கிரிமினல் வேட்பாளர்களை வளர்க்கும் கட்சிகள்!

தடுக்க வழி இருக்கா?

மதா கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ‘‘அரசியலில் கிரிமினல்கள் நுழைவதைத் தடுக்கும் வழிமுறைகளை ஆராய வேண்டும்’’ என்று அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதினார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக இருந்த ஹர்கிஷன் சிங் சுர்ஜித்திடம் இருந்து மட்டும் பெர்னாண்டஸுக்குப் பதில் வந்தது. வேறு யாரிடம் இருந்தும் எந்தப் பதிலும் வரவில்லை. கடிதம் எழுதியவர் இப்போது கோமாவில் இருக்கிறார். பதில் எழுதியவர் இறந்துவிட்டார். ஆனால், அவர்களின் விருப்பம் அப்படியே இருக்கிறது. ஆனால், அதைச் செயல்வடிவத்துக்குக் கொண்டுவர தமிழகத் தலைவர்கள் விரும்புகிறார்களா?

தமிழகத்தில் தேர்தல் களம் தீப்பிடிக்கத் தொடங்கிவிட்டது. கூட்டணிக் கணக்குகள் தீவிரமாகப் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வேட்பாளர் நேர்காணல் என்றொரு நாடகம் கச்சிதமாக நடத்தப்படுகிறது. எல்லாம் இறுதிப்படுத்தப்பட்டு, 234 தொகுதிகளுக்கும் டஜன் கணக்கான வேட்பாளர்களை இன்னும் சில நாட்களில் அரசியல் கட்சிகள் அறிவித்துவிடப் போகின்றன. அவர்களுக்குள் ஒருவரை மட்டும்தான் மக்களால் தங்களுக்கான உறுப்பினராகத்  தேர்ந்தெடுக்க முடியும்.

அரசியல் கட்சிகள் முன்னிறுத்தும் வேட்பாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது யாரையும் பிடிக்கவில்லை என்று நோட்டாவுக்கு வாக்களிக்கலாம் அல்லது வாக்களிக்கவே போகாமல் இருக்கலாம். ஆனால், ‘‘என்முன் நிறுத்தப்படும் வேட்பாளர், இந்தத் தகுதிகளுடன்தான் இருக்க வேண்டும்’’ என்று கோரும் உரிமை மக்களிடம் இல்லை. தேர்தலில் வென்று, ஆட்சியை கைப்பற்றி, அதிகாரத்தைக் கையில் எடுப்பவர்கள், தங்களின் வாழ்க்கை, வாழும் சூழலில் நல்ல தாக்கங்கங்களை, மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். தங்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் கோடீஸ்வரர்களாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை. தங்கள் குறைகளுக்குத் தீர்வு தேடித் தருபவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். படை, பட்டாளம் நிரம்பியவராக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. அணுக எளிமையானவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். பட்டம் படித்தவர் சட்டம் முடித்தவராக இருந்தால் நல்லது. ஆனால், அதுவே தங்களின் வேட்பாளரின் தகுதியாக தங்கிவிடக் கூடாது. அந்தத் தகுதி சட்டமன்றத்தில் கேள்விகளாக எதிரொலிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

செலவுப் பணத்தை எங்கே எடுப்பார்கள்?

கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆளும் - ஆண்ட தி.மு.க. - அ.திமு.க., அவற்றுக்கு மாற்று என்று சொல்லிவந்த தே.மு.தி.க., மாற்றம் முன்னேற்றம் என்ற கோஷத்தை முன்வைக்கும் பா.ம.க என்று அவர்களின் நேர்காணல்களில் பிரதான கேள்வியாகக் கேட்கப்படுவது, “எவ்வளவு செலவு செய்ய முடியும்?” என்பதுதான். வேட்பாளர்கள் முன்வைக்கப்படும் இந்தக் கேள்வி, ஒருவகையில் அவர்களுக்கு வைக்கப்படும் விலை. கட்சிகள் வைக்கும் இந்த விலையைக் கொடுக்கத் திராணி உடையவர்கள் யாராக இருக்க முடியும்? பொதுவாழ்க்கையை நேசிக்கும் ஒரு தினக்கூலியால் அந்தத் தொகையை நினைத்துப் பார்க்க முடியுமா? இலவச சட்ட உதவிகளைச் செய்யும் வழக்கறிஞர் ஒருவரால், கட்சி நிர்ணயிக்கும் கட்டணத்தைக் கொடுக்க முடியுமா?

சாராய சாம்ராஜ்ஜியத்தில் சம்பாதித்த பணத்தை கத்தை கத்தையாக வைத்திருப்பவர்களால்தான் கட்சிகள் கேட்கும் பணத்தைக் கட்ட முடியும். மணலைச் சுரண்டி, மலையைத் திருடி கோடிகளைக் குவித்து வைத்திருப்பவர்களால் கொடுக்க முடியும். கல்லூரிகளைக் கட்டி, லட்சங்களில் டொனேஷன் வாங்கும் தாளாளர்களால் இந்தத் தொகையைத் தர முடியும். மீட்டர் வட்டி, ரன் வட்டிக்கு விடும் கந்துவட்டிக்காரர்களால்தான் கட்சிகள் சொல்லும் பேரத்தைச் சமாளிக்க முடியும். இவர்களால், எந்த நேரத்திலாவது பொதுத் தொண்டு என்ற வார்த்தையையாவது புரிந்துகொள்ள முடியுமா? மக்களோடு மக்களாகக் கலந்து வீதியில் இறங்கி அவர்களின் பிரச்னைகளுக்காகக் குரல் எழுப்புவார்களா? அதை இவர்களிடம் எதிர்பார்க்கத் தான் முடியுமா? லட்சக்கணக்கில் டோனேஷன் வாங்கும் தாளாளர், தேர்தலில் போட்டியிட்டுச் சட்டமன்றத்துக்குள் நுழைந்துவிட்டால், அவர் இலவசக் கல்வியின் அவசியம் பற்றி எப்படிக் கேள்வி எழுப்புவார்?

காமராஜர், அண்ணா காலத்துக்குப் பிறகு மெள்ள மெள்ள இதுபோன்ற கிரிமினல் வியாபாரப் பேர்வழிகள் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கத் தொடங்கினர். அதன்பிறகு அவர்கள் அங்கு தழைத்துச் செழித்து 1991-ல் இருந்து இன்றுவரை ஆதிக்கப் பேர்வழிகளாகத் திகழ்கின்றனர். குண்டர் படையும் கோடிகளும் வைத்திருப்பவர்கள் கையில், அரசதிகாரமும் கிடைக்கும்போது, அரசியல் ஆபத்து, அருவருப்பு, சமூக விரோதம் என்று ஒட்டுமொத்தமாக தீய சக்தியாக மாறுகிறது. இவர்களைக் களையெடுக்கச் சட்டத்தில் வழியில்லை. சட்டத்தின் முன் குற்றம் நிரூபிக்கப் பட்டால்தான் அது தண்டனை கொடுக்கும். ஆக, இந்தக் கழிவுகளை வடிகட்டும் தார்மிகப் பொறுப்பு அரசியல் கட்சிகளின் கையில்தான் இருக்கின்றன. அதை வேட்பாளர் தேர்வில் மட்டுமல்ல, உறுப்பினர் சேர்க்கையின்போதே கவனத்தில்கொள்ள வேண்டும் கட்சிகள் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    ‘‘நல்லவர்களைத் தேட வேண்டும்!”

கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்து, அப்துல் கலாம் லட்சியக் கட்சியை ஆரம்பித்திருக்கும் பொன்ராஜ், “பொதுவாக கிரிமினல் குற்றப் பின்னணிக் கொண்டவர்கள், இன்றைக்கு அரசியலை தங்களின் அடைக்கலமாக நினைக்கின்றனர். கட்சிகளுக்கும் அவர்களின் தயவு தேவைப்படுகிறது. பெரிய கட்சி ஒன்று இதுபோன்ற வேட்பாளர்களை நிறுத்தும்போது, போட்டிக் கட்சியும் இவரைச் சமாளிக்க இதுபோன்ற ஒரு வேட்பாளரையே நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறது. இதுபோன்ற வேட்பாளர்களையே நிறுத்தி இன்றைக்கு நல்லவர்களைத் தேட வேண்டிய நிலை உருவாகிவிட்டது. இந்த நிலையை மாற்றும் பொறுப்பு, மக்களைவிட கட்சிகளுக்கே நிறைய இருக்கிறது. இதை அவர்கள் தங்கள் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் இருந்து கவனத்தில் கொள்ள வேண்டும். தங்கள் கட்சியின் அனுதாபிகளாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், கட்சியின் உறுப்பினர்களாக ஒருவர் சேர்க்கப்படும்போது, சமூகத்தில் அவருடைய பொறுப்பு, அவர் வகிக்கும் பாத்திரம், அவருடைய பின்னணிகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். நேர்மையாகக் கட்சிக்கு உழைப்பவர்களுக்கு இப்போது பெரிய கட்சிகளில் எந்த அங்கீகாரமும் இல்லை. ஆனால், இதுபோன்ற கிரிமினல் குற்றப் பின்னணிக் கொண்ட வியாபாரிகள், தங்கள் பணபலத்தாலும் ஆள் பலத்தாலும் தலைமையை மிக விரைவில் நெருங்கிவிடுகின்றனர். அப்படி அடையாளம் கண்டு, கிரிமினல் குற்றப் பின்னணி கொண்டவர்களை ஒதுக்கிவிட்டு, நல்லவர்களை அரசியலுக்குள் இழுப்பதன் மூலமே மாற்றத்தைத் தொடங்க முடியும்’’ என்றார்.

    சட்டம் என்ன சொல்கிறது?

சட்டத்தில் ஏதாவது வழி இருக்கிறதா? என்று ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துருவிடம் கேட்டோம்.

‘‘1951 வருடத்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8-வது பிரிவில் எத்தகைய குற்றங்களை இழைத்து தண்டிக்கப்பட்டால்,  அவர்கள் தேர்தலில் நிற்பதற்கு தகுதியிழப்பு செய்யப்படுவார்கள் என்று போடப்பட்டுள்ளது. அந்தப் பிரிவின் கீழ் குற்றங்கள் மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. முதல் வகைக் குற்றங்கள் சமூகங்களுக்குள் பகைமை உண்டாக்குவது (153-A IPC), பாலியல் வல்லுறவு, வரதட்சணைக் கொடுமை, மதங்களுக்குள் பகைமையை மூட்டுவது, தலித்களுக்கு எதிரான தீண்டாமைக் குற்றங்கள். இந்தக் குற்றங்களின் கீழ் தண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டாலே ஆறு வருடங்களுக்குத் தேர்தலில் நிற்க முடியாது. அந்தப் பிரிவுகளின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், தண்டனைக் காலம் முடிந்த பிறகும் மேலும் ஆறு வருடங்களுக்குத் தேர்தலில் நிற்க முடியாது. இரண்டாவது வகை, தீவிரவாதச் சட்டங்கள் அல்லது அந்நியச் செலாவணி சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றங்களுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை பெற்றால் சிறைத்தண்டனை அனுபவித்த பின் மேலும் ஆறு வருடங்களுக்கு தேர்தலில் நிற்க முடியாது. மூன்றாவது வகை, மேலே குறிப்பிட்டுள்ள குற்றங்கள் தவிர, வேறு ஏதேனும் குற்றத்துக்கு இரண்டு வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் மேலும் ஆறு வருடங்களுக்குத் தேர்தலில் நிற்க முடியாது.

ஆரம்பத்தில் தண்டனை என்பது, கடைசி நீதிமன்றம் முடிவு சொல்லும் வரை, அதாவது மேல் முறையீட்டு மன்றங்களில் தண்டனைக்கெதிரான மேல் முறையீடு நிலுவையிலிருந்தாலே தகுதியிழப்பு செய்ய முடியாது என்றிருந்தது. அந்தப் பிரிவை உச்ச நீதிமன்றம் சட்டவிரோதமானது என்று அறிவித்துவிட்டதனால் இப்போது விசாரணை நீதிமன்றம் தண்டனை அளித்தவுடனேயே தகுதியிழப்பு அமலுக்கு வந்துவிடும்.

ஜனநாயக உரிமைக்கான அமைப்புப் போட்ட பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதன்படி ஒரு வேட்பாளர் வேட்புமனுத் தாக்கலின்போதே தனது சொத்து விவரம், தனது மனைவியின் சொத்து விவரம், தன் மீதுள்ள கிரிமினல் குற்றங்கள், தனது கல்வித்தகுதி பற்றி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டது.  அந்தத் தகவல்களைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம் என்றும்  கூறியது.  ஆகவே, தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணியைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு வாக்காளர்களுக்கு உரிமை ஏற்படுத்தப்பட்டுள்ளது, இதன்மூலம் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கும் முன்னர் அவர் தமது தொகுதியை உரிய முறையில் பிரதிநிதித்துவப் படுத்துவாரா? என்று முடிவுசெய்து வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.    

கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன் தேர்தல் தகுதியிழப்புச் செய்ய வேண்டுமென்ற வாதம் சரியல்ல. காவல் துறையைப் பொறுத்தவரை ஒருவர் புகார் கொடுத்தவுடனேயே அதில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் கடுமையானதாக இருப்பின் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது (லலிதகுமாரி – எதிர் - உ.பி. அரசு, 2014). அதனால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்க விரும்பினால் அவர்கள் மீது பொய்ப் புகார் கொடுத்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யவைத்து அவர்களது வேட்பாளர் மனுவைத் தேர்தல் அதிகாரி மூலம் தள்ளுபடி செய்ய வைக்க முடியும்.

மேலும் அரசாங்க பொறுப்பிலிருக்கும் ஆளும் கட்சிக்கு இப்படிப்பட்ட யுக்தியை எளிதாகப் பயன்படுத்த முடியும். ஒருவர் மீது குற்றம் பதிவு செய்தவுடனேயே அவர் தேர்தலில் நிற்கத் தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அப்படிப்பட்ட தகுதியிழப்பு தவறாகப் பயன்படுத்தப்படும் என்பதனால், உச்ச நீதிமன்றமே அந்தத் தீர்ப்பை சீராய்வு மனுவில் ரத்து செய்துவிட்டது. ஒரு தொகுதியில் குறைந்த விழுக்காடு வாக்கு பெற்றாலே அவர் மற்றவர்களைவிட ஒரு ஓட்டு அதிகமாக இருந்தாலும் அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார்.

இதன் மூலம் அவருக்கு அடுத்தபடியாக வாக்கு பெற்றவருக்கோ, அவர் சார்ந்த அரசியல் கட்சிக்கோ அதிகாரப் பங்கீட்டில் எவ்வித உரிமையும் கிடைப்பதில்லை. உதாரணமாக 34 சதவிகிதம் ஒரு கட்சிக்கு வாக்கு கிட்டுகிறது என்றால், அந்தக் கட்சியே அனைத்துத் தொகுதிகளையும் பற்றிவிடுகிறது. ஒட்டுமொத்தமாகப் பிற கட்சிகள் 66 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருப்பினும் அவர்களுக்கு அடுத்த தேர்தல் வரை அரசு அதிகாரத்தில் எந்தவித பங்கும் கிட்டுவதில்லை.

இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை அமலுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இதற்காக அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் வேட்பாளர்களின் தனிப்பட்ட ஆளுமைத் திறனைவிட ஒரு கட்சியின் செயல்திட்டங்களுக்கு மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள். கட்சி விரும்பினால் அது பெறக்கூடிய வாக்கு விகிதத்தின் அடிப்படையில் பிரதிநிதிகளை சட்டமன்றத்துக்கும், நாடாளு மன்றத்துக்கும் அனுப்ப முடியும். இடைத்தேர்தல் என்ற பிரச்னையே வராது” என்றார் சந்துரு.

கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளான வேட்பாளருக்கா உங்கள் ஓட்டு?

கிரிமினல்களை வேட்பாளர்களாக நிறுத்துவதில் தமிழகத்துக்கு 7-வது இடம் என்பது பெருமையா?

- ஜோ.ஸ்டாலின்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick