“சாதியும் வறட்டு கௌரவமும்தான் எங்க அப்பா அம்மாவுக்கு முக்கியம்!”

கௌசல்யா கதறல்

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியரை, உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் நட்டநடு ரோட்டில் கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டிக் குதறிய காட்சியைப் பார்த்து தேசமே அதிர்ந்து போயிருக்கிறது.

பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருந்த கௌசல்யாவிடம் பேசினோம்.

“இந்தக் கல்யாணத்துல எங்க அம்மா, அப்பாவுக்கு இஷ்டமில்ல. என்னைக் கடத்திட்டதாக என் கணவர் சங்கர் மீது புகார் கொடுத்தாங்க. ஆனா, நான் மேஜர். அவரோடதான் போவேன்னு சொல்லிட்டேன். அதனால, எங்களை அவங்களால பிரிக்கமுடியல. என் கணவரைப் பத்தி என்கிட்ட தப்புத்தப்பா சொல்லியும், சாதிப் பெருமை பேசியும் என்னைக் கூப்பிட்டாங்க. கண்டிப்பாக வரமாட்டேன்னு சொல்லிட்டேன்.

அதனால, எங்க ரெண்டு பேரையும் கொலை செய்ய முடிவு பண்ணியிருக்காங்க. அவங்களுக்கு நான் முக்கியமில்லை. சாதியும், வறட்டு கௌரவமும் தான் முக்கியம். ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே எங்களைத் துரத்தினாங்க. அப்போ தப்பிச்சிட்டோம். கல்யாணம் ஆகி எட்டு மாசமாகிருச்சு. இனி எந்தப் பிரச்னையும் இருக்காதுனு நெனைச்சோம். ஆனா, இப்படி பண்ணிட்டாங்களே. இதுக்கு என் அப்பாவும், அம்மாவும், மாமாவும்தான் காரணமா இருப்பாங்க” என்று கண்ணீர் மல்கக் கதறினார் கௌசல்யா.

இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரித்தோம்.

பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில், தலித் சமூகத்தைச் சேர்ந்த சங்கர் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில், பழநியைச் சேர்ந்த கௌசல்யா என்ற மாணவி படித்தார். இவர் வேறு சாதியைச் சேர்ந்தவர். சங்கரும் கௌசல்யாவும் காதலித்தனர். இவர்களின் காதலுக்கு கௌசல்யாவின் வீட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அதை மீறி கடந்த ஆண்டு ஜூலை மாதம் சங்கரும் கௌசல்யாவும் திருமணம் செய்துகொண்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலையில் வசித்து வந்தனர். கடந்த 14-ம் தேதி கல்லூரி ஆண்டு விழா. அதற்காக புதுத் துணி வாங்குவதற்கு இருவரும் அதற்கு முதல் நாள் கடைவீதிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு, காத்திருந்த கும்பல், அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டியது. 

சங்கரின் தந்தை வேலுச்சாமியிடம் பேசினோம். “என் மகனையும், மருமகளையும் பிரிக்கத் தொடர்ந்து முயற்சி செஞ்சாங்க. ‘நான் விரும்பித்தான் கல்யாணம் செஞ்சேன். இவரோடதான் வாழ்வேன்’னு என் மருமக உறுதியாக சொல்லிருச்சு. ‘காலேஜ் முடிஞ்சிடுச்சு. வேலைக்கு செலக்ட் ஆகிட்டேன்’னு சங்கர் சொன்னான். எங்கேயாவது போய் ரெண்டு பேரும் நல்லா இருக்கட்டும்னு நினைச்சேன். இப்படி ஆடுமாடு வெட்டுற மாதிரி என் பையனை வெட்டிப்போட்டிருக்காங்க” என்று கதறி அழுதார்.

சங்கரின் சகோதரர் விக்னேஷ், “இதுக்கு முன்னாடி, பல தடவை முயற்சி செஞ்சாங்க. ஒரு மாசத்துக்கு முன்னாடி அண்ணனையும், அண்ணியையும் அண்ணியோட சொந்தக்காரங்க உடுமலையில துரத்தினாங்க. போலீஸ்ல புகார் கொடுத்து, அவங்களை எச்சரிச்சு அனுப்பினாங்க. இப்போ கொலையே செஞ்சுட்டாங்க” என்றார்.

இந்தக் கொலைச் சம்பவம், பஸ் நிலையம் அருகே உள்ள கடையின் சி.சி.டி.வி-யில் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் நான்கு பேரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். “கௌசல்யாவின் அப்பா சின்னச்சாமி, நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளார். இதில் பலருக்கும் தொடர்பிருக்கும் என சந்தேகிக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்று போலீஸார் சொன்னார்கள். இந்தச் சாதி ஆணவக்கொலை தொடர்பாக அறிக்கைத் தாக்கல் செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 81 சாதி ஆணவக்கொலைகள் நடந்துள்ளன என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. தமிழ்நாட்டில் சாதி ஆணவக்கொலைகளே கிடையாது என்று சொல்லும் தமிழக அரசு, இந்தக் கொலைக்கு என்ன பதில் சொல்லப்போகிறது?

- ச.ஜெ.ரவி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick