“ஒரே மக்கள் முதல்வர் நான் மட்டும்தான்...”

தேர்தலில் களம் இறங்கும் டிராஃபிக் ராமசாமி!

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து சுயேட்சை யாகப் போட்டியிட்டுப் பரபரப்பைக் கிளப்பிய டிராஃபிக் ராமசாமி, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அவரை எதிர்த்துப் போட்டியிடப் போவதாகத் ‘தெறிக்க’ விட்டிருக்கிறார். சட்டமன்றத் தேர்தல் குறித்து சில கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.

“எந்த நம்பிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளீர்கள்?”

“எனக்கு இப்போது 83 வயது ஆகிறது. ஆனால், என் மனதுக்கு வயது ஆகவில்லை. தன்னம்பிக்கை, தைரியம் இருந்தாலே போதும் என நினைக்கிறேன். அது எனக்கு 200 சதவிகிதம் இருக்கு. ஜெயலலிதா என்பவர் யார்? அவரும் என்னைப்போன்ற மனிதர்தான். அவர் குற்றச்சாட்டுகளில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார். ஆனால், என் மீது எந்தக் குற்றச்சாட்டாவது இருக்கிறதா? இல்லையே... அவரை எதிர்த்துப் போட்டியிட நேர்மை என்ற இந்த ஒரு தகுதி போதாதா? அவரைத் தட்டிக்கேட்கும் என்னை அவர்களால் எதுவும் செய்ய முடியாது... முடியவில்லை என்பதுதான் உண்மை.”

“ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உங்களைத் தாக்கியதாகச் சொன்னீர்கள். இந்தத் தேர்தலில் அதுபோன்று நடந்தால் அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?”

“இப்பவும் எனக்குக் கொலை மிரட்டல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. என் மீது வழக்குகள் தொடரப்படுகின்றன. அந்த மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படுகிற ஆள் நான் இல்லை. என் முடிவு, அந்த இறைவனின் கையில்தான் உள்ளதே தவிர, ஜெயலலிதாவிடம் கிடையாது. இன்றைக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஒரே மக்கள் முதல்வர் நான்மட்டும்தான்.”

“விஜயகாந்த் நீங்கள் சொல்லித்தான் தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு வந்தாரா?”

“விஜயகாந்த் என்னை அழைத்துப் பேசினார். அப்போது அவரிடம், ‘நின்றால் தனித்து நில்லுங்கள். கூட்டணி வேண்டும் என்று நினைத்தால், மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவியுங்கள்’ என்று அறிவுறுத்தினேன். அதன்படிதான் இப்போது அவர் தனித்து நிற்பதாக அறிவித்திருக்கிறார்.”

“ ‘ஜெயலலிதாவுக்கு எதிராக உங்களைப் பொது வேட்பாளராக அறிவிக்க வேண்டும்’ என்கிறீர்கள். இடைத்தேர்தலின்போதே எந்தக் கட்சியும் உங்களை ஆதரிக்கவில்லையே?”

“என் கணக்குப்படி ஏப்ரல் 1-ம் தேதிக்குள் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு முடிவுக்கு வந்துவிடும். அந்த வழக்கில் நானும் ஒரு மனுதாரர். ஜெயலலிதாவுக்கு எதிராகத்தான் தீர்ப்புவரும். அதனால், அவரால் தேர்தலில் நிற்க முடியாது. அதையும் மீறி அவர் தேர்தலில் நின்றால், கண்டிப்பாக ஆர்.கே.நகரில்தான் நிற்பார். அப்படி ஒரு சூழல் வந்தால் கண்டிப்பாக அவரை எதிர்த்து நான் களத்தில் இறங்குவேன். ‘இடைத்தேர்தலில்தான் என்னை ஆதரிக்கத் தவறிவிட்டீர்கள். பொதுத்தேர்தலிலாவது ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டும் என்றால், என்னைப் பொது வேட்பாளராக அறிவியுங்கள், ஆதரியுங்கள்’ என்று அனைத்துக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பேன்.”

“இடைத்தேர்தலில் உங்களுக்கு டெபாசிட்டே கிடைக்கவில்லையே?”

“டெபாசிட் பற்றி நான் கவலைப்படவில்லை. அந்தத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மகேந்திரனுக்கே டெபாசிட் கிடைக்கவில்லை. இன்றைய நிலையில் டிராஃபிக் ராமசாமியின் தலைமையில், ஏதாவது செய்தால் நாட்டுக்கு நல்லது நடக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். இதுதான் உண்மை. நிச்சயமாக ஓர் அரசியல் மாற்றம் ஏற்படும்.”

“அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் ஓரங்கட்டப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“ஜெயலலிதா எனக்கு எதிரி இல்லை. அவரின் ஊழல்தான் எதிரி. ஜெயலலிதாவுக்கு நல்ல அறிவு இருக்கிறது. தேவையில்லாமல் ஒரு கொள்ளைக்காரக் கூட்டத்தில் அவர் மாட்டிக்கொண்டு இருக்கிறார். இன்று அவர் கட்சிக்குள்ளேயே பன்னீர்செல்வம் ஒதுக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு எல்லாம் சசிகலாதான் காரணம்!”

“234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாகக் கூறுகிறீர்கள். உங்களிடம் அந்த அளவுக்கு நிர்வாகிகள் இருக்கிறார்களா?”

“சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக என் ஆதரவாளர்கள் 500 பேர் விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர். என் அமைப்பின் சார்பில் இளைஞர்களும், பெண்களும், தாழ்த்தப் பட்டவர்களும் வேட்பாளராகப் போட்டியிடக் காத்திருக்கிறார்கள்.”

- பா.ஜெயவேல், படம்: ப.சரவணகுமார்


கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் பணம் பதுக்கல்?

தேர்தல் ஆணையத்தின் அதிரடிச் சோதனைகளைப் பற்றி பேசிய டிராஃபிக் ராமசாமி, “தேர்தல் அதிகாரிகள் தேவையில்லாமல் வாகனங்களில் செல்லும் வியாபாரிகளை மடக்குகிறார்களே தவிர, அரசியல்வாதிகள் கொண்டுசெல்லும் பணத்தைப் பிடிப்பதில்லை. அனைத்து மாவட்டச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்கள் வீடுகளிலும் சோதனையிட்டாலே போதும். தேர்தலுக்குச் செலவு செய்வதற்காக அவர்கள் பதுக்கிவைத்துள்ள பணத்தைப் பறிமுதல் செய்துவிடலாம்” என்றார் அதிரடியாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick