“விஜயகாந்த் ரோபோ... பிரேமலதா ரிமோட்!”

சீறுகிறார் செந்தில்

ட்டமன்றத் தேர்தல் களைகட்டிவிட்டதை அடுத்து அரசியல் கட்சிகளில் இருக்கும் நடிகர்கள் பிரசாரக் களத்தில் குதித்திருக்கிறார்கள். இப்போது அ.தி.மு.க மேடைகளில் எதிர் அணியினரை வார்த்தைகளில் பந்தாடுகிற நகைச்சுவை நடிகர் செந்திலை சந்தித்தோம்.

“அ.தி.மு.க ஆட்சி மக்கள் விரோத அரசு என்று தி.மு.க குற்றம்சாட்டுகிறதே?”

“தி.மு.க ஆட்சியில 5 வருஷம் மக்கள் கரன்ட்டே இல்லாம இருட்டுலதான் வாழ்ந்தாங்க. அதை லேசுல மறந்துடுவாங்களா? அவங்க ஆட்சியில சிலர், ஒரு இன்ஸ்பெக்டரை கொலை பண்ணி ரோட்டுல போட்டுட்டு போயிட்டாங்க. அவரோ  ‘தண்ணி.. தண்ணி’னு  தவிச்சுப்போய் கத்துனார். தண்ணி கொடுக்காம தி.மு.க அமைச்சருங்க ரெண்டுபேர் அதை வேடிக்கை பார்த்தாங்க. சட்டக்கல்லூரியில மாணவர்களைச் சிலர், கண்மூடித்தனமா அடிச்சாங்க. அதைப் போலீஸ்காரங்க வேடிக்கை பார்த்துட்டு நின்னாங்க. நீதிபதிகள் மண்டையை உடைச்சது, கலவரத்தைத் தூண்டியது எல்லாமே தி.மு.க-தான். அம்மா நாட்டு மக்களுக்காகப் பாடுபடுறாங்க. கருணாநிதி தன்னோட மக்களுக்காக வாழ்கிறவர். தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட்னு எல்லாக் கட்சிக்கார குழந்தைகளுக்கும் அம்மா பாகுபாடு பார்க்காம செருப்பு, சீருடை, சைக்கிள், லேப்-டாப்னு கொடுத்து இருக்காங்க. அம்மா ஆட்சிக்கு வந்து, எதைச் செய்யலை? எல்லாத்தையும் செய்து இருக்காங்க. செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விட்டுட்டாங்கன்னு எல்லாரும் குறை சொல்லிட்டுத் திரியறாங்க. கடலுக்குப் போய்ச் சேருகிற, ஆத்து வழியாத்தான திறந்துவிட்டாங்க. அப்படித் திறக்காம அலட்சியமா விட்டிருந்தா ஏரி உடைஞ்சு போயிருக்குமே. சென்னையே அழிஞ்சு போயிருக்கும் தெரியுமா?”

“விஜயகாந்த் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறாரே?”

“சத்யராஜ்தான் ஒரு படத்துல ‘என்னங்கடா கறுப்பு எம்.ஜி.ஆர்., செவப்பு எம்.ஜி.ஆர்., மஞ்சள் எம்.ஜி.ஆர்-னு சொல்றீங்க? எனக்குத் தெரிஞ்சு ஒரே ஒரு எம்.ஜி.ஆர்-தான்டா’ என்று டயலாக் பேசுவார். எனக்குப் பழைய விஜயகாந்த்தை நல்லாவே தெரியும். இவரு, அவரு இல்லை. மேடையில விஜயகாந்த் பேசணும்னு சொன்னதும் எந்திரிக்கிறார்... உடனே பிரேமலதாவும், மச்சானும் பின்னாடி இருந்து கையப்பிடிச்சு இழுக்குறாங்க. ஏதோ அவர் ரோபோ பொம்மை மாதிரி இருக்கார். இவங்க ரிமோட் வெச்சு அவரை இயக்குறாங்க. தே.மு.தி.க விஜயகாந்த்தோட கட்சி இல்லை. பிரேமலதா, சுதீஷ் குடும்பத்தோட கட்சி. அம்மா வேட்பாளர்கள் பட்டியலை முன்னாடியே அறிவிக்கலைனு பிரேமலதா கேட்குறாங்க. எப்போ அறிவிக்கணும்னு அம்மாவுக்கு நல்லாவே தெரியும். ஜனங்ககிட்டே உங்களோட பாச்சா பலிக்காது. பிரேமலதாவுக்கு நேரு, அண்ணா,
எம்.ஜி.ஆர்., ராஜீவ் காந்தி யாரைப் பத்தியாவது தெரியுமா? நேர்ல பார்த்து இருக்காங்களா? மேடையில ஆ... ஊன்னு ஆக்ரோஷமா கத்துறாங்க. நீங்க நேத்து ஆரம்பிச்ச கட்சி. ஏற்கெனவெ ரெண்டு காலேஜ் நடத்துறீங்க. ஊழல் ஊழல்ன்னு சொல்றீங்களே. வெங்கடேஸ்வரா காலேஜ் கட்டினீங்க. அதுக்காக  இன்கம்டாக்ஸ் சரியா கட்டுனீங்களா? கணக்குக் காட்டுங்க. ஆந்திரா பக்கம் ரெண்டு காலேஜ் கட்டிகிட்டு அப்படியே உங்க ஊர்ப்பக்கம் போயிடலாம்னு பாக்குறீங்களா? நான் பிரேமலதாவைப் பார்த்துக் கேட்குறேன்... ‘விஜயகாந்த்தை வெச்சுப் படம் எடுத்து, நான் நல்லா வாழ்ந்தேன்’னு ஒரே ஒரு தயாரிப்பாளரைக் காட்டுங்கப் பார்ப்போம். ஜனங்களை என்ன இளிச்சவாயன்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்களா?” 

“காங்கிரஸ் கட்சியில் குஷ்பு, நக்மா சேர்ந்திருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“அந்தக் காலத்துல காந்தி, நேரு, இந்திரா காந்தி(!), ராஜீவ் காந்தி(!) பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் வெள்ளைக்காரன்கிட்டே அடி, உதைவாங்கி, தியாகம் செஞ்சி வளர்த்துக் காப்பாத்துன கட்சி காங்கிரஸ். இப்போ குஷ்பு, நக்மாவை நம்பித்தான் இருக்குதாம். என்னடா இது காங்கிரஸுக்கு வந்த சோதனை? இவங்க எல்லாம் எங்கிருந்தோ வந்து தமிழ்நாட்டைப் பத்திப் பேசுறாங்க. உங்களுக்குத் தமிழ்நாட்டை பத்திப் பேசுறதுக்கு என்ன அருகதை இருக்கு? உங்க, வட நாட்டுலபோயி என்ன வேணாலும் பேசிக்கோங்க. இங்கே வெச்சுக்கப்பிடாது. அப்புறம் தப்பாப் போயிடும். தி.மு.க-வுல இருந்து குஷ்பு காங்கிரஸ் கட்சிக்குப் போன ராசி, டெல்லியில கெஜ்ரிவாலோட கட்சிக்கிட்டே காங்கிரஸ் தோத்துப் போச்சு. அந்தக் கட்சியில இன்னும் என்ன என்ன நடக்கப்போகுதோ தெரியலை.”


- எம்.குணா
படம்: பா.கார்த்திக்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick