“இது பெண்களுக்கான அரசு இல்லை!”

பெண்கள் நலத் திட்டங்கள் குறித்து ஓர் அலசல்!

“ஒரு பெண்ணின் மனதை பெண்தான் புரிந்துகொள்ள முடியும்”- என்பது சினிமாவிலும் டி.வி சீரியல்களிலும் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன வசனம். ஒரு பெண் ஆட்சி செய்யும் நாட்டில்... பெண்களுக்காக அவர் என்ன செய்தார் என்று யோசிக்கலாம்.

பெண்களின் கல்வி, திருமணம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான திட்டங்களை நிறைவேற்றியதில் இப்போதைய அ.தி.மு.க அரசு எப்படிச் செயல்பட்டது? கடந்த தி.மு.க அரசின் செயல்பாடுகளைவிட எப்படி மேம்பட்டதாக இருந்தது? பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள் கடைகோடிக் கிராமப்புற மகளிரைச் சென்றடைந்து உள்ளதா? இனிவரும்   தலைவர்கள் பெண்களுக்கானத் திட்டங்களை நிறைவேற்றுவதில் என்ன செய்யவேண்டும் என்பதற்காகப் பல்வேறு அரசியல் கட்சிகளில் உள்ள பிரதிநிதிகளிடம் பேசினோம். அவர்களின் கருத்துக்களின் தொகுப்பு இது:

  ‘‘பெண்களுக்கு ஊதியம்!”

பாலபாரதி எம்.எல்.ஏ.(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): “பெண்களுக்கெனத் தனியாகச் சிறப்புத் திட்டங்கள் எதுவும் இந்த ஆட்சியில் இல்லை. வேலைவாய்ப்புத் திட்டங்களும் இல்லவே இல்லை. தனியார் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குகின்றனர். ஆனால், மாணவர்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கின்றனர். ஜவுளிக்கடைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நிறுவனங்களில் 7 ஆயிரம் ரூபாய்க்கு 10 மணி நேரம் பெண்கள் உழைக்கின்றனர். இதை ஒரு வரையறைக்குள் கொண்டுவர பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியச்சட்டத்தைக் கொண்டு வரவேண்டும். இதையல்லாம் இந்த அரசு செய்ததா? அப்பளத் தொழில், சாலையோர வியாபாரம், கட்டடத் தொழில் என பல துறைகளில் பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு முறையாக மகப்பேறு நிதியுதவி சென்றடைந்துள்ளதா? ஆதரவற்றப் பெண்களுக்கானத் திட்டத்தில் விதவைகளும் அடங்குவர். அவர்களுக்கு உறவாக யாருமே இருக்கக் கூடாது என்ற விதி இருக்கிறது. ஒரு விதவைப் பெண்ணுக்கு மாமியார், மாமனார் இருக்க மாட்டர்களா? இந்த விதியை மாற்ற வேண்டும். கௌரவக் கொலைகளால் பெண்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். அதைத் தடுக்கத் தனிச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். மகளிர் ஆணையத்தின் நடவடிக்கைகள் வரையறுக்கப்படவில்லை. ஆட்சியாளர்களின் ஆதரவாளர்கள்தான் அதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதனால் பெண்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இவற்றை சுதந்திரமான அமைப்பாகக் கொண்டு வரவேண்டும். திராவிடக் கட்சிகள் இரண்டுமே பெண்கள் நலத் திட்டங்களை சரிவர செயல்படுத்தவில்லை.”

‘‘பெண்களின் வேதனை ஜெயலலிதாவுக்குத் தெரியாது!”

ஜோதிமணி (காங்கிரஸ்): “இந்த அரசு, செயல்பட்டு இருந்தால்தானே மகளிருக்கானச் செயல்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறலாம். முதலில் முதலமைச்சரை தரையில் இறங்கி நடக்கச் சொல்லுங்கள். அப்போதுதான் உழைக்கும் பெண்களின் வேதனை அவருக்குப் புரியும். அவருக்கு சாமான்ய பெண்களின் வேதனைகள் தெரியாது. மிக்ஸி, கிரைண்டர் கொடுத்து விடுவதால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துவிடுவார்களா? பெண்களுக்கான சம உரிமையும், பெண்கள் மேம்பாட்டுத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். முதியோர்களுக்கான பென்ஷன் திட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாத காலமாக நீக்கப்பட்ட முதிய பெண்கள் கதறுகின்றனர் என்பது முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவுக்குத் தெரியுமா? பாலியல் குற்றங்களை விசாரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு  நீதி கிடைக்கவும் விரைவு நீதிமன்றங்கள் செயல்படும் என்று முதல்வர் கூறியிருந்தார். ஆனால், இந்த நீதிமன்றம் எங்கே உள்ளது? இதுவரை எத்தனை வழக்குகள் விசாரணை செய்து நீதி வழங்கப்பட்டு உள்ளன என்பதைக் கூற முடியுமா? பெண்களின் அதிகாரத்தையும் உரிமையையும் மேம்படுத்தும் எந்த ஒரு செயலையும் இந்த அரசு  செய்யவில்லை. அந்த வகையில் தி.மு.க அரசு பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம், உள்ளாட்சியில் இடஒதுக்கீடு போன்றவற்றை நிறைவேற்றியுள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கினால் மட்டுமே பெண்கள் வாழ்வு மேம்படும்.”

‘‘இளம் விதவைகள் அதிகம்!”

வானதி சீனிவாசன் (பி.ஜே.பி.): “மகளிர் சுயஉதவிக் குழுக்களில் 50 சதவிகிதம் நடுத்தர வயதுப் பெண்கள் பயன்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது முக்கியமான ஒன்று. மாணவிகளுக்கு சைக்கிள், லேப்டாப் கொடுத்தது நம்பிக்கையையும், தனித்துவத்தையும், மன உறுதியையும் தந்துள்ளது.

கடந்த தி.மு.க ஆட்சியிலும் பெண்களுக்கான நலத் திட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், அ.தி.மு.க ஆட்சியில் குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்களுக்காக, குழந்தை பிறந்த பின்பு ஏழைப் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட உதவித் தொகை, பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல திட்டங்கள் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இருந்தாலும், திட்டங்களில் குளறுபடி இருக்கிறது. இந்தத் திட்டங்கள் இருந்தபோதிலும், டாஸ்மாக் மதுக்கடைகளால், தினம் தினம் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப் படுகிறார்கள். மதுவிலக்கை அமல்படுத்தாமல், இந்த அரசு துவண்டுபோய் இருப்பது வேதனையான விஷயம். இன்று இளம் விதவைகளின் எண்ணிக்கையை அதிகரித்து, இந்த அரசாங்கம் பெண்களை நடுத்தெருவில் தள்ளியிருக்கிறது.”

‘‘தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள்!”

சல்மா (தி.மு.க.):
“நடைமுறையில் உள்ள அனைத்து மகளிர் திட்டங்களுமே தி.மு.க ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டவைதான். அதில் சில மாற்றங்கள் மட்டுமே செய்து அதற்கான பெருமைகளைத் தனதாக்கிக்கொண்டனர் அ.தி.மு.க-வினர். இந்த ஆட்சியில் பெண்களுக்கான திட்டங்கள் எதுவுமே இன்னும் முழுமை அடையவில்லை. அரசு வேலைவாய்ப்பு, கோயில் அறங்காவலர் குழு, காவல் துறை ஆகியவற்றில் தி.மு.க ஆட்சியில்தான் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இந்த ஆட்சியில் அதுவும் இல்லை.

பெண் ஆள்வதால் மட்டும் பெண் ஆட்சியாக இருந்துவிடாது. பெண்ணின் பெருமையும், அருமையும், அக்கறையும் ஜெயலலிதாவுக்குக் கிடையாது.”

‘‘6 மாத பேறுகால விடுமுறை!”

சமரசம் (அ.தி.மு.க):
“பெண் குழந்தைகள் கொல்லப்படுவதைத் தடுக்கக்கொண்டு வரப்பட்டதுதான் தொட்டில் குழந்தைத் திட்டம். இந்தத் திட்டத்தால் பல பெண் குழந்தைகளின் வாழ்வு பாதுகாக்கப்பட்டுள்ளது. தாயின் பெயரையும் இனிஷியலாகப் போடலாம் என்பதை அ.தி.மு.க அரசுதான் கொண்டு வந்தது. ஏழைப் பெண்கள் திருமணத்துக்கு உதவும் வகையில் தாலிக்குத் தங்கம், படிப்பைப் பாதியில் நிறுத்தும் பெண் குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகைத் திட்டம், அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்குப் பேறுகால விடுமுறையை 6 மாதங்களாக உயர்த்தியது.

முதன்முதலாக பெண் கமாண்டோ படையை நிறுவியது அ.தி.மு.க அரசுதான். மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது அ.தி.மு.க ஆட்சியில்தான். விளையாட்டில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு, வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டது அ.தி.மு.க அரசுதான்.”

 - கே.புவனேஸ்வரி, சு.நந்தினி


அ.தி.மு.க அரசில் பெண்களுக்கான திட்டங்கள்... சட்டங்கள்!

தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம், திருமண உதவித்தொகையுடன் திருமாங்கல்யம், சிறப்புச் சேவை புரிந்த பெண்களுக்கு அவ்வையார் விருது, கணவனை இழந்தோர்... கைவிடப்பட்டோர்... ஆதரவற்றோர்... மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், பால்ய திருமணத் தடைச் சட்டம், வரதட்சணைத் தடுப்புச் சட்டம், பெண்கள் பாதுகாப்புக்கு 13 அம்ச திட்டம், மகளிர் காவல் நிலையம், மகளிர் சிறப்பு அதிரடிப்படை, தாயின்  பெயரை இனிஷியலாக வைத்துக்கொள்ளச் சட்டம், திருத்தியமைக்கப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவித் திட்டம், பெண்கள் எழுத்தறிவுத் திட்டம், தொடர் கல்வித் திட்டம், பெண் எழுத்தாளர்களுக்கான அம்மா இலக்கிய விருது, வீரதீரச் செயல் புரியும் பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது, மகளிர் சுய உதவிக்குழு பயிற்றுநர்களுக்கு அம்மா கைப்பேசி வழங்கும் திட்டம், இலவச மிக்ஸி - கிரைண்டர், மகளிர் தையல் தொழில் கூட்டுறவுச் சங்க பெண்களுக்கு நவீன ரக தையல் இயந்திரங்கள் வாங்க 10 சதவிகித மானியம் வழங்கும் திட்டம், நலிவுற்ற குடும்பங்களுக்கான சிறப்புத் திட்டம், விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், மகளிர் சுகாதார வளாகங்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு இணை உணவு வழங்கும் திட்டம், பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்ட தனி அறைகள், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதம் உயர்த்தியது ஆகியவை அ.தி.மு.க அரசின் நலத் திட்டங்கள் ஆகும்.

தி.மு.க அரசில் பெண்களுக்கான திட்டங்கள்!  


மகளிர் சுய உதவிக் குழுக்கள், மூவலூர் மூதாட்டியார் திருமண நிதி உதவித் திட்டம், ஈ.வெ.ரா நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டம், அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் திட்டம், பெண்களுக்கு சம உரிமை அளித்திடும் தனிச்சட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டம், எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் திட்டம், ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம், திருமணமாகாத பெண்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஆகியவை தி.மு.க அரசால் ஏற்படுத்தப்பட்டவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick