‘மன்மத’ புகாரில் மந்திரிகள்!

ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த, இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் சிலர் மீது பாலியல் ரீதியான புகார்கள் உள்ளன. அமைச்சர் சண்முகநாதன், முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, ரமணா ஆகியோர் தொடர்பான பாலியல் விவகாரங்களை கடந்த இதழில் அலசினோம். இந்த வாரம்...

அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் என்ற பெயரைச் சொன்னால், கூடவே ஜெயமணி என்ற பெயரும் ஞாபகத்துக்கு வரும். ஆனந்தன் - ஜெயமணி என்ற பெயர்கள் அந்த அளவுக்குப் பிரபலம். அமைச்சர் ஆனந்தன் தன்னோடு நெருங்கிப் பழகியதாகவும், கார்டனில் இருக்கும் ஒருவரை அட்ஜஸ்ட் பண்ண வேண்டும் என்று மிரட்டியதாகவும் ஜெயமணி என்ற பெண் தொழிலதிபர் அளித்த புகார், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனந்தன் மீது ஜெயமணி அளித்த தொடர் புகார்களால், ஆனந்தனிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

ஜெயலலிதா முன்னிலையில் ஜெயமணியை அ.தி.மு.க-வில் சேர்த்துவிட்டார் ஆனந்தன். சில மாதங்களிலேயே ஆனந்தனுக்கு எதிராக புகார்களை வீசினார் ஜெயமணி. ‘வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம். என்னைக் கட்சியில் சேர்த்துவிட்டார். மகளிர் அணி நிர்வாகியாகவும் ஆக்குவதாகச் சொன்னார். இருவருக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. அந்தச் சமயத்தில், ஆனந்தன் மீது கார்டனுக்கு நிறைய புகார்கள் போயின. அதை எல்லாம் அம்மாவோட கவனத்துக்குப் போகாமல் இருக்க, கார்டன்ல இருக்கும் ஒருத்தரை அட்ஜஸ்ட் செய்யணும் என்று ஆனந்தன் மிரட்டினார். நான் அதுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் என்னை அடித்துச் சித்ரவதை செய்தார். என்னைக் கட்சியில் இருந்தும் நீக்கினார். சேர்ந்து பிசினஸ் செய்யலாம் என்று என்னிடம் ஒரு கோடி ரூபாய் வாங்கிட்டு ஏமாத்திட்டார்” என ஆனந்தன் மீது ஜெயமணி புகார்களை அடுக்கினார். அது, ஆனந்தனின் அரசியல் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஜெயமணி இடைவிடாமல் கட்சித் தலைமைக்குப் புகார்களை அடுக்க, ஒரு கட்டத்தில் அமைச்சர் பதவியில் இருந்து ஆனந்தன் நீக்கப்பட்டார். பெரும் விலை கொடுத்து, மீண்டும் அமைச்சராகிவிட்டார் என்பது தனிக்கதை. இன்றும்கூட ஜெயமணி என்றால், ஆனந்தனுக்கு அலர்ஜிதான். தேர்தலின்போது இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும் என்றே தெரிகிறது.

மாணவிகளிடம் அமைச்சரின் அநாகரிகம்...

சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி இருப்பவர், விளையாட்டுத் துறை அமைச்சர் சுந்தரராஜ். புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை அமைச்சர் சுந்தரராஜ் கடந்த 3-ம் தேதி மாலை 4 மணிக்கு பார்வையிடுகிறார் என்று தகவல் வந்துள்ளது.

விளையாட்டு விடுதியில் தங்கிப் பயிற்சி பெறும் மாணவிகளும், பயிற்சியாளர்களும் மைதானத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தனர். ஆனால், இரவு 7.45 மணிக்குத்தான் அமைச்சர் வந்துள்ளார். மிகவும் மரியாதையோடும் உற்சாகத்தோடும் அமைச்சரை மாணவிகள் வரவேற்றனர். ஆனால், அமைச்சரின் நடத்தையும், அணுகுமுறையும், பேச்சும் விவகாரமாகவே இருந்தது.

அங்கு என்ன நடந்தது என்பதை அந்த மாணவிகள் திகிலுடன் பகிர்ந்துகொண்டனர்.

“கிரவுண்டுக்குள்ள வந்த அமைச்சர் அதட்டலாகவே பேசினார், எங்களுக்குப் பயமா இருந்துச்சு. என்கூட படிக்கிற ஒரு பொண்ணுக்கிட்ட, ‘நீ எந்த ஊரு’ என்று கேட்டார். ‘தூத்துக்குடி’ என்றதும், ‘தூத்துக்குடியில ஹாக்கி கிரவுண்ட் இருக்கு பார்த்தியா? அந்த மைதானத்துல தரையில் என்ன விரிச்சிருக்கு பார்த்தியா?’ எனக் கேட்டார். பயத்தில் அந்தப் பொண்ணு வார்த்தை தடுமாறுச்சு. அப்போ அமைச்சர் கோபமாகப் பேசினார். ‘கோவில்பட்டியில் ரூ.7 கோடியில் தரையில் விரிப்பான் போட்டிருக்கு, அம்மா உத்தரவு வந்ததும் திறப்பு விழா நடத்த உள்ளோம். உனக்கு என்ன விளையாடத் தெரியும்?’ என்றார், ‘ஹாக்கி நல்லா விளையாடுவேன்’ எனச் சொன்னார் அந்த மாணவி. ‘ஹாக்கி விளையாடுற ஆளப் பார்த்தா தெரியாதா? கோவில்பட்டி கிரவுண்டுல மண்ணுதான் இருக்குன்னு சொல்லுற.

இன்டர்நேஷனல் பிளேயர் விளையாடும் அளவுக்குப் போட்டிருக்கு’ என்றார். அப்புறம், ‘உன் எடை கூடியிருப்பது உன் தாய்க்குத் தெரியுமா?’ என சம்பந்தம் இல்லாமல் அமைச்சர் கேட்டதும், ‘இல்லை, எனது தந்தைக்குத்தான் தெரியும்’ என்றார் அந்த மாணவி. அடுத்து அமைச்சர், ‘உங்க அம்மாவுக்குத் தெரியாதா? அப்படியானால், உங்க அம்மா உங்க அப்பாகூட இல்லையா?’ என்று கேட்டார். மற்றொரு மாணவி, தனது தந்தை இறந்துவிட்டதாகச் சொல்ல... அதற்கு அமைச்சர், ‘ உங்க அப்பா இறந்துட்டாரா அல்லது வெளியில் ஓடி டிராவலிங் போய்விட்டாரா?’ என்றார்’’ எனத் திகிலுடன் தெரிவித்தனர் மாணவிகள்.

‘காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்ப? என்னென்ன குடுத்தாங்க? நாங்க கொடுக்கிறதெல்லாம் கிடைக்குதா, இல்லையானு கேட்கத்தான் வந்தேன்’ என்றபடி சில மாணவிகளை மார்புக்குக் கீழும் வயிற்றுப் பகுதியிலும் கைவைத்தார். பிறகு, இடுப்பைத் தொட்டு மேலாடையை இழுத்தார். ‘உங்கிட்ட எத்தனை சட்டை இருக்கு? உன் பெட்டியை திறந்துப் பார்க்கலாமா?’ என்று இன்னொரு மாணவியிடம் அமைச்சர் கேட்டார்.

சில மாணவிகளிடம், அவர்களின் குடும்பச்சூழலை அமைச்சர் கேட்டார். அப்போது, ‘நீ போட்டிருப்பது தங்கமா, கவரிங்கா? எத்தனை போட்டிகளில் கலந்துக்கிட்ட? என்னென்னெ மெடல் வாங்கியிருக்க?, என அதட்டலாகக் கேட்டார். ‘உங்க ஒவ்வொருத்தருக்கும் தினமும் 250 ரூபாய் அரசு செலவு செய்யுது. சாப்பிட்டுவிட்டு சும்மா இருந்தா பத்தாது. திறமையா விளையாடிப் பதக்கம் வாங்கணும். உங்களுக்கு 900 ரூபாய் செலவு பண்ணி டீஷர்ட், ஷூ எல்லாம் வாங்கிக் கொடுக்கிறோம். ஆனால்,  பரிசு வாங்கலன்னா என்ன அர்த்தம்? விளையாட்டில் வெற்றி பெறுவதற்காகப் பல ஆயிரம் ரூபாய் செலவழித்தும் நீங்கள் பதக்கம் பெறாமல் இருந்தால் உங்களை என்ன செய்ய?’ என அவர் கேட்க, ‘வாங்குவோம் சார்’ என மாணவிகள் சொல்ல, ‘வாய்மட்டும் நல்லாப் பேசுங்க’ என்றபடியே ஒருவழியாகக் கிளம்பினார்.

“நாங்க சின்ன புள்ளைங்க. எங்களிடம் எப்படி பேசுறதுன்னுகூட அமைச்சருக்குத் தெரியாதா? அவர் அதட்டலுக்குப் பயந்து எங்கள்ல பலர் வெளிப்படையாக அழுதிட்டாங்க. ராத்திரி நேரத்துல எங்களைச் சந்திச்சதோடு, எங்களுடைய அறைக்குள் வந்ததும் தப்புதான’’ என்றார் வெகுளியாய் ஒரு மாணவி.

அடுத்து பெண் பயற்சியாளரிடம் பேசிய அமைச்சர் சுந்தரராஜ், ‘‘எத்தனை மணிக்கு பயிற்சி அளிக்க வருவீங்க’’ எனக் கேட்க, அப்போது குறுக்கிட்ட மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சிநாதன், ‘‘காலை 6 மணிக்கெல்லாம் வந்துவிடுவார்’’ எனச் சொல்ல, சட்டென அமைச்சர், ‘‘நான் உன்னிடம் கேட்கல, சம்பந்தப்பட்டவர்தான் பதில் சொல்லணும்’’ என்றார்.  அடுத்து அதே பதிலை பெண் பயிற்சியாளர் கூற, அவரிடம் கோபமாகப் பேசிய அமைச்சர், ‘‘ஏராளமான போட்டிகளில் வெற்றி பெற்று அதிக அளவில் பதக்கம் பெறும் வகையில் மாணவிகளை தயார்படுத்தாதது சரியா?’’ என்றார். ‘‘அவர், எதுக்காக எங்கள் மீது கோபப்பட்டார்னு தெரியல” என  நம்மிடம் புலம்பினார்கள் பயிற்சியாளர்கள்.

இப்போது இந்தப் பிரச்னை பூதாகரமாகியுள்ளது.  ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர் சுந்தரராஜை கைதுசெய்ய வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார். தி.மு.க பொருளாளர் ஸ்டாலின், ‘‘முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மீது பெண் மருத்துவர் தொடர்ந்த வழக்கு என்ன ஆனது? சில நாட்களுக்கு முன் அமைச்சர் ரமணா பதவி பறிக்கப்பட்டாரே, இப்போது அமைச்சர் சுந்தரராஜ் என பாலியல் பிரச்னைகளில் சிக்கும் அமைச்சர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தமிழகம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது’’ எனக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மது போதையில் இருந்தாரா அமைச்சர்?

‘மாணவிகள் விடுதியில் இரவில் ஆய்வு என்ற பெயரில் அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் அமைச்சர் சுந்தரராஜை, ஈவ் டீசிங் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைதுசெய்ய வேண்டும்’ என்ற பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “மகளிர் விடுதிக்குள் ஆண்கள் நுழையக் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், அமைச்சர் சுந்தரராஜ் விதிகளையும், மரபுகளையும் மீறி இரவில் ஆய்வுக்குச் சென்றுள்ளார். இது, அத்துமீறி நுழைவதற்கு இணையான குற்றம். விடுதி வளாகத்தில் அமைச்சர் நடந்துகொண்ட விதம் அருவருக்கத்தக்கது.
மாணவிகளை வரிசையாக நிறுத்திவைத்த அமைச்சர், அந்தக் குழந்தைகளின் ஆடைகளைத் தொட்டும், இழுத்தும் வக்கிரமாகக் கிண்டல் செய்தபடியே பேசுகிறார்.

ஒரு மாணவியின் இடுப்பைத் தொட்டு மேலாடையை இழுக்கும் அமைச்சர், ‘‘உன்னிடம் எத்தனை சட்டைகள் உள்ளன? உன் பெட்டியைத் திறந்து பார்க்கலாமா?’’ என்று ஆய்வுக்கு சற்றும் தொடர்பு இல்லாத கேள்வியைக் கேட்கிறார்.

அமைச்சரின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாத மாணவிகள் அவமானத்தில் தலைகுனிகின்றனர். அமைச்சர் சுந்தரராஜ் பேசும்போது நாக்குக் குளறுவதைப் பார்த்தால், அவர் மது அருந்தி இருக்கலாமோ? என்ற ஐயம் எழுகிறது.

மாணவிகள் விடுதியில் இரவு நேரத்தில் ஆய்வுக்குச் செல்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. மேலும், மாணவிகளிடம் அவர் கேட்ட கேள்விகள் மாணவிகளின் கண்ணியத்துக்குக் குந்தகம் ஏற்படுத்தக் கூடியவை. தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் எந்த லட்சணத்தில் இருக்கின்றன என்பதற்கு சுந்தரராஜின் செயல்பாடுகள்தான் உதாரணம். பெண் முதலமைச்சர் ஆட்சி செய்யும் மாநிலத்தில் பெண்களை இழிவுபடுத்தும் செயல்களில் அமைச்சர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்ற புகார்களில் சிக்கிப் பதவி இழந்த அமைச்சர்களின் பெயர்களைப் பட்டியலிட்டால், அது நீளமானதாக இருக்கும். மக்களுக்காக வாழ்வதாகக் கூறிக்கொள்ளும் முதலமைச்சரின் கீழ் உள்ள அமைச்சர்களின் செயல்கள் அவமானத்தை மட்டுமே தேடித் தருகின்றன. மதுவின் தாக்கத்தில் மகளிர் விடுதிக்குச் சென்று ஆய்வு என்ற பெயரில் அநாகரிகமாக நடந்து கொண்ட அமைச்சர் சுந்தரராஜை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவரைக் கைதுசெய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்துக்கு சுந்தரராஜ் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. அமைச்சரைத் தொடர்பு கொண்டபோது பதிலே இல்லை.

அடுத்து...?

- ச.ஜெ.ரவி, சி.ஆனந்தகுமார், த.வினோதா, ப.பிரதீபா
படங்கள்: தே.தீட்ஷித்


கீழே உள்ள linkஐ க்ளிக் செய்யவும்:

இந்தக் கட்டுரையின் முதல் பகுதி

இந்தக் கட்டுரையின் மூன்றாம் பகுதி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick