கூட்டணிக் குளறுபடி... குழப்பத்தில் ரங்கசாமி!

புதுச்சேரி கோக்குமாக்கு!

தேர்தல் கூட்டணி விஷயத்தில் தமிழகத்தில் என்ன நிலைப்பாடோ, புதுச்சேரியிலும் அது தொடரும் என்பதுதான் கடந்த காலத்தின் அரசியல் வரலாறு. அதன்படி, புதுச்சேரியில் பிரதானக் கட்சியாக இருக்கும் காங்கிரஸ், தங்களுக்கான வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை என்பது குறித்து தி.மு.க-வுடன் தீவிரமாக ஆலோசனை செய்துகொண்டிருக்கிறது. ஆனால், கட்சி ஆரம்பித்து மூன்றே மாதங்களில் ஆட்சியைப் பிடித்த ரங்கசாமி, யாருடன் கூட்டணி என்பதில் தடுமாறிக்கொண்டிருக்கிறார்.

கடந்த தேர்தலில் பறிகொடுத்த ஆட்சியை எப்படியாவது, இந்த முறை பிடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கியிருக்கிறது காங்கிரஸ். ஆளும் கட்சி மீது இருக்கும் அதிருப்தியைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வியூகம் அமைத்து வருகின்றனர். ஆளும் கட்சியில் ஐக்கியமாகி இருக்கும் முன்னாள் தலைவர்களை இழுக்க காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது. அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்களைச் சமாதானப்படுத்தி வருகின்றனர்.
   
அதேபோல, அ.தி.மு.க-வும்  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் ராஜ்யசபா எம்.பி-யுமான கண்ணனை இழுத்துப் போட்டுக்கொண்டு தேர்தலுக்கான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமி, 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்து பின்னர் அதைக் கழட்டிவிட்டு சுயேட்சையின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார். ராஜ்ய சபா தேர்தலில் எம்.பி பதவி கேட்டது பி.ஜே.பி. ஆனால், ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள அ.தி.மு.க-வுக்கு எம்.பி பதவியைத் தாரைவார்த்தார். தம்முடன் கூட்டணிவைத்த அனைத்துக் கட்சிகளையும் பகைத்துக்கொண்டதால் யாருடன் கூட்டணி வைப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார் ரங்கசாமி.

‘பி.ஜே.பி-யுடன் கூட்டணிவைத்தால் புதுச்சேரியில் கணிசமாக உள்ள சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காமல் போய்விடும். மீண்டும் அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்தால் சென்ற தேர்தலைப்போல, அதிக இடங்களில் வெற்றி பெறலாம்’ என்று என்.ஆர்.காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் ரங்கசாமியிடம் தெரிவித்திருக்கின்றனர். அந்த யோசனை சரியென்றுபட்டாலும், ‘‘சென்றமுறை நம்மிடம் 12 தொகுதிகள் வாங்கியவர்கள் அவர்கள். இந்த முறை நாமே கூட்டணிக்காக வலியச் சென்றால் 15 தொகுதிகள் கேட்பதோடு ஆட்சியிலும் கண்டிப்பாகப் பங்கு கேட்பார்கள்” என்று தயக்கம் காட்டுகிறார் ரங்கசாமி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்