மீண்டும் திவாகரன்? - போயஸ் கார்டனை வளைக்கும் மன்னார்குடி!

துவரை கார்டன் பக்கமே தலைகாட்ட முடியாத சசிகலாவின் உறவினர்கள் இப்போது கார்டனுக்குள் ரீ என்ட்ரி ஆகிவிட்டார்கள்.  அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலில் யார், யார் இடம் பிடிப்பார்கள் என்பது அவர்கள் கையில்தான் இருக்கிறது என்பது கட்சி நிர்வாகிகளின் லேட்டஸ்ட் டாக்.

ஒரு காலத்தில் மன்னார்குடி வகையறாக்களை முதல்வர் துரத்தித் துரத்தி அடித்தாரே, இது எப்படி சாத்தியம் என்று கேட்டபோது, உறவினர்களில் சிலர், “சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாக அறிவிக்கும் அளவுக்கு அளவுகடந்த பாசம் முதல்வருக்கு இருந்தது. ஆடம்பர திருமணத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அதன் தொடர்ச்சியாக சொத்துக் குவிப்பு வழக்குவரை போனதும்தான் சுதாகரனுக்கு எதிராகத் திசை திரும்பினார் ஜெயலலிதா. அவரை கார்டன் பக்கம் நெருங்கவும் விடவில்லை. 2011 சட்டமன்றத் தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகளுக்குத் தெரியாமலேயே வேட்பாளர் பட்டியலை அறிவித்து அதிரடியைக் கிளப்பியது அ.தி.மு.க தலைமை. பட்டியலால் கூட்டணிக் கட்சிகள் அதிர்ச்சி அடைந்ததை அடுத்து, ‘வேட்பாளர் பட்டியலை அறிவித்தது ஜெயலலிதாவுக்கே தெரியாது’ என்ற தகவலும் வந்தது. அப்போது, சசிகலா தரப்பினர்தான் அந்தப் பட்டியலை வெளியிட்டார்கள் என்ற பேச்சுக்களும் கிளம்பின. இதனால் அப்போது மன்னார்குடி வட்டாரத்தின் மீது முதல்வர் கடும் கோபத்தில் இருந்தார். பெங்களூருக்கு சொத்துக் குவிப்பு வழக்கு விஷயமாகச் சென்ற சசிகலா தரப்பினர், ரகசியமாக ஜெயலலிதாவுக்கு எதிராக அரசியலில் காய் நகர்த்துகிறார்கள் என்பதை உளவுத்துறை மூலம் கேள்விப்பட்ட ஜெயலலிதா டென்ஷன் ஆனார். சசிகலாவை வீட்டைவிட்டே விரட்டினார். சசிகலா தம்பி திவாகரனை போன்ற பலரை வழக்கு, கைது, சிறையில் அடைப்பு என ருத்ர தாண்டவம் ஆடினார். ஒருகட்டத்தில் ஜெயலலிதாவின் மனதைக் கரைத்து சசிகலா மீண்டும் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தார்” என்றனர்.

கட்சி முக்கிய விஷயங்களை டீல் செய்ய ஜெயலலிதா அவருக்கு உதவுவதற்காக ஐவர் அணியை நியமித்தது. சமீபத்தில் இந்த அணி மீது புகார்கள் எழுந்து நால்வர் அணியாக உருமாறியிருக்கிறது. இந்த அணியில் இடம் பெற்றிருந்த ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாதன், பழனியப்பன் ஆகிய மூவரையும் ஓரம்கட்டியே வைத்திருக்கிறார் ஜெயலலிதா.  இந்தச் சூழ்நிலையில் மீண்டும் மன்னார்குடி வகையறாக்களின் கை ஓங்க ஆரம்பித்து இருக்கிறது. எனவே, மன்னார்குடி வகையறாக்களின் வீடுகளை நோக்கிப் படை யெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அ.தி.மு.க-வினர். மன்னார்குடி வகையறாக்களில் சசிகலாவுக்கு அடுத்த படியாக செல்வாக்கு மிகுந்த நபராகக் கருதப்படுவது திவாகரனைத்தான். அதனால்தான் இந்த முறை டெல்டா மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிர்வாகிகள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைக் குவித்திருக்கிறார்கள். எப்படியாவது வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுவிட வேண்டும் என்றும் கட்சிக்காரர்கள் துடிக்கிறார்கள்.

“வழக்கு, சிறை, நீதிமன்றம் என அலைந்துகொண்டு இருந்த திவாகரன் இப்போது மீண்டும் சென்னையை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார். பிப்ரவரி 10-ம் தேதி திவாகரனின் பிறந்தநாள். அன்றைய தினம் பல கட்சிப் பிரமுகர்கள் வீடுதேடி வந்து வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு திவாகரன் அனுப்பிய வாழ்த்துச் செய்தி கார்டனுக்குள் வலம் வந்தது. 2011 சட்டமன்றத் தேர்தலில் டெல்டா மாவட்டங்கள் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இவர் சொல்லும் நபருக்கு சீட் வாங்கிக் கொடுத்து, வெற்றிபெற வைத்து அமைச்சர்களாக்கி அழகு பார்த்தார். அப்படி அழகு பார்த்தவர்கள், இன்று அவருக்கு விசுவாசமாக இல்லை. அதனால், டெல்டாவில் அமைச்சராக இருக்கும் யாருக்கும் இந்த முறை வாய்ப்பு வழங்கமாட்டார். புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் வைரமுத்து, திவாகரனின் தீவிர ஆதரவாளர். அதுதான், ‘அண்ணன் மீண்டும் அதிகாரத்துக்கு வந்துவிட்டார் என்பதற்கு உதாரணம்’ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

“திவாகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு சிறை சென்றபிறகு, அவருடன் தொடர்பு வைத்திருந்ததாகச் சொல்லி மன்னார்குடியில் உள்ள எங்களை எல்லாம் நீக்கினார் ஜெயலலிதா, அதற்கு உடந்தையாக இருந்தவர் லோக்கல் அமைச்சர்தான். எனவே, அண்ணன் மீண்டும் ‘பவரு’க்கு வருவார், ஆறுதல் தருவார் என்று நிர்வாகிகள் முகத்தில் உற்சாகம் தென்படுகிறது. மீண்டும் நம்மை எல்லாம் அண்ணன் கட்சியில் சேர்ப்பார்” என்ற பாசிட்டிவ் கனவுகளோடு வலம் வருகிறார்கள் திவாகரனோடு சேர்ந்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள்.

“தேர்தலில் வெற்றி பெற்றால் அமைச்சரவை அமைப்பதிலும் சசிகலா, திவாகரன் கைகளே ஓங்கி நிற்கும் என்பதற்கு அடையாளம்தான் இப்போதே மன்னார்குடியை நோக்கி கட்சி நிர்வாகிகள் படை எடுத்துவருவது. டெல்டா மாவட்ட அமைச்சர்களே அவரைச் சந்திக்க வாய்ப்புக் கேட்டிருக்கிறார்கள். யாரையும் அனுமதிக்காத திவாகரன், ஐவர் அணியில் ஓர்அமைச்சரை மட்டும் அனுமதித்தாராம். அந்த அமைச்சர் திவாகரனின் காலில் விழுந்துள்ளார். அதற்கு திவாகரன் எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை. ஆனால், திவாகரனோ புது ஃபார்முலாவை கையில் எடுத்திருக்கிறாராம். அமைச்சராக இருந்தவர்கள், எம்.எல்.ஏ-வாக இருந்தவர்கள், மாவட்ட சேர்மன் மற்றும் உயர் பதவியில் இருந்தவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கக் கூடாது என்பதுதான் அந்த ஃபார்முலா. திவாகரன் தன்னை வந்து பார்ப்பவர்களுக்குப் புன்னகையை மட்டுமே வெளிப்படுத்துகிறார்” என்கிறார்கள் சிலர்.

திவாகரனைப் பார்ப்பதாக இருந்தால், பல கதவுகளைத் தாண்ட வேண்டும். வெளியே வருவது குறைந்துபோயிருந்தது. ஆனால், இப்போதெல்லாம் அவர் உற்சாக மூடுக்கு வந்துவிட்டார். அவருக்குச் சொந்தமான கல்லூரியில் விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்க வந்திருந்தார்.  இந்த நிலையில், இதுவரை வெளியில் தலைகாட்டாத ஜூனியர்களைக் கொண்டு வரலாம் என மன்னார்குடி உறவுகள் வட்டாரத்தில் முடிவு எடுத்திருக்கிறார்களாம். இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், “கார்டனில் இருப்பவரான இளவரசியின் மகன் விவேக் இப்போது ஆக்டிவ் ஆக இருக்கிறார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைவாசிகளுக்கு சொந்த செலவில் மெடிக்கல் கேம்ப் நடத்தி பொதுமக்களுக்கு உதவியிருக்கிறார் திவாகரனின் மகன் ஜெயஆனந்த். சமூக சேவையில் மட்டுமல்ல, அரசியலிலும் நுழைய ஆரம்பித்து விட்டார். உதயநிதி ஸ்டாலின், ஜெயலலிதாவை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கவிதை எழுதியிருந்தாராம். உதயநிதியை அழைத்து கருணாநிதி பாராட்டினாராம்... அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்கள் தி.மு.க-வினர். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக கருணாநிதியை விமர்சித்து சசிகலாவின் மருமகன் ஜெயஆனந்த், ஒரு கவிதையை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். இது அ.தி.மு.க-வினரிடையே வைரலாகப் பரவியது. ஜெயஆனந்தை போனில் அழைத்து திவாகரன் பாராட்டினார். ‘நம் கண் எதிரே அப்பா கைதுசெய்யப்பட்டார், சிறை சென்றார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், இப்போது ஜெயலலிதாவை விமர்சித்து எழுதியதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் தம்பி ஜெயஆனந்த். அவர் நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டும்’ என திவாகரனிடம் அவரது ஆதரவாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்கின்றனர்.  

இன்னொரு புறம் நடராஜனுக்குத் தூண்டில் போட்டு சீட் வாங்க ஒரு கூட்டம் வலம் வருகிறது.  அ.தி.மு.க-வின் ராஜகுருவே இவர்தான். அவர் பார்வையில் படமாட்டோமா என்று அலைகிறோம். பிடிகொடுக்காமல் நழுவுகிறார்’ என்கிறார் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வி.ஐ.பி ஒருவர். இந்தக் கூட்டத்தைத் தவிர்க்கவே, கடந்த 2006 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், ‘என்னால் யாருக்கும் சீட் வாங்கித் தர முடியாது. அதனால் என்னைத் தேடியோ, என் வீடு தேடியோ யாரும் வரவேண்டாம்’ என்று அவரது வீட்டில் போர்டு எழுதி  வைத்திருந்தார் நடராஜன். ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, தமிழர் கலை இலக்கிய திருவிழாவில் ‘நான் அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா?’ என ஓட்டெடுப்பு நடத்தினார் நடராஜன். இதை யெல்லாம் பொருட்படுத்தாமல் தேர்தலுக்கு சீட் கேட்டு நடராஜன் வீட்டையும் சுற்றி வருகிறார்களாம் அ.தி.மு.க-வினர்.

எப்படியோ மன்னார்குடி மீண்டும் தலை எடுக்க ஆரம்பித்துவிட்டது.

- ஏ.ராம்
படங்கள்: கே.குணசீலன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick