தேர்தலைப் புரட்டிப் போடும் செல்போன் உரையாடல்!

விசாரிக்கப்படும் சசிகலாபுஷ்பாவின் சரித்திரம்

ட்டம், மாவட்டம், அமைச்சர்கள் எனப் பல தரப்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாய்ந்துகொண்டிருந்தபோது கட்சி நிர்வாகிகள் யாரும் யாரிடமும் போனில் பேசுவதை விரும்பவில்லை.

செல்போன் உரையாடல் ரெக்கார்டு செய்யப்பட்டு, அதன்மூலம் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்கள் மீதும் ஏதாவது நடவடிக்கை பாய்ந்துவிடுமோ என நடுங்கினார்கள்.

அந்த இறுக்கமான சூழ்நிலையில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான சசிகலாபுஷ்பா ஓர் ஆண் நண்பருடன் பேசிய வாட்ஸ்அப் உரையாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இப்போது அவருடைய வரலாறு விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் தென் தமிழகத்தைக் கலக்கிக்கொண்டிருக்கும் தொழிலதிபர் ஒருவரும் வளைக்கப்படுவார் என்கிறார்கள்.

சசிகலாபுஷ்பாவுக்கு சாத்தான்குளம் அருகே உள்ள அடையல் சொந்த ஊர். நெல்லை மாவட்டத்தில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சசிகலாபுஷ்பா, கடந்த 2011-ம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சியின் மேயரானார். அடுத்து, மேல்சபை உறுப்பினர் ஆக்கப்பட்டார். கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பும் கிடைத்தது. ஜெயலலிதாவின் அருகே நின்று போஸ் கொடுக்கும் அளவுக்கு படுவேகமாக வளர்ந்தார்.

ஆனால், அந்த மதிப்பும் மரியாதையும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. கடந்த ஜனவரியில் கட்சிப் பொறுப்பிலிருந்து தூக்கியடிக்கப்பட்டார்.

எம்.பி பதவிகூட, ‘ராஜினாமா செய்கிறேன்’ என்று மேலிடத்தால் கடிதம் வாங்கி வைக்கப்பட்டிருக்கும் கனவு பதவியாகவேதான் இருந்து வருகிறது. ஏன் எதற்காக என்கிற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான், அவர் அப்படியொரு வாட்ஸ்அப் உரையாடல் விவகாரத்திலும் சிக்கியிருக்கிறார்.

சென்னை, கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருந்த சமயத்தில்தான் இவர்களின் உரையாடலும் நடந்திருக்கிறது.

சசிகலாபுஷ்பாவின் டெல்லியில் இருக்கும் செல்போனுக்கு தூத்துக்குடியிலிருந்து அந்த ஆண் நண்பர் மெசேஜ் அனுப்ப, அதைப் பார்த்து சசிகலாபுஷ்பா அந்த நண்பருக்கு போன் செய்கிறார். ‘‘டேய் இப்பதான் பார்த்தேன் மெசேஜ்’’ (சிரிக்கிறார்).

 நண்பர்: ‘‘நேத்து நைட்ல போனை டக்குன்னு வெச்சுட்டே.’’

எம்.பி.: ‘‘உனக்குத் தெரியுமா விஷயம்? நேத்து நைட் ஃபுல் மப்பு (வெட்கத்தோடு சிரிக்கிறார்). நேத்து ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து அடிச்சேன்’’ என்ற அவர், மதுவில் மிதந்த கதையைச் சொல்லிவிட்டு மழை நீரில் மிதந்துகொண்டிருந்த தமிழக நிலவரத்தைக் கேட்கிறார்.

எம்.பி.: ‘‘தூத்துக்குடியில எப்படி இருக்கு?’’

நண்பர்: ‘‘மழைத் தண்ணி இன்னும் வடியல. மோட்டார் போட்டு அடிச்சிக்கிட்டு இருக்காங்க.’’

எம்.பி: ‘மக்கள் எங்களுக்குக் கொஞ்சம் நெகட்டிவா இருப்பாங்கள்ல?’

நண்பர்: ‘‘ஆமா... அந்தோணி கிரேஸி (தற்போதைய மேயர்) அடிவாங்க பார்த்தா.’’

எம்.பி.: ‘‘எனக்கும் ஏச்சு விழுந்துச்சா?’’

நண்பர்: ‘‘கடலுக்குத் தண்ணி போகிற இடத்துல மணலை போட்டு மறைச்சுட்டாங்களே!’’

எம்.பி.: ‘‘நான் அந்த பிளாக்கேஜை ரிலீஸ் பண்ண நடவடிக்கை எடுத்தேன். இப்பவும் இவங்க எடுத்திருக்கணும். ரெண்டாவது வெள்ளம் வருதுன்னா இன்ஜினீயர்கூட உட்காந்து பேசணும்ங்கிற அளவுக்கு அறிவு இல்லை. கலெக்டருக்கே அறிவில்லை. ரவிக்குமார் (கலெக்டர்) தத்தி... மினிஸ்டர் (சண்முகநாதன்) தத்தி. அவ்வளவு பேருக்கும் அறிவு இல்லை. அப்போ என்ன பண்ண முடியும்? அப்ப தூத்துக்குடி எனக்குப் புதுசு. ஒரு வார்டும் எனக்குத் தெரியாது. ஆனா, எங்க வீட்டுல ஒரு பெரிய சார்ட்ல தெருப் பெயர்களை ஒட்டி வெச்சிருப்பேன். டெய்லி குளிச்ச உடனே ஒரு 15 நிமிஷம் நின்னு அதை மனப்பாடம் பண்ணுவேன்.’’

நண்பர்: ‘‘மழை, வெள்ளம், தண்ணீர் போகுறதுக்காக ஒரு கி.மீ ரோட்ட தோண்டியதும் ஃபெயிலியரா போச்சு. அப்புறம், அடுத்த பாதை வழியா போட்டாங்க. அதுவும் இறங்க மாட்டேங்குது. அப்புறம் மோட்டார் போட்டு அடிச்சாங்க. இப்படி இருக்கிறார் கலெக்டர். 126 மோட்டார் போட்டிருக்குனு சொன்னாங்க. ஆனா 25 மோட்டார்கூட ஓடலை. இதுல ஐந்து மோட்டார் ஸ்டெர்லைட் கொடுத்ததுதான்.’’

எம்.பி.: ‘‘இந்த வாட்டி தூத்துக்குடியில அ.தி.மு.க ஜெயிக்குமா... எப்படி?’’

நண்பர்: ‘‘டவுட்தான். மொத்தத்துல எல்லாமே மாறத்தான் செய்யும். இந்த நேரத்துல அப்படி அமுங்கி பேக் அடிச்சிட வேண்டியதுதான்.’’

எம்.பி.: ‘‘கேன்டிடேட்டைப் பொறுத்து விழுமா? ஒருவேளை நான் நின்னால் ஜெயிக்க முடியுமா?’’

நண்பர்: ‘‘கீதாஜீவன் (தி.மு.க முன்னாள் அமைச்சர்) நின்னா ஒண்ணும் செய்ய முடியாது. அவருக்கு நல்ல மார்க்கெட் இருக்கு. அனிதா (திருச்செந்தூர் எம்.எல்.ஏ) வேறு உள்ளே வந்துட்டாப்ல. மற்றபடி கட்சி ஓட்டு மட்டும்ன்னா கொஞ்சம் சங்கடம்தான். ஒரே ப்ளஸ் பாயின்ட் ஆப்போஸிட் பார்ட்டி தனித் தனியா போச்சின்னாதான் சான்ஸ் இருக்கு. சரி, ஒரு பெண்ணுக்கு கவுன்சிலர் பொறுப்பு வாங்கித் தரமுடியுமா?’’

எம்.பி.: ‘‘முதல்ல அந்தப் பெண்ணைக் கட்சியில சேர வைய்யுங்க. நான் மகளிர் அணியில் இருக்கிறதால அம்மாகிட்ட பேசி வாங்கித் தர்றேன். அப்புறம் உன் தம்பிக்கு நோட்டரி பப்ளிக் வாங்குறது சம்பந்தமா சென்ட்ரல் மினிஸ்டர்கிட்ட பேசியிருக்கிறேன். அவருக்கு என்னை நல்லா பிடிக்கும். நிச்சயமா கொஞ்ச நாட்கள் கழித்து பண்ணுவோம்னு சொல்லியிருக்கார்.’’

- இப்படித்தான் ஓடுகிறது வாட்ஸ் அப்-ல் அவர்களின் உரையாடல்.

அமைச்சர்கள், அவர்களின் பி.ஏ-க்கள், ஒப்பந்ததாரர்கள் என கல்லாகட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்ததற்கு இடையில் இந்த வாட்ஸ்அப் தகவல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. ஏற்கெனவே நடவடிக்கைகள் குறித்து எதிர்க் கட்சிகள், ‘நாடகம்’ என விமர்சனம் செய்து வருகிறார்கள். அதனால் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்கிற அச்சத்தில் நடவடிக்கைகளின் வேகம் சற்றுக் குறைந்தது. கட்சி நிர்வாகிகளின் தரத்தை வேறுவிதமாக எடை போடும் வகையில் அமைந்த இந்த வாட்ஸ்அப் தகவல் மூலம் முற்றிலுமாக தற்சமயத்துக்கு நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டி ருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு தொடரும் என்கிறார்கள்.

மாறாக, சசிகலாபுஷ்பா வளர்ந்து வந்த கதை உளவுத்துறை மூலம் விசாரிக்கப்பட்டது. சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு நர்ஸரி பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். எலக்ட்ரீஷியனான கணவர் லிங்கேஷ்வர திலகன், தனது நண்பரும் முன்னாள் சபாநாயகருமான ஒருவர் மூலம் சசிகலாபுஷ்பாவை அரசியல்வாதி ஆக்க முயன்றார். அது முடியாத நிலையில் தென்கோடியில் ஏற்றுமதி தொழில் செய்துவரும் ஒருவர் மூலம் அரசியலுக்குள் நுழைத்து அதன் பிறகு நெல்லை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், இளைஞர், இளம்பெண் பாசறை மாநில துணைச் செயலாளர், அதன் பிறகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர், ராஜ்யசபா எம்.பி, ராஜ்யசபா கொறடா, கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலாளர் என அடுக்கடுக்கான பதவிகளுக்கு எப்படி வந்தார் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இத்தனை பதவிகளும் இவரை வந்து அடைந்ததற்கு அந்தத் தொழில் அதிபர்தான் காரணம் என்கிறார்கள். மேல்மட்டத்தில் தனக்குச் சாதகமாக காய் நகர்த்த அந்தத் தொழிலதிபரால் உருவாக்கப்பட்டவரே இந்த சசிகலாபுஷ்பா என்கிறார்கள். இதை அறிந்த ஜெயலலிதா, தொழிலதிபரை விசாரிக்கச் சொல்லியி ருக்கிறாராம். இப்போதே அவர் மீது நடவடிக்கை தொடங்கிவிடும் என்கிறார்கள். இதை அறிந்த அந்த நிறுவனம், தனது கனரக வேலையை நிறுத்திவிட்டு எதிர் முகாமில் சென்று நட்பு ரக வேலையை ஆரம்பித்திருக்கிறதாம்.

இதுகுறித்து விளக்கம் கேட்க சசிகலா புஷ்பாவிடம் பலமுறை தொடர்புகொண்டோம். முடியவில்லை.

ஒரு வாட்ஸ்அப் வாய்ஸ், தேர்தலையே புரட்டிப் பார்க்கிறது.

- எஸ்.சரவணப்பெருமாள்
படம்: சொ.பாலசுப்ரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick