“தனித்துப் போட்டி தற்கொலை முயற்சி!”

விஜயகாந்த்தை விளாசும் சுப.வீ.

தே.மு.தி.க-வுடன் தி.மு.க கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்திவந்த நேரத்தில், ‘விஜயகாந்த் கட்சிக்குக் கொள்கைகள் கிடையாது. அதனால்தான் அனைத்துக் கட்சிகளிடமும் கூட்டணி பேரம் நடத்துகிறார்’ எனக் கருத்தை வெளியிட்டு தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். இப்போது தே.மு.தி.க தனித்துப் போட்டி என அறிவித்துள்ள நிலையில், தனது இயக்க நிகழ்ச்சிக்காக திருச்சி வந்திருந்த திராவிட தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியனிடம் பேசினோம்.

‘‘அரசியல் தலைவராக விஜயகாந்த்தின் ப்ளஸ், மைனஸ் என்ன?’’

‘‘எந்த ஒரு கொள்கையையும் தெளிவாக வெளிப்படுத்தாமல் இருப்பதும், வெளிப்படுத்தும்போது தெளிவில்லாமல் இருப்பதும் அவரின் பெரும் குறைகள்.’’

‘‘ ‘தனித்துப் போட்டி’ என்ற விஜயகாந்த்தின் முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘ ‘தனித்துப் போட்டி’ என்கிற விஜயகாந்த்தின் முடிவு, ஒருவிதமான தற்கொலை முடிவு என்றுதான் சொல்ல வேண்டும். தே.மு.தி.க-வை தி.மு.க அழைத்ததின் அடிப்படையான நோக்கம், இந்த அரசை வீழ்த்த வேண்டும் என்பதுதான். பொதுவாக ஒரு கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி, குறைந்தபட்ச செயல்திட்டத்தைக் கொண்ட கூட்டணி, பொதுநோக்கத்தின் அடிப்படையிலான கூட்டணி அமைக்கப் படலாம். இப்போது உள்ள அராஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் பொதுநோக்கமாக உள்ளது. தே.மு.தி.க-வுக்கும் இந்த நோக்கம் இருக்குமானால், வலிமை வாய்ந்த கட்சியான தி.மு.க-வுடன் வந்திருக்க வேண்டும். இப்போது தனித்துப் போட்டி என தே.மு.தி.க அறிவித்திருப்பது, ‘அ.தி.மு.க ஆட்சியை அகற்றுவேன்’ எனும் தே.மு.தி.க தனது கொள்கையில் உறுதியாக இல்லையோ, என யோசிக்கத் தோன்றுகிறது. இதனால் மிகக் குறைந்த வாக்குகளை தி.மு.க இழக்கக்கூடும் என்பது உண்மை. ஆனால், அது வெற்றியைப் பாதிக்கும் வாக்குகளாக இருக்காது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் இந்த ஆட்சி தொடர வேண்டுமா, கூடாதா என்பதுதான் மக்கள் முன்னால் வைக்கப்படும் கேள்வி. இந்த ஆட்சியை அகற்றக்கூடிய கட்சிக்குத்தான் மக்களின் வாக்குகள் வந்துசேரும்.  அப்படியானால், தி.மு.க-வுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள்.’’

‘‘கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஆட்சியில் இருப்பதால், அவற்றுக்கு மாற்று வேண்டும் என்ற கருத்தை பிற கட்சிகள் ஏற்படுத்த முயல்கின்றன என்று சொல்கிறீர்கள். இரு துருவ அரசியல் என்ற இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதை ஏற்கிறீர்களா...எதிர்க்கிறீர்களா?’’

‘‘மாற்று வேண்டும் என்கிற கருத்துக்களை எப்போதும் எந்த நேரத்திலும் வலியுறுத்துவேன். மாற்றம் என்கிற ஒன்றுமட்டும்தான் மாறாதது என்பதை நம்புகிறவன் நான். ஆனால், அதே நேரத்தில் மாற்றாக யார் வந்து நிற்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். இன்று இருக்கிற கட்சிகளில் தி.மு.க-தான் மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டுவந்த வரலாறுகளைக் கொண்ட கட்சி. மாற்று, இப்போதைக்குத் தேவைப்படவில்லை. அப்படியான மாற்று இங்கு எழவும் இல்லை.’’

‘‘தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மத்தியில் கூட்டணி ஆட்சியில் பங்கேற்று அந்த அதிகாரத்தைச் சுவைக்க விரும்பும் அதே நேரத்தில், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு மட்டும் மறுக்கின்றன. இந்த விஷயத்தில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒற்றுமையோடு இருக்கிறார்களே?’’

‘‘அ.தி.மு.க., தி.மு.க கட்சிகள் இரண்டையும் சமமாகப் பார்த்துவிட முடியாது. ஈழ பிரச்னை, கூடங்குளம் பிரச்னைகளில் சி.பி.எம் கட்சியும் பி.ஜே.பி-யும் ஒத்தகருத்துக் கொண்டவையாக உள்ளன. ஆகையினால், இந்த இரண்டு கட்சிகளும் ஒன்று எனச் சொல்லிவிட முடியுமா? மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி  என்பது தி.மு.க-வின் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்று. தமிழகத்தில் எப்போது கூட்டணி ஆட்சி வரும் என்றால், போதுமான அளவுக்கு வெற்றி பெற முடியாமல், மற்ற கட்சிகள் பெரும்பான்மை பெற்று, அந்தக் கட்சி சேர்ந்தால்தான் ஆட்சி அமைக்கும் நிலைவந்தால் மட்டுமே கூட்டணி ஆட்சி சாத்தியமாகும். அறிஞர் அண்ணா வலியுறுத்தியதுபோல் விகிதாசார தேர்தல் முறை வருமானால் கூட்டணி ஆட்சி வரும். அந்தத் தேர்தல் முறையை ஏற்காமல் ஒரு கட்சி பெரும்பான்மை பெற்ற பிறகும் கூட்டணி ஆட்சி வேண்டும் என்பது பேச்சுக்கு நன்றாக இருக்கும். அது நடைமுறைக்கு ஒத்துவராது.’’

‘‘தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகளும், சாதி ஆணவக் கொலைகளும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. தி.மு.க., அ.தி.மு.க போன்ற பெரிய கட்சிகள் இதை ஒரு சீரியஸ் பிரச்னையாகப் பார்ப்பது கிடையாது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம் சேஷ சமுத்திரத்தில் தலித் மக்களின் குடிசைகளும் கோயில் தேரும் எரிக்கப்பட்டதற்கு தி.மு.க சார்பில் ஒரு கண்டன அறிக்கைகூட வெளியிடப் படவில்லையே. ஏன்?’’

‘‘இது உண்மையில்லை. கொஞ்சம் கூர்மையாகக் கவனித்தால், ஒவ்வொருமுறை இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும்போதும் தலைவர் கலைஞரே கண்டனங்களைப் பதிவுசெய்திருப்பார். விழுப்புரம் சேஷ சமுத்திரம் கிராம பிரச்னைக்காக முரசொலியில் கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளார். இப்போதும்கூட உடுமலையில் சங்கர் படுகொலை செய்யப்பட்டுள்ள நேரத்தில் தி.மு.க-வின் அதிகார பூர்வமான செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், ‘இது ஒரு காட்டுமிராண்டித் தனமான செயல், நாகரிகத்தை நோக்கி உலகம் முன்னோக்கிச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, இந்தத் தேசத்தை, நாட்டை, இந்த உலகத்தை இது பின்னோக்கிக் கொண்டுசெல்லும் செயல்’ என கண்டனங்கள் வெளியிட்டுள்ளார். அடிப்படையிலேயே திராவிட இயக்கக் கோட்பாடு, தீண்டாமைக்கு எதிரானது, சாதிக்கு எதிரானது.’’

‘‘கடந்த தேர்தலில் தி.மு.க-வுக்கு ஸ்பெக்ட்ரம் பெரிய சவாலாக இருந்தது. இந்தத் தேர்தலிலும் அதே குற்றச்சாட்டுகள் உள்ளதே?’’

‘‘2ஜி எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் பெருமக்களிடம் கேட்கிறேன். பொதுவாக ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை எனச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அது ஒரு கற்பனைக் கதை. இந்த வழக்கில் ஊழல், கையூட்டு போன்ற சொற்கள் எந்த இடத்திலேயும் இடம் பெறவில்லை. அரசுக்கு, அந்தத் தொகை இழப்பு என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இழப்பும்கூட நீதிமன்றத்தில் மெய்ப்பிக்கப் படவில்லை.   ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது, 5,275 மெகா வாட் அலைக்கற்றைகள் விற்பனை ஆகின. அதில் ஒரு மெகா வாட் ரூ.274 என்கிற அளவில்தான் விற்பனை ஆகின. ஆனால், அது 3 ஆயிரத்து 350 ரூபாய்க்கு விற்பனை செய்திருக்க வேண்டும் என்கிறது அந்தக் கற்பனைக் கணக்கு. 5,275 மற்றும் 3,350 இரண்டையும் பெருக்கினால் வருகின்ற தொகைதான் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய். உண்மையிலேயே 2014-ல் ஏலம் விட்டபோது 3 ஆயிரத்து 350 ரூபாய்க்கு விற்பனை ஆனாதா என்றால்... இல்லை. வெறும் 297 ரூபாய்க்குதான் விற்பனை ஆனது. ஆறாண்டுகள் கழித்து விடப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 21 ரூபாய்தான் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆறாண்டுகள் கழித்தும்கூட 3 ஆயிரத்து 350 ரூபாய் விற்பனை ஆகவில்லை. எல்லாக் கணக்குகளும் குமாரசாமி கணக்குகளாக இருக்கின்றன.’’

‘‘ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கு யாருக்குச் சாதகமாக அமையும்?’’

‘‘சொத்துக் குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டுள்ளது. நீதியும் நியாயமும் நிலை நிறுத்தப்படவேண்டும் என்பதில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். அதனைத் தாண்டி இந்த வழக்கின் முடிவு என்னாகும் என கவனித்துக்கொண்டே இருக்க முடியாது. நீதிமன்றம் தனது கடமையைச் செய்யும்.’’

‘‘ ‘அண்ணா உருவாக்கிய தி.மு.க-வை, கருணாநிதி தன் குடும்ப நலனுக்காக மாற்றிவிட்டார். தி.மு.க விஷம் கலந்த பால் என்றெல்லாம் வைகோ குற்றஞ்சாட்டுகிறாரே.” தொடர்ச்சியாக இந்தக் குற்றச்சாட்டு, கருணாநிதி மீது வைக்கப்படுகிறதே?

‘‘மற்ற யார் வேண்டுமானாலும் தி.மு.க மீது இந்தக் குற்றச்சாட்டை வைக்கலாம். ஆனால், வைகோ இந்தக் குற்றச்சாட்டை வைப்பது சற்றும் நன்றி உணர்ச்சி இல்லாத செயல் என்றுதான் நான் பார்க்கிறேன். யாருக்கும் வழங்கப்படாத வாய்ப்பு அண்ணன் வைகோ-வுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து 18 ஆண்டுகள் மாநிலங்களவைக்கு வைகோவை அனுப்பிவைத்தது தி.மு.க-தான். வைகோ, தலைவர் கலைஞரின் குடும்ப உறுப்பினரா? இன்றைக்கு திருச்சி சிவாவும் தொடர்ச்சியாக மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாரே... அவர் கலைஞரின் குடும்ப உறுப்பினரா?  18 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க-வால் ஆக்கப்பட்ட வைகோ, கலைஞர் குடும்பநலனுக்கான கட்சியாக தி.மு.க-வை மாற்றிவிட்டார் எனச் சொல்வது தவறு.’’

- சி.ஆனந்தகுமார்
படம்: தே.தீட்ஷித்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick