைவர் கண்ணபிரான் ஆகியோரும் போட்டியில் இருக்கிறார்கள்.

திருவிடைமருதூர் (தனி): கடந்த முறை போட்டியிட்டுத் தோற்றுப்போன பாண்டியராஜன் இந்த முறை களத்தில் இறங்கி தீவிர வேலை பார்த்து வருகிறார். முன்னாள் எம்.எல்.ஏ இளமதி சுப்பிரமணியனும் தீவிரமுயற்சியில் இருக்கிறார். இவர்களை எதிர்த்து ஒன்றிய கவுன்சிலர் சேட், திருநீலக்குடி ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முயற்சிக் கிறார்கள்.

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர்: இந்தத் தொகுதிக்கு நகர்மன்றத் தலைவர் வி.ரவிச்சந்திரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளர் சி.முருகானந்தம், ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் சீட் பெற தீவிர முயற்சியில் உள்ளனர். ஆனால், அமைச்சர் ஆர்.காமராஜ் இங்கு இறக்கப்படுவார் என்று பேச்சு அடிபடுகிறது.

மன்னார்குடி: கடந்த முறை மிகவும் எதிர்பார்த்து ஏமாந்துபோன எஸ்.காமராஜ் இந்த முறை தீவிரமாக முயன்று வருகிறார். நகர்மன்றத் தலைவி சுதா அன்புச்செல்வன், ஒன்றியச் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரும் களத்தில் இருக்கிறார்கள்.

நன்னிலம்: அமைச்சர் ஆர்.காமராஜ் மீண்டும் இங்கு போட்டியிட தயாராகிவிட்டார். முன்னாள் எம்.எல்.ஏ-வான பாப்பா சுப்பிரமணியன், தொகுதிச் செயலாளர் வெற்றியழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உதயகுமார் ஆகியோரும் இந்தத் தொகுதியைக் குறிவைத்து இயங்கி வருகிறார்கள்.
திருத்துறைப்பூண்டி (தனி): நகர்மன்றத் தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்டத் துணைச் செயலாளர் உ.பாலதண்டாயுதம், வழக்கறிஞர் செல்லபாண்டியன், ஏ.கே.எஸ்.விஜயனின் மருமகன் எஸ்.ஜி.எம்.ரமேஷ் ஆகியோர் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம்

நாகப்பட்டினம்: இந்தத் தொகுதியைத் தக்க வைப்பதற்காக தலைமையின் கருணையை நோக்கிக் காத்திருக்கிறார், அமைச்சர் ஜெயபால். முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், நகரச் செயலாளர் சந்திரமோகன் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா, தொகுதிச் செயலாளர் ஆசைமணி ஆகியோர் தீவிர முயற்சியில் உள்ளனர்.

கீழ்வேளூர் (தனி): கடந்த தேர்தலில், திருவாரூர் அசோகன் பெயர் அறிவிக்கப்பட்டது. பின்னர், மார்க்சிஸ்ட் கட்சிக்குத் தொகுதி போய்விட்டது. இந்த முறை எப்படியும் தொகுதியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று அசோகன் தீவிரமாக உள்ளார். நாகை ஒன்றியச் செயலாளர் குணசேகரனும் முயற்சிக்கிறார். கீழ்வேளூர் யூனியன் சேர்மன் மீனாவும் நம்பிக்கையோடு இருக்கிறார்.

வேதாரண்யம்: தொகுதியைத் தக்க வைப்பதற்கு படாதபாடு படுகிறார், சிட்டிங் எம்.எல்.ஏ என்.வி.காமராஜ். ஒன்றியச் செயலாளர் கிரிதரன் தனது ஆதரவாளர்களுடன் தலைமைக் கழகத்துக்குப் படையெடுக்கிறார். முன்னாள் எம்.பி-யும், மாவட்டச் செயலாளருமான ஓ.எஸ்.மணியனும் களத்தில் உள்ளார்.

பூம்புகார்: சிட்டிங் எம்.எல்.ஏ-வான பவுன்ராஜ் மீது கடும் அதிருப்தி. இதைப் பயன்படுத்தி சீட் பிடிக்க முயன்று வருகிறார், முன்னாள் எம்.எல்.ஏ-வான ரெங்கநாதன். மாவட்டத் துணைச் செயலாளர் விஜயபாலன், ஒன்றியச் செயலாளர் கே.வி.ஜெனார்த்தனன், மாவட்ட சேர்மன்
ஏ.கே.சந்திரசேகர் ஆகியோர் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

சீர்காழி (தனி): தற்போதைய எம்.எல்.ஏ-வான சக்தி, மீண்டும் சீட் கேட்கிறார். சீர்காழி யூனியன் சேர்மன் பி.வி.பாரதி, மணலகரம் வி.கே.ரமேஷ் பாலாஜி, அவரது மனைவி கீதா ஆகியோர் தீவிர முயற்சியில் உள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ-வான சந்திரமோகனும் காய்களை நகர்த்தி வருகிறார்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளர் சந்தோஷ்குமார், நகரச் செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், தொகுதிச் செயலாளர் வி.பி.பழனிச்சாமி, நாகப்பட்டினம் தொகுதிச் செயலாளர் ஆசைமணி எனப் பலரும் தங்கள் ரூட்களில் முயன்று வருகிறார்கள்.

சிவகங்கை மாவட்டம்

மானாமதுரை (தனி):
சிட்டிங் எம்.எல்.ஏ குணசேகரன் ‘ஹாட்ரிக்’ வாய்ப்பை எதிர்பார்த்து உள்ளார். இவர் மீது அதிருப்தி அதிகம். எனவே, ‘நோ சான்ஸ்’ என்கின்றனர். நகரச் செயலாளர் மாரிமுத்து, தனக்குத்தான் சீட் எனச் சொல்லி வருகிறார். 10 ஆயிரம் சுய உதவிக்குழுக்களை கையில் வைத்துள்ள பாண்டி, பெண்கள் வாக்குகளைக் குறிவைத்து களத்தில் இறங்கியுள்ளார். சதர்ன் பிரபாகரனும், அழகுமலையும் போட்டியில் உள்ளனர்.

காரைக்குடி:
காரைக்குடி தொகுதிக்கு சிட்டிங் எம்.எல்.ஏ சோழன் பழனிச்சாமி மீண்டும் வாய்ப்பு கேட்கிறார். ஆனால், வாய்ப்புக் குறைவு. இளைஞர் அணிச் செயலாளர் தேர்போகி பாண்டி முக்கிய ரூட்டில் ‘வெயிட்’ ஆக காய் நகர்த்துகிறார். ‘சர்ச்சையில் சிக்காதவர்’ என்ற முன்னுரையுடன் புதுமுகமான டாக்டர் ரமேஷ் களத்தில் உள்ளார். டாக்டர் சுரேந்திரன், தேவகோட்டை சுமித்ரா ரவிக்குமார், பழ.பழனியப்பன், வீர.சேகர், டாக்டர் சுகன்யா ஆகியோரும் தனி ரூட்டில் முயற்சிக்கின்றனர்.

திருப்பத்தூர்: கோகுல இந்திராவின் சொந்தத் ஊர். அவருக்கு இதன் மீது ஒரு கண். முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனும் முயற்சிக்கிறார். முன்னாள் எம்.எல்.ஏ உமாதேவனும் ரேஸில் உள்ளார். ‘நமது எம்.ஜி.ஆர்.’ மருது அழகுராஜுக்கும் பேரவைச் செயலாளரான அசோகனுக்கும் கடும் போட்டி.

சிவகங்கை:  முன்னாள் மாவட்டச் செயலாளர் முருகானந்தம் முக்கிய ரூட்டில் முயற்சி செய்கிறார். முன்னாள் எம்.எல்.ஏ சந்திரன், மாணவர் அணி ராஜா, மந்தக்காளை, பழனிச்சாமி, ஜாக்குலின் அலெக்ஸ் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

காத்திருப்போர் பட்டியல் தொடரும்...

- சண்.சரவணக்குமார், எம்.கார்த்தி, சி.ஆனந்தகுமார், ஏ.ராம், அ.சையது அபுதாஹிர், த.ராம்
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ், வீ.சக்தி அருணகிரி


‘‘ஆலந்தூர் சரவணனுக்கு மிரட்டிப் பணம் பறிப்பதே வேலை!’’

கடந்த ஜூனியர் விகடன் இதழில் வெளியாகி இருந்த முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா தொடர்பான கட்டுரைக்கு சின்னையா தரப்பில் நம்மிடம் பேசிய ராயல் ராஜா, ‘‘சின்னையா மீது புகார் கொடுத்திருக்கும் சரவணன் மிகவும் மோசமான ஓர் ஆள். இவருக்கு யாரையாவது மிரட்டி பணம் வாங்குவது மட்டும்தான் தொழில். என்னையும் அப்படி மிரட்டினார். பிரபலமாக இருக்கும் நபர்களின் மீது இப்படிக் குற்றச்சாட்டுகள் சொல்வதையும், புகார் கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இதற்குமுன் சென்னை மேயர் சைதை துரைசாமி மீதும், ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ராமன் மீதும் இதேபோலப் புகார் கொடுத்திருந்தார். அதற்குப் பிறகு, முன்னாள் டி.ஜி.பி-யான நட்ராஜும், அவரது மகனும் சேர்ந்து இவரிடம் இருந்து ரூ.28.5 லட்சத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறார்கள் என்று புகார் அளித்தார். ஆனால், இவை எவற்றிலுமே உண்மை இல்லை. தற்போது அ.தி.மு.க நியமன எம்.பி மைத்ரேயனை மிரட்டிக்கொண்டு இருக்கிறார். இவர் கொடுத்த வழக்கில் உண்மைத்தன்மை இல்லை என்று சொல்லி சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் நிராகரித்த வழக்கை இன்னமும் மீடியாக்களிடம் சொல்லி வருகிறார். சின்னையா யாரிடமும் பணம் வாங்கவோ, கொடுக்கவோ இல்லை. ஆலந்தூர் சரவணனைப் பயன்படுத்தி சின்னையா நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க கட்சிக்குள்ளிருக்கும் சிலர் நினைக்கிறார்கள். அதுதான் தற்போது நடந்து வருகிறது. அவர், எந்தத் தவறும் செய்யவில்லை’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick